முன்னாள் யூகோஸ்லாவியா குடியரசின் மாகாணமும், தற்போது ஐ.நா. வினால் நிர்வகிக்கப்பட்டு வரப்படுவதுமான கொசோவோ மாகாணம் தனது சுதந்திரத்தை பிரகடனப்படுத்த போவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணைகள் இந்த பிரகடனத்திற்கு உண்டு. ஆனால் ரஷ்யா அதனை வலுவாக எதிர்த்து வருகின்றது. பூகோள அரசியல் நலன் கருதி முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் கூட்டாளியான யூகோஸ்லாவியாவை தருணம் பார்த்து துண்டு துண்டாக உடைத்த பெருமை மேற்குலகத்தினரை சாரும். கொசோவோவின் தனிநாட்டு பிரகடனத்துடன் அந்த நடவடிக்கை முடிவுக்கு வருகின்றது.
நீண்டகால நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பிற்கும், ரஷ்யாவின் வீழ்ச்சிக்கும் இது உதவும் என்பது மேற்குலகத்தின் கருத்து. சேர்பிய பேரரசின் பிடியில் இருந்து ஒவ்வொரு நாடுகளாக விடுவித்த மேற்குலகின் உத்தி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மொன்ரோநீக்குரொ என்னும் புதிய தேசத்தையும் உருவாக்கியிருந்தது.
இந்த நிலையில் கடந்த 9 வருடங்களாக ஐ.நா.வின் மேற்பார்வையில் இருந்து வந்த கொசோவோ எதிர்வரும் சில மாதங்களில் சுதந்திர பிரகடனத்தை மேற்கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிநாடாக உருவெடுக்கும் கொசோவோ ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இணைந்து கொள்ளும்.
சேர்பியாவின் ஒரு மாகாணமான கொசோவோ பெரும்பான்மை அல்பேனியர்களை கொண்ட பகுதி. அங்கு வசிக்கும் அல்பேனியர்கள் நேட்டோ படைகளின் ஆதரவுடன் தனிநாடாக அதனை பிரகடனப்படுத்த முனைந்து வருகின்றனர். இதனை சேர்பியா வன்மையாக எதிர்த்து வருகின்றது. ரஷ்யாவும் அதனை எதிர்த்து வருகின்றது. கொசோவோவின் பிரிவினை தமது நாட்டிலிலும் பிரிவினைகளை ஏற்படுத்தலாம் என்பது ரஷ்யாவின் கவலை. அதாவது செச்சென்னியா அதனை பின்பற்றலாம் என்பது அவர்களின் கருத்து.
ஆனால் கொசோவோவின் அல்பேனியத் தலைவர்கள் தனிநாட்டுக்கு குறைவாக எந்த தீர்வையும் பெற தயாராகவில்லை என தெரிவித்து வருகின்றனர். எனினும் சேர்பிய அரசு பரந்துபட்ட கூடுதல் அதிகாரங்களை கொண்ட சுயாட்சியை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
குளிர்காலத்தில் வெப்பத்தை பெறுவதற்கான வாயு எரிபொருளுக்கு ரஷ்யாவிலும், மின்சாரத்திற்கு சேர்பியாவிலும் தங்கியுள்ள கொசோவோவின் தனிநாட்டுபிரகடனம் கடினமானது என்பதும் சேபியர்களின் கருத்து.
இதனிடையே கொசோவாவிற்கு அனைத்துலகத்தின் மேற்பார்வையின் கீழ் சுதந்திரத்தை வழங்கும் திட்டம் ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் மாற்றி அரிசாறி முன்வைத்திருந்தார். இதன் மூலம் கொசோவோ மெல்ல மெல்ல முழுமையான தனிநாடாக மாற்றம் பெற்று பின்னர் ஐ.நா.வில் இணைந்து கொள்ளலாம் என்பது அவரின் திட்டம்.
ஆனால் கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனம் எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதம் நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அதாவது, சேர்பியாவின் அரச தலைவருக்கான தேர்தலைத் தொடர்ந்து இந்த பிரகடனத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
22 இலட்சம் மக்களையும், 4,203 சதுர மைல்கள் (10,887 சதுர கி.மீ) பரப்பளவையும் (இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை விட சிறியது) கொண்ட இந்த சிறிய தேசத்தின் சுதந்திரப் பிரகடனத்திற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் முழுமையான ஆதரவுகளை வழங்கி வருகின்றன. ரஷ்யா, சேர்பியா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை தவிர பெரும்பாலான நாடுகள் இந்த பிரகடனத்தை ஆதரிக்கும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொசோவோவின் தற்போதைய இந்த நிலை உலகின் ஊடகங்களில் முக்கிய இடத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இலங்கை அரசின் முக்கிய உறுப்பினரும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே எதிர்வரும் ஜனவரி மாதம் விடுதலைப்புலிகள் தனிநாட்டை பிரகடனம் செய்ய போவதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.
தென்னிலங்கையில் அரசிற்கு எதிராக மக்களின் கவனம் திசை திரும்புவதை தடுப்பதற்கான உத்தியாக இனப்போரை முதன்மைப்படுத்தி வருவது அரச தரப்பினரின் வழமையான நடவடிக்கை. எனினும் கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்துடன் தமிழ் மக்களின் தனிநாட்டுப் பிரகடனம் வெளிவந்தால் கொசோவோ தனியரசை ஆதரிக்கும் மேற்குலகத்திற்கு பெரிய சங்கடங்கள் தோன்றிவிடலாம் என்பதும், கொசோவோவின் தனிநாட்டு பிரகடனத்தை எதிர்க்கும் நாடுகள் ஈழத்தை ஆதரிக்கலாம் என்பதும் அவரின் ஆரூடமாக இருக்கலாம்.
சேர்பியாவின் ஒரு மாகாணமான கொசோவோவுடன் ஒப்பிடும் போது சனத்தொகை, பரப்பளவு, இன விகிதாசாரம், மதம், கலாசாரம் போன்றவற்றின் தகுதிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகம்.
மேலும் சேர்பிய அரசுடன் ஒப்பிடும் போது இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள், இனப்பிளவுகள், இன ஒடுக்குமுறைகள், கலாசார ஒடுக்குமுறைகள், மொழிப்புறக்கணிப்பு என்பனவும் மிக அதிகம். எனவேதான் வடக்கு கிழக்கு இணைந்த தாயகப்பிரதேசத்தை தமிழ் மக்கள் தனியரசாகப் பிரகடனப்படுத்துவதற்கான தகுதிகள் கொசோவோவை விட அதிகம் உள்ளன என்ற உண்மையை அமைச்சர் உணர்ந்துள்ளார் போலும். அதனால் தானோ என்னவோ அமைச்சர் பெர்ணான்டோபுள்ளே முன்கூட்டியே எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளார்.
ஆனால், இரண்டு வருடத்திற்கு மேலாக தீவிரமடைந்து வரும் போரின் தாக்கத்தையும், அரசியல் தீர்வு ஒன்றை காண்பதற்கு தென்னிலங்கை அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க முடியாது என்பதனையும் தற்போது மெல்ல மெல்ல உணர்ந்துவரும் அனைத்துலக சமூகம் ஒன்றை மட்டும் புரிந்து கொள்வது அவசியம்.
அதாவது நேட்டோவின் ஆளுமையின் கீழ் இருந்து வந்த கொசோவோ கடந்த 9 வருடங்களில் தீர்வு ஒன்று எட்டப்படவில்லை என்ற பொறுமையை இழந்து தனிநாட்டைப் பிரகடனம் செய்ய முயன்றுள்ள நிலையில் அதனை ஆதரிக்கும் மேற்குலகம், 50 வருடங்களுக்கு மேலாக எந்தவிதமான அரசியல் உரிமைகளும் வழங்கப்படாது ஏமாற்றப்பட்டு வரும் வடக்கு-கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தனிநாட்டுப் பிரகடனத்தை மேற்கொண்டால் அதில் தவறுகளை காணமுடியாது என்பது தான் அது.
எனவேதான் கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனம் இலங்கை அரசிற்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளை முற்று முழுதாக பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதிலும், அவர்களின் பலத்தை சிதைத்துவிடும் முனைப்பிலும் இலங்கை அரசாங்கம் தீவிரம் காட்டி வருகின்றது.
வடபோர்முனையில் ஒருமுனை முன்னேற்றம் சாதகமற்றது என்றும், பல களமுனைகளை திறப்பதன் மூலம் விடுதலைப் புலிகளை திசைதிருப்பி விடலாம் அல்லது அவர்களின் ஒருமுனை படைபலத்தின் வீரியத்தை குறைத்துவிடலாம் என்பது படைத்தரப்பின் தற்போதைய உத்திகள். அதற்காகவே புதிய படையணிகள் அமைக்கப்பட்டு வன்னியில் பல புதிய களமுனைகள் திறக்கப்பட்டு வருகின்றன.
53 ஆவது தாக்குதல் படையணியுடன் முகமாலையில் ஒரு வலிந்த தாக்குதல் களம், 57 ஆவது படையணியுடன் வவுனியா, மன்னார் எல்லையில் ஒரு களம், 58 ஆவது படையணியுடன் மன்னாரில் ஒரு களம் என திறந்த படைத்தரப்பு கடந்த வாரம் 59 ஆவது படையணியின் துணையுடன் மணலாற்றிலும் ஒரு களமுனையை திறந்துள்ளது.
மூன்று பிரிகேட்டுகளுடன் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட 59 ஆவது படையணி கடந்த வாரம் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேக்காவின் மணலாற்றுக்கான விஜயத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட தனது நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவே படைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 7 ஆம் திகதி கொக்குத்தொடுவாய் நோக்கியும், வியாழக்கிழமை ஜனகபுர பகுதி நோக்கியும் இராணுவத்தினரின் 59 ஆவது படையணியின் சில பற்றலியன் படையினர் மட்டுப்படுத்தப்டப்ட நகர்வை மேற்கொண்ட போது கடுமையான எதிர்த்தாக்குதல்களை சந்தித்துள்ளனர். கேணல் சொர்ணத்தின் தலைமையில் மணலாற்று களமுனையின் முன்னணி நிலைகளின் பாதுகாப்புக்களை விடுதலைப்புலிகள் பலப்படுத்தி வருவதாக இந்த மோதல்களின் பின்னர் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே கடந்த செவ்வாய்கிழமை மன்னாரின் அடம்பன் மற்றும் பாலைக்குழி பகுதிகளில் முன்நகர முயன்ற 57 ஆவது படையணியின் முதலாவது பிரிகேட் படையினர் மீது விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்தியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. மூன்று மணி நேரம் கடுமையாக நடைபெற்ற இந்த சமரில் 20 இற்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் 75 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், தமது தரப்பில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், பல ஆயுததளபாடங்களை தாம் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு மறுநாள் புதன்கிழமை முகமாலை கண்டல் பகுதியை நோக்கி முன்நகர முயன்ற படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலும் கடும் சமர் நடைபற்றுள்ளது. எனவே இந்த மோதல்களை கவனிக்கும் போது படையினரின் திட்டங்களுக்கு அமைவாக எல்லா களமுனைகளிலும் சமர்களை படைத்தரப்பு ஆரம்பித்துள்ளதாகவே கொள்ள முடியும்.
எனினும் மன்னாரின் வடமுனை நோக்கியும், மணலாறிலுமே பிரதான போர் அரங்கை திறக்கும் திட்டம் அரசாங்கத்திற்கு இருப்பதாக படைத்தரப்பில் இருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கடந்த வருடம் உருவாக்கப்பட்ட கவசத்தாக்குதல் படைப்பிரிவு தனது பயிற்சிகளை நிறைவு செய்து முற்று முழுதான தாக்குதல் படையணியாக மாற்றம் பெற்றுள்ளது. கேணல் ரால்வ்ப் நுகெரா தலைமையிலான இந்த படைப்பிரிவு 3 றெஜிமென்ட் படையினரை கொண்டது. சிறப்புப் பயிற்சிபெற்ற படையினர், கவசத்தாக்குதல் மற்றும் துருப்புக்காவி கவச வாகனங்கள் என்பவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த படைப்பிரிவு எதிர்வரும் காலத்தில் வடபோர்முனை சமர்களில் அதிகளவு பங்கு வகிக்கும் என படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த கவசத்தாக்குதல் படையணியின் முதலாவது அணியினரின் பயிற்சி நிறைவு விழாவின் போது விடுதலைப் புலிகள் நடத்திய 130 மி.மீ பீரங்கி தாக்குதலில் இந்த அணியையும், இராணுவத்தின் சிறப்பு தாக்குதல் படையணியான 53 ஆவது படையணியையும் சேர்ந்த உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் படுகாயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் போது இந்த அணியின் கட்டளைத் தளபதி கேணல் ரால்வ்ப் நுகெராவும் காயமடைந்திருந்தார்.
இராணுவத்தினரின் பலப்படுத்தல்களுடன் வான்படையும் தம்மை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அநுராதபுரத்தில் இழக்கப்பட்ட தமது வான்படை வான்கலங்களை ஈடுசெய்யும் முகமாக புதிய தாக்குதல் விமானங்களையும், உளவு விமானங்களையும், தாக்குதல் உலங்குவானூர்திகளையும் கொள்வனவு செய்யும் முயற்சியில் வான்படை தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும் செக்கோஸ்லாவியாவிடம் இருந்து விமான எதிர்ப்பு ஏவுகணை தொகுதிகள் அதற்கான தொழில்நுட்பம், தொழில் நுட்பவியலாளர்கள் ஆகியவற்றை பெறும் முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.
அதாவது அரசு முற்றுமுழுதான ஒரு பெரும் படை நடவடிக்கைக்கு தன்னை தயார்படுத்தி வருகின்றது. இனப்பிரச்சனைக்கு இராணுவத்தீர்வை கண்டுவிடவே அரசு முயன்று வருவதை இதன் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அரசின் இந்த முயற்சிகளுக்கு முற்று முழுதான பங்களிப்பை வழங்க தற்போது பாகிஸ்தான் வெளிப்படையாக களமிறங்கியுள்ளது.
பிராந்திய நலன்கள் குறித்து தற்போது பாகிஸ்தான் அதிகம் பேசி வருவதும், அனைத்துலகத்தில் பாகிஸ்தானை காப்பாற்ற இலங்கை அரசு முயன்று வருவதும் புதிய ஒரு பரிமாணத்தை தென்னாசியா பிராந்தியத்தில் உருவாக்கி வருகின்றது. இந்த புதிய கூட்டணியின் வெளிப்படையான உதயம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கைகளை தோற்றுவித்துள்ளது என்றால் அது மிகையாகாது.
-அருஸ் (வேல்ஸ்)-
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (16.12.07)
Thursday, December 20, 2007
"கொசேவா தனிநாட்டு பிரகடனமும் இலங்கை அரசாங்கத்தின் அச்சமும்"
Posted by tamil at 7:27 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment