`மலேசியத் தமிழர் பிரச்சினை பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி கவலைப்படத் தேவையில்லை. அவருடைய மாநிலத்திலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அதைப்பற்றித்தான் அவர் கவலைப்பட வேண்டுமே தவிர மலேசியப் பிரச்சினையில் கருணாநிதி கருத்துத் தெரிவித்துப் பேசாமல் இருந்தால் போதும்' இப்படிக் கூறியிருப்பது மலேசிய அமைச்சர் நஸ்ரி அஜீஸ். தகவலை வெளியிட்டிருப்பது கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் `நியு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ்.
அப்படி என்னதான் தவறாகப் பேசியிருப்பார் தமிழக முதல்வர்? மலேசியாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அந்தத் தமிழர்களை பாதுகாக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதினார். இதைக்கூட ஒரு தமிழக முதல்வர் செய்யாமல் இருந்தால் அவர் முதல்வராக இருப்பதிலேயே அர்த்தமில்லை என்பது பச்சைக் குழந்தைக்குக்கூட தெரியும்.
மலேசிய மக்கள் தொகையில் ஏழு சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள். அந்த இந்தியர்களிலும் பெருவாரியானவர்கள் தமிழர்கள். சொல்லப்போனால்,மலேசியாவில் குடியேறி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாழும் தமிழர் குடும்பங்கள் ஏராளம். ஆனால், சிங்கப்பூரில் இருப்பதுபோல் மலேசியாவாழ் தமிழர்களுக்கு உரிமைகள் எதுவும் தரப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் எப்பொழுதுமே இரண்டாம் தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்பட்டு வருகின்றனர்.
அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்துக் கோயில்கள் பல இடிக்கப்படுகின்றன. மலேசியப் பல்கலைக்கழகங்களில் இந்தியர்களுக்கு இடம் தரப்படுவதில்லை. புதிய தொழில்களை இந்தியர்கள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பன போன்ற ஏராளமான மனக்குறைகள் மலேசியாவாழ் இந்தியர்களுக்குப் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. இத்தனைக்கும் மலேசிய அரசிலும் அரசியலிலும் `டத்தோ' சாமிவேலு போன்ற தமிழர்கள் பங்கு பெற்றும் நிலைமையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.
மலேசிய அமைச்சர் `டத்தோ' சாமிவேலுவை பலவீனப்படுத்தும் எண்ணத்துடன் தான் அங்குள்ள தமிழர்கள் எதிரணியினரால் திரட்டப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை, என்றாலும் தங்களது உரிமைகளைக் கேட்டு அகிம்சா வழியில் போராடுவது எப்படித் தவறாகும்? தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 10,000 பேருக்கும் அதிகமான இந்தியர்கள் கோலாலம்பூரில் நடத்திய பிரமாண்டமான பேரணியை மலேசிய பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கலைக்க முற்பட்டபோது பலர் படுகாயம் அடையநேரிட்டது.
அகிம்சை வழியில் போராட்டம் நடத்திய தமிழர்களை அந்நாட்டு பொலிஸார் நடத்திய விதம் தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும் மலேசிய தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் கருணாநிதியை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும்.
மலேசியத் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசினால், அந்த அரசு நமக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவிடும். அதனால், பல்லாயிரம் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு போய்விடும் என்றெல்லாம் கூறப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதற்காக, அடிப்படை உரிமைகள் மீறப்படுவதையும் அடக்குமுறையையும் மெனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவதை நம்மால் அங்கீகரிக்க முடியவில்லை. சிங்கப்பூரில் இருப்பதுபோல மலேசியாவிலும் தமிழர்களுக்கு சமஉரிமை பெற்றுத் தரவேண்டிய கடமை இந்திய அரசுக்கு நிச்சயம் உண்டு.
அதெல்லாம் ஒரு புறம் இருக்க, முதல்வர் கருணாநிதி எப்படி இப்படியொரு கடிதம் எழுதலாம் என்று கேள்வி எழுப்பியிருக்கும் மலேசிய அமைச்சரைக் கேட்க வேண்டிய முக்கிய கேள்வி- தமிழர்களுக்காகத் தமிழக முதல்வர் குரல்கொடுக்காமல் தன்சானியா பிரதமரா குரல் கொடுப்பார்? வரம்பு மீறியிருப்பது தமிழக முதல்வரல்ல, மலேசிய அமைச்சர்தான்!
04 - December - 2007
தினமணி
Tuesday, December 4, 2007
`தமிழர்களுக்காக தமிழக முதல்வர் குரல் கொடுக்காமல் தன்சானியா பிரதமரா குரல்கொடுப்பார்'?
Posted by tamil at 6:55 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment