Monday, December 3, 2007

மகிந்தவின் சகாசங்களும் தந்திரங்களும் எதுவரை?

மகிந்த ராஜபக்ச நாட்டின் அதிபராக அவருடைய பிறந்த நாளிலேயே பொறுப்பேற்றார். இப்போது பட்ஜெட் வாக்கெடுப்பும் அவருடைய பிறந்த நாளுடனேயே வந்திருக்கிறது. முன்னைய பிறந்தநாளை அவர் உச்ச மகிழ்ச்சியோடு கொண்டாடினார். இன்னொரு பிறந்த நாளில் அவர் பதற்றத்தோடு இருந்தார்.

பொதுவாகவே மகிந்த ராஜபக்ச ஒரு சாகசக்காரனைப் போலவே இருக்கிறார். அவர் அப்படித்தான் தன்னையும் கருதிக் கொள்கிறார். அதன்படியே அவர் நடந்தும் கொள்கிறார். ராஜபக்சவின் அரசாங்கம் நித்திய கண்டம் பூரண ஆயுள் என்ற மாதிரியே ஆட்சியிலிருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் இந்தநிலையை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியிருக்கின்றன. தன்னுடைய ஆட்சியைத் தக்கவைக்க வேண்டுமானால் தொடர்ந்து பேரம் பேசியே தீர வேண்டும் என்ற கட்டத்துக்கு அவர் வந்துள்ளார். இது இலங்கைத்தீவைப் பொறுத்தவரையில் ஒரு கெட்ட முன்னுதாரணமே.

மகிந்த ஆட்சிக்கு வந்தகாலத்தில் அவருக்கு அவருடைய சுதந்திரக் கட்சிக்குள்ளும் வெளியிலும் பெருத்த நெருக்கடிகளிருந்தன. கட்சியிலிருந்து குறிப்பிட்டளவானோர் அவரை வெளிப்படையாக பகைக்கவும் முடியாமல் ஆதரிக்கவும் இயலாமலிருந்தனர். இந்த அணியினருக்கு முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமை தாங்கினார். இது மகிந்த ராஜபக்சவுக்கு அதிக நெருக்கடியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த உள்வீட்டெதிர்ப்பையெல்லாம் அவர் எதிர்க்கட்சியினரில் ஒரு தொகுதியினரை விலைக்கு வாங்கி முறியடித்தார். இதற்காக அவர் கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.

அதேவேளை அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்த ஜே.வி.பி யுடன் கடுமையாக முரண்படவும் வேண்டியிருந்தது. இந்த முரண்நிலை இன்னும் தீரவில்லை. ஆனால், இதெல்லாத்தையும் அவர் எப்படியோ சரிக்கட்டினார். ஆனால், ஒரு கட்டத்தில் இந்த உள்வீட்டெதிர்ப்பு காரணமாக அரசாங்கத்தின் அமைச்சர்களாகவும், கட்சியின் முக்கிய பொறுப்பிலுமிருந்த சிறீபதி சூரியாராய்ச்சியும் மங்கள சமரவீரவும் மகிந்த ராஜபக்சவை வெளிப்படையாக எதிர்த்துக் கொண்டு வெளியேறிப்போனார்கள்.
இந்தச் சந்தர்ப்பங்களில் அரசாங்கம் கடுமையாக ஊசலாடியது. அந்த நாட்களில் மகிந்த ராஜபக்ச துாக்கமேயில்லாமலிருந்தார் என்று அவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் சொல்கிறார்கள்.

அப்போது மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல, ராஜபக்ச குடும்பமே கதிகலங்கிப் போயிருந்ததாகவும் அவர்கள் சொல்கிறார்கள். நீண்டகால அரசியல் வாழ்வில் பிறகு ராஜபக்ச குடும்பத்துக்குக் கிடைத்த அதிகாரமும் தலைமைத்துவமும் கிடைத்துவடனேயே பறிபோவதா என்று அவர்கள் கவலைப்பட்டார்களாம்.
ஆனால், மகிந்த ராஜபக்சவோ, கட்சியிலுள்ளவர்களும் வெளியாரும் எதிர்பார்த்ததை விடவும் அதிரடியாகவும், சாகசமாகவும் சில முடிவுகளை எடுத்து தன்னைக் காப்பாற்றினார்.

இந்தா கவிழுகிறது என்றிருந்த அரசாங்கம் ஆடித்தளம்பி பிறகு சுதாகரித்துக் கொண்டது. பிறகு ஜே.வி.பி யின் முரண்பாடுகள் வலுக்க அவர் ஏனைய கட்சிகளை வளைத்துப்போட்டு அரசாங்கத்தைப் பலமாக்கினார்.
அதற்காக அவர் இலங்கையின் வரலாற்றில் எப்போதுமே நடந்திராத அளவுக்கு அதிக அமைச்சுக்களையும் இலாகாக்களையும் உருவாக்கினார். இதற்காக பல விமர்சனங்களும் கண்டனங்களும் கேலிகளும் வெளிவந்தபோதும், அதனையிட்டு மகிந்த கவலைப்படவேயில்லை. அவர் கவலைப்படவில்லை என்பதைவிடவும் அவருக்கு வேறு வழிகளிருக்கவில்லை என்கிறார் ஒரு நண்பர்.

அது மட்டுமல்ல இப்போது அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வரும் ஜே.வி.பி யினர் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளைக் கேட்டால் அதற்கும் தயாராகவே மகிந்த இருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் தன்னுடைய ஆட்சியைத் தக்க வைப்பதற்காக அவர் எத்தகைய விட்டுக் கொடுப்புக
ளையும் செய்யத் தயாராக இருக்கிறார். அத்துடன் எத்தகைய விலைகளையும் கொடுக்கவும் ஆயத்தம். அவர்தான் சாகசக்காரனாயிற்றே எதையும் செய்வார். அவருக்கு நாடுகுறித்த தீர்க்க தரிசனப்பார்வையோ, பொறுப்போ கிடையாது.

அதையெல்லாம் பற்றிச் சிந்திக்கும் பண்புநிலையும் அவருக்கில்லை என்பதை அவருடைய இத்தகைய அணுகுமுறைகள் தெளிவாகவே காட்டுகின்றன.
இதேவேளை, அவருடைய குடும்ப ஆதிக்கம் அரசியலிலும் ஆட்சியிலும் அதிகமாகி விட்டதென்று பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சிறீலங்காவின் அரசாங்கம் என்பது ராஜபக்ச சகோதரர்களின் கொம்பனி என்றும், அவர்கள் படுமோசமான ஊழல் பேர்வழிகள் என்றும் கூட சனாதிபதியின் கண்ணில் படும்படி எழுதினார்கள்.

அவருடைய காதில் விழும்படியாக பலரும் இதைப் பகிரங்கமாகவே பேசினார்கள். ஆனால் மகிந்த ராஜபக்சவோ புலன்களை மெல்ல அடக்கிக் கொண்டு அமைதி காத்தார். அதனால் ஆட்சியையும் காத்தார்.
இதோடு மகிந்த அரசாங்கத்துக்கான சோதனைக்காலம் தீரவில்லை. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என மிகப்பெரிய கண்டன அலையை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அரசாங்கத்துக்கெதிராக எழுப்பின. கூடவே ஐ.நா வின் மனித நேய அமைப்புகளும் மனித உரிமைகள் அமைப்புகளும் அரசாங்கத்தைக் குறைகூறின. இது அரசாங்கத்துக்கான நிதி மற்றும், ஆயுத உதவிகளை மட்டுப்படுத்தின. அரசாங்கம் இந்தத் தடைகளாலும் உதவிக் குறைப்புகளாலும் நெருக்கடிக்குள்ளாகியது.
இதை ஈடு கட்டுவதற்காக சனாதிபதி உதவி கோரிபிச்சை கேட்கும் கோலத்தில் சீனா, கியூபா, இந்தியா என்று பெரும் பரிவாரத்தோடு படையெடுத்தார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தளவு உதவிகள் கிடைக்கவில்லை. என்றபோதும் அவர் ஓய்ந்து விடவில்லை. தான் சீனாவுக்குப் போனபோது அவர் மிலிந்த மொறகொடவை அமெரிக்கா
வுக்கு அனுப்பியிருந்தார். துாரநின்ற மேற்குலகத்தை மிலிந்த மெல்லக் கிட்டக் கொண்டு வந்தார். ஆனால், இந்தக் காரியத்தை அவர் அதிக சலசலப்பில்லாமற் கொண்டு வந்திருக்கிறார். மிலிந்தவின் இந்த பங்களிப்பை அறிந்த ஐ.தே.கட்சியினர் அவரின்மீது நம்பிக்கையில்லாப்பிரேரணையைக் கொண்டு
வர முயற்சித்திருந்தனர்.

அரசாங்கத்தைச் சூழ்ந்த மனித உரிமை மீறல்கள் நெருக்கடிகளின் விளைவாக சிறீலங்கா மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என்ற நிலை அதிகரித்திருந்தது. ஐ.நா வின் மனித உரிமைகள் பற்றிய கூட்டத் தொடரில் இந்தத் தடையை சிறீலங்கா எதிர்கொண்டெ தீரவேண்டும் என்று பலமாக நம்பப்பட்டது. ஆனால், அதையும் சிறீலங்கா இறுதியில் சமாளித்துக் கொண்டுவிட்டது. மனித உரிமை மீறல்களுக்குக் காரணமான துணை ஆயுதக் குழுக்களின் விவகாரத்தையே அரசாங்கம் இன்னும் தீர்வு காணாமலே வைத்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து அரசாங்கத்தின் மீது பெரும் கண்டனங்கள் தொடர்ந்தும் வைக்கப்பட்டு வருகிறபோதும், அது இன்னும் இந்த விடயத்தில் மௌனமாகவே இருக்கிறது.

அதேவேளை அது துணை ஆயுதக்குழுக்களை வைத்துக் கொண்டு காரியங்களைச் செய்தே வருகிறது.
இதேவேளை வெளியரங்கில் அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய வட்டாரத்தில் சிறீலங்காவுடனான உறவில் மெல்லிய இடைவெளியும் ஏற்பட்டது. இந்த இடைவெளி சிறீலங்காவுக்கான உதவிகள் ஆதரவு என்பவற்றை குறைப்பதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் மகிந்த ராஜபக்ச கடந்து விட்டார் போலவேயுள்ளது. அல்லது அதில் அவர் பாதிக்கிணற்றைத் தாண்டியுள்ளார் போலிருக்கிறது.
இதெல்லாம் மகிந்தவுக்கான அழுத்தங்களும் நெருக்கடியுமென்றால் மறுபக்கத்தில் விடுதலைப் புலிகளினால் ஏற்படுகின்ற நெருக்கடிகள் இன்னொரு வகையானவை.

அரசாங்கம் போரில் வெற்றி பெறுவதாக வெளியே காட்ட முயற்சிக்கிறது. ஆனால், அதற்குப்பதிலாக அது சதா புலிகளின் நெருக்கடிகளுக்குள்ளாகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் இலங்கைத்தீவின் வெவ்வேறு பிராந்தியங்களில் நடத்திய தாக்குதல்கள் அரசாங்கத்தை பல தடவைகள் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறன. அடுத்து என்ன நடக்குமோ என்று தெரியாத பெரும் உளவியற் சிக்கலுக்குள் படைத்தரப்பும் அரசாங்கமும் தள்ளப்பட்டிருக்கின்றன. புலிகளைச் சுற்றி வளைத்து தாக்கும் ஒரு பொறியமைப்புத் தாக்குதலை அரசாங்கமும் படைத்தரப்பும் திட்டமிட்டுள்ளன போலுள்ளது. ஆனால், புலிகளோ அதை முறியடிக்கும் விதமாக வெளியரங்கில் தென்னிலங்கையில் களத்தை திறந்திருக்கிறார்கள்.

தென்னிலங்கையை இராணுவ மயப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு இப்போது அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது. போர் என்பதே பொதுவாக நெருக்கடியைத் தருவதுதான். அதிலும் ஆக்கிரமிப்புப்போர் என்றால் நிச்சயம் போரை நடத்தும் தரப்புக்கு எப்போதும் நெருக்கடியாகவே இருக்கும்.
ஆனால் கூடிவந்த சமாதான நடவடிக்கைகளைக் குழப்பிக் கொண்டு வலிந்த போர் நடவடிக்கையில் ஈடுபடும் ஒரு அரசாங்கம் நெருக்கடிக்குள் சிக்காமல் வேறெப்படி இருக்கமுடியும்? புலிகளினால் அரசாங்கத்துக்கு ஏற்படுகின்ற நெருக்கடி ஏனைய நெருக்கடிகளையும் விட முற்றிலும் வேறானது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

ஏனைய நெருக்கடிகள் குறுகியவை. குறுகிய காலத்தவை. ஆனால். புலிகளினால் ஏற்படும் நெருக்கடி என்பது சமாதான நிலைமை ஏற்படும் வரை தொடர்ந்திருக்கக் கூடியது. ஏனைய நெருக்கடிகளை பேரங்களின் மூலம் சமாளிக்கலாம். அல்லது தீர்த்து விடலாம். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினை தீரும் வரையில் இந்த நெருக்கடியோ பிரச்சினையோ தீரவே தீராது. இந்த நிலமைகளின் மத்தியில்தான் அல்லது, பின்னணிகளின் படிதான் இப்போது வரவு செலவுத்திட்டமும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி பெறவேயில்லை. அது இப்போதைக்கு உயிர் தப்பியிருக்கிறது என்றே பல்வேறு தரப்பினரும் சொல்கிறார்கள்.

ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் ஒரு அரசு எப்போதும் நெருக்கடிகளின் மையத்தில்தான் இயங்க முடியும். ஆக்கிரமிப்பும் அதிகாரமும் சூழ்ச்சியும் நிரம்பிய பொறியமைப்பையுடைய அரசாங்கத்தினால் அமைதியான முறையில் ஆட்சிபுரிய முடியாது. சாகசங்களும் தந்திரங்களும் ஒரு போதும் அதற்கு உதவப்போவதுமில்லை. அமைதியற்று நெருக்கடியும் பிரச்சினையுமாகவே இருக்கின்ற சூழலில் நாட்டினதும் மக்களதும் மேம்பாடுபற்றி ஒரு அரசாங்கத்தினால் சிந்திக்கவே முடியாது. இந்த நிலை தொடருமானால் ஆட்சியைத் தாக்குப்பிடிப்பதுதான் அதன் சாதனையாக இருக்குமே தவிர, வேறு நன்மைகளெதுவும் கிட்டப்போவதில்லை.

நித்திய கண்டமும் பூரண ஆயுளும் என்ற நிலையை மகிந்த ராஜபக்ச தொடர்ந்து பேணமுடியாது. அவருடைய சாகசங்களும் பேரங்களும் ஒரு எல்லைவரைதான் பலனளிக்கும். இப்போதே வரவர அதிக நெருக்கடிகளும் பொறிகளும் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. அவர் முடிவில்லாத அளவுக்கு அதிகாரத்தையும் தந்திரங்களையும் கையாளுகின்றார். இந்த அதிகாரமே அவரைச் சிறையிடப் போகிறது. அவருடைய அதிகாரத்தின் இனனொரு வெளிப்பாடே அவர் ஊடகங்களை கட்டுப்படுத்தியும் பயமுறுத்தியும் வருவதாகும். இப்போது கொழும்பிலிருந்து வெளிவரும் ‘சண்டே லீடர்’ பத்திரிகைக் காரியாலயத்தை தீயிட்டு எரித்திருப்பதும் இதன் நோக்கம்தான். இதற்கு முதல் அவர் ஏ.பி.சி நிறுவனத்தின் ஐந்து ஊடகங்களுக்குத்தடை விதித்திருப்பதும் இந்த அதிகாரத்தின் படிதான்.
சுருக்கமாகச் சொன்னால் அவரை அவரே அம்பலப்படுத்தியிருக்கிறார். அம்பலப்படுத்தியும் வருகிறார்.

- மளோகரன்

திங்கள் 03-12-2007 03:37 மணி தமிழீழம் [பதிவு நிருபர்]

2 Comments:

வெத்து வேட்டு said...

Prabaharan or Prabaharanukku aappu vaikkum varai...

இறக்குவானை நிர்ஷன் said...

காலம் பதில்சொல்லும். அதுவரை காத்திருப்போம்...