Monday, December 17, 2007

நம்பிக்கைக்குரியதல்ல!

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அடுத்த ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் 42 அதிகப்படியான வாக்குகளினால் நிறைவேறியுள்ளது. வரவு-செலவுத்திட்டம் நிறைவேறியது குறித்து இங்கு பெரிதும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லையாயினும் 42 அதிகப்படியான வாக்குகள் என்பதே இன்று அனைவரதும் கவனத்தைக் கவரும் விடயமாகியுள்ளது.

வரவு-செலவுத்திட்டம் வெற்றி பெற்றாலும் ஓரிரு அதிகப்படியான வாக்குகளாலேயே வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்ற எதிர்பார்க்கை இருந்த நிலையில் 42 அதிகப்படியான வாக்குகள் என்பது ஜே.வி.பி.யின் தீர்மானத்தினாலேயே அதாவது வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவினால் ஏற்பட்டதாகும்.

வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தால் கூட சிறிலங்கா அரசியலில் பெரும்மாற்றம் எற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பது ஒருபுறம் இருக்க- அவ்வாறு தோற்கடிக்கப்பட்டு ஆட்சிக்கவிழ்ப்பு ஒன்று இடம்பெற்றால் கூடத்தமிழ் மக்கள் இது குறித்து மகிழ்ச்சி அடைய எதுவுமில்லை.

இது ஒருபுறம் இருக்க ஜே.வி.பி. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது விட்டமையானது, தெளிவானதும், வெளிப்படையானதுமானதொரு தகவலை சகலருக்கும் வெளிப்படுத்தத்தக்கவுள்ளது. அதாவது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ, அன்றி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைக் கலைத்துவிடக் கூடியதானதொரு சூழ்நிலையை அது உருவாக்கிவிடவோ போவதில்லை என்பதே அதுவாகும். இதேவேளை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத்திட்டத்தின் மீதான ஜே.வி.பி.யின் விமர்சனம் மிகவும் கடுமையானதாகும். இதற்கு ஏற்றாற்போல ஜே.வி.பி. நவம்பர் நடந்த இரண்டாவது வாக்கெடுப்பின்போதும் எதிர்த்தே வாக்களித்திருந்தது.

இதேசமயம் இரண்டாவது வாசிப்பின்போதான வாக்கெடுப்பில் எதிரணி தோல்வி அடைந்தபோதும் டிச.14 இல் நடைபெறப்போகும் வாக்கெடுப்பில் அரசாங்கம் தப்பிப்பிழைக்கப்போவதில்லை என்ற சவாலை முதலில் வெளியிட்டதும் ஜே.வி.பி.யே ஆகும். அதன் பின்னரும் அதாவது வாக்களிப்பிற்கு முதல் நாள் வரையிலும் எதிர்த்து வாக்களிப்பது உறுதி என்ற நிலையையே ஜே.வி.பி. வெளிப்படுத்தி வந்தது.

இத்தகையதொரு நிலையில் ஜே.வி.பி. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது விட்டமையானது ஜே.வி.பி. பித்தலாட்ட அரசியல் ஒன்றை நடத்த விளைவதையே வெளிப்படுத்துவதாகவுள்ளது. இதேசமயம் ஜே.வி.பியின் நோக்கத்தையும் அது வெளிப்படுத்துவதாய் உள்ளது.

அதாவது எந்தவொரு நிலையிலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை கவிழவோஃ கவிழ்க்கவோ விடாது பாதுகாத்துக்கொள்வதோடு அரசில் தனது பிடியை இறுக்கிக்கொள்வதே அதன் நோக்கமாகும். அதாவது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி அதேவேளை ஆட்சி அதிகாரத்தில் நிலைத்திருக்கச் செய்வதே அதன் குறிக்கோளாகும்.

ஆனால் தற்பொழுதுள்ள கேள்வி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பதல்ல. ஜே.வி.பி.யின் அரசியல் எந்தளவு காலத்திற்கு நிலைத்து நிற்கும் என்பதே ஆகும். ஏனெனில் ஜே.வி.பி. இன்று ஆளும் கட்சியின் நம்பிக்கைக்கும் பாத்திரமானதல்ல, எதிர்க்கட்சியின் நம்பிக்கைக்கும் பாத்திரமானதல்ல. அது மட்டுமல்லாது மக்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமானதல்ல.

அதாவது சொல்லொன்று, செயலொன்று என்ற அதன் செயற்பாடுகள் அக்கட்சியானது கொள்கையற்றது என்ற உணர்வையே மக்களுக்கு ஏற்படுத்தத்தக்கது. அத்தோடு 39 பாராளுமன்ற ஆசனங்களைக் கைவிட அது தயாராக இல்லை என்பதும் உறுதியான தாகவுள்ளது.

ஆனால் இவை ஜே.வி.பி.யின் எதிர்காலக்கனவுகளை நிறைவேற்ற உதவப்போவதில்லை. மக்களுக்கு நம்பிக்கையூட்டாத, இதேவேளை முன்னிற்குப்பின் முரணாகப் பேச்சொன்று, செயலொன்று என்ற ஜே.வி.பி.யின் நடவடிக்கைகளின் அதன் ஆயுதக்கிளர்ச்சி போன்றே அவர்களுக்குத் தோல்வியையே தேடிக்கொடுக்கும். பேரினவாத கூச்சல் மூலம் ஆட்சியைக்கைப்பற்ற முடியும் என அது கருதலாம். ஆனால் ஆட்சியில் இருப்பவர்களும், முன்னர் ஆட்சியில் இருந்தவர்களும் இதே நிலைப்பாட்டைக்கொண்டவர்களே. ஆகையினால் இதன் மூலம் வெற்றி என்பதும் இலகுவானதாக இருக்கமாட்டாது.

நன்றி: ஈழநாதம்

0 Comments: