Friday, December 14, 2007

சிங்கள வியூகம் சிதைகிறதா?

கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி, கிழக்கைக் கைப்பற்றிவிட்டோம் என்ற எண்ணக்களிப்பில் சேனாதிபதிகள் புடைசூழ, ராசகளை சொட்ட, டாம்பீகமான சோடசவுபசாரங்களோடு வெற்றிமடலைப் பெற்றுக்கொண்டு நுனிக்காலில் நின்று பன்னாட்டுச் சமூகத்தையே எள்ளி நகையாடிப் பேசிய போது, இப்படியெல்லாம் நேரும் என்று ராஜபக்ச நினைத்திருக்கவில்லை.

மன்னாரில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிட்டதாத நிலையில் செக்கிலே பூட்டிய புசியன் காளையாக தம்பனையையும், மாந்தையையும் சுற்றிச் சுற்றி நடவடிக்கைப் படைகள் அல்லாடிக்கொண்டிருக்க, கிழக்கிலே அடுத்தது என்ன என்ற கேள்விக்குப் பதில் கிடையாமல் காட்டையும் மேட்டையும் ஐந்தாறு பிரிகேடுகள் காவல் செய்ய, கொழும்பு, அம்பாந்தோட்டை, அனுராதபுரம், கெப்பிற்றிக்கொல்லாவ, மதவாச்சி-வில்பத்து எல்லைப்புறம் என்று படைகளைப் பரப்பியடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நிற்கிறார் மகிந்தர்.

மன்னார்க் களமுனை திறக்கப்பட்டபோது அனைத்தும் கனகச்சிதமாக இருப்பது போலவே மகிந்தரின் வியூகம் தென்பட்டது. 57 ஆவது டிவிசனும் புதிதாகத் தொடக்கப்பட்டு மன்னார்-வவுனியா எல்லையில் புலிகளின் வலுநிலைகளுக்குச் சமாந்தரமாக நிறுத்தப்பட்டது.

கிழக்கிற்கான தமது பெருமட்டப் படைகளைப் புலிகள் பின்வலித்திருந்த நிலையில், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் சிறிலங்கா படைகள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடங்களில் அவ்வப்போது படையிருக்கு எதிராக நிகழ்ந்து வந்த தாக்குதல்களைத் தவிர வேறேதும் அச்சுறுத்தல்கள் தமக்கு இருப்பதாக படையினர் எண்ணியிருக்கவில்லை. மிகவும் சாவதானமாக முன்னேறி மன்னார்-பூநகரி கரையோரத்தைக் கைப்பற்றி விடலாம் என்ற எதிர்பார்ப்பு படையினரிடம் அப்போது வலுவாக இருந்தது.

ஆனாலும், கிழக்கின் அனுபவங்களை மன்னாரில் செயற்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களை சிறிலங்கா படைகளின் திட்டமிடுவோர் அப்போது சரியாகக் கணித்திருக்கவில்லை என்பதை, இப்போது அவர்களின் படைகள் முன்னேற முடியாமல் திணறுவது குறித்துக் காட்டுகிறது.

மன்னாருக்கான புலிகளின் படைப்பரம்பலை, வவுனியாவிற்கும் மன்னாருக்கும் இடையே ஊடறுத்து வடபுறமாக நீட்டி அங்குள்ள காட்டுப் பகுதியயை முற்றிலும் கைப்பற்றுவதன் மூலம் கரையாக நிறுத்தப்பட்டிருக்கும் புலிகளின் வலுநிலைகளுக்குப் பக்கவாடான அச்சுறுத்தலைத் தரமுடியும், புலிகள் ஒரு தந்திரோபாயப் பின்வாங்கலுக்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்பதே அவர்களின் கணிப்பாக இருந்தது.

மாவிலாற்றில் படைச்செறிவை உண்டாக்கி திருமலை-மட்டக்களப்பு மாவட்ட எல்லையோடமைந்த கரையோரத்தில் இருந்த புலிகளின் வலுநிலைகளுக்கு பக்கவாடாக அச்சுறுத்தல் தரமுனைந்ததை இங்கும் அரங்கேற்றுவதே 57 ஆவது டிவிசனின் நோக்கம்.

ஆயினும், கட்டுக்கரைக் குளத்தின் சுற்றுவட்டாரங்களை முற்றிலும் கைப்பற்ற முடியாமலும் தம்பனையைத் தாண்டிக் குறிப்பிடத்தக்க அளவு வடபுறமாக நகர முடியாமலும் மடு வீதியில் முன்னேற்றம் காணமுடியாமலும் இன்றுவரை சிறிலங்கா படைகள் மல்லுக்கட்டி வருகின்றனர்.

சிறிலங்கா படையினரின் அத்தனை உத்திகளுக்குமான பதில் மருந்துகள் நடைமுறையளவில் விடுதலைப் புலிகளின் களமட்டத்தில் தாராளமாகப் புழங்குவதே மகிந்தர் எதிர்பார்த்த முன்னேற்றம் மன்னாரில் கிடைக்காமற் போனதற்குக் காரணம்.

இவைகளுக்கிடையே, கொழும்பு அரசியல் அரங்கில் ராஜபக்சர்களுக்கு அவசரமாக ஒரு வெற்றிச் செய்தி தேவைப்பட்டதால் அவசர அவசரமாக புலிகளின் வலுநிலைகள் அதிகம் இல்லாத சிலாவத்துறை நோக்கி பாரிய படையெடுப்பைச் செய்து அதையும் பெருவெற்றியாகக் காட்டி, இப்போது அங்கும் கணிசமான படைகள் தொங்கிக்கொண்டு நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இப்போது 58 ஆவது டிவிசனும் மன்னாரில் நிறுத்தப்பட்டு அங்கே படைச்செறிவு அதிகரிக்கப்பட்டடிருக்கிறது. ஆயினும் சிறிலாங்காப் படையினரால் சொல்லிக்கொள்ளும்படியான பெறுபேறுகள் எய்தப்படவில்லை.

கிழக்கில் படை விரிப்பைச் செய்துவிட்டு அதை இயன்றளவும் சிங்களமயப் படுத்துவதே தன் நோக்கம் என்பதை தெற்கிற்கு அடிக்கடி குறிப்பாலுணர்த்தி வருகிறார் மகிந்தர். அந்த வேலையை முன்னின்று ஒழுங்குபடுத்தும் பொறுப்பைத் தனது ஆசைத்தம்பி பசிலுக்கு அவர் தந்திருப்பதாகத் தெரிகிறது.

கிழக்கு சார்ந்த அனைத்துக் கூட்டங்களிலும் நேரடியாகக் கலந்துகொண்டு வரும் பசில், பிள்ளையான் குழுவுடன் நேரடியான தொடர்பைப் பேணி வருவதாகவும், பிள்ளையானுக்கான அரசியல் ஆலோசனைகளையும் அனுசரணைகளையும் தந்துதவுவதாகவும் சனாதிபதி செயலக வட்டாரங்களில் கதைகள் கசிகின்றன.

டிசம்பர் 10 ஆம் திகதியன்று மட்டக்களப்பில் பிள்ளையான் ஒட்டுக்குழுவினர் ஏற்பாடு செய்த பேரணியில் தமிழ் மக்கள் விரும்பிக் கலந்துகொள்ளப் போவதில்லை என்பது தெரிந்திருந்ததால், மட்டக்களப்பின் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் 300 பேர் வரையான சிறுவர்களை முதல் நாள் இரவே பிடித்துவைத்த பிள்ளையான் குழுவினர், மறுநாள் முத்தவெளியில் நடக்கப்போகும் பேரணியில் பங்குபெற்றும் பெற்றோர் பிள்ளைகளைப் பெற்றுச் செல்லலாம் என்றும் பங்குபற்றாத பெற்றோரின் பிள்ளைகள் இல்லாமற் போவார்கள் என்றும் அச்சுறுத்தினர். இந்த ஆலோசனையை பசிலே வழங்கியிருந்தார்.

அத்தோடு நில்லாது, மேல்மாகாண போக்குவரத்துச் சபையின் நூற்றுக்கு மேற்பட்ட பேரூந்துகளில் தமக்கு ஆதரவான தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் பெருந்தொகையான ஆட்களையும் ஏற்றி அனுப்பியிருந்தார். வாகரையில் இருந்து எங்கு போகிறோம் என்பது அறிவிக்கப்படாமல் பேருந்துகளில் ஏற்றப்பட்ட மக்கள் முத்தவெளியில் இறக்கப்பட்டார்கள். சிற்றணி என்றே கொள்ளக்கூடிய அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பெரும்பாலான 'கிழக்கின் மக்கள்" எனக் காட்டப்பட்ட ஆட்களுக்குத் தமிழ் தெரியவில்லை என்பதை பல தென்னிலங்ககை ஊடகர்கள் கூட இரகசியமாகப் பேசிக்கொண்டார்கள்.

அதிருப்தியை பகிரங்கமாச் சொல்ல முடியாத நிலையில், இந்தச் செய்தியைப் புறக்கணித்ததன் மூலம் பெரும்பாலான கௌரமான ஊடகங்கள் தமது கண்டனத்தைக் கோடிகாட்டின.

இப்போது, மட்டக்களப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதீட்டு வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தடுப்பதற்காக அவர்களின் உறவினர்கள் மீண்டும் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு, அடாவடி அரசியலையே கிழக்கில் தொடர்ந்தும் செய்வதற்காக ஒட்டுப்படைiயும் பெருமளவான சிங்களப்படையையும் அங்கே தொடர்ந்தும் வைத்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் அரசிற்கு இருக்கிறது.

இந்த நிலையில்தான் கொழும்பில் 18,000 வரையான படையினரை நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. அங்கு பெருந்தொகைப் படையிருப்பை அறிவித்து ஊடகங்களில் பெரிதாக வரத்தக்கதாக தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குக் காரணம் கொழும்பின் பாதுகாப்போடு அதன் பங்குச் சந்தை பின்னிப் பிணைந்திருப்தே.

நுகேகொட சம்பவம் நிகழ்ந்த அன்று மாலையே கொழும்பின் பங்குச்சந்தை சிறிதாக ஒரு குட்டிக்கரணம் போட்ட செய்தியை பெரும்பாலான உலகச் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன.

கொழும்பின் சூடு ஆறு முன்னரே கெப்பிற்றிக்கொல்லாவயிலும் மேலதிக படைச் செயற்பாட்டிற்கான அவசரம் உண்டாயிற்று. அனுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை போலவே கெப்பிற்றிக்கொல்லாவையிலும் வில்பத்து-மதவாச்சி எல்லையிலும் படைகளை நெருக்கமாக நிறுத்தவேண்டிய நிர்ப்பந்த நிலையை சிறிலங்கா படைத்துறைத் திட்டமிடலாளர் புறந்தள்ள முடியாத இப்போது கட்டத்தில் உள்ளனர்.

இவ்வாறாக, கொழும்பின் ஒட்டுமொத்த படைப்பரம்பல் மூலோபாயத்தில் பரவலாகப் பொத்தல் விழுந்து வருவதை கொழும்பின் பேரினவாதப் பத்தியாளர்களும் முனகலுடன் ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டுள்ளார்கள். 'பயங்கவாதச் செயற்பாடுகள்" என்று அவர்கள் வருணிக்கும் சம்பவங்களை நிறுத்துவது முன்னேற்றமடைந்த நாடுகளின் புதுநுட்பங் கொண்ட படைகளுக்கே சிரமான பணி என்று இனவாதப் பத்தி எழுத்தாளர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுதியிருந்தார்.

ஆய்வுகளும் கருத்துக்களும் எவ்வழிநோக்கித் திரிக்கப்பட்டாலும், ராஜபக்சர்களின் ஒட்டுமொத்த படைப்பரம்பல் வியூகத்தை கடந்த ஒக்ரோபர் மாத நடுப்பகுதி தொடக்கம் தமிழர் தாயகத்திற்கு வெளியே நிகழ ஆரம்பித்த சம்பவங்கள் முற்றிலும் மாற்றியமைத்திருக்கின்றன என்பது திண்ணம்.

அதைக் கையாளுவதற்கான ஏற்பாடுகளையும் மாற்றுத்திட்டங்களையும் பற்றிச் சிங்களப் படைத்தரப்பு சிண்டைப் பிய்த்துக்கொண்டு யோசிக்கும் அதே நேரத்தில், வன்னிப் பெருநிலப்பரப்பைச் சுற்றியுள்ள களங்களைத் தீவிரப் படுத்துவதை அதற்றான ஒரு தீர்வாக சிறிலங்கா அரசாங்கம் கொள்ளக்கூடிய வாய்ப்புக்களும் தெளிவாகத் தெரிகின்றன.
-சேனாதி-
நன்றி: வெள்ளிநாதம் (14.12.07)

0 Comments: