Saturday, December 22, 2007

விடுதலைப் புலிகளால் யாழ் குடாவை மீட்க முடியுமா?

கடந்த 18.12.2007 அன்று விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகி இருந்து. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் செல்வி அந்த அறிக்கையை தயாரித்திருந்தார். சர்வதேச சமூகத்தைக் குறிவைத்து வரையப்பட்டிருந்த அந்த அறிக்கையில், யாழ் குடாவில் தமிழ் மக்களை சிங்கள அரசாங்கம் அடைத்து கொடுமைப்படுத்தி வருவது பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள 5 லட்சம் மக்களை உலகத்தின் பிற்பகுதிகளோடு இணைக்கக் கூடிய ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் மூடிவைத்துள்ளதானது, அனைத்துலகச் சட்டங்களை மீறும் ஒரு செயல் என்று அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

யாழ் குடாவில் உள்ள மக்களின் மோசமான மனிதாபிமான நிலமை பற்றி விபரித்துள்ள அந்த அறிக்கையில், தற்போது யாழ். பொதுமக்கள் தங்களது அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கென எதுவித தரைவழிப்பாதையும் கிடையாது. சிறிலங்கா கடற்படையால் இயக்கப்படும் "பயணிகள்" கப்பல் என்பதுதான் ஒரே வழியாக உள்ளது. யாழ்ப்பாணத்துக்கும் திருகோணமலைக்கும் இடையே இந்தப் பயணிகள் கப்பல் ஒவ்வொரு முறையும் செல்லும்போது பொதுமக்களை விட சிறிலங்கா இராணுவத்தினரே பெருமளவில் அதில் பயணம் மேற்கொள்கின்றனர் என்றெல்லாம் சுட்டிக்காண்பிக்கப்பட்டிருந்தது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை எப்படி சர்வதேச சட்டங்களை மீறும்படியாக அமைந்திருக்கின்றது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காண்பிக்கப்பட்டிருந்தது.

’’ஜெனீவா 4 ஆம் மாநாட்டு சரத்துக்களை மீறி சிறிலங்கா அரசாங்கம் ஏ-9 பாதையை மூடியதன் மூலம், 5 லட்சம் பொதுமக்கள் இந்த உலகத்தின் தொடர்புகளிலிருந்து துண்டித்துள்ளனர்.’

’ஐ.நா. பாதுகாப்பு சபையின் 1612 ஆம் சரத்தின் கீழ் சிறார்களுக்கான மனிதாபிமான தேவைகள் மறுக்கப்பட்டுள்ளன.’ ’குறிப்பாக இராணுவத்தினரின் நகர்வுக்காக பொதுமக்களை பயன்படுத்துவது என்பது ஜெனீவா நான்காம் மாநாட்டுச் சரத்தை மீறுவதாகும்’ என்றும் விடுதலைப் புலிகள் வெளியிட்டிருந்த அந்த விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரகசிய எச்சரிக்கை:

இந்த அறிக்கை விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில், சிறிலங்காவின் போரியல் வல்லுனர்கள் ஒரு இரகசிய எச்சரிக்கையை சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுத்திருந்தார்கள்.

யாழ் குடா மீது விடுதலைப் புலிகள் மேற்கொள்ள இருக்கும் ஒரு விடுவிப்புத் தாக்குதலுக்கான முன்னெச்சரிக்கையாகவே புலிகளின் இந்த அறிக்கை அமைந்துள்ளதாக, போரியல் ஆய்வாளர்கள்

கருத்து வெளியிட்டிருந்தார்கள். விடுதலைப் புலிகள் தாம் மேற்கொள்ள இருக்கும் தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் இது போன்ற அறிக்கைகளை முன்னதாகவே விடுப்பது வழக்கம். அரசாங்கம் புலிகளின் இந்த அறிக்கையை ஒரு முன்னெச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

யாழ்குடாவில் சிறிலங்கா படைகளின் கொடுமைகளில் இருந்து தமது உறவுகளை மீட்பதாக நியாயப்படுத்திக்கொண்டு யாழ் குடா மீது மீட்பு நடவடிக்கை ஒன்றை புலிகள் மேற்கொள்ளும் சாத்தியம் இருப்பதாகவும் படைத்துறை ஆய்வாளர்கள் சுட்டிக் காண்பித்துள்ளார்கள். சர்வதேச சட்டதிட்டங்களை சுட்டிக் காண்பித்து, புலிகள் குறிப்பிட்டது இதனால்தான். தனது மாவீரர் தின உரையில் புலிகளின் தலைவரும் இந்த விடயம் பற்றிப் பேசியிருந்தார். எனவே யாழ் குடா மீதான தாக்குதல் ஒன்றை விடுதலைப் புலிகள் வெகு சீக்கிரம் நடாத்தும் சாத்தியம் இருப்பதாக போரியல் வல்லுனர்கள் சிறிலங்கா அரசை எச்சரித்திருந்தார்கள். குறைந்த பட்சம் யாழ் குடாவில் இருந்து படையினரையும், பயணிகளையும் ஏற்றிக்கொண்டு வரும் கப்பலாவது, விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும், ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தார்கள்.

புலிகளால் முடியுமா?

இதனைத் தொடர்ந்து கொழும்பில் சிறிலங்கா பாதுகாப்பு உயரதிகாரிகள் மத்தியில் ஒரு அவசரக் கூட்டம் நடைபெற்றது. யாழ் குடா மீது தாக்குதல் நடாத்தி புலிகளால் வெற்றி பெற முடியுமா என்று அந்த மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டது. பல வாதிப் பிரதிவாதங்கள் அந்தக் கூட்டத்தில் இடம்பெற்றன.

ஒரு முக்கியமான விடயம் அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, தற்போதுள்ள சூழ்நிலையில், விடுதலைப் புலிகளால் யாழ் குடா மீது பாரிய படையெடுப்பை மேற்கொள்ள முடியாது என்று அந்தக் கூட்டத்தில் சிறிலங்கா படைத்துறைத் தளபதி சரத் பொன்சேகாவினால் அடித்துக் கூறப்பட்டது.

யாழ் குடா மீது தாக்குதல் நடாத்தும் அளவிற்கு புலிகளிடம் பலம் கிடையாது என்று அவர் தனது வாதத்தை அங்கு முன் வைத்திருந்தார். யாழ் குடாவில் நிலை கொண்டுள்ள 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிறிலங்காப் படை வீரர்களைச் சமாளித்து யாழ் குடாவை வெற்றி கொள்ளும் அளவிற்கு புலிகளிடம் தற்பொழுது ஆட்பலமோ அல்லது ஆயுத பலமோ இல்லை என்றும் அவர் அடித்துக் கூறினார். விடுதலைப் புலிகளின் மனோ பலம் தற்பொழுது மிகவும் குறைந்தே காணப்படுகின்றது என்று சுட்டிக் காண்பித்த அவர், சிறிலங்காப் படையினர் தற்பொழுது புலிகளை ஒரு தற்காப்பு நிலைக்குள்ளேயே (Defensive Position) வைத்திருப்பதாகவும், இதனால் புலிகளால் ஒரு பாரிய முன்னேற்றத் தாக்குதலை (Offensive Attack) மேற்கொள்ள முடியாது என்றும் கூறியிருந்தார்.

இந்த விடயம் பற்றித் தான் இன்றைய இந்தப் பத்தியில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

-> யாழ் குடா மீது தாக்குதல் நடாத்தும் அளவிற்கு விடுதலைப் புலிகள் வசம் பலம் இருக்கின்றதா?

-> யாழ் குடாவில் நிலை கொண்டுள்ள சிறிலங்காப் படையினருடன் மோதும் அளவிற்கு புலிகளிடம் ஆட்பலம் இருக்கின்றதா? ஆயுத பலம் இருக்கின்றதா?

-> மன்னாரிலும், மணலாற்றிலும், வன்னியின் பல முனைகளிலும் புலிகள் தற்காப்புச் சமரையே நடாத்திக்கொண்டு இருக்கையில், யாழ் குடாவில் ஒரு பாரிய முன்னேற்றத் தாக்குதலை புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தான் இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்.

யாழ் குடா மீட்புத் தாக்குதல்.

மேலே எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கான நேரடிப் பதில் கிடைப்பது கஷ்டம். விடுதலைப் புலிகளின் ஆட்பலம் பற்றிய விபரமோ அல்லது அவர்களிடம் உள்ள ஆயுதங்களின் பட்டியலோ யாருக்குமே தெரியாது. புலிகளின் யுத்த தந்திரம் பற்றியும், அவர்களது போரியல் திட்டங்கள் பற்றியும் அவர்களது முக்கிய தளபதிகளுக்குக் கூட கடைசி நேரத்தில்தான் தெரியவரும். எனவே இவை பற்றி வெளியே யாருக்கும் தெரியச் சந்தர்ப்பம் இல்லை. ஆனால், விடுதலைப் புலிகளினுடைய கடந்த காலச் செயற்பாடுகள், அவர்கள் பற்றி வெளியாகிக்கொண்டிருக்கின்ற செய்திகள் என்பனவற்றில் இருந்து, யதார்த்த நிலையை ஓரளவு ஊகித்துக்கொள்ள முடியும்.

யாழ் குடா மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்தும் வல்லமையைப் பெற்றிருக்கிறார்களா என்று பார்பதற்கு, சுமார் ஒரு வருட காலத்திற்கு முந்திய ஒரு சம்பவத்தைப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். கடந்த 2006ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகள் ஒரு பாரிய சமரை சிறிலங்காப் படைகள் மீது தொடுத்திருந்தார்கள்.முதலில் 01.08.2007 அன்று விடுதலைப் புலிகளின் ஒரு அணி, கிழக்கின் மூதூர் பிரதேசம் மீது ஒரு தாக்குதலை மேற்கொண்டு அந்தப் பிராந்தியத்தையே தனது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தது. நூற்றுக்கணக்கான போராளிகள் சாரை சாரையாக விரைந்து, சிறிலங்கா படையினரின் அனைத்து பாதுகாப்பு நிலைகளையும் கைப்பற்றி இருந்தார்கள். கொல்லப்பட்ட சிறிலங்காப் படையினரது 40 இற்கும் அதிகமான உடலங்களை கைப்பற்றி ஒப்படைக்கும் அளவிற்கு இந்த தாக்குதல் புலிகளுக்கு வெற்றிகரமாக அமைந்திருந்தது.

அதேவேளை, மூதூர் தாக்குதலுக்குச் சமாந்திரமாக, 11.08.2006 அன்று யாழ் குடாவிலும்; புலிகள் ஒரு பாரிய தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள். விடுதலைப் புலிகளின் ஒரு அணி முகமாலை முன்னரங்க நிலைகளை அழித்தொழித்துக்கொண்டு முன்னேறியது. இதற்குச் சமாந்திரமாக, விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி (Marines) அல்லைப்பிட்டி, மற்றும் மண்டைதீவு போன்ற பிரதேசங்களில் இருந்த சிறிலங்கா படையினரின் ஆட்டிலறித் தளங்களைக் கைப்பற்றி, யாழ் குடா மீதான ஒரு முற்றுகைச் சமரை மேற்கொண்டிருந்தது.

யாழ் குடாவிற்கான சிறிலங்காப் படைகளின் கட்டளைத் தலமையகமான பலாலி தளம் மீது 11.08.2006 அன்று விடுதலைப் புலிகளின் விமானம் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தது. அன்றிலிருந்து, விடுதலைப் புலிகள் பலாலித் தளம் மீது தொடர்சியாக ஆட்டிலறித் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.

இவை இடம்பெற்றுக்கொண்டிருந்த அதே நேரம், திருகோணமலையின் பிரிகேட் தலைமையகம் மீதும், திருகோணமலைத் துறைமுகம் மீது புலிகள் தொடர்ச்சியாக ஆட்டிலறித் தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். வடபகுதிக்கான கடல் பிராந்தியம் கடற்புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது. கடற்புலிகளின் படகுகள் வட கடலை முற்றாகவே ஆக்கிரமித்திருந்தன.

உண்மையிலேயே ஒரு அருமையான முற்றுகைச் சமரை அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் ஆரம்பித்திருந்தார்கள். யாழ்குடாவின் பிரதான வாயில் வழியாக புலிகளின் ஒரு பாரிய படையெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையில், யாழ் குடாவின் தென்மேற்கில் உள்ள தீவுப் பகுதிகள் ஊடாக புலிகளின் மற்றொரு அணி நகர்வினை மேற்கொண்டு இருக்கையில், யாழ் குடாவின் உள்ளேயும் பல முனைகளில் புலிகளின் அணிகள் பரவலாக சிறிலங்காப் படையினர் மீது தாக்குதலைத் தொடங்கியிருந்தன. யாழ் குடாவிற்கான வழங்கல்கள் புலிகளால் முற்றாகவே தடுக்கப்பட்டிருந்தன. பலாலி, காங்கேசன்துறை மீதான புலிகளின் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள், மற்றும் வட கடல் பிரந்தியம் மீதான கடல் புலிகளின் ஆதிக்கம் என்பனவற்றின் மூலம் யாழ் குடாவை புலிகள் ஒரு முழுமையான முற்றுகைக்குள் கொண்டு வந்திருந்தார்கள். யாழ் குடாவினுள் முற்றுகைக்குள்ளாகியிருந்த சிறிலங்காப் படையினருக்கு உதவிகளும் கிடைக்காதபடி, திருகோமலைத் துறைமுகமும் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில், கிழக்கே மட்டக்களப்பையும் மீட்கும்படியான தயார் நிலையில் விடுதலைப் புலிகளின் அணிகள் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால், சர்வதேச அழுத்தம் உட்பட, பல்வேறு காரணங்களினால் விடுதலைப் புலிகள் தமது யாழ்குடா முற்றுகையைக் கைவிட்டு, தமது பழைய நிலைகளுக்குத் திரும்பியிருந்தார்கள்.

புலிகளின் அணிகள் எங்கே?

இந்த இடத்தில் சில உண்மைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

4 வருட சமாதானம் முடிந்து, யுத்தம் என்ற நிலை வந்த பொழுது, யாழ் குடாவையும், திருகோணமலைலையும், மட்டக்களப்பையும் ஒரே நேரத்தில் மீட்கும் பலத்துடன் விடுதலைப் புலிகள் இருந்திருக்கின்றார்கள் என்கின்ற உண்மையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

திருகோணமலை மீதும், மட்டக்களப்பு மீதும் ஒரு மீட்புத் தாக்குதலை நடாத்தியபடி, யாழ் குடா மீது ஒரு பாரிய முற்றுகைத் தாக்குதலை நடாத்தும் அளவிற்கு அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் வசம் பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் இருந்திருக்கின்றார்கள் என்ற யதார்தத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அல்லைப்பிட்டி, மண்டைதீவு வழியாகவும், முகமாலை வழியாகவும் புலிகளின் அணிகள் நகர்ந்து பலாலிவரை செல்லும் வரைக்கும், பலாலித் தளம் மீதும், திருகோணமலைத் துறைமுகம் மீது தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்களை நடாத்திக்கொண்டே இருக்கும் அளவிற்கு, விடுதலைப் புலிகள் வசம் எறிகணைகள் கையிருப்பில் இருந்திருக்கின்றன என்கின்ற உண்மையையும் நாம் ஒப்பக்கொண்டுதான் ஆகவேண்டும்.

இவை அனைத்தையும்விட, ஆயிரக்கணக்கான சிறிலங்காப் படையினர் நிலைகொண்டுள்ள பிரதேசங்களை ஆக்கிரமித்து வெற்றிகொண்டு விடலாம் என்ற தற்துணிவு விடுதலைப் புலிகளின் தலைமைக்கும், அதன் தளபதிகளுக்கும், போராளிகளுக்கும் அந்த நேரத்தில் இருந்திருக்கின்றது என்கின்ற உண்மையை நாம் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.

சரி, இப்பொழுது நான் எழுப்புகின்ற கேள்விகள் இவைதான்?

1. சுமார் ஒரு வட காலத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளிடம் இருந்த அந்த தற்துணிவிற்கான காரணம் இப்பொழுது இல்லாமல் போயிருக்கின்றதா?.

2. யாழ் குடா மீது போர் தொடுக்கும் அளவிற்கு அப்பொழுது விடுதலைப் புலிகள் வசம் இருந்த வளங்களில் ஏதாவது தற்பொழுது குறைவடைந்துள்ளதா?

3. அந்த நேரத்தில் யாழ் குடா மீது தாக்குதலை நடாத்தவதற்கு களம் இறங்கியிருந்த புலிகளின் முக்கிய கட்டளைத் தளபதிகளில் யாரையாவது விடுதலைப் புலிகள் அமைப்பு இழந்திருக்கின்றதா?. பாலாலி மீது எறிகணைகள் வீசக்கூடிய தூரத்தில் இருந்து புலிகள் பின்வாங்கி இருக்கின்றார்களா?

4. அந்த நேரத்தில் வட கடலை ஆக்கிரமித்திருந்த கடற்புலிகளின் பலம் இழக்கப்பட்டிருக்கின்தறதா? பலாலி மீது குண்டு வீசிய வான் புலிகளின் விமானங்கள் ஏதாவது அழிக்கப்பட்டிருக்கின்றதா?

நிச்சயமாக இல்லை.

போராளிகளின் தொகை என்று பார்த்தால், அதில் வீழ்ச்சி ஏற்பட்டதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை என்றுதான் கூறவேண்டும். யாழ் குடாமீதான புலிகளின் அந்த சமரைத் தொடர்ந்து கிழக்கில் மாவில்ஆறு, வாகரை, குடும்பிமலை, காஞ்சுகுடிச்சாறு சண்டைகள் மற்றும் வடக்கில் முகமாலை, மன்னார், மடு தொடர் மோதல்கள் என்று இந்தக் காலப்பகுதியில் பல சண்டைகள் நடைபெற்றிருந்தும், விடுதலைப் புலிகள் தரப்பின் போராளிகளது இழப்பு என்பது சுமார் ஆயிரம் என்ற அளவில்தான் இருக்கின்றது. (கடந்த மாதம் 27ம் திகதி மாவீரர் தினத்தை ஒட்டி விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமணை வெளியிட்ட விபரக்கொத்தைப் பார்க்கும்போது இதனை அறிந்துகொள்ள முடிகின்றது.) ஆனால் இதே காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் சுமார் 25,000 போராளிகளைப் புதிதாகத் தமது அமைப்பில் இணைத்துக் கொண்டுள்ளதாக, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘வன்னியில் வீட்டுக்கொரு பிள்ளை நாட்டைக் காக்கத் தரவேண்டும்’ என்ற புலிகளின் கோரிக்கையின் அடிப்படையில், ஏராளமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை புலிகள் அமைப்பில் தாமாகவே முன்வந்து இணைந்திருக்கின்றார்கள். சில காலத்திற்கு முன்னர் வன்னிக்குச் சென்று வந்த சர்வதேச ஊடக அமைப்பான ‘ரொயிட்டர்ஸ்’ செய்தி நிறுவனம், வன்னியில் புலிகளால் கட்டியெழுப்பப்பட்டு வருகின்ற பலம் பற்றி பல செய்திகளை ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது யாவரும் அறிந்ததே.

இதனை விட, 2006 ஓகஸ்டில் மூதூர் மீது தாக்குதல் நடாத்தி வெற்றிகொண்ட போராளிகள் அனைவருமே தற்பொழுது வன்னியில்தான் நிலை கொண்டிருக்கின்றார்கள். மூதூர் தாக்குதல் காலகட்டத்தில், சமாந்திரமாக மட்டக்களப்பிலும் தாக்குதலை நடாத்தும் நோக்கில் அங்கு நிலைகொண்டிருந்த தளபதி ஜெயம், தளபதி பாணு, தளபதி ரமேஷ், தளபதி கீர்த்தி உட்பட அவர்களது படை அணிகளும் தற்பொழுது வன்னியில்தான் நிலை கொண்டுள்ளன.

எனவே யாழ் குடா மீது ஒரு தாக்குதலை நடாத்தி வெற்றிகொண்டு விடலாம் என்ற தற்துணிவை விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுத்திய காலகட்டத்தை விட, இன்றைய நிலையில் பல மடங்கு அதிகமான போராளிகளுடன் விடுதலைப் புலிகளின் அணிகள் வன்னியில் நிலைகொண்டு இருக்கின்றது என்பதுதான் உண்மை.

தற்காப்புச் சமர்

இந்த இடத்தில் உங்களிடம் மற்றொரு கேள்வி எழலாம்.

வன்னியின் பல முனைகளில் சிறிலங்காப் படையினர் களங்களைத் திறந்துள்ளார்கள்.அங்கெல்லாம் புலிகள் தற்காப்புச் சமர்களை நடாத்தியாகவேண்டி நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். அப்படி இருக்க, புலிகளால் எப்படி ஒரு தாக்குதல் சமரை யாழ் குடா மீது மேற்கொள்ள முடியும் என்று சரத் பொன்சேகா கேட்டது போல் நீங்களும் கேட்கக் கூடும்.

ஜெயசிக்குறு காலத்தை ஞாகப்படுத்திப் பார்த்தால், இதற்கான பதில் கிடைத்துவிடும்.

ஜெயசிக்குறு காலகட்டத்தில், வன்னியில் பல கள முனைகளை சிறிலங்காப் படைகள் திறந்திருந்தன. சிறிலங்கா இராணுவம் புளியங்குளம் வரைக்கும் வந்து குந்திக்கொண்டிருந்தது. ஒட்டுசுட்டானில் வந்து நின்றுகொண்டு ‘முல்லைத்தீவுக்கா அல்லது புதுக்குடிருப்புக்கா செல்வது’ என்று சிறிலங்காப் படைகள் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தன. கனகராயன் குளத்தை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தன. கிளிநொச்சியில் பலமான தளம் அமைத்து நிலைகொண்டபடி, ‘மாங்குளத்தை எப்படிக் கைப்பற்றுவது’ என்று சிங்களப் படைகள் திட்டமிட்டுக்கொண்டிருந்தன. வன்னிக் கடற்பரப்பால் ஒரு தரையிறக்கத்தை மேற்கொண்டு புலிகளின் தலைமையைக் குறிவைக்கவும் திட்டமிட்டிருந்தன. வானில் இருந்து குண்டுகளைக் கொட்டியும், வன்னியின் பல முனைகளிலும் வான் தரையிறக்கத்தைச் செய்யும் முனைப்புக்களிலும் சிறிலங்காப் படைகள் ஈடுபட்டிருந்தன. இப்படி சிங்களப் படைகளால் விரிக்கப்பட்டிருந்த களமுனைகள் அனைத்திலுமே புலிகளின் அணிகள் அன்று தற்காப்புச் சமர்களைத்தான் நடாத்திக்கொண்டிருந்தன.

அத்தனை களமுனைகளுமே மிகவும் முக்கியமான கள முனைகள். ஒரு சிறிய கவலையீனமோ அல்லது பின்னடைவோ கூட பாரிய வெற்றியை எதிரிக்குப் பெற்றுக்கொடுத்துவிடும் என்ற இக்கட்டில் விடுதலைப் புலிகளின் அணிகள் நின்றுகொண்டிருந்தன.

ஆனால் இத்தனை தற்காப்பு சமர்களுக்கு மத்தியிலும், விடுதலைப் புலிகளின் அணிகள் கிளிநொச்சி மிது தாக்குதல் நடாத்தி, அதனை வெற்றிகொண்ட வரலாறு என்றும் ஒன்றிருக்கிறதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே, தற்காப்புச் சமர்களுக்கு மத்தியிலும், அணிகளைத் திரட்டிப், பயிற்சி வழங்கி, ஒரு முற்றுகைச் சமரை வெற்றிகரமாக நடாத்தக் கூடிய ஒரு தலைவரைத்தான் விடுதலைப் புலிகள் அமைப்பு கொண்டிருக்கின்றது.

எனவே யாழ் குடா மீது ஒரு வெற்றிகரமான மீட்புத் தாக்குதலை நடாத்தும் தற்துணிவுடனும், ஆளணி வழங்கல்களுடனும், திறமையான தலைமைத்துவத்துடனும்தான் தற்பொழுதும் விடுதலைப் புலிகள் இருக்கின்றார்கள் என்பது, யாருமே மறுக்க முடியாத ஒரு உண்மை.

ஆக்கம்: நிலவன்

0 Comments: