'கல்வெட்டுக்கள்" எனும் போது ஆதிகாலத்தில் தகவல்களை எதிர்காலச் சந்ததியினர் அறியும் பொருட்டு கற்களில் பொழிந்து வைத்தனர். அது தனிநபர் வரலாறுகளோ நாட்டின் வரலாறுகளாகவோ அமையும். 'இன்று கல்வெட்டு" எனும் பெயரில் நீத்தார் நினைவுகளை நினைவில் நிறுத்துவதற்கு புத்தக வடிவில் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. இவை சிறிய புத்தகங்களில் தொடங்கி ஐந்நூறு பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகங்கள் வரை அமைகின்றன.
இவை நீத்தாரின் குடும்பத்தவர்களாலோ நண்பர்களாலோ வெளியிடப்படுகின்றன. இதற்காகப் பெரும் நிதிச் செலவு செய்யப்படுகின்றது. பல புத்தகங்கள் சில பக்கங்களில் இறந்தவரின் வரலாற்றைக் கூறி ஏனைய பக்கங்களில் பயனுள்ள பல தகவல்கள் வெளியிடப் படுகின்றன. ஆனால் அப்புத்தகங்களைப் பெறுவோர் அதைச் சேகரித்து பேணிப் பாதுகாத்து முழுமையான பயனைப் பெறுகிறார்களா? என்றால் பதில் வேதனைக் குரியதாகவே இருக்கின்றது.
பயனுள்ள பல தகவல்களோடு வெளிவருகின்ற போதும் ஏன் எமக்கிந்த மனநிலை. அதே தரமான புத்தகங்களை பெருந்தொகை பணம் கொடுத்து வாங்கிப் பேணிப் பாதுகாக்கும் நாம் ஏன் இப்புத்தகங்களை அலட்சியம் செய்கின்றோம். அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் இலவசமாகக் கொடுக்கும் பொருட்கள் தரமற்றதாக இருப்பதால் அதற்குப் பழகிப்போன எமது மக்கள் இலவசமாய்க் கிடைக்கும் பொருட்கள், தரமற்றவை என்ற மனோபாவம் கொண்டவர்களாக காணப்படு கின்றார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
நீங்கள் ஒரு தடவை உங்களைப் பரிசோதித்துப் பாருங்கள். நீங்கள் எத்தனை இறந்தவர்களின் நினைவு நாட்களிற்குச் சென்று எத்தனை கல்வெட்டுக்களைப் பெற்றிருப்பீர்கள். அவற்றில் எத்தனையை இப்போதும் பேணிப் பாதுகாத்து பயன்படக் கூடியவாறு வைத்திருக்கின்றீர்கள்..?
மாவீரர்கள், நாட்டுப்பற்றாளர்கள், சமூகத் தொண்டர்கள், உதாரண புருசர்கள், இளவயதில் சாவடைந்தவர்கள் போன்றோரின் கல்வெட்டுக்கள் சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அவர்களின் வரலாறுகள் எதிர்காலச் சந்ததியினருக்கு கடத்தப்படுவதற்கும் இக் கல்வெட்டுக்கள் பயன்பெறும். எனவே அவற்றை பேணிப் பாதுகாத்தல் வேண்டும். நினைவு நிகழ்வில் ஒரு 'கல்வெட்டை" பெறுவதற்கு உள்ள ஆர்வம் அதனுடைய நோக்கத்தை அடைவதற்கு ஏற்றவகையில் பயன்படுத்துவதற்கு இல்லாமல் போய்விடுகிறது.
பயனுள்ள நூலாக ஏன் நாம் கல்வெட்டுக்களைப் பார்ப்பதில்லை. அவை அயலில் நடமாடிய ஒருவரின் சுயசரிதத்தை தாங்கி வருவதால் அவரைப்பற்றி நேரடியாக அறிந்திருப்பதால் அந்நூல் மூலம் தான் அவரை அறிய வேண்டுமென்ற அவசியமோ அதைப் பேண வேண்டுமென்ற அவசியமோ எமக்கு சிந்தையில் எழுவதில்லை. பிற்காலத்தில் அல்லது அவரைப்பற்றி அறியாதவர்களிற்கு அது பயன்படும் என்ற எண்ணம் எமக்கு எழவேண்டும்.
தற்போதைய 'கல்வெட்டுக்கள்" நீத்தார் நினைவுடன் பயனுள்ள நவீன தகவல்களுடன் வெளிவருகின்றன. இன்று பெரும்பாலான பத்திரிகைகள், சஞ்சிகைகள் குறிப்பிடத்தக்க அளவு விளம்பரங்களைத் தாங்கியே வருகின்றன. சாதாரண வர்த்தக விளம்பரங்களுடன் வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பவற்றை பணம் கொடுத்து வாங்கிப் படித்துப் பாதுகாக்கும் நாம் உயிர்நீத்த தனியொருவன் வரலாற்றுடன் கூடி வரும் 'கல்வெட்டுக்களை" படித்துப் பயன் பெறத் தயங்குகின்றோம்.
மாவீரர், நாட்டுப்பற்றாளர், சமூகத் தொண்டர்கள், முன்னோடிகள், உதாரண புருசர்களின் நினைவுக் கல்வெட்டுக்களை நூல் நிலையங்கள் தேடிப்பெற்று அவற்றை பேணிப்பாதுகாத்து மக்கள் படித்து பயன்பெறக் கூடிய வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது பலருக்கு பயன் கிடைப்பதோடு நீண்ட காலத்துக்கு பேணிப் பாதுகாக்க வேண்டும். அத்தோடு தேசிய ரீதியாக பொருத்தமான கழகங்கள் அல்லது நிறுவனங்கள் மாவீரர்களது, நாட்டுப்பற்றாளர்களது நினைவு தாங்கி குடும்பத்தவர்களால் வெளியிடப்படும் கல்வெட்டுக்களைச் சேகரித்து ஆவணப்படுத்தும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். இதன் மூலம் ஓரளவுக்கு மாவீரர்கள், நாட்டுப்பற்றாளர்கள் போன்றோரின் வரலாற்றை இலகுவாக ஆவணப்படுத்தலாம்.
கல்வெட்டுக்கள் வெளியிடும் குடும்பத்தவர்கள் அதை தயாரிக்கும் போது 'தரமான, நீண்ட காலத்திற்குப் பயன்படக்கூடிய தகவல்களை ஆராய்ந்து எழுதுதல் வேண்டும். தகவல்களை சுவையோடும் கவர்ச்சியாகவும் எழுதுதல் வேண்டும். இதற்காக பொருத்தமானவர்களை அல்லது அனுபவமானவர்களை நூலைத் தயாரிப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். மற்றும் தகவல்கள் உண்மைத் தன்மையாகவும் இருக்க வேண்டும். மிகைப்படுத்திய தகவல்கள் வெளியிடக்கூடாது. அத்தோடு ஏனையவர்கள் வெளியிடாத புதிய புதிய தகவல்களை வெளியிட வேண்டும். சில கல்வெட்டுக்களில் ஒரே விதமான தகவல்கள் இருப்பது காணக்கூடியதாக உள்ளது.
கல்வெட்டுக்கள் எழுதும் போது எல்லா வயதினரையும் வாசகர்களாகக் கருதி எழுத வேண்டும். இயலுமானவரை எல்லாக் காலத்திற்கும் பொருந்தக் கூடியதாக எழுத வேண்டும். இன்று பெரும்பாலான கல்வெட்டுக்களில் இறந்தவரின் இறப்பால் ஏற்பட்ட சோகத்தைத் தணிப்பதற்காகச் சில கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அவை முதியோர் மத்தியில் சரியான நோக்கத்தை நிறைவு செய்தபோதும் இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில் எதிர்வினையான தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக இன்று பெரும்பாலான கல்வெட்டுக்களில் அட்டைப் பக்கத்தில் வர்ணப்படத்துடன் பின்வரும் கருத்துப்பட எழுதப்படுகின்றது. அதாவது,
'எது நடந்ததோ அது நல்லபடியே நடந்தது.
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நல்ல படியே நடக்கும்
..............."
என்ற கருத்துப்பட எழுதப்படுகிறது. இது உண்மையில் உறவினரை இழந்து தவிக்கும் மனங்களிற்கு ஆறுதலைக் கொடுக்கும் என்பது உண்மை. ஆனால் இளைஞர்கள், சிறுவர்கள் இதைப்படிக்கும் போது எல்லாம் நல்லபடியே நடக்குமென்றால் நாம் எதற்கு முயற்சி செய்யவேண்டும், கஷ்டப்பட்டு உழைக்கவேண்டும். எல்லாம் நல்லபடியே நடக்கும் தானே? என்ற மனநிலையை உருவாக்கிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றது. எனவே கல்வெட்டுக்கள் எழுதும்போது எல்லா வயதினரையும் கருத்தில் கொண்டு எழுதவேண்டும். மற்றும் இயன்றவரை எல்லா மதத்தவரையும் கருத்தில் கொண்டு எழுதுதல் வரவேற்கத்தக்கது.
மற்றும் கல்வெட்டுக்களை ஆக்கும்போது ஏற்கெனவே வெளிவந்த இலக்கியங்கள், தகவல்கள் என்பவற்றைத் தவிர்த்து புத்தாக்கங்களை வெளியிடுதல் பொருத்தமாகும். அது சமகால ஆக்க கர்த்தாக்களை ஊக்கப்படுத்துவதாகவும் புதிய எழுத்தாளர்களை அடையாளங் காணவும் உதவும். எனவே இனிவரும் காலத்தில் 'கல்வெட்டிலக்கியங்கள்" எனும் சொல் வழக்கம் ஏற்படுவதற்கு அனைவரும் தூண்டுகோலாக இருப்போம்.
எனவே எதிர்காலத்தில் கல்வெட்டுக்களை வாங்கிப் பேணிப் பாதுகாத்து அதிலிருந்து சமூகம் முழுமை யாகப் பயன்பெற வேண்டும். இதனால் பல தரமான கல்வெட்டுக்கள் வெளிவரவும் தூண்டுதலாக அமையும். அதிக பணச்செலவில் வெளியிடப்படும் கல்வெட்டுக்கள் இலவசமாய்க் கிடைப்பதால் கல்லா வெட்டுக்களாக மாறி அழியாமல் பேணிப் பயன் பெறுவோமாக.
-சு.சா.-
நன்றி: வெள்ளிநாதம் (30.11.07)
Wednesday, December 12, 2007
"கல்லா வெட்டுக்களாகும் கல்வெட்டுக்கள்"
Posted by tamil at 1:34 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment