Saturday, December 22, 2007

புலி விமானங்களுக்குப் பயந்து கூட்டு விமானப்படை ஒத்திகை?

விடுதலைப் புலிகளின் விமானப் படையினால் ஏற்பட்டுள்ள வான் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் இலங்கையுடன் சேர்ந்து பல்வேறு கூட்டு விமானப்படை ஒத்திகையை மேற்கொள்ள இந்தியா தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜயசிங் இவ்வார முற்பகுதியில் கொழும்பில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்த சமயம் விடுத்த அழைப்பை அடுத்தே இந்தக் கூட்டு விமானப்படை ஒத்திகைக்கு இணக்கம் காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சினதும் உள்துறை அமைச்சினதும் செயலாளர்கள் உள்ளிட்ட எட்டு உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று இலங்கைக்கு வந்து தங்கி நின்றது. அக்குழு இலங்கையில் பல்வேறு தரப்பினருடனும் உயர்மட்டத்தில் பேச்சுகளை நடத்தியிருக்கின்றது.
அத்தகைய பேச்சுகளுக்கு நடுவேயே இத்தகைய கூட்டு விமானப்படை ஒத்திகை குறித்தும் பேசப்படுகின்றது எனத் தெரியவருகின்றது.

இந்தக் கூட்டு விமானப்படை ஒத்திகைக்கான முன்யோசனை இந்தியத் தரப்பினால் பிரேரிக்கப்பட்டதாகவும்
கொள்கையளவில்இந்த யோசனைக்கு ஒப்புதல் தெரிவித்த இலங்கை அதிகாரிகள் எது எப்படியிருந்தாலும் இலங்கையின் உயர் பாதுகாப்புக் கவுன்ஸிலின் கூட்டத்தில் இந்த விடயத்தை விரிவாக ஆராய்ந்து, அங்கு ஒரு முடிவு எட்டப்பட்ட பின்னரே இவ்விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கமுடியும் எனத் தெரிவித்தனர் எனவும் செய்திகள் கூறுகின்றன.
ஆக, கூட்டு விமானப்படை ஒத்திகைக்கான யோசனை இந்தியத் தரப்பிடமிருந்து வந்துள்ளது. சாதகமாக அதைப் பரிசீலிக்க இலங்கை கோடிகாட்டியிருக்கிறது. இவ்வளவுதான் விடயம்.
புலிகளின் விமானப்பலத்தை முறியடிப்பதற்காகத்தான் இந்தக் கூட்டு விமானப்படை ஒத்திகை முயற்சி என்ற சாரப்பட இதற்குக் கொழும்பு ஊடகங்கள் சாயம் பூசுவதைப் பார்க்கும்போது மிக வேடிக்கையாக இருக்கின்றது.

புலிகளின் விமானப்படை வலிமை குறித்து இந்தியா கவலையும், சிரத்தையும், அச்சமும் கொண்டிருப்பது போலவும், அதன் காரணமாக முற்கூட்டயே பாதுகாப்புக்காக இலங்கையுடன் கூட்டு ஒத்திகை நடத்தித் திட்டங்களையும் வியூகங்களையும் வகுக்க இந்தியா துடிப்பது, போலவும் இந்தியாவின் இத்திட்டம் குறித்து பரிசீலித்துத்தான் இலங்கை முடிவு கூறும் என்பது போலவும் இந்தச் செய்திகள் வெளியிடும் கதைப் போக்கு அமைந்திருக்கின்றது.
அதுவல்ல உண்மை விவகாரம்.

புலிகளின் விமானங்களால் எழுந்துள்ள அச்சுறுத்தல்களை அடுத்துத் தனது வான் வலிமையை அதிகரிக்கத் துடியாய்த் துடிக்கும் இலங்கை அதற்காக "மிக் 29' ரக குண்டுவீச்சு விமானங்களைத் தருவிக்கக் கங்கணம் கட்டி நிற்கிறது. அந்த விமானங்களை பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடமிருந்து குறைந்த பட்சம் குத்தகைக்குப் பெறவும் முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது நமக்குத் தெரிந்த பரகசியம்தான்.

இந்தியாவிடம் இருக்கும் ஆக வேகம் கூடிய தாக்குதல் குண்டுவீச்சு விமானங்கள் கூட ஏறத்தாழ இத்தகைய ரகத்தை ஒத்தவைதான்.

எனவே, புலிகளின் விமானப்படை அச்சுறுத்தல் என்ற பூச்சாண்டியைக் காட்டி இத்தகைய அதிவேகத் தாக்குதல் விமானங்களை சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் குத்தகைக்குப் பெற்று, அந்த நாட்டு விமானிகளுடன் கொண்டுவந்து, இந்தியாவின் தென்மூலையில் பலாலிப் படைத்தளத்தில் இலங்கை நிறுத்துமானால் இந்தியாவின் கதி என்னவாகும்?

இந்தியாவின் வட மேற்கிலும், வட கிழக்கிலும் இருக்கும் அயல் தேச முரண்சக்திகளைத் தெற்கிலும் அதுவும் இந்தியக் கடலோரத்தில் இருந்து சுமார் இருபது மைல் தொலைவுக்குள் இந்தியாவின் கொல்லைக்குள் கொண்டுவந்து நிறுத்த அனுமதித்தால் அதன் விளைவு எவ்வாறானதாக இருக்கும்?

எனவே இத்தகைய அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தவிர்க்கும் முற்கூட்டிய முன்னெச்சரிக்கையான நடவடிக்கையாகவே இலங்கை விமானப்படையுடன், இந்திய விமானப்படை கூட்டு ஒத்திகை என்ற கயிறைவிட முனைகிறது இந்தியா. அதற்குப் புலிகளின் விமானப்படையால் எழுந்துள்ள அச்சுறுத்தல் என்ற பூச்சாண்டியைக் காரணம் காட்டுவது மிக வேடிக்கையானது.
"மிக் 29' போன்ற அதிவேகத் தாக்குதல் விமானங்கள் கண்மூடி, கண் திறப்பதற்குள் பல டசின் மைல்கள் தாண்டி குண்டுவீச்சை நடத்திவிட்டுத் திரும்பக்கூடியவை.

அத்தகைய விமானங்கள் தனது தென்கோடி மூலையில் இருப்பது தனக்கும் அச்சுறுத்தல் எனக் கருதும் இந்தியா, அத்தகைய விமானங்களை பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் பங்களிப்புடன் இலங்கை பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கச் செய்வதற்காக தடுப்பதற்காக தன்னுடைய தலையை இதற்குள் நீட்டப் பார்க்கின்றது. அத்தகைய எத்தனத்தின் ஓர் அங்கமே இத்தகைய கூட்டு விமானபப்படைப்பயிற்சி நடவடிக்கை யோசனையுமாகும்.

"புலிகளின் விமானப்படை அச்சுறுத்தல்' என்ற காரணம் அதற்கான பாசாங்கு. அவ்வளவுதான்.

2007-12-22
Uthayan.com

0 Comments: