Saturday, December 8, 2007

கொழும்பின் கைதுகள் தமிழர்களை வெளியேற்றவே

கொழும்பில் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் மீண்டும் பெரும்மெடுப்பில் ஆரம்பமாகிவிட்டன. கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலிருந்தும் தமிழ் மக்களை விரட்டி அடிப்பதான ராஜபக்ச சகோதரர்களின் திட்டத்தின் மற்றுமொரு வழிமுறை இப்பொழுது கடைப்பிடிக்கப்படுகிறது.

கொழும்பில் தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்வது சிங்கள இனவாதிகளுக்கு என்றுமே பிடித்த மானதாக இருந்ததில்லை. அதிலும் இலங்கையிலிருந்தே தமிழ் மக்களை முற்றுமுழுதாக ஒழித்துக்கட்ட முயற்சி எடுத்து வருகையில் சிறிலங்காவின் தலைநகரில் தமிழ் மக்களின் செறிவு அதிகரிப்பதை அவர்களால் எவ்வாறு பொறுத்துக் கொள்ளமுடியும்?.

ஆனால் கொழும்பில் தமிழ் மக்களின் செறிவைக் கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகள் உடனடியாகவே பாரிய எதிரொலியை ஏற்படுத்தி விடுவதால் இந்த முயற்சியைத் தீவிரப்படுத்திச் செய்துவிட முடியவில்லை.
எனினும் சிங்கள ஆட்சியாளர்கள் தமது முயற்சியைக் கைவிட்டு விட்டதாகவும் இல்லை.

1983 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில் திருநெல்வேலியில் இடம்பெற்ற தாக்குதலுக்கு கொழும்பில் வசித்துவந்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அமைச்சர்கள் நேரடியாகவே களமிறங்கி இருந்தமை ஒன்றும் இரகசியமானதல்ல.

ஆனால் இந்த வன்முறை மூலம் அதாவது 1983 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் தூண்டிவிடப்பட்ட வன்முறையானது அவர் நினைத்த விளைவை வழங்காதது மட்டுமல்ல. ஜே.ஆர். அரசாங்கத்தின் சுயரூபத்தை உலகளாவிய ரீதியில் வெளிப்படுத்தியது.

வெளியுலகிற்குத் தம்மை தர்மிஷ்ட சனாதிபதியாகக் காட்டிக் கொண்ட அவரின் சாயம் வெளுத்தது. இந்த அவப்பெயரில் இருந்து மீள அவருக்கு மட்டுமல்ல சிறிலங்காவிற்கே பல வருடங்கள் பிடித் தன. அதனை அவர் வெளிப் படையாகவே ஒப்புக்கொண்டும் இருக்கின்றார்.

அதற்கு முன்னரும் 1956, 1958, 1976, 1977 எனத் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்த போதும் 1983 இற்குப் பின் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் கண்ட வளர்ச்சி காரணமாகக் கொழும்பில் அவ்வாறானதொரு வன்முறையைச் சிங்கள ஆட்சியாளர்களுக்கு கட்டவிழ்த்து விடுவது அச்சத்திற்குரிய ஒன்றாகவே இருந்து வருகின்றது.

மிக நெருக்கடியான யுத்த சூழ்நிலை ஒன்றில் அநுராதபுரம் சிறிமகாபோதி தாக்கப்பட்டால் நானே நேரடியாகத் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துவேன் என முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சபதம் செய்தமை அவர்களின் தமிழ் மக்களுக்கு எதிரான மனோபாவத்தை வெளிக்காட்டியது.

இவ்வாறான நிலையில் தமிழ் மக்களைக் கைது செய்தல், வதிவிட அனுமதிப் பதிவு, சுற்றிவளைப்புக் கள், வீதித்தடைகளில் விசாரணைகள் என எல்லா ஆட்சியாளர்களும் தமிழ் மக்களைத் துன்புறுத்தி அவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்து தமிழ் மக்களை எவ்வாறேனும் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டே வந்தனர். இவற்றின் தீவிரமான பல வடிவங்களையே மகிந்த சகோதரர்கள் இப்போது செயற்படுத்தி வருகின்றனர்.

கொழும்பில் தங்ககங்களில் தங்கியிருக்கும் தமிழர்களைக் கொழும்பிலிருந்தே வெளியேற்றுவது என்பது அதன் ஒரு வடிவமாகும். ஆனால் இதனைச் சர்வதேச ஊடகங்கள் இனச் சுத்திகரிப்பு என வர்ணித்தமையால் அதனைச் செயற்படுத்த மகிந்த அரசினால் முடியவில்லை. இதன் சூத்திரதாரியான மகிந்தவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச இதனையிட்டு ஆத்திரமும் விசனமும் கொண்டிருந்தாலும் இறுதியில் சிறிலங்கா அரசு சார்பில் அதன் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஒப்புக்கேனும் மன்னிப்புக் கேட்க வேண்டியதாயிற்று.

இப்போது கோத்தபாய ராஜபக்ச தனது அந்த நடவடிக்கையையே வேறு விதமாகச் செயற்படுத்தி வருகின்றார். அதாவது ஒருவரைக் கைது செய்வது தொடர்பிலான எந்தவொரு நடைமுறையையும் பின்பற்றாது எந்தவொரு மனித உரிமைச் சட்டங்களையும் மதிக்காது அவர்கள் பெரிதாகக் கூறிக்கொள்ளும் சிறிலங்காவின் அரசியல் அமைப்பில் குறிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் குறித்த விடயங்களைக் கூட மதிக்காது அவர் செயற்பட்டு வருகின்றார்.

ஒரே நாளில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ்மக்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்து விசாரணைகள் எதுவுமின்றி நேரடியாகப் பேருந்துகள் மூலம் சிறைச்சாலைகளுக்கு அனுப்பித் தடுப்புக் காவலில் அவர்களை வைக்க உத்தரவிட்டிருக்கிறார்.

இந்தச் சிறைச்சாலைகளில் தமிழ் மக்களை அடைப்பது என்பது எவ்வளவு காலமும் விசாரணைகள் எதுவுமின்றி அவர்களை அடைத்து வைக்கும் நோக்கம் கொண்டது என்பது வெளிப்படையானது.

அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்த ஐ.நா. அதிகாரி ஆர்பர் அம்மையார் இச்சிறைச்சாலைகளுக்குச் சென்றபோது இவற்றின் மோசமான நிலைகுறித்து அங்கிருந்த தமிழ்க் கைதிகள் எடுத்துக் கூறியிருந்தனர்.

ஏற்கெனவே அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் மிகவும் நெருக்கடியான சூழலில் நிரம்பி வழிந்த சிறைகளில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோரை அடைத்து வைப்பது என்பது அவர்களுக்கு எவ்வளவு துன்பத்தைக் கொடுக்கும் என்பதைக் கூட மகிந்த அரசு பார்க்கவில்லை.

இவ்வாறான நெருக்கடிகளைக் கொடுத்துத் தமிழ் மக்களை எப்படியும் அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே மகிந்த அரசாங்கத்தின் திட்டமாகும்.

ஆனால் இதில் கூட அவரால் வெற்றிபெற முடியுமா? என்பது சந்தேகமே. எனினும் கோத்தபாய ராஜபக்ச புதுப்புது உத்திகளை வகுத்து தமிழ் மக்களுக்கு நெருக்கடிகளையும் துன்பங்களையுமே வழங்குவார் என எதிர்பார்க்கலாம்.

இனவாதம் கண்ணை மறைத்துள்ள நிலையில் சிங்கள மக்களை திருப்திப்படுத்துவது ஒரு நோக்கமாக இருக்கையில், கொழும்பு நகரின் பாதுகாப்பைப் பொறுப்பெடுத்து வீரம் பேசிக் கொண்டிருந்த கோத்தபாய அங்கு இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களால் ஏற்பட்டிருக்கும் அவமானத்தைத் துடைத்துக் கொள்ளவும் அவர் தமிழ் மக்களைத் துன்புறுத்துவதே வழமையாகக் கொண்டிருக்கிறார்.

போராடும் மக்கள் மீது அடக்குமுறை ஆட்சியாளர்கள் பலராலும் பிரயோகிக்கப்பட்டு தோல்வி கண்ட தந்திரோபாயங்களே இவை என்பதைக் கோத்தபாய விரைவில் தெரிந்து கொள்வார்.
-வேலவன்-
நன்றி: வெள்ளிநாதம் (07.12.07)

0 Comments: