Saturday, December 8, 2007

அமெரிக்க ஜனாதிபதியும் அம்பலமாகும் பொய்களும்

சதாம் ஹுசெய்ன் குவித்து வைத்திருந்த பேரழிவு தரும் ஆயுதங்கள் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியதாகக் காரணம் கூறிக் கொண்டு சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா இன்றுவரை அந்த ஆயுதங்களில் எந்தவொன்றையுமே கண்டுபிடிக்கவில்லை. சுயாதிபத்தியம் கொண்ட நாடொன்றை ஆக்கிரமிப்பதற்காக முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயருடன் சேர்ந்து முழு உலகிற்குமே படுபொய்யைக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்கிறது என்று குற்றஞ்சாட்டி அந்த நாட்டுக்கு எதிராகவும் கடந்த இரு வருடங்களாகப் போர் முரசு கொட்டி வருகின்றார். மூன்றாம் உலகப் போர் மூளுவதைத் தடுக்கவிரும்பினால், ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிப்பதற்கான அறிவையும் தொழில்நுட்பங்களையும் பெறுவதைத் தடுக்க வேண்டியது உலக நாடுகளின் பொறுப்பு என்று இரு மாதங்களுக்கு முன்னர் புஷ் எச்சரிக்கை விடுக்கவும் புஷ் தவறவில்லை. ஆனால், இவ்வாரம் அதே அமெரிக்கா ஈரானிடம் அணுவாயுத திட்டமெதுவும் தற்போது இல்லையென்று கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனம் (சி.ஐ.ஏ.) உட்பட 16 புலனாய்வு அமைப்புகளுடன் ஆலோசனை கலந்து தேசிய புலனாய்வு பேரவையினால் தயாரிக்கப்பட்ட தேசிய புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கையில் `அணு குண்டைத் தயாரிப்பதற்கான திட்டமொன்றை முன்னர் ஈரான் கொண்டிருந்த போதிலும், 2003 இல் அத்திட்டத்தை அந்த நாடு நிறுத்திவிட்டது. 2007 நடுப்பகுதி வரை அத்திட்டத்தை ஈரான் மீள ஆரம்பிக்கவில்லை. 2015 வரை ஈரானால் அணுவாயுதமொன்றைத் தயாரிக்கக்கூடியதாக இருக்காது' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஈரான் அணுவாயுதத்தை தயாரிக்கிறது என்று 2005 இல் தேசிய புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதையடுத்தே ஜனாதிபதி புஷ் ஈரானுக்கு எதிரான தனது வியூகங்களை வகுக்க ஆரம்பித்திருந்தார். அந்நாட்டுக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் உறுப்பு நாடுகளின் ஆதரவை அவர் திரட்டினார். ஈரானின் அணு நிலையங்கள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று ஒரு கட்டத்தில் அஞ்சப்பட்டது. இன்று அதே புலனாய்வு மதிப்பீடு ஈரானிடம் தற்போது அணுவாயுதத் திட்டமெதுவும் இல்லையென்று கூறியிருக்கிறது.

ஈரானைத் தண்டிக்கும் வகையில் தாக்குதல்களை நடத்தவேண்டுமென்ற போர் வெறித்தனமான நிலைப்பாட்டைக் கொண்ட புஷ் நிருவாகத்துக்கு மாத்திரமல்ல, அமெரிக்கா தெரிவிக்கின்ற குற்றச்சாட்டுக்களை தீவிரமாக ஆராயாமல் ஈரானுக்கு எதிரான தடை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்த நாடுகளுக்கும் தேசிய புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலகை தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காக ஆக்கிரமிப்புத் தன்மையானதும் சூழ்ச்சித்தனமானதுமான கொள்கைளைக் கடைப்பிடித்து வருகின்ற அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனங்களினால் விடுக்கப்பட்ட ஒரு அறிக்கையை `தூய்மையானதாக' நாம் கருதவில்லை. புலனாய்வு அறிக்கைகளை தனது நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக வெள்ளைமாளிகை திரிபுபடுத்தி பயன்படுத்துவது ஒன்றும் புதுமையானதுமல்ல. இந்தச் சந்தர்ப்பத்தில் தேசிய புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கையை பகிரங்கப்படுத்துவதற்கு புஷ் நிருவாகம் எதற்காக முன்வந்தது என்பது முக்கியமானதொரு கேள்வியாகும். ஈரானின் அணுவாயுதத் திட்டம் தொடர்பான இந்த அறிக்கை பதிலளிக்க முயற்சிக்கின்ற கேள்விகளை விட அது கிளப்புகின்ற கேள்விகளே அதிகமானவையாகும்.

ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக ஒரு பொய்யைக் கூறி உலக அபிப்பிராயத்தைத் துச்சமெனமதித்து அந்நாட்டை ஆக்கிரமித்து இன்று உலகின் முன்னால் அம்பலப்பட்டு நிற்கும் அமெரிக்க ஜனாதிபதி தொடர்ந்தும் பொய்களைக் கூறி ஈரானையும் ஆக்கிரமிக்கத் திட்டமிட்டிருந்தார் என்ற உண்மை இப்போது அம்பலமாகியிருக்கிறது. இன்னும் ஒரு வருட காலத்துக்கு வெள்ளைமாளிகையில் இருக்கப்போகும் புஷ் இன்னும் எத்தனை பொய்களைக் உலகுக்கு கூறப்போகிறாரோ தெரியவில்லை
08 - December - 2007
www.thinakkural.com

0 Comments: