ஒருபுறத்தில் கொழும்பு போன்ற இடங்களில் உள்ள தமிழர்களைச் சிறை வைப்பதன் மூலமும்- இன்னொரு புறத்தில் கெப்பிற்றிக்கொலாவ போன்ற இடங்களில் பேரூந்துகளுக்குக் கவசத்தகடுகள் பொருத்துவதன் மூலமும் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வையும், மேற்கூறப்பட்ட இடங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியுமா?
கொழும்பில் வகை-தொகையின்றிக் கைது செய்வதினாலோ, சிறையில் அடைப்;பதினாலோ கொழும்பின் பாதுகாப்பு என்பது உறுதிப்பட்டதாகி விடுமா? அதாவது கொழும்பிலுள்ள அனைத்துத் தமிழர்களையும் சிறிலங்கா அரசாங்கத்தால் சிறைவைக்க முடியுமா? அன்றிக் கொழும்பிலிருந்து அனைத்துத் தமிழரையும் வெளியேற்றி விடத்தான் முடியுமா?
தமிழர்களை வெளியேற்றுதல் அன்றிச் சிறையில் அடைத்தல் சாத்தியமில்லை எனக்கூறுவது எழுந்தமானத்திலானதொரு கருத்தல்ல. இது தமிழ் மக்களும் இந்நாட்டின் பிரசைகள் எனச் சிங்கள ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டிருக்கையில் தமிழருக்கும் கொழும்பில் வாழ்வுரிமை உள்ளது என்பது ஒன்று.
அடுத்ததாக தென்னிலங்கையில் வாழ்ந்து வரும் அனைத்துத் தமிழர்களையும் சிறையில் அடைத்தல் என்பதும் சாத்தியமானதல்ல. அதாவது சிறையில் அதற்கு இடம் ஒதுக்குதல் முடியாது. அடுத்ததாக தென்னிலங்கையில் வாழ்பவர்களுக்கும், வடக்கு கிழக்கில் வாழ்பவர்களுக்கும் இடையிலான உறவுகளையும் அவர்களால் முற்றிலுமாகத் துண்டித்து விடவும் முடியாது.
இந்த வகையில், இவை இரண்டுமே நடைமுறையில் சாத்தியப்பாடானவை அல்ல. அவ்வாறு சாத்தியப்படுமானால் அது. தமிழீழம் என்னும் நாட்டின் உதயத்துடனேயே சாத்தியப்பாடானதாகும். இலங்கைத்தீவு ஒரே ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட நாடு எனச்சிறிலங்கா ஆட்சியாளர்கள் கூறிக்கொள்ளும் வரை அது சாத்தியப்பாடானதாக மாட்டாது.
அடுத்ததாக பேரூந்துகளுக்கு இரும்புக் கவசங்களை பொருத்துதல் மூலம் பாதுகாப்பு உறுதிப்படுத்தல் என்பதும் போலித்தனமான செயற்பாடேயாகும். ஏனெனில் பேரூந்துகள் மீதோ அன்றி மக்கள் பயணிக்கும் வாகனங்கள் மீதோ தாக்குதல் நடத்த யாரும் முற்படின் அதற்கு இவ் இரும்புக்கவசங்கள் பாதுகாப்பை வழங்கி விடமாட்டாது.
அதாவது தாக்குதல் நடத்த முனைவோர் முன்னர் கைக்கொண்ட வழிமுறையாகத்தான் கைக்கொள்வார்கள் என்றோ, தனியாகப் பேரூந்துக்கள் மீதுதான் தாக்குதல் நடாத்தப்பட வேண்டும் என்பதோ இல்லை. தாக்குதல் முறையும் மாற்றப்படலாம். தாக்குதல் இலக்கும் மாற்றப்படலாம்.
இதற்கு முன்னர் இப்பகுதியில் தாக்குதல் ஒன்று இடம்பெற்றபோது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு 300 காவலரண்கள் அமைத்ததோடு ஊர்காவற்படையினர் எனப்பல நூற்றுக்கணக்கானோருக்கு ஆயுதங்களையும் வழங்கியது. அத்தோடு ஊதியமும் வழங்கியது.
ஆனால் அவர்களால் தாக்குதலைத் தடுக்கவோ அன்றிப் பாதுகாப்பு வழங்கவோ முடியவில்லை. பாதுகாப்பிற்கென புதிய திட்டங்களே முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இத்திட்டங்கள்; கூட நடைமுறைச் சாத்தியப்பாடு வெகுவாகக் குறைந்தவையாகவே உள்ளன.
அத்தோடு இப்பாதுகாப்புக்குறித்த சிக்கல் தனியாக கெப்பிற்றிக்கொலாவ பிரதேசத்திற்கானதாகவோ அன்றி வவுனியா மாவட்டத்தின் தென்பகுதிக்கானதோ மட்டுமல்ல. இது வடக்கிலிருந்தது கிழக்கே ஏன் தெற்கே எனக்கூறக் கூடிய அளவிற்கு அம்பாந்தோட்டை வரையில் கூடக் காணப்படுகின்றது. ஆனால் அரசாங்கமோ பாதுகாப்பு ஏற்பாடு எனக் கூறி மக்களை ஆயுததாரிகளாக்குவதிலும், பாதுகாப்புச்செலவை அதிகரிப்பதிலானதுமான செயல் முறையிலும்; இறங்கியுள்ளதே ஒழிய மக்களுக்கு நிலையான உறுதியான பாதுகாப்பை வழங்குவதற்கான செயற்பாடுகள் எதிலும் இறங்குவதாக இல்லை.
அடிப்படையில் இலங்கையில் மக்களின் பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால் இது தனியாக சிங்கள மக்களுக்கான பாதுகாப்பு என்ற வகையில் உறுதிப்படுத்தப்பட முடியாதது. அதாவது இலங்கை வாழ் அனைத்துத்தரப்பு மக்களினதும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்குச் சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லாத நிலையில் இலங்கையில் எவருடைய பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட முடியாததொன்றாகவே இருக்கும்.
நன்றி: ஈழநாதம்
Tuesday, December 11, 2007
"எப்போது சாத்தியமாகும்?"
Posted by tamil at 8:31 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment