Sunday, December 2, 2007

மென்ரோநீக்குரோ பிரகடனமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும்

-அருஸ் (வேல்ஸ்)-


இலங்கைத்தீவின் அரசியல் மற்றும் களநிலைமைகளில் கடந்த வாரத்தில் இருந்து கடுமையான நெருக்கடிநிலை தோன்றியுள்ளது. வரவு-செலவுத்திட்டம் மீதான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் அரசின் கூட்டணிக் கட்சியாக விளங்கிய ஜே.வி.பி. அதனை எதிர்த்து வாக்களித்தமை தென்னிலங்கையில் கடுமையான அரசியல் குழப்பங்களை தோற்றுவித்துள்ளது.

அரசைக் கவிழ்க்க ஜே.வி.பி. முனைகின்றதா? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது, எனினும் அரசைக் கவிழ்க்கும் எண்ணம் ஜே.வி.பிக்கு இருந்திருக்குமாக இருந்தால் அது தனது முடிவை வாக்கெடுப்பிற்கு முன்னராக அறிவித்து அதற்கான ஆதரவுகளை திரட்டுவதற்கு முனைந்திருக்கும். எனவே அரசை தக்க வைத்தபடி தனது சுய அரசியல் இலாபங்களை தேட ஜே.வி.பி. முனைந்துள்ளதாகவே இதனை கொள்ள முடியும்.

எனினும் ஜே.வி.பியின் நிலைப்பாட்டினால் அதிர்ச்சி அடைந்த அரசு வரவு-செலவுத்திட்டம் மீதான மூன்றாவது வாசிப்பின் போதான வாக்கெடுப்பில் தப்பிப் பிழைப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றது. அதாவது ஜே.வி.பியின் எதிர்ப்பு அரச தரப்பிலும், அதன் கூட்டணியிலும் இருந்து பலரை எதிர்த்தரப்பிற்கு உள்வாங்கி விடலாம் என்ற அச்சம் அரச தரப்பில் தோன்றியுள்ளது.

அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் என அடுத்த ஆண்டுக்கான செலவுகளுக்காக 18 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ள அரசு, 108 பேருக்கு அமைச்சர் பதவிகளையும் வழங்கி தனது நிலையை உறுதி செய்ய முனைந்துள்ளது. ஆனால் அரச நிர்வாகத்தில் இடம்பெற்றுவரும் ஊழல்கள், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி அதன் எதிரொலியாக அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் என்பன அரசு மீதான நம்பிக்கைகளை தென்னிலங்கையில் சிதறடித்து வருகின்றது.

எனவேதான் தமது ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக அரசு கடுமையாகப் போராடி வருகின்றது. போர் தொடர்பான செய்திகளை தவிர வேறு ஆக்கபூர்வமான எதனையும் கடந்த இரண்டு வருடங்களில் அரசு மக்களுக்கு கொடுக்கவில்லை. ஆனால் தற்போதைய நிலையில் களத்தில் ஒரு வெற்றிச் செய்தியைக் கொடுப்பது என்பதும் மிகவும் கடினமானது. ஏனெனில் வடபோர் முனையை பொறுத்த வரையில் விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதல் அங்கு உக்கிரமானது.

எனவே அரசு ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதல்களையும், மிகை ஒலி விமானங்களின் மூலம் செறிவான வான்குண்டு தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி வருகின்றது. அதாவது செறிவான வான் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்கள் யாராவது தற்செயலாக கொல்லப்பட்டால் அதனை தென்னிலங்கையில் பிரசாரமாக்கலாம் என்பது அரச தரப்பின் உத்தியாக இருக்கலாம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை குறிவைப்பதாக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கடந்த நவம்பர் 27 ஆம் நாள் கூறியதும், வரவு-செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பிற்கான ஒரு பிரசாரம் என்றே கருதப்படுகிறது.

அதாவது போரை முதன்மைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள வரவு-செலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு போர் தொடர்பான அறைகூவல்கள் தென்னிலங்கையில் எழுந்த வண்ணம் உள்ளன. அரசின் இந்த நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஏனெனில் போரில் இறந்த தமது வீரர்களை கௌரவிக்கும் நாட்களாக நவம்பர் 25 ஆம் நாளில் இருந்து நவம்பர் 27 ஆம் நாள் வரை மூன்று தினங்களை விடுதலைப் புலிகளும், தமிழ் மக்களும் கொண்டாடி வருவது உலகறிந்த விடயம். 1995 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஒரு வாரம் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் வாரம் அதன் பின்னர் ஏற்பட்ட போர் நெருக்கடிகள் காரணமாக மூன்று தினங்களாக குறைக்கப்பட்டிருந்தன.

ஆனால் தற்போது நடைபெற்று முடிந்த இந்த மூன்று தினங்களிலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னி பெருநிலப்பரப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களும், ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதல்களும் மிகவும் அதிகம்.

அதாவது நவம்பர் 25 ஆம் நாளில் இருந்து நவம்பர் 27 ஆம் நாள் வரையான மூன்று தினங்களில் 8 இற்கு மேற்பட்ட வான் தாக்குதல்களும், ஆழ ஊடுருவும் படையினரின் மூன்று தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன. இந்த தாக்குதல்களில் 28 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், 23 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கிளிநொச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர்களில் 10 இற்கும் மேற்பட்டோர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல்களில் மிகவும் இலகுவான இலக்குகளே (Soft targets) குறிவைக்கப்பட்டுள்ளன என்பதுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உரையாற்றுவதற்கு சற்று முன்னராக புலிகளின் குரல் வானொலி நிலையம் மீதும் 12 குண்டுகள் வீசப்பட்டிருந்தன. இந்த தாக்குதலில் மூன்று பணியாளர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதுடன், 15 இற்கும் மேற்பட்டோர் பாடுகாயமடைந்திருந்தனர். கடந்த வருடமும் புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது இலங்கை வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தது.

கொக்காவில் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் ஒலிபரப்புக் கோபுரங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் இருவர் காயமடைந்திருந்தனர். அன்று தாக்குதல் நடைபெற்ற பகுதிக்கு உடனடியாக விஜயம் செய்ய முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அந்த தாக்குதலை வன்மையாக கண்டித்திருந்தார்.

பொதுவாக எந்தவொரு போரிலும் ஊடகங்களின் மீதான தாக்குதல்கள் அனைத்துலக விதிகளின் பிரகாரம் தடைசெய்யப்பட்டவை. 'புலிகளின் குரல்" வானொலி நிலையத்தின் மீதான தாக்குதல் ஒரு போர்க் குற்றம் என எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசின் தற்போதைய தாக்குதல்கள் விடுதலைப் புலிகளை அதிகம் சீண்டிப் பார்க்கும் ஒரு நடவடிக்கையாகவே பலராலும் நோக்கப்படுகின்றது. தென்னிலங்கை அரசியலைப் பொறுத்த வரையில் தமது அரசியல் நலன்களுக்காக தமிழ் மக்களின் மீதான போரை முதன்மைப்படுத்தி வருவதுண்டு. இது பல தடவைகள் பலரால் சுட்டிக்காட்டப்பட்டும் இருந்தது. கடந்த ஆட்சிக்காலத்தின் போது உள்ளூராட்சி தேர்தல் வெற்றிகளுக்காகக் கூட படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தற்போதைய அரசும் அதனையே பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதன் எதிர்விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை யாரும் சிந்தித்து பார்க்கவில்லை. வன்னியை பொறுத்த வரையில் 1997 ஆம் ஆண்டில் இருந்து 1999 ஆம் ஆண்டு வரையில் இடம்பெற்ற 'வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கை காலத்தில் இருந்ததை போன்ற ஒரு நெருக்கடி மிக்க சூழ்நிலை அங்கு நிலவுகின்றது.

கடுமையான பொருளாதார தடைகள், மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை, செறிவான வான் தாக்குதல்கள், தொடர்ச்சியான படை நடவடிக்கைகள், தொடர்ச்சியான இடப்பெயர்வுகள், ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதல்கள், எறிகணை வீச்சுக்கள் என பெரும் நெருக்கடிகளுக்குள் வாழ்ந்து வரும் அந்த மக்களின் நிலை குறித்து உலகெங்கும் வாழும் அதன் உறவுகளைத் தவிர யாரும் கருத்தில் எடுத்ததாக தெரியவில்லை.

அனைத்துலக சமூகமும் அண்டை நாடுகளும், அல்லல்படும் மக்களின் துயரம் குறித்து எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை. அண்டைய தமிழகத்தில் ஏற்பட்டு வரும் அனுதாப அலைகளைக் கூட குறுகிய உள்ளூர் அரசியல் நலன் கருதி மாற்று அரசியல் கட்சிகள் சிதைத்து வருவது வேதனையானது.

நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தில் ஆற்றிய உரையின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்திருந்த கருத்தும் அதனையே வலியுறுத்தி அமைந்திருந்தது. அதாவது 'எம்மக்களின் அன்றாட சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ, அல்லது அமைப்போ குரல் கொடுக்கவில்லை. ஆதரவோ அனுதாபமோ தெரிவிக்கவில்லை. உலகமே கண்ணை மூடிக்கொண்டு பாராமுகமாக செயற்படுகின்றது. பூமிப்பந்தெங்கும் 80 மில்லியன் தமிழ் மக்கள் பரந்து வாழ்கின்ற போதும், எமக்கென ஒரு நாடு இல்லாமை தான் இந்த பரிதாப நிலைக்கு இந்த மோசமான நிலைமைக்கு காரணம்" என தெரிவித்திருந்தார்.

கடந்த 5 வருட கால போர் நிறுத்தம், இரண்டு வருடகால உக்கிர மோதல் போன்ற காலப்பகுதியில் சர்வதேச சமூகம் நடந்து கொண்ட முறை அதன் மீது இருந்த கொஞ்ச நம்பிக்கைகளையும் சீரழித்து விட்டது என்றே கூறமுடியும்.

அதாவது இந்த காலப்பகுதியில் இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு நீதியையும், உலகின் ஏனைய பாகங்களில் உரிமைக்காக போராடிய இனங்களுக்கு வேறு ஒரு நீதியையுமே அனைத்துலக சமூகம் வழங்கியிருந்தது. உதாரணமாக மொன்ரேநீக்குரோ, கிழக்குத்தீமோர், கொசோவோ போன்ற பகுதிகளில் போராடிய மக்களுக்கு உரிமைக்குரிய அந்தஸ்த்தையும், தமிழ் மக்களுக்கு பயங்கரவாதிகளுக்குரிய அந்தஸ்த்தையும் அனைத்துலகம்
வழங்கியிருந்தது.

அனைத்துலகத்தின் இந்த பூகோள நலன்சார் அரசியலின் விளைவாக 2006 ஆம் ஆண்டு ஜுன் 3 ஆம் திகதி சுதந்திர பிரகடனத்தை மேற்கொண்ட மொன்ரேநீக்குரோ தற்போது தனது சிறிய வான்படையை அமைத்து வருகின்றது. பத்திற்கும் குறைவான சிறிய விமானங்களையும் (Super Galebs,UTVA-75) அதே எண்ணிக்கையான இலகுரக உலங்குவானூர்திகளையும் (Gazelle, Mi-8) கொண்டு அது தனது வான்படையை அமைத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் இலங்கையில் அனைத்துலகத்தின் நடவடிக்கைகள் வேறுபட்டவை, தரைப்படை, கடற்படை, வான்படை என விடுதலைப் புலிகள் மிகவும் பலம் மிக்க படையாக வளர்ந்த போதும், ஒரு நாட்டுக்குரிய கட்டமைப்புக்களை கொண்டுள்ள போதும், பல தசாப்தங்களாக எந்தவிதமான அரசியல் உரிமைகளும் அற்ற நிலையில் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதும் அதனை அனைத்துலகம் பாராமுகம் கொண்டு நிற்பதும் வேதனையானது.

685,000 மக்களையும், 5,000 சதுர மைல் பரப்பளவையும் கொண்ட மொன்ரேநீக்குரோ என்ற சின்னம் சிறிய தேசம் கடந்த ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரிந்து சென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த வாக்கெடுப்பில் வெற்றியீட்ட 55 சதவீத வாக்குகள் தேவைப்பட்டன. இதனை எட்டும் நோக்குடன் இடம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்து வந்த மொன்ரேநீகிரன்ஸ் (Montenegrins) மக்களை கூட அமெரிக்க அரசு மொன்ரோநீக்குரோவுக்கு அழைத்துச் சென்றிருந்தது.

ஆனால் இலங்கையில் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தமது வாக்குகளை பயன்படுத்துவதில்லை என தமிழ் மக்கள் மேற்கொண்ட முடிவை குற்றமாக அமெரிக்கா கூறிவருகின்றது. இது அதன் ஜனநாயக இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த போதுமானது. இதே போல அனைத்துலக சமூகத்தின் ஜனநாயக வன்முறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எனினும் மாவீரர் தின கொண்டாட்டங்களின் போது வன்னியில் ஏற்படுத்தப்பட்ட அவலங்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரை என்பவற்றை நோக்கும் போது ஒன்று மட்டும் தெளிவானது. அதாவது தமிழ் மக்களுக்கு போராடுவதை தவிர வேறு வழிகள் எதனையும் அனைத்துலக சமூகமும், இலங்கை அரசும் விட்டு வைக்கவில்லை என்பதே யதார்த்தமானது.

அனைத்துலகத்தின் பாரபட்ச நடவடிக்கைகள், இலங்கை அரசின் அரசியல் நலன் சார்ந்த இராணுவத்தீர்வு முயற்சிகள் என்பன ஒரு கடும் சமரையும், அதன் மூலம் பெரும் அவலங்களையும் இலங்கை தீவில் உருவாக்கப் போகின்றது என்பது தான் தற்போதைய நிகழ்வுகளின் சுருக்கம் என்றால் மிகையாகாது.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (02.12.07)

0 Comments: