Saturday, December 15, 2007

"சோமாலிலாந்த்" - புதிய நாட்டுக்கு அமெரிக்கா அங்கீகாரம்?

சோமாலிய நாட்டின் ஒருபகுதியில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் "சோமாலிலாந்த்" என்ற பெயரில் புதிய சுதந்திர நாடாக ஒருதலைபட்சமாக பிரகடனம் செய்யப்பட்டதை விரைவில் அமெரிக்கா அங்கீகரிக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சோமாலிலாந்து குறித்த தனது நிலைப்பாட்டை அமெரிக்க அரசாங்கம் கடந்த டிசம்பர் 5 ஆம் நாள் வெளியிட்டிருந்தது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

- தேர்தல்களை நடத்துவது போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள சோமாலிலாந்துக்கு அமெரிக்க அரசாங்கம் தற்போது உதவுகிறது.

- சோமாலிலாந்துக்கான அங்கீகாரத்தைப் பொறுத்த வரையில் ஆப்பிரிக்க ஒன்றியம்தான் முதலில் தீர்மானிக்க வேண்டும்.

- சோமாலிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக அனைத்துலக குடியரசு நிறுவனத்தினூடே 1 மில்லியன் டொலரை அமெரிக்க அரசாங்கம் வழங்கியது. மேலதிகமாக சோமாலிலாந்தில் ஜனநாயக நடைமுறைகளை மேற்கொள்வதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும்.

- சோமாலிலாந்தில் நிலைத்தன்மையும் இழந்து போன அமைதி மீள உருவாக்கவும் அமெரிக்கா தொடர்ந்தும் உதவி செய்யும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.




அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டுக்கு சோமாலிலாந்து வெளிவிவகார அமைச்சு நன்றி தெரிவித்து டிசம்பர் 8 ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவின் புஸ் நிர்வாகத்தில் சோமாலிலாந்தை அங்கீகரிப்பது தொடர்பான விவாதங்கள் தற்போது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

"வோசிங்ரன் போஸ்ட்" நாளிதழுக்கு அண்மையில் கருத்து தெரிவித்திருந்த பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர், சோமாலிலாந்து சுதந்திர நாடாக இயங்கும் என்று பெண்ரகன் நம்புவதாக கூறியிருந்தார்.

அதேபோல் அமெரிக்கா அரசாங்கத்தின் மத்திய நிலை அதிகாரிகள் பலரும் சோமாலிலாந்துக்குச் சென்று அங்கீகரிக்கப்படாத நடைமுறை அரசாங்கத்தின் தலைவர்களுடன் பல சுற்றுப்பேச்சுகளை நடத்தியிருப்பதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சோமாலியா அரசாங்கத்தை இதுநாள் வரை அமெரிக்கா ஆதரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா, எத்தியோப்பியா, பெல்ஜியம், கானா, தென் ஆப்பிரிக்கா, சுவீடன் ஆகிய நாடுகளுடன் அரசியல் தொடர்புகளை சோமாலிலாந்த் ஏற்படுத்தியுள்ளது.

2007 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள், ஐரோப்பிய ஒன்றியமானது வெளியுறவுகளுக்காக ஒரு குழுவை சோமாலிலாந்த்துக்கு அனுப்பி வைத்தது.

2007 ஆம் ஆண்டு ஜனவரி 29, 30 ஆகிய நாட்களில் ஆப்பிரிக்க ஒன்றியமானது அமைச்சர்கள் குழுவை அனுப்பியது.

2007 ஆம் ஆண்டு யூன் மாதம் எத்தியோப்பிய பிரதமர், சோமாலிலாந்த்தின் அரச தலைவர் ககினுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது எத்தியோப்பிய அரசாங்கம் வெளியிட்ட அதிகாரபூர்வ செய்திக்குறிப்பில் "சோமாலிலாந்த்தின் அரச தலைவர்" என்று தெரிவித்தது. இறைமையுள்ள ஒரு அரசாங்கமாக மற்றொரு இறைமையுள்ள அரசால் முதல் முறையாக சோமாலிலாந்த் அங்கீகரிக்கப்பட்டது. ஆப்பிரிக்க ஒன்றியமானது சோமாலிலாந்த்தின் ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனத்தை அங்கீகரிக்காத நிலையில் எத்தியோப்பியா அங்கீகரிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

2007 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள், உகாண்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு சோமாலிலாந்த்தும் அழைக்கப்பட்டிருந்தது.

2007 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான மூன்று அமைப்புக்கள், சோமாலிலாந்த்தை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில் சோமாலிலாந்த்தின் அங்கீகாரம் தொடர்பாக அமெரிக்காவும் தற்போது தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சோமாலிலாந்து - ஒரு பார்வை

அரபிக் கடலிலிருந்து சில நூறு கிலோ மீற்றருக்கு அப்பால் ஆப்பிரிக்காவின் முனைப்பகுதியாக சோமாலியாப் பிரதேசம் உள்ளது. மொத்தம் 3.5 மில்லியன் பேர் அங்கு வாழ்கின்றனர்.

சோமாலியச் சமூக அமைப்பானது நமது மொழியில் கூறுவதனால் பல "பரம்பரை" அல்லது "குழுக்கள்" அடங்கிய ஒரு சமூக அமைப்பாக உள்ளனர்.

ஒவ்வொரு இனக் குழுவிலும் 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரையில் உள்ளனர்.

1546 ஆம் ஆண்டு செங்கடலின் முக்கியத்துவம் கருதி சோமாலிலாந்த் பகுதியை ஒட்டாமான் பேரரசர் ஆக்கிரமித்தார்.

1874 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 7 ஆம் நாள், எகிப்து, சோமாலிலாந்த்தை ஆக்கிரமித்தது.

1882 ஆம் ஆண்டு எகிப்து ஆக்கிரமித்திருந்த சோமாலிலாந்த் பகுதியை பிரித்தானியா ஆக்கிரமித்தது.

1940 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இரண்டாம் உலகப் போரின் போது கிழக்கு ஆப்பிரிக்க இத்தாலிய நிறுவனமானது, பிரித்தானிய சோமாலிலாந்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தது.

1941 ஆம் ஆண்டு இத்தாலியிடமிருந்து சோமாலிலாந்தின் சில பகுதிகளை பிரித்தானியா மீளவும் கைப்பற்றியது.

1960 ஆம் ஆண்டு யூன் 26 ஆம் நாள் பிரித்தானிய நிர்வாக சோமாலிலாந்த் விடுதலை பெற்றது.

1960 ஆம் ஆண்டு யூன் 30 ஆம் நாள் இத்தாலிய நிர்வாக சோமாலிலாந்த் விடுதலை பெற்றது.

1960 ஆம் ஆண்டு யூலை 1 ஆம் நாள் பிரித்தானிய, இத்தாலிய நிர்வாக சோமாலிலாந்த் இணைக்கப்பட்டு சோமாலி குடியரசு உருவாக்கப்பட்டது. சோமாலிலாந்தின் முதலாவது அரச தலைவரான முகமட் ஹாஜி இப்ராகிம் ஈகலே புதிய சோமாலிய குடியரசின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

1969ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம் நாள், இராணுவப் புரட்சி மூலம் சையத் பார்ரே புதிய சோமாலியக் குடியரசின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். சையத் பார்ரே ஆட்சியின் கீழ் இசாக் மற்றும் ம்ஜீர்ட்டீன் பரம்பரைக் குழுவினர் பாதிக்கப்பட்டனர்.

1971 ஆம் ஆண்டு அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கைகளினால் அவர் சிறைப்படுத்தப்பட்டார்.

1975 ஆம் ஆண்டு வடசோமாலி அரசியலில் தீவிரமாக செயற்பட்டு வந்த அகமட் மொகமட் சுலையட், சவூதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றார்.

1981 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இசாக் குழுவினர் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் சோமாலி தேசிய இயக்கத்தைத் தொடங்கினர்.

1981 ஆம் ஆண்டு இறுதியில் லண்டனில் அந்த இயக்கம் அறிவிக்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு சோமாலிய தேசிய இயக்கப் போராளிகள் தங்களது தலைவராக அகமட் மொகமட் சுலையட்டை தெரிவு செய்தனர்.

1982 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் நாள், சோமாலிய அரசாங்கத்துக்கு எதிரான தமது முதலாவது இராணுவ நடவடிக்கையை சோமாலிய தேசிய இயக்கம் தொடங்கியது. சோமாலியாவின் வடபகுதியில் அரசியல் கைதிகளை விடுவித்தனர்.

1982 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் எஸ்.எஸ்.டி.எஃப் எனும் மற்றொரு இயக்கத்தினருடன் இணைந்து கூட்டு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஹலக்ன் (சோமாலிய மொழியில் போராட்டம்) எனும் வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. அரசியல் ரீதியாக இரு குழுக்களும் இணைந்தபோதும் இரு குழுக்களுக்கும் இடையே இணக்கமான ஒப்பந்தம் கைச்சாத்தாகவில்லை

1983 ஆம் ஆண்டு வடபகுதி சோமாலியாவுக்குச் சென்ற சையத் பர்ரே, அரசு எதிர்ப்பு நடவடிக்கைக்காக சிறையிலடைக்கப்பட்டோரை விடுவிப்பதாக அறிவித்தார். அவசரகாலச் சட்டத்தை நீக்கினார். வெளிநாடு சென்ற சோமாலியர்களுக்கு மன்னிப்பு அளிப்பதாக அறிவித்தார்.

1985 ஆம் ஆண்டு அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக 28 பேரை சோமாலிய அரசாங்கம் தூக்கிலிட்டது.

1985 ஜூன் மற்றும் 1986 ஆம் ஆண்டு பெப்ரவரியில் வடபகுதி சோமாலியாவில் அரசாங்கப் படைகளுக்கு எதிராக 30 இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள், எத்தியோப்பிய அரசாங்கமும் சோமாலிய அரசாங்கமும் இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டன. இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து எத்தியோப்பிய இராணுவத்திடமிருந்து சோமாலிய தேசிய இயக்கம் பெற்று வந்த உதவிகள் நின்றுபோயின.

1988 ஆம் ஆண்டு மே மாதத்தின் இறுதியில் எத்தியோப்பியாவில் அமைக்கப்பட்டிருந்த தங்கள் முகாம்களை கைவிட்டுவிட்டு வடபகுதி சோமாலியாவில் வலிந்த தாக்குதல்களை சோமாலிய தேசிய இயக்கம் மேற்கொண்டது. மாகாணங்களின் தலைநகர்களான புரோ மற்றும் ஹர்கெய்ச ஆகியவற்றை போராளிகள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து மக்கள் ஆதரவு சோமாலிய தேசிய இயக்கத்துக்கு பெருமளவு கிடைத்தது. பெரும் எண்ணிக்கையில் மக்கள் போராளிகளாக இணைந்தனர். எத்தியோப்பிய இராணுவ உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையில் சோமாலிய அரசாங்கப் படைகளுடனான மோதலின் போதே பெருந்தொகையான ஆயுதங்களை சோமாலிய தேசிய இயக்கம் கைப்பற்றியது. சோமாலியாவுக்கு சோவியத் கொடுத்திருந்த பெருந்தொகையான ஆயுதங்கள், கனரக இராணுவத் தளபாடங்கள் போராளிகள் வசமாகின. வடமேற்கு கடற்பிரதேசத்தை போராளிகள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

1989 ஆம் ஆண்டு சோமாலியாவில் அரசியல் நிலைத்தன்மை சீர்குலைந்தது. யு.எஸ்.சி, எஸ்.பி.எம். ஆகிய குழுக்கள், அரச தலைவர் சய்யத் பர்ரேவுக்கு எதிராக உருவாகின.

1989 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள், சோமாலிய தேசிய இயக்கமும் புதிய இயக்கமா எஸ்.பி.எம். என்ற குழுவும் ஒருங்கிணைந்து செயற்பட தீர்மானித்தன.

1990 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 12 ஆம் நாள், யு.எஸ்.சி. அமைப்புடனும் இதே போல் ஒருங்கிணைந்து செயற்பட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

1990 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் நாள், சோமாலிய அரச படைகளுக்கு எதிராக இந்த இரண்டு புதிய அமைப்புக்களுடன் இணைந்து போராடும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் யு.எஸ்.சி. அமைப்பின் உட்குழு மோதலால் அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை.

1991 ஆம் ஆண்டின் தொடக்க காலத்தில் வடபகுதியின் பெரும்பகுதியை போராளிகள் கைப்பற்றினர். இதரப் பகுதிகளில் இரண்டு குழுக்களும் குறிப்பிடும்படியான பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்தன.

1991 ஆம் ஆண்டு யு.எஸ்.சி அமைப்பானது சோமாலியாவின் தலைநகர் மொகடிசுவில் உள்ள அரச தலைவரின் மாளிகையை முற்றுகையிட்டு தலைநகரை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

1991 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் சோமாலியாவில் யு.எஸ்.சி. இடைக்கால அரசாங்கத்தை அமைத்தது. அதனை சோமாலிய தேசிய இயக்கம் அங்கீகரிக்க மறுத்தது.

1991 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள், வடபகுதி சோமாலியாவானது "சோமாலிலாந்த்" என்ற தனிநாடாக ஒரு தலைபட்சமாக சோமாலிய தேசிய இயக்கத்தினால் ஒருதலைபட்சமாக சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்நாட்டில் மத்திய வங்கி, காவல்துறை, நீதித்துறை, முப்படைகளும் ஒழுங்கமைக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாத நடைமுறை அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

25-க்கும் மேற்பட்ட அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை, அரச தலைவர், பிரதி அரச தலைவர் ஆகியோரைக் கொண்டதாக அந்த அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 3.5 மில்லியன். 68 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது.

அதன் தலைநகராக ஹர்கெய்சா உள்ளது. பிரதான நகரங்களாக புரவ், பொரம, பெர்பெர, எரிகபொ மற்றும் லாஸ் அனொட் ஆகியன உள்ளன.

தமது நாட்டின் கால்நடைகளை ஏற்றுமதி செய்தல், விவசாய உற்பத்தி ஆகியவற்றின் மூலம் சோமாலிலாந்த் வருவாய் ஈட்டி வருகிறது. மேலும் சோமாலிலாந்த் பிரதேசத்தில் பெருமளவிலான எண்ணெய்ப்படுக்கைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

சோமாலிலாந்த் தவிர்த்த இதர சோமாலிய பகுதியில் 1991 ஆம் ஆண்டின் இறுதியில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற ஐக்கிய சோமாலி முன்னணி (லைசி இனக்குழு), சோமாலிய ஜனநாயக கூட்டமைப்பு (கடபர்சி குழு), ஐக்கிய சோமாலி கட்சி (டல்பகண்டெ), சோமாலி ஜனநாயக இயக்கம் என பல்வேறு இயக்கங்கள் உருவாகின. ஒரு தேசியக் கட்டமைப்பு நொறுங்கியது. இனக்குழு அடிப்படையிலான கெரில்லா இயக்கங்கள் உருவாகின. அனைத்துலகம் தலையிட்டு பல்வேறு அமைதி முயற்சிகள் இன்னமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

15.12.2007,சி.கனகரத்தினம்

0 Comments: