Tuesday, December 18, 2007

'சிங்களப் பேரினவாதச் சாத்தானுக்காக ஓதப்படும் புதிய வேதம்!"

'தயாரிப்பு - சர்வதேசம்"


சிறிலங்காவிற்கான பிரித்தானியத் தூதுவர் திரு டொமினிக் சில்கொட் (Dominick Chilcott) அவர்கள், கடந்த 10-12-2007 அன்று, கொழும்பில் நடைபெற்ற டட்லி சேனநாயக்கா நினைவு நிகழ்வில் சிறப்புரையாற்றியபோது தெரிவித்த சில கருத்துக்கள், சிறிலங்கா அரசிற்கும், ஜேவிபியிற்கும் கடும் கோபத்தை உண்டு பண்ணியுள்ளன. 'தமிழீழத்தை நோக்கிய அரசியல் வேட்கை சட்டவிரோதமானது, என்று நான் கூற மாட்டேன்' என்கின்ற வகையில் சில்கொட் தெரிவித்த சில கருத்துக்கள்தான், சிறிலங்கா அரசிற்கும், அதில் அங்கம் வகிக்கும் ஜேவிபிக்கும் சினத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முன்னரும் ~விடுதலைப் புலிகளைப் பாதுகாக்கும் சர்வதேசக் குற்றவாளிகள் (MAFIA) குழு - International Mafia for the preservation of the LTTE) - என்று குறிப்பிட்டு, அமெரிக்கத் தூதுவர் பிளேக் (Blake), பிரித்தானியத் தூதுவர் சில்கொட், மற்றும் ஜேர்மன் தூதுவர் ஆகியோரைச் சிங்களப் பௌத்தப் பேரினவாதம் திட்டித் தீர்த்திருந்தது. இப்போது மீண்டும் ஒருமுறை சிங்களப் பௌத்தப் பேரினவாதம் கொதித்தெழுந்திருக்கின்றது.

தமிழ் மக்களின் போராட்டத்தை நியாயப்படுத்துவதுபோல், ஒரு சில சொல்லாடல்களைக் கொண்டிருந்த பிரித்தானித் தூதுவர் சில்கொட்டின் உரையைச் சற்று ஆழமாகக் கவனித்துச் சில கருத்துக்ளை முன்வைப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்!

மேலோட்டமாகப் பார்க்கின்றபோது, தமிழீழ மக்களின் நியாயமான போராட்டத்திற்குச்; சார்பான கருத்துக்களைச் சொல்வதுபோல், பிரித்தானியத் தூதுவர் சில்கொட்டின் சில வார்த்தைகள் அமைந்திருந்தாலும், அடிப்படையில் அவரது பேச்சு, தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய வைத்து, பொருந்தாத ஒரு தீர்வைத் திணிக்கும் எண்ணத்திலேயே அமைந்திருந்தது என்பதே எமது கருத்தாகும்! இதனை உறுதிப்படுத்தும் வகையில், பிரித்தானியத் தூதுவர் சில்கொட்டின் உரையில், முன்னுக்குப் பின் முரணான பல கருத்துக்களை நாம் காணக் கூடியதாக உள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் பிரதமரான டட்லி சேனநாயக்கா 1965ம் ஆண்டு 'மிதவாதத் தமிழ்த் தலைமையுடன' செய்து கொண்ட ஒப்பந்தத்தைப் பாராட்டிப் பேசுகின்ற பிரித்தானியத் தூதுவர், அந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டிருந்தால், இன்று இலங்கைத் தீவில் சமாதானமும், வளமும் உருவாகியிருக்கும் என்றும் கூறுகின்றார். ஆனால் டட்லி சேனநாயக்காவிற்கு 'அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான அரசியல் திறமை இருக்கவில்லை' என்றும், 'சிங்கள மக்களுக்கு டட்லி உரிய அழுத்தத்தைப் பலத்துடன் பிரயோகிக்கவில்லை' என்றும் கருத்துப்பட, பிரித்தானியத் தூதுவர் இப்போது மனம் வருந்திக் கூறியுள்ளார்.

நாற்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சிங்களத்திற்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்திருந்தால், இன்று இலங்கையில் இனப்பிரச்சனை இருந்திருக்காது என்று இப்போது பிரித்தானியத் தூதுவர் அங்கலாய்க்கின்றார். முன்பு தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனை சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால் இன்று தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனை சர்வதேச மயப்படுத்தப்பட்டிருப்பதோடு, பிரித்தானியாவும் இந்த விவகாரத்தில் முக்க்pய 'பங்கெடுத்து' வருகின்றது. சிங்களத்திற்கு உரிய அழுத்தம் கொடுக்காமல், இலங்கையில் பிரச்சனை தீராது என்பதை 'இப்போதாவது' அறிந்து வைத்திருக்கின்ற பிரித்தானியத் தூதுவரின் அரசான பிரித்தானிய அரசு, ஏன் இதுவரை சிங்களத்திற்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை? டட்லி சேனநாயக்காவைப் போன்று, பிரித்தானிய அரசிற்கும் அரசியல் திறமையும் இல்லை, பலமும் இல்லை என்று பிரித்தானியாவின் தூதுவர் ஒப்புக் கொள்கின்றாரா என்ன?

இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு, பிரித்தானிய அரசிற்குத் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பதற்கான தார்மீகக் கடமையும், சொந்தக் கடமையும் உண்டு. இந்த விடயம் குறித்து ஏற்கனவே பல தடவைகள் நாம் தர்க்கித்தே வந்துள்ளோம். கடைசியாகச் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னரும் (06-08-2007 அன்றும்) நாம் எமது இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தோம். அப்போது கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்:-

06-08-2007

'போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் இலங்கையைக் கைப்பற்றியபோது, அப்போது இங்கிருந்த அரச நிர்வாகத்தின்படியே, இலங்கையை ஆண்டார்கள். அவற்ற்pனூடாக, தமிழ்ப்பகுதி அரச நிர்வாகமும், சிங்களப்பகுதி அரச நிர்வாகமும் தனித்தனியே செயல்பட்டன. ஆனால் பின்னாளில் இலங்கையைக் கைப்பற்றிய பிரித்தானிய அரசு, தனது வசதிக்காக இரண்டு தேசங்களையும் ஒன்றிணைத்து, ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தது. ஆனால், அவ்வாறு ஒருங்கிணைப்பது குறித்துப் பெரும் குழப்ப நிலையிலேயே அன்று பிரித்தானியா இருந்திருக்கின்றது. அவர்களின் இந்தக் குழப்ப நிலையை அவர்களது ஆவணம் ஒன்று குறிப்பிடுகின்றது.

பிரிட்டிஷ் அரசின் இலங்கைக்கான காலனித்துவ ஆட்சியின் முதல் செயலாளர் (First Colonial Secretary) சேர் ஹியூ கிளாட்ஹோர்ல் (SIR HUGH CLEDHORL) என்பவர் ஆவார். அவர் 1799 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமான ஆவணக் குறிப்பொன்றை எழுதியுள்ளார். அந்த ஆவணக்குறிப்பில் அவர் 'இந்தத் தீவில் இரண்டு வித்தியாசமான தேசங்கள் பண்டைக் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன. இந்த இரண்டு தேசங்களும் தங்களுடைய மொழி, மதம், பண்பாடு ஆகியவற்றால் முற்றாக வேறுபட்டுள்ளன. தமக்குள்ளே முரண்பட்டும் உள்ளன. இந்த இரண்டு தேசங்களையும் எவ்வாறு (இணைத்து, நிர்வகிப்பது) என்று எனக்குத் தெரியவில்லை". 'NEVER WORKED' - என்று குறிப்பிடுகிறார்.

ஆனாலும்; பிரிட்டிஷ் அரசு, இலங்கைத்தீவில் இருந்த இரண்டு தேசங்களையும் இணைத்தது. தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதை அன்றே பிரிட்டிஷ் அரசு உணர்ந்து கொண்டிருந்தது. நாம் முன்னர் சுட்டிக்காட்டியது போல், தமிழர்கள் முற்றாக, வேறுபட்ட மொழி, பண்பாடு, நிலம் ஆகியவற்றைக் கொண்டவர்கள் என்பதை பிரிட்டிஷ் அரசு ஆவணப்படுத்தியுமுள்ளது. ஆனால் பிரிட்டிஷ் இலங்கைத் தீவை விட்டுச் சென்ற போது அதனைச் சரியான முறையில் விட்டுச் செல்லவில்லை. பிரிட்டிஷ் அரசு இரண்டு தேசங்களை ஒன்றிணைத்தது முதல் தவறாகும்! பின்னர் அவற்றைப் பழையபடி பிரிக்காமல் சென்றது இரண்டாவது தவறாகும்!! இன்றைய பிரச்சனைக்கு இதுதான் மூலகாரணமாகவும் விளங்குகின்றது.

பிரித்தானியா தனது குடியேற்ற நாடுகளை விட்டு விலகிச் சென்றபோது, பொதுவாகச் சரியான முறையிலேயே சுதந்திரத்தை வழங்கிச் சென்றது. ஆனால் இலங்கைத் தீவைப் பொறுத்த வரையில், பிரித்தானியா மாபெரும் தவறை இழைத்துவிட்டது. இதற்கான தார்மீகப் பொறுப்பை பிரித்தானியா ஏற்றுக் கொண்டு, தனது தவறை நிவர்த்திக்கும் முயற்சியில் முழுமையாக உடனே இறங்க வேண்டும். இன்று பிரித்தானியா, இலங்கைத்தீவில் சமாதானம் வரவேண்டும்; என்று சும்மா பேசிக்கொண்டு நிற்கின்றது. ஆனால் பிரித்தானியா தன்னுடைய நாடு என்று வருகின்றபோது சில சரியான செயற்பாடுகளைச் செய்திருக்கின்றது. ஸ்கொட்லாண்ட், வேல்ஸ் போன்றவை தமக்குரிய உரிமைகளைக் கேட்கும்போது, பிரித்தானியா அரசு உரிய விட்டுக் கொடுப்புக்களைச் செய்து, அதிகாரப் பரவலாக்கலைத் தொடர்ந்து செய்து கொண்டே வந்துள்ளது. அவர்களுக்கென்றே தனிப் பாராளுமன்றங்களை அமைத்து, கிட்டத்தட்ட ஒரு சுயாட்சி அமைப்பைப் பிரித்தானியா உருவாக்கிக் கொடுத்துள்ளது. சிறிலங்கா அரசைப்போல், 'அதனைக் கேட்கமுடியாது, இதைப் பேச முடியாது' என்று பிரித்தானியா ஸ்கொட்லாண்டுக்கும், வேல்ஸ்சுக்கும் சொல்லவில்லை. இதே பிரித்தானியா, இலங்கை விடயம் குறித்து, பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று சொல்கின்றபோது, தன்னைப்போல் சிறிலங்கா அரசு பிரச்சனையைத் தீர்க்க முன்வரவில்லை என்பதையும் அறிந்தே வைத்துள்ளது. தமிழர்கள் பிரிந்துபோவதுதான், சரியான, ஒரே, ஒரு வழி என்பதுவும் பிரித்தானியாவுக்கு உள்ளுர, நன்கு தெரியும்.

பிரித்தானியா தேசம், ஐக்கிய இராச்சியம் (UNITED KINGDOM) என்றுதான் அழைக்கப்படுகின்றது. சிறிலங்கா அரசைப் போல் ஒற்றையாட்சி அரசு (UNITRAY KINGDOM) என்று அழைக்கப்படவில்லை. இவ்வளவு எல்லாவற்றையும் அறிந்தும், புரிந்தும் வைத்திருக்கின்ற பிரித்தானிய அரசு, சிறிலங்கா அரசைத் தடை செய்வதற்குப் பதிலாக, தமிழ் மக்களின் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளைத் தடை செய்து வைத்திருக்கின்றது. சிங்களப் பௌத்தச் சிறிலங்கா அரசானது, 1948 ஆம் ஆண்டிலிருந்துதான் தமிழர்களுக்கு அநீதியை இழைத்து வந்திருக்pன்றது. ஆனால் பிரித்தானிய அரசோ 1799 ஆம் ஆண்டிலிருந்தே, தமிழ்த் தேசத்திற்கும், தமிழ் மக்களுக்கும் தொடர்ந்து அநீதியை இழைத்தே வருகின்றது.

'ஆகவே சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில், சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்காகத் தமிழீழ மக்கள் நடாத்துகின்ற போராட்டத்திற்கு வெளிப்படையாகத் தனது ஆதரவை பிரித்தானிய அரசு வழங்க வேண்டும். இனியும் காலம் தாழ்த்துவது பிரித்தானியாவின் உயர் ஜனநாயக விழுமியங்களுக்குத்தான் இழுக்கைக் கொண்டு வந்து சேர்க்கும்."


- இவ்வாறு நாம் 06-08-2007 அன்று தெரிவித்திருந்தோம். (இலங்கைத்தீவில் இரண்டு வித்தியாசமான தேசங்கள் இருக்கும் ஆவணமானது, CLEGHORN MINUTE என்று அழைக்கப்படுகின்றது என்ற பிறிதொரு தகவல் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களின் ஆய்வில் தெரிவிக்கப்படுகின்றது.)

இன்று பிரித்தானியத் தூதுவர் சில்கொட் அவர்கள் வரலாற்றுப் பின்னணியை 'மறந்து|(?) பேசிய கருத்துக்களுக்கான பதில், ஏற்கனவே நான்கு மாதங்களுக்கு முன்னரேயே எமது கட்டுரையில் வந்திருப்பதை வாசகர்கள் நினைவில் வைத்திருக்கக்கூடும். ஆனால் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், மற்றைய உலக நாடுகளைப் போலவே பிரித்தானியாவும் தமிழீழ மக்களின் பிரச்சனையில் தொடர்ந்து அநீதி இழைத்து வருகின்றது, அதில் பிரித்தானியாவிற்கு நீண்ட வரலாற்றுத் தவறு இருக்கின்றது என்பதேயாகும்!

கடற்கொள்ளைகளும், படையெடுப்புக்களும் தவறானவை என்று இப்போது கூறுகின்ற சில்கொட்; அவர்கள், அதனைத்தான் தன்னுடைய மூதாதையர்கள் செய்தார்கள் என்பதை மட்டும் ஏனோ சொல்ல மறந்து விட்டார்.

பிரித்தானியத் தூதுவர் தன்னுடைய உரையில் இன்னுமொரு விடயத்தைப் பெருமையாகக் கூறுகின்றார். 'உலகில் எந்த மூலையில் என்ன இன அழிப்பு நடந்தாலும், அது எங்களுடைய விவகாரம் இல்லை என்று நாங்ள் நினைக்க மாட்டோம். ருவாண்டாவில் நடைபெற்ற இன அழிப்பு, சர்வதேச நாடுகளின் மீது ஏற்பட்டுள்ள ஒரு கறை' என்று சில்கொட் கூறுகின்றார். ஆனால் இன்று, இலங்கைத் தீவில் தொடர்ந்து தமிழின அழிப்பைச் சிங்கள பௌத்தப் பேரினவாத அரசு நடாத்தி வருவது குறித்து, இவரும், இவருடைய ஜனநாயகப் பிரித்தானிய அரசும் என்ன செய்து கிழித்துள்ளார்கள்? விரைவில் அமெரிக்காவில் பொறுப்பு ஏற்கச் செல்லும் சில்கொட், அங்கும் ஜனநாயகக் கொள்கைகள் குறித்துப் புதிய பாடங்களைக்| கற்று, இன்னும் 'பெரிதாகப் பேசுவதற்கு" வாய்ப்புக்கள் உள்ளன என்றுதான் நாம் எதிர்பார்க்கின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவர், மேதகு வேலுப்ப்pள்ளை பிரபாகரன் அவர்கள், தன்னுடைய மாவீரர் தின உரையின்போது, 'தமிழ் மக்கள் தொடர்ந்து அனுபவிக்கும் இன்னல்கள் தொடர்பாகச் சர்வதேசம், சிங்கள அரசுமேல் மேலதிக அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தவறிவிட்டது" - என்று முன்வைத்த குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது, என்று சில்கொட் ஏற்றுக் கொள்கின்றார். ஆனால் அதற்குச் சில்கொட் கூற முற்படுகின்ற பதில் மூலம் விடயத்தைத் தவறாகத் திசை திருப்ப முனைகின்றார். 'அமைதி வழியில் அரசியல் இலக்குகளை விடுதலைப் புலிகள் அடைய வேண்டும் என்பதே அனைத்துலகத்தின் எதிர்பார்ப்பாகும். ஆனால் விடுதலைப் புலிகள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை' என்று எதிர்க் குற்றச்சாட்டு ஒன்றை சில்கொட் முன் வைக்கின்றார்.

பிரித்தானியத் தூதுவர் சில்கொட் அவர்களுக்கு நாம் ஓர் எதிர்க் கேள்வியைக் கேட்க விழைகின்றோம்.

அமைதி வழியில் அரசியல் இலக்குகளை அடைவதற்காக, கடந்த சமாதானப் பேச்சு வார்த்தைகளின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் பல தரப்பட்ட செயற்திட்டங்களை முன் வைத்தார்கள். ஆனால் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசு எதையுமே செயற்படுத்த முன்வரவில்லை. ஈற்;றில் சர்வதேச அரசியல் நிபுணர்களின் ஆலோசனைகளுடன் ஓர் 'இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்குரிய திட்ட வரைபைத்| தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம்,' சிறிலங்கா அரசிற்குக் கையளித்தது. இந்தத் திட்ட வரைபைச் சிறிலங்கா அரசு முறையாகப் பரிசீலிக்கக்கூட இல்லை. இந்த மிக முக்கியமான திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

பின்னர் ஆழிப்பேரலை அனர்த்தம் வந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண-புனருத்தாரண செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகப் 'பொதுக்கட்டமைப்பு' ஒன்று உருவாக்கப்பட்டது. சர்வதேச நாடுகள் அளித்த, அளிக்கவிருந்த நிதியுதவியைச் சிறிலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பங்கிட்டுத் தம் மக்களுக்கான உடனடி நிவாரண வேலைகளை ஆரம்பிப்பதற்காக, சர்வதேசத்தின் அனுசரணையுடன் இந்தப் பொதுக்கட்டமைப்பில் சிறிலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் கைச்சாத்திட்டார்கள். ஆனால் இந்தப் பொதுக்கட்டமைப்பு, சிறிங்காவின் யாப்புக்;கு முரணானது என்று கூறி சிறிலங்காவின் உயர் நீதிமன்றம், பொதுக்கட்டமைப்பின் செயற்பாட்டிற்குத் தடை விதித்தது.

நாற்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவான டட்லி - செல்வா ஒப்பந்தம், தகுந்த அழுத்தம் இன்மையால் செயல்படாமல் போனது என்றும், அதனால்தான் இவ்வளவு பிரச்சனை என்றும் கூறுகின்ற சில்கொட், அமைதி வழியில் அரசியல் இலக்குகளை அடைவதற்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்த, இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை ஏற்றுக்கொள்ளப்பட்டு, செயற்படுவதற்கான அழுத்தங்கள் எதையும் சிறிலங்கா அரசிற்குக் கொடுத்தாரா? பொதுக் கட்டமைப்பைச் சிறிலங்கா உயர் நீதிமன்றம் தூக்கியெறிந்தபோது, அதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, சில்கொட்டோ அல்லது அவரது பிரித்தானிய அரசோ சிங்கள அரசிற்கு அழுத்தம் எதனையும் கொடுத்தனரா? அமைதி வழியில், அரசியல் இலக்குகளை அடைவதற்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முயற்சிகள் யாவற்றையும் சிறிலங்கா அரசுகள் தூக்;கியெறிந்து, பின்னர் யுத்த முன்னெடுப்புக்களை அவை மேற்கொண்டபோது, பிரித்தானிய அரசும், மற்றைய சர்வதேச நாடுகளும் எத்தகைய உருப்படியான அழுத்தத்தைச் சிறிலங்காவிற்கு கொடுத்தன?

இவை எவற்றையும் செய்யாமல் சும்மா இருந்துவிட்டு, 'விடுதலைப் புலிகளுக்குப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையில்லை, அமைதி வழியில் அரசியல் இலக்குகளை அடைவதற்கு விடுதலைப் புலிகள் முயலவில்லை'- என்று சில்லறைத்தனமாகச் சில்கொட் பேசுவதில் அர்த்தமுமில்லை.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் தைரியத்தையும், ஆளுமையையும் பாராட்டுகின்ற சில்கொட், ஜேஆர், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதையும் 13 ஆவது சட்ட திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்ததையும் உச்சி குளிர்ந்;து மெச்சுகின்றார். ஆனால் அந்த ஒன்றுக்கும் உதவாத ஒப்பந்தத்திற்குக்கூட என்ன நடந்தது, 13 ஆவது சட்டத் திருத்தத்திற்கும் என்ன நடந்தது என்பது குறித்து மூச்சுக்கூட விடவில்லை சில்கொட் அவர்கள்!

தமிழரின் தேசியப் பிரச்சனையை, மகிந்த ராஜபக்சவின் சர்வகட்சிக்குழு தீர்க்கும் என்;ற நம்பிக்கையில் சில்கொட் அவர்கள் பேசியிருக்கின்றார். இதுவரை காலமும் எத்தனையோ பேச்சுவார்த்தைகள் வந்து போனதையும், ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டதையும், திட்டங்கள் செயற்படுத்தப்படாமல் இருப்பதையும் சில்கொட் நன்கு அறிவார். அவற்;றிற்கு காரணம், தொடர்ந்து அரசாண்ட சிங்கள-பௌத்தப் பேரினவாத அரசுகள்தான் என்பதையும் சில்கொட் அறிவார். இவை எல்லாவற்றிற்கும் அப்பால், பிரச்சனை இன்று தீராமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம், சர்வதேச மயப்படுத்தப்பட்ட தமிழரின் தேசியப் பிரச்சனை தீர்வதற்கான உரிய அழுத்தங்களைச் சர்வதேசம் (பிரித்தானியா உட்பட) சிறிலங்கா மேல் பிரயோகிக்காமல் இருப்பதுதான் என்பதையும் சில்கொட் நன்கறிவார்.

இங்கு சாத்தான் வேதம் ஓதவில்லை. ஆனால் சாத்தானுக்காகப் புது வேதம் மற்றவர்களால் ஓதப்படுகின்றது!

அதனால்தான் நாசூக்காக இரண்டு விடயங்களைச் சில்கொட் சொல்லியுள்ளார். இந்த வரவு-செலவுத்திட்டம் நிறைவேறிய பின்னர், 2009 ஆம் ஆண்டு வரை தேர்தல்கள் எதுவும் இல்லை என்பதையும், கிட்டத்தட்ட பதினெட்டு மாதம் திடமாகத் தற்போதைய அரசு இருக்கும் என்பதையும் ஓரிடத்தில் சொல்லிக்காட்டி விட்டு, இன்னுமொரு இடத்தில் கீழ்வருமாறு சில்கொட் கூறுகின்றார்:-

'போர் ஒன்று வரவேண்டியிருந்தால், மக்களின் இன்னல்கள் குறைவாக இருக்கும் வகையில் போர் புரிய வேண்டும்".

இவ்வாறு சில்கொட் சொல்லியிருப்பதன் மூலம், மறைமுகமாகச் சிறிலங்கா அரசின் போருக்கு ஆதரவையும், ஊக்கத்தையும் கொடுக்கின்றார் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.

இரண்டாவதாகச் சில்கொட் இன்னமொரு விடயத்தைச் சொல்கின்றார்.

'தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பொது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதைத் தடுப்பதற்கான, நடவடிக்கைகளை நாம் பிரித்தானியாவில் மேற்கொள்வோம்".

அதாவது ஜனநாயக உயர் விழுமியங்களைப் போற்றிப் பேணுவதில் உலகில் தாங்கள் முதன்மையானவர்கள், என்று தங்களைப் பெருமையோடு அழைத்துக் கொள்கின்ற தேசமான, பிரித்தானியாவைச் சேர்ந்த சில்கொட் அவர்கள், 'ஜனநாயக ரீதியான அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிப்போம்' என்று வாய் கூசாமல் பேசுகின்றார்.

இவை எல்லாவற்;றிற்கும் மேலாகப் பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட் அவர்கள் கூறிய ஒரு கருத்தானது, பிரித்தானியா மீது, தமிழ் மக்கள் வைத்திருந்த கொஞ்ச-நஞ்ச நம்பிக்கையையும் தகர்த்து எறிந்து விட்டது.

சர்வ கட்சிக் குழுவானது முன் வைக்கவிருக்கின்ற சமாதானத் தீர்வானது, ~மிதவாதத் தமிழ் மக்களின்| கருத்தைக் கவருவதாக இருக்க வேண்டும்.|

'மிதவாதத் தமிழ் மக்கள்(!)|| என்று சில்கொட் யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. அது ஆனந்தசங்கரியாக, டக்ளஸ் தேவானந்தாவாகக்கூட இருக்கலாம். உண்மையாகவே தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையை, உரிய முறையில் தீர்க்க வேண்டும் என்று பிரித்தானியத் தூதுவர் சில்கொட் விரும்பியிருந்தால், அவர் கீழ்வருமாறுதான் சொல்லியிருக்க வேண்டும்:-

'சர்வகட்சிக் குழுவானது, முன்வைக்கவிருக்கின்ற சமாதானத் தீர்வானது, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைச் சரியாக இனம் கண்டு, அவற்றை முற்றாகத் தீர்ப்பதாக அமைய வேண்டும்.!'

அடிப்படைப் பிரச்சனையைத் தீர்ப்பது பற்றிப் பேசாமல், மிதவாதம் என்று பிரித்தானியா பேசுவதற்குக் காரணம் இருக்கின்றது. இவ்வாறு கூறிச் செயல்படுவதன் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகளை ஓரம் கட்டி விடலாம் என்று பிரித்தானியாவும், சர்வதேசமும் மனப்பால் குடிக்கின்றன. தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஓரம் கட்டலாம் என்றும், அவ்வாறு ஓரம் கட்டுவதன் மூலம், தமிழ் மக்களுக்கு ஓர் உதவாத திட்டமொன்றைத் திணிக்கலாம் என்றும், இவை நம்புகின்றன. இதன் அடிப்படையில்தான் கடந்த காலங்களில் சர்வதேசம் செயற்பட்டு வந்திருக்கின்றது. அதனை இன்னும் அது தொடர முயற்சிக்கின்றது. அதனால்தான் சிங்களப் பேரினவாதச் சாத்தானுக்காக என்று புதிய வேதம் ஒன்றைத் தயாரித்து, அதனையும் தாங்களே ஓதி வருகின்றார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பலத்தையும், சுதந்திர தாகத்தையும், விடுதலைக்கான அர்ப்பணிப்பையும், சிங்கள தேசம் மட்டுமல்ல, சர்வதேசமும் குறைத்தே மதிப்பிடுகிறது. இன்று விடுதலையாகி வருகின்ற மற்றைய தேசங்களிடமிருந்தும், பட்டறிவை இவைகள் பெற்றுக் கொள்ளவில்லை. ஆகவே புதிதாக ஒரு பட்டறிவை, தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து சிங்களமும், சர்வதேசமும் கற்றறிந்து கொள்ளும் காலம் வரும். அது விரைவில் வரும்!

-சபேசன் (அவுஸ்திரேலியா)-

1 Comment:

வெத்து வேட்டு said...

anna when will we get Eelam with ltte's unmeasureable strength and unmatchable diplomatic actions?
anytime soon???? what are we waiting for?
isn't sooner the better for dying tamil people?