Tuesday, December 4, 2007

"தமிழர் போராட்டத்துக்கு எதிராக இரு வல்லரசுகளின் இராணுவ உதவி"

இதேசமயம், அரசியல் இலக்குகளைத் தாக்குவதென்பது போர் விதிமுறைகளுக்கு முரண்பாடானதென்பதும், அவை பலவீனமான இலக்குகள் என்பதும் இனப்பிரச்சினை போன்றவற்றில் தொடர்புபட்ட நாடுகள் அத்தகைய இலக்குகளைத் தெரிவு செய்வதில்லை என்பதும் ஒருதரப்பு அரசியல் விமர்சகர்களின் அபிப்பிராயமாகும். இந்தவகையில் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தாக்குதலானது சமாதான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும், சர்வதேச விதிமுறைகளுக்கு மாறானதென்பதும் வெளிப்பட்டிருக்கையில், சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனக்கூறிக் கொள்பவர்கள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் படுகொலை தொடர்பாக உரிய வழிமுறையில் நடந்து கொண்டதாகத் தெரியவில்லை.

இதன் வெளிப்பாடாகவே, அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள், இப்படுகொலை தொடர்பாக சமாதான ஏற்பாட்டாளர்களான நோர்வேத்தரப்பு கண்டனம் தெரிவிக்காததை இட்டுப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் தமது ஆட்சேபத்தைத் தெரிவிக்க வேண்டியதாயிற்று. இவ்வாறாக, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் வீரச்சாவு சமாதான முயற்சிகளுக்கு ஏற்படுத்திய நெருக்கடியை, சமாதான முயற்சிகளில் ஏற்படுத்திய வெற்றிடத்தை சமாதான ஏற்பாட்டாளர்களும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுதல் வேண்டும் என கூறிவரும் வல்லாதிக்க அரசுகளும் கண்டுகொள்ளாதது மட்டுமல்ல, அவை இச்சம்பவத்தின் பின்னரான காலப்பகுதியில் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் என்பன இனப்பிரச்சினையில் இவர்களின் வெளிப்படுத்தல்களுக்கும், செயற்பாடுகளுக்கும் இடையில் பாரியதானதொரு வேறுபாடு இருப்பதையே வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

இதில் குறிப்பாக, அமெரிக்க அரசு சிறீலங்காக் கடற்படைக்கு நவீன ராடர் கருவிகளையும், ரோந்துப் படகுகளையும் வழங்கியுள்ளமையையும், இந்தியா, சிறீலங்கா அரசிற்குத் தேவையான இராணுவ உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதையும், சிறீலங்கா அரசின் ஆயுதக் கொள்வனவிற்கு நிதி உதவி அளித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கதான விடயங்கள் ஆகும். அமெரிக்க அரசு சிறீலங்காவிற்கு ஆயுத உதவி அளிப்பது என்பது ஒன்றும் புதிதல்லத்தான். சிறீலங்கா இராணுவத்திற்குத் தேவையான பல ஆயுததளபாடங்களையும், ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களையும் அது ஏற்கனவே வழங்கியுள்ளதோடு, சிறீலங்காப் படைத்துறை அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகளையும் வழங்கியே வந்துள்ளது.

இதனைத் தவிர, சிறீலங்காக் கடற்படை அமெரிக்காவின் கிழக்குப் பசுபிக் கட்டளைப்பீடத்துடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருவதோடு, அதன் ஒத்துழைப்பையும் பெற்று வருகின்றது என்பதும் வெளிப்படையானது தான். ஆனால் தற்பொழுது அதாவது இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வும் யுத்தநிறுத்த உடன்பாடும் கேள்விக்குள்ளான நிலையில் அமெரிக்கா இத்தகைய இராணுவ உதவிகளை வெளிப்படையாக வழங்க முன்வந்தமை இனப்பிரச்சினை குறித்து அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்த கேள்வி தவிர்க்க முடியாததாகின்றது.

ஏனெனில் அமெரிக்கா இராணுவ உதவிகள் வழமைக்கு மாறான வகையில் வெளிப்படையானதாக, அதிலும் இலங்கையில் கடற்படைத்தளம் ஒன்றில் வைத்து வழங்கப்பட்டுள்ளமையானது, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான ஒரு குறிகாட்டி நடவடிக்கையாகவே கொள்ள வேண்டியதாகியுள்ளது.
இதை ஒத்ததாகவே இந்தியாவின் நடவடிக்கையும் உள்ளது. அதிலும் குறிப்பாக, பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் அவர்களின் வீரச்சாவானது தமிழக அரசியலில் உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கையில், இந்திய அரசு ஆயுத தளபாட உதவிகளை வழங்கி வருவதோடு, 100 மில். அமெரிக்க டொலர்களை ஆயுதக் கொள்வனவிற்காகச் சிறீலங்கா அரசிற்கு வழங்கியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அரசின் இந்நடவடிக்கையானது அமெரிக்காவை அடியற்றியதா? அன்றி தனித்துவமான முடிவின் பாற்பட்டதா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, இந்திய அரசு இனப்பிரச்சினை விடயத்தில் நடுநிலமையான நோக்குடன் நடந்த கொள்ளாதது மட்டுமல்ல, தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கத் தவறியுள்ளது என்பதே கருத்திற்கொள்ள வேண்டியதாகியுள்ளது.
அமெரிக்க அரசும், இந்திய அரசும் சிறீலங்காவிற்கு இராணுவ உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்குவதென்பது வழமையானதொன்றே. ஆயினும், சிறீலங்கா அரசு பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களைப் படுகொலை செய்ததன் மூலம் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையிலும் இத்தகைய உதவிகளைச் செய்ய முன்வந்ததன் காரணம் என்ன என்பதே முக்கியத்துவம் மிக்கதாகிறது.

இதற்குப் பல காரணங்கள் ஆராயப்பட வேண்டியவையாகவுள்ளன. இதில் முதலாவதாக இலங்கையில் ஏற்பட்ட திடீர் இராணுவ ரீதியிலான சூழ்நிலை மாற்றம் முக்கியமாகக் கொள்ளப்படுகின்றது.
கிழக்கை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்டுவிட்டதாக மகிந்த அரசாங்கம் பெரும் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அதேவேளை, வடக்கும் - விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியும் - விரைவில் மீட்கப்படும் என்பது அரசாங்கத்தின் முனைப்புப்படுத்தப்பட்ட பிரசாரமாகவும் இருந்தது. அதற்கேற்ப நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் வன்னியிலும், யாழ். குடாநாட்டிலுமாக மேற்கொண்ட இம்முயற்சிகள் சிறீலங்கா அரசிற்கு அனுகூலமானமாக இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, சிறீலங்கா இராணுவத்திற்கு இழப்புக்களை ஏற்படுத்துவதாகவும் முடிந்தன.

இந்நிலையானது வடக்கு களமுனையில் சிறீலங்கா இராணுவத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்ட
வையாகவே உள்ளதென்பது வெளிப்பட்டது. இதே சமயம் கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை விரட்டியதாக அரசாங்கம் பிரசாரம் செய்து கொண்டிருந்த வேளையில் அம்பாறை மாவட்டத்தில் சிறீலங்கா அதிரடிப்படையினர் அடிக்கடி புலிகளுடன் மோத வேண்டிதாக இருந்தது. இதனால் இரகசியமாகவேனும் சில படைநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால், விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்டத்தைக் கடந்து அம்பாந்தோட்டை மாவட்டத்தின் யால சரணாலயத்தில் இராணுவ மினிமுகாம் ஒன்றின் மீது தாக்குதலை நடத்தியபோது அதனை அரசாங்கம் மூடிமறைக்க முடியவில்லை. அம்பாறை மாவட்டத்தின் பாது
காப்புக் குறித்தும் பேசவேண்டியதாகியது.

இத்தகையதொரு நிலையில், விடுதலைப் புலிகள் அநுராதபுரம் வான்படைத்தளம் மீது மேற்கொண்ட தாக்குதலானது சிறீலங்கா அரசை மட்டுமல்ல, சிறீலங்கா அரசிற்கு இராணுவ உதவிகளையும், பயிற்சிகளையும் வழங்குபவர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது.
அநுராதபுரம் வான்படைத்தளத் தாக்குதலானது இத்தகைய அதிர்ச்சியைக் கொடுத்ததற்கு பல காரணங்கள் உண்டு.

இதில் 03 காரணிகள் முக்கியமானவை.

01. நேர்த்தியான தாக்குதல் திட்டம்.

02. கரும்புலிகள் அணியாகச் செயற்பட்ட விதமும், அவை வழி நடத்தப்பட்ட முறையும்.

03. சிறீலங்கா வான்படைக்கு ஏற்படுத்திய பாரிய ஆயுததளவாட இழப்பு.

இம்மூன்று காரணிகளும் சிறீலங்காவுடனான இராணுவச்சமநிலையை விடுதலைப் புலிகளினால் ஒருநாள் இரவிற்குள் மாற்றி அமைத்துவிட முடியும் என்ற நிதர்சனத்தை சிறீலங்கா அரசிற்கும், உலகிற்கும் வெளிப்படுத்தியிருந்தது. இத்தகையதொரு நிலையில், சிறீலங்கா அரசிற்குக் கைகொடுத்துத் தூக்கிவிடவும், தமது ஆதரவைச் சிறீலங்கா அரசிற்கு உறுதிப்படுத்திக்
கொள்ளவும் அமெரிக்காவும், இந்தியாவும் பகிரங்க இராணுவ உதவிகளுக்கு முன் வந்திருத்தல் கூடும். இதனைத் தவிர, சிறீலங்கா அரசு அண்மைக்காலத்தில் மேற்கொண்டு வரும் சில இராஜதந்திர முயற்சிகளும் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உதவிகளுக்குக் காரணமாக இருக்க வாய்ப்புக்கள் உண்டு.

இந்திய அரசு, சிறீலங்காவிற்கான இராணுவ உதவிகளை - அதாவது, நவீன போர்த் தளபாடங்களை வழங்க மறுத்தபோது சீனாவிடமும், பாகிஸ்தானிடமும் ஆயுத உதவி கோரப்போவதாகச் சிறீலங்கா எச்சரித்து இந்தியாவிடம் இநந்து ஆயுத உதவிகளைப் பெற்றுக் கொண்டது. அதை ஒத்ததொரு சூழ்நிலை அமெரிக்காவிற்கும் தற்பொழுது ஏற்பட்டுள்ளதானதொரு அபிப்பிராயமும் இராஜதந்திர வட்டாரங்களில் உண்டு.
அதாவது, இந்திய அரசு ஆயுதங்களை வழங்குகின்றதோ இல்லையோ சிறீலங்கா அரசு சீனாவிடம் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்து வருகின்றமை வெளிப்படையானது. இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, ஒருவகையில் அமெரிக்காவிற்கும் உறுத்தலான விடயமே ஆகும். இந்நிலையில், சிறீலங்கா அரசு மற்றுமொரு நகர்வாக ஈரானுடன் இராஜீக உறவை வளர்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதோடு, ஈரானிடமிருந்து பெருமளவு ஆயுதக் கொள்வனவை செய்ய மேற்கொள்ளும் முயற்சியானது. அமெரிக்காவிற்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கத்தக்கது ஒன்றாகியுள்ளது என்றே கருதப்படுகின்றது.

ஈரானுடனான உறவில் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் அக்கறை காட்டினார். ஆயினும், அன்று அமெரிக்கா ஈரானுடன் இன்றைய நிலைபோல் தீவிரமாக முரண்பட்டுக் கொண்டிருக்கவில்லை. ஈராக்கில் படைகளை இறக்கியிருந்த அமெரிக்கா ஈரானுடன் அனுசரித்த போக்கையே கைக்கொள்ள முற்பட்டு நிற்கின்றது. ஆனால் ஈரானின் அணுசக்தி விவகாரத்தினால் அமெரிக்க - ஈரான் உறவு மோசமாக சீர்கெட்டுப்போயுள்ள நிலையில், அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத்தடை விதிக்கும் அளவிற்குச் சென்றுள்ளது. இந்நிலையில் சிறீலங்கா அரசு ஈரானுடன் இராஜீக உறவை நெருக்கமாக்கிக் கொள்ளவும், இதன் பொருட்டு சிறீலங்கா சனாதிபதி ஈரானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளமையும், ஈரானுடன் பெரும் வர்த்தக பேரத்தில் (1500 கோடி ரூபா ஆயுதக் கொள்வனவு) ஈடுபட்டு இருப்பதும் அமெரிக்காவைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளத்தக்க தொன்றாக இல்லை.

இத்தகையதொரு நிலையில் சிறீலங்காவிற்கான ஆயுத தளபாடங்களைத் தாமே நேரடியாக விநியோகிப்பதன் மூலம் ஈரானுடனான சிறீலங்கா அரசின் உறவு வலுவடையாது பார்த்துக்கொள்ளவும் அமெரிக்கா முற்பட்டிருத்தல் கூடும். அதாவது, கிழக்கு ஆசியாவிலும் மேற்கு ஆசியாவிலும் உள்ள வலுவான சக்திகள் தென்னாசியாவின் தென்கண்டத்திலுள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க தீவில் செல்வாக்கைச் செலுத்துவதைத் தடுத்து நிறுத்த அமெரிக்காவும் இந்தியாவும் சிறீலங்காவிற்கு இராணுவ உதவிகளைச் செய்வதற்கு முற்பட்டிருத்தல் கூடும்.

ஆனால், இலங்கையில் உள்ளே ஏற்பட்ட இராணுவச் சூழ்நிலை மாற்றமோ அன்றிப் பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய இராணுவச் சமநிலை மாற்றத்தைக் கருத்திற்கொண்டோ அன்றி இரண்டையும் கருத்திற்
கொண்டோ அமெரிக்காவும், இந்தியாவும் சிறீலங்காவிற்கு இராணுவ உதவிகளை வழங்கத் தீர்மானித்திருக்கலாம். ஆனால் இது இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் கொண்டுவரப்போவதில்லை. இலங்கையில் மேலும் இரத்தம் சிந்துவதற்கு மட்டுமல்ல, இப்பிராந்தியத்தில் அரசியல், இராணுவ ரீதியிலான பதற்ற நிலையை அதிகரிக்கவுமே வழிசமைப்பதாக இருக்கும்.

அதேவேளை, சிறீலங்கா ஆட்சியாளர்களை இவர்களால் எத்தகைய உதவிகள் மூலமும் தமது வழிப்படுத்தலுக்குள் கொண்டு வருதல் என்பதும் சாத்தியமில்லை. ஏனெனில், பௌத்த - சிங்கள அடிப்படைவாதமானது இந்தியாவின் அபிலாசைகளுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவின் அபிலாசைகளுக்கும் அடிப்படையில் எதிரானது. இதனை அமெரிக்காவும் இந்தியாவும் புரியாது சிறீலங்காவை வழிப்படுத்தலாம் என நினைத்தால் அதில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
நன்றி - "ஈழமுரசு"

0 Comments: