Tuesday, December 25, 2007

''தடுமாறும் சர்வதேசமும் தப்பித்த அரசாங்கமும்''

சர்வதேச சமூகம் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு நிகழ்ந்து விட்டது. 2008ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டினை மலையகக் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

யுத்தத்திற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆறுமுகம் தொண்டமானும் சந்திரசேகரனும் ஆதரவளித்ததை உலகத் தமிழினம் மிகுந்த சோகத்துடன் பார்வையிடுகிறது. இரண்டாவது தடவையாக மறுபடியும் ரணில் குழுவினர் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்குமெனக் காத்திருந்த மேற்குலகம் அது பலனளிக்காமல் இனிப் புதிய அழுத்தங்களை அரசின்மீது செலுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

இந்த கயிறு இழுத்தல் போட்டியில் ஜே.வி.பி.யினரின் பங்கு முக்கிய பாத்திரத்தினை வகுத்துள்ளதென்பதே உண்மையான விடயமாகும். முன்பு சர்வதேச சதிவலையொன்று சு.க. ஐ.தே.க. புரிந்துணர்வு ஒப்பந்த மூலமாக பின்னப்பட்ட வேளையில் ரணிலின் வலது இடது கரங்களை தம்பக்கம் இழுத்தெடுத்து அவ்வலைகளை ஜனாதிபதி மஹிந்த கிழித்தெறிந்திருந்தார்.

தற்போது, ஜே.வி.பி.யின் ஆதரவோடு கவிழும் நிலையிலிருந்த ஆட்சியினையும் காப்பாற்றி புதிய சர்வதேசப் பொறியிலிருந்து தப்பி வெளியே வந்துள்ளது அரசாங்கம்.

ஜே.வி.பி.யானது ஆட்சிபீடமேறும் கனவில் வாழும் வரைக்கும் ஜனாதிபதி மஹிந்த அரசாங்கத்தினை கவிழ்ப்பது மிகவும் கடினமான விடயந்தான்.

இலங்கை அரசியலில் ஐ.தே.கட்சியை மூன்றாவது நிலைக்குத் தள்ளிவிட்டோமென்கிற கற்பிதமே ஜே.வி.பி. யினர் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

ஜே.வி.பி.யின் அரசியல் சூத்திரத்தில் இரண்டு விதமான போக்குக் காணப்படுகிறது.

கைவசமுள்ள 38 நாடாளுமன்ற கதிரைகளும், இன்னொரு தேர்தல் நடத்தப்பட்டால் மீண்டும் கிடைக்குமாவென்கிற சந்தேகம் ஒரு புறமும், மேற்குலக ஆசியுடன் ரணில் கட்சி ஆட்சிபீட மேறினால், இடதுசாரிகள் என்று கூறி நசுக்கி விடுவார்களோவென்கிற அச்சமும் இவர்களிடம் மேலோங்கியுள்ளது.

ஜே.வி.பி. யோ அல்லது மஹிந்தவின் பொதுஜன ஐக்கிய முன்னணியோ அதிகம் இனவாதம் பேசுகிறார்களென்று ஒரு கருத்துக் கணிப்பினை நடத்தினால் அதிலும் ஜே.வி.பி. தோற்றுப் போகக்கூடும்.

விமல் வீரவன்சவை பார்க்கிலும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, கெஹெலிய ரம்புக்வெல போன்றோரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு அதி உச்ச நிலையை அடைந்துள்ளது.

ஐ.நா. சபையின் உயர் நிலை பிரதிநிதிகளையும் காட்டமாகத் திட்டும் வைராக்கியமும், அசட்டுத்துணிச்சலும் ஜே.வி.பி.யைவிட ஜனாதிபதி மஹிந்தவின் மந்திரிகளிடம் அதிகமாக காணப்படுகிறது.

யுத்த வெற்றிகளை பூதாகரமாக்கி, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அரசாங்கம் மூடி மறைக்கின்றதென சோசலிசம் பேசியும் ஒன்றுமே மாற்றமடையவில்லை.

ஒரே உறையில் இரண்டு பௌத்த சிங்கள பேரினவாதக் கத்திகள் இருப்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களென்றும் ஜே.வி.பி.க்குத் தெரியும்.

ஆகவே, சீரழிந்த பொருளாதாரத்தால் அல்லல்படும் மக்கள் சார்பாக பேசும் ஒரே குழு பேரினவாத சோசலிசச் சக்தியாக தம்மை இனங்காட்டும் புதிய முயற்சியில் ஜே.வி.பி. இறங்கியுள்ளது.

அரசாங்கத்தின் மீது, சர்வதேசம் போல் அதிக அழுத்தம் கொடுத்தால், கட்சியை உடைத்து விடுவார்களென்கிற பயம், வரவு செலவுத் திட்ட காலத்தில் இவர்களுக்குள் உருவாகியுள்ளது.

உபத்திரவம் கொடுப்பவர்களின் ஆட்பலத்தை உடைத்து விடுவதே, இலங்கை அரசியலின் ஜனநாயகப் பாரம்பரியம் என்பதை வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.

பிரித்தாளும் சூத்திரத்தின் பிதாமகர்கள், தமது 150 ஆண்டுகால ஆட்சியில் விட்டுச் சென்ற ஏகாதிபத்திய மனோபாவம், இந்த நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடியினரின் ஆளுமையிலும் செருகப்பட்டுள்ளது.

கட்சியை உடைக்க முடியாவிட்டால், அதன் உறுப்பினர்களின் உறவினர்களைக் கடத்தி, ஆட்சியதிகாரத்தை தக்க வைக்கும் நவீன அரசியல் பாரம்பரியமும் இலங்கையில் நடைமுறையிலுள்ளது.

அடங்க மறுக்கும் தனிநபர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை நீக்கி, அச்சுறுத்தும் பாணியில் அரசியலும் நடக்கிறது. அமெரிக்க ஜனநாயகத்தின், சுதந்திர பாதுகாவலர் விருது பெற்ற "மக்கள் கண்காணிப்புக்குழு' ஏற்பாட்டாளர் மனோகணேசனிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை விலக்கி, மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடுபவரின் மனித உரிமையையும் மீறி இருக்கிறது இந்த அரசாங்கம்.

ஆனாலும் தமிழ் மக்களின் பாதுகாப்புக் குறித்து, இந்த சர்வதேச சமூகம் எதுவித உத்தரவாதமும் இதுவரை வழங்கவில்லையென்பதை இத்தருணத்தில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் அறிக்கைகளை வாசித்தாலும் இந்தியா, ஜப்பான் போன்ற தென்னாசிய காந்தியவாதிகள், அரசாங்கத்திற்கெதிராக எவ்வகையான தீர்மானங்களையும் கொண்டுவர அனுமதிக்க வில்லை. அணுஆயுத பொருளாதார வல்லரசுகள் யாவும் உப்புச் சத்தியாக் கிரகப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துமாறே தமிழ் மக்களை வலியுறுத்துகின்றன.

அதனையும் இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்கள் அகதி முகாம்களில் இருந்தவாறு மேற்கொள்ளும்படி ஆலோசனை வழங்குகிறார்கள்.

இத்தகைய குசும்புச் சித்தர்களின் அரசாங்கச் சார்பு நிலைப்பாடுகள் எவரையும் நம்ப முடியாததொரு முடிவிற்கே தமிழ் மக்களை நகர்த்திச் செல்கிறது.

இதேவேளை, உலக மயமாக்கல் கோட்பாட்டினை அடியொற்றிய புதியமுறையிலான உளவியல் சமரொன்றையும் சர்வதேச நாடுகள் மேற்கொள்வதை அவதானிக்கலாம்.

முன் நிபந்தனைகள் ஏதுமின்றி நிதி உதவிகள் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்றன. ஐ.நா. மனித உரிமைக் கண்காணிப்பகத்தை இலங்கையில் நிறுவ அனுமதித்தால் நிதி வழங்கப்படுமென சிறியதொரு துருப்புச் சீட்டை முன்வைத்து காலஅவகாசம் வழங்குகிறது அமெரிக்கா.

அதேவேளை ரஷ்யா, இந்திய, பாகிஸ்தான் நாடுகளின் அதியுயர் படைத்தளபதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை அரசுக்குச் சார்பான அணியில் தாமும் இணைந்துள்ளோமென நவீன அணிசேராக் கொள்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

திருமண வைபவத்தில் " மொய்' எழுதும் பாணியில், போட்டி போட்டுக்கொண்டு நிதி உதவி வழங்கலும், இராணுவ ஜாம்பவான்களின் அதிரடி விஜயங்களும், தமிழ் மக்களின் போராடும் உளவுரணை சிதைத்து விடுமென சில சர்வதேச நாடுகள் கற்பிதம் கொண்டுள்ளன. இவ்வாறான உளச் சிதைவுச் சித்தாந்தங்களை தமிழ் மக்களின் தலைமை மீது பிரயோகித்தவாறு, புற்றீசல் போன்று புதிய தமிழ் தலைமைகளை உருவாக்கும் முயற்சிகளை ஒரு பக்கம் முடுக்கிவிட்டுள்ளன.

இலங்கையிலிருந்து முக்கூட்டணியினர் இந்திய விஜயத்தை மேற்கொண்டுள்ள வேளையில் மோதிக் கொள்ளும் முன்னை நாள் ஈரோஸ் கொள்கை வகுப்பாளர்கள் நேசன் சங்கர் ராஜு தலைமையில் கனடாவிலும், இந்தியக்கொள்கை கருத்துருவாக்கிகளின் இணையத் தளமூடாக ரவி சுந்தரலிங்கம் என்பவர் தமது குழுவின் சித்தாந்த அரசியல் கோட்பாடுகளை முன்வைத்த வண்ணமுள்ளனர்.

விடுதலைப் புலிகளுடன் இனி ஒரு அரசியல்தீர்விற்கான பேச்சுவார்த்தை சாத்தியப்பாடுகள் இல்லையென்பதால், மிதவாத தமிழ்த் தலைமையொன்றுடன் பேசித் தீர்ப்பது சரியான வழிமுறையென்று பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் கூறியதன் விளைவாகவே புதிய தமிழ்த்தலைமைகள் உருவாக ஆரம்பித்துள்ளன. தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான ஒருங்கிணைந்த பங்களிப்பினை அளிப்பதை விடுத்து, இடைவெளி நிரப்பும் குறுகிய நோக்கங்களை நிறைவேற்ற, முளைவிடும் சக்திகளை யிட்டு மக்கள் விழிப்பாக இருத்தல் வேண்டும்.

தமிழ் மக்களின் மாற்றுத்தலைமையாக தம்மை உருவகித்துக் கொள்ளும் சகல அணிகளும், தனிநபர்களும் விடுதலைப் புலிகளை ஒருவகையான பயங்கரவாத இயக்கமென்கிற வட்டத்தினுள்ளேயே அடக்க முயற்சிக்கின்றன. புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டால் தமது பங்கானது அரசியல் தளத்தினுள் கரைந்து போகுமென்கின்ற அச்சமும் மக்களாதரவற்ற நிலையில் படைபலமும் இல்லாமல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் இல்லாமல் தலைமைத்துவத்தை உருவாக்கும் சிக்கலும் இவர்கள் மத்தியில் உண்டு.

இவை ஏதுமற்றவர்களையே தமிழர் தலைமையõக இலங்கையும் சர்வதேச சமூகமும் வெளிக்காட்ட விரும்புகிறது.

ஆயினும் வட்டுக்கோட்டையில் எடுக்கப்பட்ட தனியரசுத் தீர்மானமும் அதற்கு தமிழ் மக்கள் வழங்கிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் கடந்த தேர்தலில் விடுதலைப் புலிகளே ஏக தலைமையென ஏற்றுக்கொண்ட தமிழ்க் கூட்டமைப்பிற்கு வழங்கிய அமோக ஆதரவும் பல விடயங்களை சர்வதேசத்திற்கு வெளிச்சமாக்கியுள்ளது.

தமிழ் மக்கள் ஏகமனதாக அங்கீகரிக்கும் தலைமையினை பயங்கரவாதிகளாகச் சித்தரிப்போரை மக்கள் ஜனநாயகக் கோட்பாட்டினை மறுதலிப்பவர்களாகவே கருத இடமுண்டு.

அதேவேளை விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட முறைமையினை நிராகரிக்கும் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட் அவர்கள் தமிழ் மக்களின் ஈழத் தனியரசிற்கான அரசியல் அபிலாசையினை சட்டபூர்வமானதாக ஏற்று பிரித்தானிய ஜனநாயகத்தின் சில நல்ல அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

வட அயர்லாந்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டதாகப் பெருமிதம் கொள்ளும் டொமினிக் சில்கொட் போராடிய கத்தோலிக்க ஜரிஸ் மக்கள்மீது விமானத் தாக்குதல்களையும் பொருளாதாரத் தடைகளையும் பிரயோகித்திருந்தால் புலிகளின் போராட்ட வழிமுறையின் நியாயப்பாட்டினை உணர்ந்திருப்பர்.

கொசோவாப் பிரச்சினையில் சகல பேச்சுவார்த்தைகளும் தோல்வியுற்றதாக அறிவித்திருக்கும் ஐரோப்பிய சங்கம் இலங்கையில் மட்டும் மாற்றுத் தமிழர் தலைமையினை தேடியலையும் தாற்பரியம் ஏனென்று புரியவில்லை.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் உருவான வல்லரசுகளின் பனிப்போர் காலத்து மிச்ச சொச்சங்கள் கொசோவாவில் இன்னமும் நீண்டு செல்கிறது.

கொசோவாவில் இருமுகாம்களின் மோதலும் இலங்கையில் மூன்று முகாம்களின் காய்நகர்த்தல்களும் வேறுபட்ட பிராந்திய நலன் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.

கொசோவாப் பிரிவினைக்கு எதிராக சேர்பியாவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள ரஷ்யா போன்று ஈழப்பிரிவினையை நிராகரித்தவாறு இலங்கையுடன் கை கோர்த்துள்ளது இந்திய அரசு. இலங்கையைப் பொறுத்தவரை மேற்குலகச் சிந்தனையில் சீனாவை மையப்படுத்தியநகர்வுகள் அதிகம் மேலோங்கியுள்ளன.

ஆகவே, இரு முகாம்கள் என்கிற பொதுத்தளம் இலங்கையில் தோற்றமுறும் பொழுதே கொசோவாப் பார்வைகளும், கிழக்குத் தீமோர் கொள்கைகளும் உருவாகலாம்.

அதுவரை "பயாப்ரா (Biafra)] சித்தாந்தமே இலங்கையில் பிரயோகிக்கப்படும்

இதயச்சந்திரன்

0 Comments: