Wednesday, December 12, 2007

பிரதம நீதியரசர் உரைத்த நீதி தலைவர்களின் காதுகளில் விழுமா?

யுத்த முனைப்பிலும் போர்த் தீவிரத்திலும் அவா கொண்டு அலையும் இலங்கை அரசுக்கு நல்ல சூடு கொடுக்கும் விதத்தில் முக்கிய கருத்து ஒன்றை முன்வைத்திருக்கின்றார் இலங்கையின் பிரதம நீதியரசர் சரத் நந்தன சில்வா.

அதுவும் ஐ.நா. அமைப்புகளின் பிரதிநிதிகள், இராஜ தந்திரிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் என உயர்மட்டத்தினர் பிரசன்னமாகியிருந்த சபையில் சர்வதேச மனித உரிமைகள் தினம் தொடர்பான நிகழ்வில், இலங்கையின் மனித உரிமைகள், இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்கவையும்வைத்துக்கொண்டு கூடியிருந்த எல்லோரினதும் பலத்த ஆரவார கைதட்டல்களுக்கு மத்தியில் இந்த யதார்த்தத்தை உண்மையை அப்பட்டமாக எடுத்துரைத்திருக்கின்றார் இலங்கையின் பிரதம நீதியரசர்.

""யுத்தத்தின் மூலம் சமாதானத்தை வென்றெடுக்கவே முடியாது. அப்படி வென்றெடுக்கலாம் என்று யாராவது கூறுவார்களேயானால், நடக்கமுடியாத ஒன்றைப் பற்றி அவர் பேசுகின்றார் என்றே அர்த்தம்'' என்றுதான் பிரதம நீதியரசர் அப்பட்டமாக, வெளிப்படையாக எடுத்துரைத்திருக்கின்றார். யுத்தத்தினால் அமைதியை நிலைநாட்டவே முடியாது. அடிப்படை மனித உரிமைகளை நேர்சீராக நடைமுறைப்படுத்துவதன் மூலமே சமாதானத்தை நிரந்தர அமைதியை எட்ட முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

""மனிதர்களிடமும் மிருக இயல்பூக்கம் குணாம்சம் உண்டு. மற்றவர்களை மிஞ்சி மேம்பட்டு நிற்கவேண்டும் என்ற அந்த மிருக சுபாவம் விஞ்சுவது வழமையான மனிதப்போக்குத்தான். அத்தகைய குணாம்சம் விஞ்சி நிற்கும் வரை மனித உரிமை மீறல்களும் தொடர்ந்துகொண்டேயிருக்கும். அத்தகைய போக்குகள் வெளிப்படும் சமயங்களில் நாம் மிக அவதானமாக இருக்க வேண்டும். அத்தகைய குணாம்சங்களை அடக்கி, மனித உரிமைகளைப் பேணுவதில் நாம் முனைப்புக் காட்டவேண்டும். ஆனால் அது நமது நாட்டில் நடக்கவில்லை. அதனால்தான் நமது தேசத்தில் போர் தொடர்கின்றது.

""சமாதானத்தை எட்டும் தனது முயற்சியில் போர் மூலம் அதை அரசு அடையவேமுடியாது. மனித உரிமைகளை சரிவரப் பேணி நடைமுறைப் படுத்துவதன் மூலமே அதை ஈட்ட எட்ட முடியும். போரினால் அல்ல.''
இவ்வாறு இலங்கைஅரசுக்கு அழுத்தம் திருத்தமாக ஆலோசனை சொல்லியிருக்கின்றார் அந்த அரசின் நீதித் துறையின் உயர் ஆசனத்தில் அமர்ந்திருக்கின்ற பிரதம நீதியரசர். இலங்கை இனப்பிரச்சினை இன்று மிக மோசமான உள்நாட்டுப் போராக வெடித்திருக்கின்றது. இதற்கான காரணத்தை பின்புலத்தை சுருங்கக் கூறி விளங்கவைக்க முயன்றிருக்கின்றார் பிரதம நீதியரசர் என்பதே உண்மை.

இலங்கைத் தீவில் தனித்துவமான தேசிய இனத்தவர்களாக தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படாமல், அவர் களை அடக்கி ஒடுக்கும் தீவிரத்துடன் பௌத்த சிங்கள மேலாண்மைப் போக்குப் பேரினவாதம் சிறுபான்மையினரை விஞ்சியதாகத் தன்னைக் கணித்து, மேம்பட்டு நிற்க வெறிகொண்டலைந்தமையால்தான் சிறுபான்மைத் தமிழர்களின் நியாயபூர்வமான அடிப்படை உரிமைகள், நீதியான அபிலாஷைகள் மிதிக்கப்பட்டமையால்தான் இந்த நாட்டில் இனப்பிரச்சினை, வன்முறைப் போர் வடிவத்துக்குத் திரும்பியது. கொடூர யுத்தம் வெடிக்கும் இன்றைய பேராபத்து நிலை தோன்றியது.

ஆனால் இன்றும் கூட தென்னிலங்கைச் சிங்களத் தலைமையிடம், சிறுபான்மையினருக்கு நீதி செய்யும் நியாயப் போக்கு உருவாகவேயில்லை என்பதுதான் உண்மை. தமிழர்களை ஆயுத முனையில் அடக்கி, அவர்களது உரிமைக் குரலின் வலிமையைச் சிதறடித்து, பேரினவாதத்தின் காலில் விழும் அடிமை இனமாகத் தமிழினத்தை அடக்கி ஒடுக்கவே மஹிந்த ராஜபக்ஷ அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது. அதற்காகவே யுத்த வெறிகொண்டு அலைகின்றது கொழும்பு அரசு.
ஆனால், அந்தத் தீவிரமும், வெறியும் அமைதியை ஏற்படுத்தவே மாட்டா என்ற யதார்த்தத்தை கௌதம புத்தரை வணங்கும் கொழும்புக்கு, பௌத்த சீலம் போலப் போதித்திருக்கின்றார் பிரதம நீதியரசர்.
ஆனால், கொழும்பின் காதில் இந்தப் போதனை அதில் நுட்பமாகப் புதைந்திருக்கும் நீதி, நியாயம் எல்லாம் விழுமா என்பதே கேள்வி.

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு' என்பார்கள். பிரதம நீதியரசர் சூடாகக் கொடுத்த இந்த அறிவுரை இந்த நிர்வாகத்துக்கு உறைத்ததோ தெரியவில்லை.
எது எப்படியென்றாலும் "முதலையும், மூர்க்கனும் கொண்டது விடா' என்பார்கள். போர்வெறித் தீவிரத்தில் மூர்க்கமாக இருக்கும் அரச பாதுகாப்புத்துறை இயந்திரத்துக்கு, தனது யுத்தப் பிடிவாதத்தில் இருந்து இறங்கி, நியாயமாகச் சிந்தித்து, நீதியாக நடந்து கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படுமா என்பது சந்தேகத்துக்கும் கேள்விக்கும் உரியதே.
இலங்கை அரசுத் தலைவர்களும் பாதுகாப்பு முக்கியஸ்தர்களும் அடுத்தடுத்து வெளியிட்டுவரும் யுத்த அறைகூவல் அழைப்புகளைப் பார்க்கும்போது பிரதம நீதியரசரின் அறிவுரை அவர்களது செவிப்பறையை எட்டுவது சந்தேகம் என்றே தோன்றுகின்றது.
sudaroli.com

0 Comments: