Friday, December 7, 2007

குப்பைக் கூடைக்குள் இலங்கையை தூக்கிக் கடாசும் சர்வதேச சமூகம்

உலக நாடுகளின் சர்வதேசக் கூட்டமைப்பான ஐ.நா.குறித்து தென்னிலங்கை கொடுக்கும் விளக்கங்கள் வியாக்கியானங்கள் நகைப்புக்கிடமானவை. வேடிக்கை விநோதமானவை.
அவசரகால மனிதாபிமானப் பணிகளுக்கான ஐ.நா. பிரதிச் செயலாளரை அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் "பயங்கரவாதி' எனச் சித்திரிக்கின்றார். நாட்டில் அரச ஆசீர்வாதத்தோடு மேற்கொள்ளப்படும் அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி, பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தமைக்காக ஸேர் ஜோன் ஹோம்ஸ் "பயங்கரவாதிகளின்' பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதியாக, யுத்தத்தில் சிக்கிய சிறுவர்களின் நலனைக் கவனிக்கின்றார் ராதிகா குமாரசுவாமி அம்மையார். அவரின் சிறப்புப் பிரிதிநிதியாக இலங்கைக்கு விஜயம் செய்த கனேடிய ராஜதந்திரியான அலன் றொக் இலங்கையில் சிறுவர்களைப் படைக்குச் சேர்க்கும் கைங்கரியத்தின் பின்னணியில் அரசுத் துருப்புகளும் செயற்படுகின்றன என்ற உண்மையைப் போட்டுடைத்ததால் தென்னிலங்கையின் கடும் சீற்றத்துக்கு உள்ளானார்.
இதேபோல ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆபர் அம்மையார், சித்திரவதைகள் தொடர்பான ஐ.நா. பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதி மான்பிரட் நொவாக் போன்ற ஐ.நா. அதிகாரிகள் இங்குள்ள மோசமான மனித உரிமைகள் நிலைவரம், தடுப்புக்காவல் கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படல் போன்றவற்றை இங்கு வந்து நேரடியாக அவதானித்துக் கண்டறிந்த பின்னர், அம்பலப்படுத்தியமையால் அவர்களையும் வேண்டத்தகாதவர்களாக சித்திரிக்கின்றது தென்னிலங்கை.

அதுபோல யுத்தத்தில் சிக்குண்டு அல்லலுறும் தமிழ் மக்களுக்கு அவசர மனிதாபிமானப் பணிகளை உதவிகளை வழங்கி வருவதால் ஐ.நாவின் உப அமைப்பான "யுனிசெவ்' தென்னிலங்கையின் காட்டமான விமர்சனத்துக்கு உள்ளானது. அந்த அமைப்பு புலிப் பயங்கரவாதிகளுக்கு பொருட்களாகவும் வேறு வழிகளாலும் உதவியளிக்கின்றது என்று நாடாளுமன்றில் வாய்கிழியக் கத்தப்படுகின்றது. அடிக்கடி அந்த அமைப்புக்கு எதிராகக் குற்றச்சாட்டுப்பத்திரம் சுமத்தப்படுகின்றது.

இப்போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இயங்கும் ஊடகமான "புலிகளின் குரல்' மீதான வான் தாக்குதலைக் கண்டித்ததால் மற்றொரு ஐ.நா. உப அமைப்பான "யுனெஸ்கோ'வும் பயங்கரவாத ஆதரவு நிறுவனமாகக் காட்டப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது.

இலங்கை விவகாரத்தில் நடுநிலை நின்று பக்கச்சார்பின்றி சுயாதீனமாகக் கணிப்பீடு செய்து நடந்துகொள்ளும் ஐ.நா. அமைப்புகள், அதன் காரணமாகக் கொழும்பு அரசின் வண்டவாளங்களை அத்துமீறல்களை அராஜகங்களை தண்டவாளம் ஏற்றி விடுகின்றன. அதன் விளைவாக இந்த அமைப்புகள் இலங்கை அரசின் கடுங் காய்ச்சலுக்கும், பாய்ச்சலுக்கும், ஏச்சுக்கும், பேச்சுக்கும், விமர்சனங்களுக்கும் இலக்காகின்றன.

இந்தக் காரணத்தாலோ என்னவோ ஐ.நாவின் உப அமைப்புகளும் அவற்றின் பிரதிநிதிகளும் இலங்கை தொடர்பாக விடுக்கும் அறிக்கைகளுக்காக அத்தரப்புகள் தென்னிலங்கை அரசின் கடும் சீற்றத்துக்கு ஆளாகின்ற காரணத்தினாலோ என்னவோ அண்மையில் இலங்கை நிலைமை குறித்து கண்டன அறிக்கை ஒன்றைப் பகிரங்கமாக வெளியிட்ட ஐ.நா. செயலாளர் நாயகம், அதில் இலங்கை அரசைச் சாடாமல் பார்த்துக் கொண்டார். இன்னும் விளக்கமாகக் கூறுவதானால், கொழும்பு, நுகேகொடைக் குண்டு வெடிப்பு மற்றும் சமூகசேவைகள் அமைச்சில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் போன்றவற்றுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, அச்சம்பவங்களில் உயிரிழந்தோரின் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்த ஐ.நா. செயலாளர் நாயகம், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதியில் கிளைமோர் தாக்குதலில் பள்ளி மாணவர்கள் 9 பேரும் மற்றும் இரு பொதுமக்களும் கொல்லப்பட்டமையையோ அல்லது ஊடகமான "புலிகளின் குரல்' வானொலி நிலையம் மீதான வான் தாக்குதலில் பத்து சிவிலியன் பலியாகியமையையோ கண்டிக்கப் பின்நின்றுவிட்டார்.

இவ்வாறு சர்வதேச, மனிதாபிமானச் சட்டங்களை மதிக்காமல், அடக்குமுறை அராஜகத்தில் தனது ஆட்சியைக் கொண்டு நடத்தும் கொழும்பு குறிப்பாகத் தென்னிலங்கை தனது தவறான செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டும் அல்லது தட்டிக்கேட்கும் சர்வதேச தரப்புகளைக் கடுமையாக வைகிறது. தனது சுயரூபம் அம்பலமாவதால், சர்வதேசத் தரப்புகள் மீது குற்றம் சுமத்தித் தன்னை நீதியான தரப்பாக நேர்மையாக நடந்துகொள்ளும் கட்சிக்காரனாக காட்டிக்கொள்ள அது முயல்கின்றது.

ஆனால் இலங்கையின் உண்மை முகம் தோற்றம் சர்வதேசத்தின் முன் வெளிப்பட்டு சாயம் வெளுத்துவிட்டதால், சர்வதேச சமூகம் இலங்கையைக் குப்பைக் கூடைக்குள் தூக்கிக் கடாசி விட்டது என்று நாடாளுமன்றத்தில் விசனத்துடன் சுட்டிக்காட்டியிருக்கின்றார் ஐ.தே.கட்சியின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லக்ஷ்மன் கிரியெல்ல.
ஆனாலும், சர்வதேச சமூகத்தால் தாம் இவ்வாறு புறமொதுக்கப்பட்டு வருவதை இன்னும் சரியாக உணர்ந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல் தனது தலைக்கேறிய பௌத்த, சிங்களப் பேரினவாதப் பித்தால் பிதற்றிக் கொண்டிருக்கிறது தென்னிலங்கை.
நிலைமையின் யதார்த்தத்தை தென்னிலங்கை புரிந்து கொள்ளத் தலைப்படும்போது, சர்வதேச சமூகத்திடமிருந்து அந்தத் தீவு நிரந்தரமாகவே ஒதுக்கப்பட்டிருப்பதை அதுஉணர வேண்டியிருக்கும்.
Posted on : 2007-12-07

http://www.uthayan.com/

0 Comments: