Thursday, December 6, 2007

தனியரசே முற்றுப்புள்ளி

'புலிகளின் குரல்" வானொலி நிறுவனம் மீது கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா விமானப்படை நடத்திய தாக்குதலானது ஒரு 'போர்குற்றம்" என எல்லைகளற்ற ஊடக அமைப்புக் கூறியிருக்கின்றது. எவ்வித முன்னெச்சரிக்கையுமற்று இவ்வாறு ஒரு ஊடக நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது இன்று உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையிலுள்ள ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகும்.

இந்தத் தாக்குதல் குறித்துச் சிறிலங்கா அரசாங்கம் எந்த விளக்கத்தையும் கொடுக்கலாம். அதனைச் சர்வதேசம் மௌனமாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இத்தாக்குதல் மூலம் சிறிலங்கா ஆட்சியாளர்கள் எதனைச் சாதிக்க முயன்றார்களோ அதனை அவர்களால் செய்துவிட முடியவில்லை.

அதாவது தமிழ்மக்களின் விடுதலைப் போரில் உயிரென மதிக்கப்படும் மாவீரர்களைப் போற்றும் மாவீரர் தின நிகழ்வினை அவர்கள் குழப்பத்துக்குள்ளாக்க எடுத்த முயற்சி அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை.

அதிலும் இந்த மாவீரர் நாளின் உச்சக்கட்ட நிகழ்வாக மாவீரர் துயிலுமில்லங்களில் இடம்பெறும் நிகழ்வுகளைக் குழப்பவே சிங்கள ஆட்சியாளர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். இந்த நிகழ்வுகளின் முதல் நிகழ்வாகவும் உலகளாவிய ரீதியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதுமான தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரையை ஒலிபரப்புவதில் குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் பெரிய சாதனையொன்றைச் சாதித்துவிட முடியும் என்பதே சிங்கள ஆட்சியா ளர்களின் நோக்கமாக இருந்தது.

ஆனால் புலிகளின் குரல் நிறுவனத்தின் இந்த ஒலிபரப்பையும் மாவீரர் தின நிகழ்வுகளையும் குழப்பிவிட ஆட்சியாளர்களால் முடியவில்லை. இதற்காகப் புலிகளின் குரல் நிறுவனப் பணியாளர்கள், அருகிலுள்ள குடியிருப்புக்களில் வாழ்ந்த மக்கள், பிரதான வீதியில் சென்ற மக்கள் எவரையும் கருத்திலெடுக்காது தாக்குதல் நடத்தச் சிறிலங்கா ஆட்சியாளர்கள் வான்படைக்கு உத்தரவு வழங்கியிருக்கின்றனர்.

எல்லைகளற்ற ஊடக அமைப்பின் அறிக்கையின்படி பார்த்தால் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவர் விடயத்திலும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் போர்க் குற்றமே புரிந்துள்ளனர்.

ஆனால் சிங்கள ஆட்சியாளர் இவ்வாறான போர் குற்றங்கள் ஏராளமானவற்றைச் செய்துள்ளனர் என்பதைத் தமிழ்மக்கள் நன்கறிவர். பாடசாலைகள், ஆலயங்கள், மக்கள் குடியிருப்புக்கள் என்பன இவ்வாறு இராணுவத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள் எனச் சிங்கள ஆட்சியாளர்களுக்கு எவருமே, எவையுமே பொருட்டல்ல.

மாவீரர் நாள் அன்றும் அதற்கு முன்னைய தினங்களிலும் ஈருருளியில் சென்ற மாணவன், வியாபாரி, நோயாளர் காவுவண்டிகள் என்பவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுப் பல உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. பலர் படுகாயப்படுத்தப்பட்டு தமது வாழ்வில் பெரும் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர். இவர்களில் 10 இற்கு மேற்பட்டோர் மாணவர்கள் நோயாளர் காவு வண்டியில் பயணிக்கும் போது கொல்லப்பட்டோர் மக்கள் நலன் தொண்டு செய்யச் சென்ற மாணவச் செல்வங்கள். இவற்றைவிட புலிகளின் குரல் நிறுவனம் மீது தாக்குதல் நடத்தி போர்க்குற்றத்தைப் புரிந்துள்ளது மகிந்த ஆட்சி.

ஆனால் இறைமையுள்ள அரசாங்கம் என்ற ரீதியில் இவர்கள் மீது எதுவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்பதும் தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரிந்த விடயமே.

இறைமையுள்ள நாடொன்றின் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அல்லது தமது நலன்களுக்குப் பயன்படுவோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் மட்டுமே சர்வதேசம் துடிதுடித்து எழும், கண்டனக்குரல் எழுப்பும். தேவையானவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே இவை பயன்படுகின்றன.

சிங்கள ஆட்சியாளர்கள் இந்த ஜெனீவாப் பிரகடனம் என்பனவற்றையெல்லாம் தமது பிரச்சாரத்திற்கும் தமது தேவைக்கும் பயன்படுத்தும்போது மட்டுமே பெரிதாகக் கதைக்கின்றனர். ஏனைய சந்தர்ப்பங்களில் அவை குறித்து எதுவிதத்திலும் கருத்திலெடுப்பதில்லை.

தமிழ் மக்கள் தாம் சிங்கள அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டு உரிமை கூட மறுக்கப்பட்ட நிலையில் அவற்றை அமைதி வழியில் வெளிப்படுத்தியபோது அதனை எவருமே பொருட்படுத்தவில்லை. அதனை தமிழ்மக்கள் வெளிப்படுத்தாது தடுக்கச் சிங்கள ஆட்சியாளர்கள் வன்முறை வழியையே பிரயோகித்தனர். இது 50 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்துவிட்ட வரலாறு.

இந்த வன்முறைகள் உச்சமடைந்தபோது தமிழ்மக்கள் தம்மைப் பாதுகாக்க ஆயுதமேந்திய போது அதனைச் சிங்கள ஆட்சியாளருடன் இணைந்து ஒடுக்க இந்த ஜெனீவாப் பிரகடனத்தில் கையொப்பமிட்ட பல நாடுகள் முன்வந்தன.

தமிழ்மக்களின் இந்தப் போராட்டம் வளர்ச்சி பெற்று இன்று ஓர் முக்கிய திருப்புமுனையில் நிற்கிறது. இன்றும் கூட தமிழ்மக்கள் தமது நியாயங்களை உலகிற்கு எடுத்துக்கூற வைத்திருந்த ஓர் ஊடகத்தை அழித்துவிடச் சிங்கள அரசு ஜெனீவா சாசனத்தை மீறி தாக்குதல் நடத்துகிறது.

தமிழ்மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தக்கூட இன்றும் உயிர் அர்ப்பணிப்புக்களையும் இரத்தத்தை சிந்தவேண்டியும் உள்ளது என்பதே யதார்த்தமாகும்.
எனவே தமிழ்மக்கள் இந்த வன்முறைக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி தமது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதைத் தவிர வேறுவழி எதுவும் இல்லை என்பதையே சிங்கள அரசின் அராஜகமும் இது குறித்த அனைத்துலகின் மௌனமும் புலப்படுத்துகின்றன.

அதாவது ஓர் இறைமையுள்ள அரசை அமைத்துக் கொள்வதன் மூலமே இத்தகைய கொடூரங்களிலிருந்தும் பாராமுகங்களிலிருந்தும் தமிழ் மக்கள் தங்களை விலக்கிக்கொள்ள முடியும்.

-வேலவன்-

நன்றி: வெள்ளிநாதம் (30.11.07)

0 Comments: