Tuesday, December 4, 2007

தடுத்து நிறுத்த முடியாத நிலையில் தறிகெட்டு ஓடும் யுத்தத் தீவிரம்

இன ஒடுக்கல் தீவிரத்திலும் யுத்த வெறி முனைப்பிலும் தாண்டவமாடும் "மஹிந்த சிந்தனை' அரசு நாட்டின் பொரு ளாதாரத்தைப் போருக்காகக் கொட்டியழிக்கின்ற கைங்கரி யத்தைக் கனகச்சிதமாக நிறைவுசெய்து வருகின்றது.

2006 இல் "மஹிந்த சிந்தனை' அரசின் முதலாவது வரவு, செலவுத்திட்டத்தின் கீழ் பாதுகாப்புச் செலவினத் துக்கு 9 ஆயிரத்து 600 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட் டது. ஆனால் வருட முடிவில் பாதுகாப்புச் செலவினம் 11 ஆயிரத்து நூறு கோடி ரூபாவைத் தாண்டியது.
அதேபோல இந்த ஆண்டிற்கு எனக் கடந்த வருட இறுதியில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புச் செலவுக்காக 13 ஆயிரத்து 900 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் நவம்பர் மாதம் முடி வடையும் போதே 15 ஆயிரத்து 600 கோடி ரூபாவைத் தாண் டிவிட்டது பாதுகாப்புச் செலவினம்.

அடுத்த ஆண்டுக்கு "மஹிந்த சிந்தனை' பட்ஜெட் மூலம் பாதுகாப்புத்துறைக்கு 16 ஆயிரத்து 600 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு நாளைக்கு சுமார் 46 கோடி ரூபா என்ற கணக்கில் பாதுகாப்பு செல வினத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.
ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் அரசுத் தலை வர்களின் யுத்தத் தீவிர அறிவிப்புகளை நோக்கினால் இத் தொகை அடுத்த ஆண்டில் இருபதாயிரம் கோடி ரூபாவைத் தாண்டுவது உறுதி என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.
ஆனாலும் அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவி னத் தொகை இதைவிடவும் அதிகமாக இருக்கும் என்றும்
உண்மையில் பாதுகாப்புச் செலவினமாக வெளிப்படுத்தப்படும் தொகை குறைத்து மதிப்பிடப்பட்ட அளவே என் றும்
உள்வீட்டுத் தகவல்கள் விடயத்தைப் போட்டு உடைக் கின்றன.
அடுத்த ஆண்டில் பெரும் தொகைக்கு யுத்த ஆயுதங் கள் கொள்முதல் செய்யப்படவிருக்கின்றன. இவை பெரும் பாலும் ஒரு வகை வாடகைக் கொள்வனவு அடிப்படை யிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது மொத்தப் பெறுமதியில் ஒரு சிறு பகுதியை ஆரம்பக் கட்டணமாகச் செலுத்திவிட்டு அந்த ஆயுதத் தளபாடங்களை இலங்கை அரசு பெற்றுக்கொள்ளும். பின்னர் வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட தொகை என்ற கணக்கில் நீண்ட காலக் கடன் அடிப்படையில் நிலுவை செலுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆரம்பக்கட்டணமாக அடுத்த ஆண்டில் செலுத்தப் படும் தொகையை மட்டுமே உள்ளடக்கி, அடுத்த ஆண் டுக்கான யுத்தச் செலவினம் 20 ஆயிரம் கோடி ரூபாவை எட் டும் எனக் குத்துமதிப்பாக மதிப்பீடு செய்யப்படுகின்றது.

ஆனால், அடுத்த ஆண்டில் புதிதாகக் கொள்வனவு செய்து, வாங்கிக் குவிக்கும் யுத்த தளபாடங்களுக்கான முழு மதிப்பையும் அல்லது அக்கொள்வனவுகள் மூலம் அர சுக்கு ஏற்படும் முழுக் கடன் பொறுப்பையும் சேர்த்தால் யுத்தச் செலவினத் தொகை இன்னும் பல்லாயிரம் கோடி ரூபா வால் அதிகரிக்கும் என்பதே உண்மை நிலைவரமாகும்.

வெளிப்பகட்டுக்கு அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவினம் என அரசு குறிப்பிடும் 16 ஆயிரத்து 600 கோடி ரூபா நிதியே உண்மையான யுத்தச் செலவினம் என்று கருதினாலும் கூட, பாதுகாப்புச் செலவினமாக இலங்கையர் ஒருவருக்கு 8 ஆயிரத்து 536 ரூபாவை அரசு ஒதுக்கீடு செய் கிறது. ஆனால் நாட்டுப் பிரஜை ஒருவரின் சுகாதார நல னுக்கு அடுத்த ஆண்டில் ஆக 2 ஆயிரத்து 359 ரூபா மட் டுமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்கிறது புள்ளி விவரக் கணக்கு.
அது மாத்திரமல்ல, அரசின் செலவினத்தில் 38.5 சத வீதம் பொதுக்கடன் மீள் செலுத்துகையில் வீணாகின்றது.

இந்தச் சீத்துவத்தில்தான் மேலும் மேலும் கடன்களை வாங்கி, பேரழிவும், போரழிவும் தரும் யுத்தத்துக்குக் கொட்டிச் சீரழிக்கத் துடியாய்த் துடிக்கிறது "மஹிந்த சிந்தனை' அரசு.
யதார்த்த நிலைமை புரியாமல் அரசு வரிக்கும் யுத்தத் தீவிரக் கொள்கைப் போக்கால் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழும் ஆபத்து வேகமாக நெருங்கி வருகின்றது.
விலைவாசி அதிகரிப்பால் வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்து, அன்றாட வாழ்வுக்கே தினசரி வயிற்றுப்பாட் டுக்கே அல்லாடும் நிலைக்கு இலங்கைத் தீவின் சராசரிக் குடும்பம் ஒவ்வொன்றும் வந்துவிட்டது.

நிலைமையைத் தற்காலிகமாகச் சமாளிப்பதற்கு அரசு வழங்கிவரும் மானியக் கொடுப்பனவுகளும் நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டன. சர்வ தேச நிதி வழங்குநர் அமைப்பான சர்வதேச நாணய நிதியம் நேரடியாகவே ஒளிவுமறைவின்றி இலங்கை அரசுக்கு இதனைச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
"மானியங்களை வழங்கி, பிரச்சினைகளை சமாளிக்கும் கொள்கைப்போக்கு விபரீத விளைவுகளை பொருளாதாரத் தில் ஏற்படுத்தப் போகின்றது. எனவே மானியக் கொடுப் பனவுகளை குறிப்பாக எரிபொருளுக்கு வழங்கும் மானி யத்தை வெட்டுங்கள்!' என்று அரசுக்குக் காட்டமாக உரைத்திருக்கின்றது நாணய நிதியம்.

இப்படிப் பல தரப்பிலும் நியாயமும், நீதியும், யதார்த்தமும் அறிவுரையாக ஆலோசனையாக வழிகாட்டலாக எடுத்து ரைக்கப்பட்டாலும்
நாட்டின் பொருளாதாரம் சீரழியும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும்
யுத்தவெறி அரக்கன் என்ற பிடியில் சிக்கி நிற்கும் அரசு, அதை விட்டு மீளுவதாகவோ, அமைதி வழித் தீர்வு குறித்து ஆத்மார்த்தமாகச் சிந்திப்பதாகவோ இல்லை.

"முதலையும், மூர்க்கனும் கொண்டது விடா' என்பர். "கெடுவான் கேடு நினைப்பான்' என்பர். அந்தச் சிந்தனை யில் ஓடுவோரை யார்தான் தடுத்து நிறுத்தமுடியும்?

Posted on : 2007-12-04

uthayan.com

0 Comments: