Thursday, December 13, 2007

`தமிழர், சிங்களவரிடையேயான பிரச்சினையாகவே இலங்கை விடயத்தை சர்வதேசம் பார்க்க வேண்டும்'

* தேசிய மரபுரிமைகள், மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாடு, கலாசார அலுவல்கள் தொடர்பான ஒதுக்கீட்டு சட்டமூல விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் ஆற்றிய உரை
தேசிய மரபுரிமைகள், மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாடு, கலாசார அலுவல்கள் தொடர்பான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான விவாதம் நடைபெறுமிடத்து எனது சிந்தனைக்கு சில விடயங்கள் வருகின்றன.

ஒரு நாடு உலக நாடுகளால் மதிக்கப்படுவது என்பது வெறும் பொருளாதார அளவீடுகளாலோ, தொழில்நுட்பத்திறன்களாலோ, அல்ல. அந்த நாட்டின் நாகரிக வளர்ச்சியால், தேசிய மரபுகளால், கலாசாரத்தால் மட்டுமே ஒரு நிலையான கௌரவத்தைப் பெற முடியும். ஆனால், இலங்கையை பொறுத்தவரையில் உலக நாடுகளால் விமர்சிக்கப்படும் ஒரு தீவாக இது உள்ளது. வெளிநாடுகள் தமது பிரஜைகளிடம் இலங்கைக்கு செல்வது ஆபத்தானது அதனைத் தவிர்க்கும்படி கூறியுள்ளனர்.

அரசின் அனுமதியோடு பணியாற்றிய மனிதாபிமானப் பணியாளர்கள் கடந்த 19 மாதங்களில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட தேசம் இலங்கை. இதனால் ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் உலகிலேயே மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான இடமாக, மோசமான இடமாக இலங்கைதான் உள்ளது என கூறியுள்ளார்.

இவ்வாறே ஊடகவியலாளர்கள் பணிபுரிவதற்கு மிகவும் ஆபத்தான இடமாக இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள யாழ்ப்பாணம் விளங்குகிறது என அனைத்துலக ஊடக அமைப்பான எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பும் அனைத்துல ஊடக ஆதரவு அமைப்பும் தெரிவித்துள்ளன. மேலும், ஹொங்கொங்கை தலைமையகமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் மையம் வெளியிட்ட அறிக்கையில் ஆட்கடத்தலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசுகள் அனுசரணை வழங்கும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம் எனக் குறிப்பிடுகின்றது.

மேலும், இலங்கை சிறைகளில் எந்தவித விசாரணையும் இன்றி தமிழ் கைதிகள் பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் வந்தபோது இவர்கள் சிலர் மீது தாக்குதல் நடைபெற்றது. இத்தகைய தாக்குதல்கள் மிக மோசமாக முன்னரும் நடைபெற்றது. உதாரணமாக 1983 இல் 54 பேர் சிறையில் கொல்லப்பட்டனர். 1999 இல் மலையகத்தில் பிந்துனுவெவவில் 12 தமிழ் கைதிகள் கொல்லப்பட்டனர்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் "இலங்கையில் மனித உரிமை நிலைமை மிகவும் சீர்குலைந்து போயுள்ளது. இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மிகவும் பலவீனமாக உள்ளது" எனக் கூறியுள்ளார். இவ்வாறு மிக மோசமான விமர்சனங்களுக்குள்ளான இலங்கை அரசு போர் நிறுத்தத்தை கண்காணிப்பதற்கென தாமும் ஒப்புக்கொண்டு ஏற்படுத்திய கண்காணிப்புக் குழுவையே பலமுறை அவமானப்படுத்தியுள்ளது.

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கான சிறப்புப் பிரதிநிதி மன்பிரட் நோவோக் "இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் மக்கள் மீதான கொடுமைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். "துன்புறுத்தல்கள் அதிக அளவில் நடைபெறவில்லை என அரசு மறுத்து வருகின்ற போதும் என்னால் அவர்களை நம்ப வைக்க முடியும் என்பதற்கான போதிய ஆதாரங்கள் உண்டு" எனக் கூறியுள்ளார்.

இவ்வாறு குற்றச்செயல்கள் நிறைந்த, மனித உரிமை மீறல்கள் மலிந்த அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடும் தேசமாக இன அழிப்பை ஒரு தந்திரோபாயமாக கைக்கொள்ளும் இடமாக இலங்கை விளங்குகின்றது.

இது இப்படியிருக்க நாகரிக வளர்ச்சி பெற்ற நாடுகள் தங்களுடைய வரவு - செலவுத் திட்டத்தில் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி கருதி கலாசாரம், மரபுரிமை, பண்பாடு, மதம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போன்று இலங்கை அரசும் பெரும் முயற்சி எடுக்க முற்படுகின்றது.

இந்த வகையில் கலாசார அலுவல்கள் அமைச்சு தனது நோக்கம் பற்றி குறிப்பிடும்போது, தனித்துவமான ஒரு கலாசாரத்துடனான ஒரு நாடாக உலகில் ஏனைய நாடுகளுடன் முன்னோக்கிச் செல்லுதல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நோக்கத்திலேயே சிக்கல் உருவாகின்றது. தமிழ் மக்கள், சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் சேர்ந்து வாழும் போது அவரவரின் கலாசார தனித்துவங்களைக் கவனத்தில் எடுக்காமல் நோக்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது இலக்கியச் செயற்பாடுகளும் பிரசுரங்களும் என்ற பகுதியில் பராமரிக்கப்படும் நிறுவனங்கள் : சிங்கள அகராதி அலுவலகம், சிங்கள கலைக்களஞ்சிய அலுவலகம், மகாவம்சத் தொகுப்பு. இங்கு தமிழ் இலக்கியச் செயற்பாடுகள் எதனையும் காணவில்லை என்று மக்கள் ஆத்திரமடையப் போவதில்லை.

இலங்கை தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தை எடுத்தால் நீங்கள் பேருக்கொரு தமிழ் பிரிவு அமைத்திருப்பது பற்றியோ, அதற்குப் பணியாளர்கள் நியமிக்கப்படாமை பற்றியோ, திரைப்பட பிரதிகளை தமிழில் எழுதிக் கொண்டு வருபவர்களை சிங்களத்தில் எழுதிக் கொண்டு வாருங்கள் பார்க்கலாம் என்று நீங்கள் கூறுவதையோ, எந்த அதிகாரமும் இல்லாது பணிப்பாளர் சபை உறுப்பினர்களை வைத்திருப்பது பற்றியோ, வரவு - செலவுத் திட்டத்தில் இதற்கென 20 கோடி ஒதுக்கப்பட்ட போதும் தமிழருக்கென்று அதில் எதுவும் இல்லாதிருப்பது பற்றியோ நான் விவாதிக்க வரவில்லை.

பாதுகாப்பு என்ற பெயரில் போருக்கு முன்னுரிமை அளித்து 166.4 பில்லியன் ரூபாவை அதற்கு ஒதுக்கிவிட்டு சிங்கள மக்களை கொலை வெறியர்களாக்கி, அவர்களின் மனத்தை சீரழித்து விட்டு வைத்தியசாலைகள் மீதும், பாடசாலைகள் மீதும் கர்ப்பிணித் தாய்மார்கள் மீதும், சிங்கள இளைஞர்களைக் கொண்டு குண்டுகளை ஏவச்செய்து சிங்கள இளைஞர்களை கொலைக்காரர் ஆக்குகின்றீர்கள். சிங்கள பௌத்த இனவாதிகள் இந்த நாடு முழுவதும் தமக்கு மட்டுமே சொந்தம் என்று நம்புகின்ற அந்த நம்பிக்கையில் இருந்து தான் இத்தகைய அனர்த்தம் விழைகின்றது.

அரசியல்வாதிகள் இதனை மாற்ற முயலாமல் அந்தக் கற்பனைக் கோட்டைகளின் மேலேயே தமது பதவிகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். யார் கூட இனவாதத்தைக் காட்டுவது என்று போட்டி போட்டு செயற்படுகின்றனர். முன்னைய அரசுகளும் இதே இனவாத நஞ்சை, சர்வதேச நாடுகளைச் சமாளித்துக் கொண்டு மிக நாசூக்காக சிங்கள மக்கள் மத்தியில் செலுத்தின. இப்போதைய அரசு மிக வெளிப்படையாகவே செய்து வருகின்றது. இவ்வாறு மாறி மாறி வரும் அரசுகள் கதிரைகளை தக்கவைக்கும் அரசியலை நடத்துவதை விடுத்து பாதுகாப்புக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை அதற்கு ஒதுக்கப்பட்ட பெருமளவு நிதியை சிங்கள மக்களின் மூளையை மாற்றுவதை மிக முக்கியமான இலக்காக கருதி அதற்காக முழுமையாக செயற்படுவதன் மூலம்தான் முழு இலங்கையையும் காப்பாற்ற முடியும். 166.4 பில்லியன் ரூபா நஞ்சை இறக்குமதி செய்து நாட்டை மாசுபடுத்தாமல் மக்கள் மனங்களில் காலம் காலமாக ஊட்டப்பட்ட இனவாத நஞ்சை அகற்ற இந்தப் பணத்தை செலவு செய்யுங்கள்.

சிங்கள மக்கள் மத்தியில் மனிதத்தை மதிக்கும் பண்பு, இரு இனங்களும் சமமானவை என நோக்கும் மனோபாவம், தமிழ் மக்களுக்கு நியாயமான பிரச்சினைகள் உண்டு என சிங்கள மக்கள் விளங்கிக்கொள்ளும் தன்மை வளர்க்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் 2500 வருடங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கில் உயர்ந்த பண்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மக்கள் தமது பண்பாட்டையோ, கலாசாரத்தையோ, மதங்களையோ மேம்படுத்துவதற்கு சிங்கள அரசை எதிர்ப்பார்க்கவில்லை. சிங்கள அரசு முல்லைத்தீவில் பௌத்த மதத்தைப் பரப்ப முனைவதும் திருமலையில் 70 இலட்சம் ரூபாவை புத்த மத அபிவிருத்திக்கு ஒதுக்குவதையும் யாழ்ப்பாணத்தில் வலிகாமப்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் 200 க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களை மக்களைத் தரிசிக்க விடாமல் தடுப்பதையும் நாவற்குழி வீட்டுத்திட்டத்தை மகிந்த புர என மாற்ற முற்படுவதையும் இந்துக் கோயில்கள் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குண்டு வீசி கோயில்களில், தஞ்சமென வந்திருந்த மக்களை அழித்தொழிப்பதையும் சிறுவர்கள் பயிலும் பாடசாலைகள் மீது குண்டுகளை வீசி சிறுவர்களை அழித்தமையையும் வைத்தியசாலைகள் மீது குண்டுகள் வீசியதையும் தமிழ் மக்கள் ஒருபோதும் மறந்து விடமாட்டார்கள்.

தமிழ் மக்கள் பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் அல்லர். மதங்களை மதிப்பவர்கள். மனிதர்களை மதிப்பவர்கள் நாங்கள் வேண்டுவது சுதந்திரத்தையே, நாங்கள் யாருக்கும் தீங்கு செய்ய முயலவில்லை. தமிழ் மக்கள் தமது வாழ்வை புதுப்பிக்கவும் வாழ்வை கட்டியமைக்கவுமான சுதந்திரத்தை வேண்டி நிற்கின்றனர்.

அண்மையில் ஜே.வி.பி. கட்சியினர் அரசிடம் 4 கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் ஒன்று யுத்த நிறுத்த ஒப்பந்தம் கிழிக்கப்பட வேண்டும் என்பது. பல நாடுகள் இலங்கை அரசுக்கு நிதிஉதவிகளை நிறுத்தி வரும் வேளையில் இணைத்தலைமை நாடுகளில் ஒன்றான ஜப்பான் தளராது தொடர்ந்து இலங்கை அரசுக்கு பெரும் தொகை நிதியுதவி அளித்து வருகின்றது.

இப்போது ஜப்பானும் கூட யுத்த நிறுத்த ஒப்பந்தம் கிழிக்கப்பட்டால் நிதி உதவி தரமாட்டோம் என்று கூறியுள்ளது. அவர்களின் பிரச்சினை ஒப்பந்தம் பேப்பரில் இருந்தால் சரி என்பதுதான். ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டே யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும் அரசுக்கு நிதி கொடுப்பது பற்றி அவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஒப்பந்தம் கிழிக்கப்பட்டதன் பின் நிதியுதவி செய்யும்போது ஏன் தாம் கொடுக்கிறோம் என்பதற்கு மற்றவர்களுக்கு நியாயம் சொல்ல முடியாது என்பதுதான் அவர்கள் கவலை. சர்வதேசத்தின் இத்தகைய பொறுப்பற்ற செயல்களால் 50 வருடங்களுக்கு மேலாக இனப்பிரச்சினை புரையோடிப்போயுள்ளது. உயிரழிவு, சொத்தழிவு, பண்பாட்டுச் சீரழிவுகளால் இன்று 50 வீதமானோர் மனநோய்க்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதற்கு சர்வதேசமே பொறுப்புச்சொல்ல வேண்டும்.

அண்மையில் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதி ஆகும் வாய்ப்புடைய கிலாரி கிளின்டன் அம்மையார் அமெரிக்காவின் `காடியன் நியுஸ்' ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அனைத்து பயங்கரவாதிகளையும் ஒன்றாக கருதும் ஒரு தவறான அணுகுமுறையை தாம் கைக்கொண்டு வருவதாக கூறியதோடு அவர்கள் எந்த நோக்கத்திற்காக செயல்படுகிறார்கள் என்பதை ஆராய்ந்து அறிவதற்கு தாம் கூடுதலாக பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இவரின் இக்கூற்று இலங்கை இன முரண்பாட்டை விளங்கிக் கொள்வதில் ஒரு முன்னேற்றகரமான நிலைப்பாடாகும். இலங்கையில் விடுதலை புலிகள் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் ஒரு குறிக்கோளிற்காகவே வன்முறையைக் கையாள்கிறார்கள் என்ற நியாயப்பாட்டைக் கவனிக்காமல் அவர்களை சர்வதேச சமூகம் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தியுள்ளது. இது அடிப்படையில் தவறான ஒரு நிலைப்பாடாகும்.

எமது பண்பாடுகளை புரிந்து கொண்ட எம் அயல் நாடாக விளங்கும் இந்தியா கூட இத்தகைய தவறைச் செய்துள்ளது இதுபற்றி A.K.Verma என்பவர் Indian involvement in Sri Lanka Ethnic Crisis A Raw perspective என்னும் கட்டுரையில்

* இலங்கையில் அரசு தமிழ் மக்களை சமமாக பார்க்கத் தவறியதன் விளைவே ஈழம் கோரிக்கை இந்தியாவும் இதனைப் பார்க்கத் தவறிவிட்டது.

* கொள்கை பற்றிய கலந்துரையாடல் இல்லாமல்தான் முடிவுகள் எடுக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத் தடை கூட கோப்பிக்கடைகளில் இருந்து கலந்துரையாடிவிட்டு முடிவு எடுத்தனர் என்று சொல்லப்படுகின்றது.

இவ்வாறு தான் சர்வதேச நாடுகள் அர்ப்பணிப்பு அற்ற மேலோட்டமான ஆய்வுகளினூடாக தவறான முடிவுகளுக்கு வந்துள்ளதை ஜனாதிபதி வேட்பாளர் கிலாரி கிளின்டனும் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை அரசு என்று அடிக்கடி சொல்லுகின்ற சர்வதேசம் அந்த அரசு இழைக்கும் மனித உரிமை மீறல்களை ஒரு கோடலுடனேயே பார்க்கின்றது.

சர்வசேத்தின் இத்தகைய மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட வேண்டும். எனவே, சர்வதேச சமூகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் கிளர்ச்சிக் குழுவுக்குமான மோதல் என பார்க்காமல் தமிழ் தரப்பிற்கும் சிங்களத் தரப்பிற்கும், இடையிலான முரண்பாடு என்பதனைக் கருத்தில் எடுத்து தமிழர்களின் சுதந்திரத்தை மதித்து ஏனெனில் சுதந்திரம் என்பது உலகப் பொதுமையான விடயம். அவர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

இதைவிடுத்து மீண்டும் மீண்டும் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று விடுக்கும் கோரிக்கைகளும் காலம் கடந்து விட்டன. 10 வருடங்களுக்கு மேலாக சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களின் சார்பில் ஈடுபட்ட பேச்சுவார்த்தைக் குழுவில் தலைமை வகித்தவரை சிங்களத் தரப்பினரோடு முகம்பார்த்து கைகுலுக்கிய சமாதானப் புறாவையே படுகொலை செய்த இந்த இலங்கை அரசுடன் இனியும் பேச்சுவார்த்தை நடத்துவதில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

13 - December - 2007
thinakkural.com

0 Comments: