மீண்டும் ஒரு வாகரையைப்போல வன்னியையும் ஆக்குவதற்கே அரசாங்கம் முயற்சிப்பதாக நிலைமைகளை அவதானித்துவரும் ஒரு நண்பர் சொன்னார். அண்மையில் வன்னி மீதான சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் ஏறக்குறைய அப்படித்தான் இருக்கின்றன.
வன்னியைச் சுற்றியும் வன்னிக்கு உள்ளேயும் தாக்குதல்களை அது தீவிரப்படுத்தியிருக்கிறது. இது ஒரு வகையில் வன்னி மீதான பெரும் படையெடுப்பை இலகுவாக்குவதற்கான தந்திரோபாயமாகவும் இருக்கிறது. அதேவேளை ஒரு தொடரான நீண்டகால அடிப்படையிலான போர் நடவடிக்கையாகவும் இது கொள்ளத்தக்கது. ஏனென்றால் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வன்னி மீதான போரை நடத்தாமலிருக்க முடியாது. இதற்கு இரண்டு காரணங்களிருக்கின்றன. ஒன்று வன்னியில் திரண்டிருக்கும் புலிகளை அப்படியே விட்டு வைத்தால் அவர்கள் பெரும் பாய்ச்சலுக்கு தயாராகி விடுவார்கள் என்பது.
இரண்டாவது, புலிகள் பலவீனமாகவே இருக்கிறார்கள் என்பதை சிங்கள மக்களும் வெளியுலகமும் நம்பும்படி வைத்திருக்க வேண்டும் என்பது. எனவே அரசு தொடர்ந்து போரை நடத்தியே தீர வேண்டும்.
வன்னி மீது நேரடியாகவோ, உடனடியாகவோ படை நடவடிக்கையை தொடங்குவது பெரும் ஆபத்தானதென்று அரசாங்கத்துக்கும் தெரியும். படைத்தரப்புக்கும் தெரியும். எனவே அதற்கு படைத்தரப்பும் தயாரில்லை. அரசாங்கமும் இந்த விசப்பரீட்சையில் இறங்க ஆயத்தமில்லை.
எனவே, அது இந்தப் பிரச்சினையை வேறு விதமாகக் கையாள யோசிக்கிறது. வன்னிக்கான போரை நடத்துவது. ஆனால் அதை வேறு விதமாக நடத்துவது. முதலில் புலிகளின் தாக்குதல் தயாரிப்பை குழப்புவது. அடுத்தது அவர்களது நிர்வாக அமைப்பை சீர்குலைப்பது. இதை சிறீலங்கா அரசாங்கம் மூன்றுவிதமாகக் கைக்கொள்கிறது.
ஒன்று, வான் தாக்குதல்களை தீவிரப்படுத்தி அதன் மூலமாக பேரழிவுகளை ஏற்படுத்துவது. இதன்மூலம் ஒரு நெருக்கடியை உருவாக்குவது.
இரண்டாவது ஆழ ஊடுருவும் அணி மூலம் உள்நுழைந்து தாக்குதல்களைத் தொடுப்பது. இதிலும் உள் நெருக்கடிகளை அதிகரிக்கும் உபாயமே அதிகமாக இருக்கிறது. மூன்றாவது, வன்னியைச்சுற்றிய முன்னரங்குகளிலிருந்து படையினர் அடிக்கடி முன்னேற முயற்சிப்பது. இதன் மூலம் எதிர்த்தாக்குதல் நடத்தவரும் புலிகளுக்கு இழப்புகளையும் சேதங்களையும் ஏற்படுத்துவது.
வன்னியில் பெருமெடுப்பில் களமிறங்கினால் அது ஜெயசிக்குறு போன்றே எதிர் விளைவுகளைக் கொடுக்கும் என்று அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. எனவே, நேரடியாக உள் நுழையாமல் ஓரங்களால் நுழைய முயற்சித்துக்கொண்டு உள்ளே வான் மற்றும் ஆழ ஊடுருவும் அணியைக்களமிறக்குவதாக புதிய வியூகத்தை அரசாங்கம் வகுத்திருப்பதாகவே தெரிகிறது.
இதற்கு வலுச்சேர்ப்பதாக வன்னியிலிருக்கும் சர்வதேச மற்றும் உள்ளூர் தொண்டு அமைப்புகளை நெருக்கடிக்குள்ளாக்குவது. புலிகளின் வழங்கல் வழிகளை அடைப்பதும் அரசின் நோக்கமாகும். இதில் முதற்கட்டமாக தொண்டு நிறுவனங்களை வன்னியிலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது. யுனிசெவ் அமைப்பின் மீது கடந்த வாரத்தில் ஜே.வி.பி சுமத்திய குற்றச்சாட்டின் பின்னணியில் அரசாங்கமும் வெளிச்சக்திகளும் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் பல மெய்யான குற்றச்சாட்டுகளைப்பற்றி அது அதிகம் கவனத்தில் எடுப்பதில்லை. ஆனால் தமிழ் மக்களின் நலனை மறுப்பதற்கான குற்றச்சாட்டுகளை யாராவது முன்வைத்தால் அதனை தலைமேலே துாக்கிவைத்து கொண்டாடுகிறது அரசாங்கம். இதற்கு நல்லதொரு உதாரணமாக உயர் பாதுகாப்பு வலயத்தின் மூலம் பறிக்கப்பட்ட தமிழரின் நிலத்தை படையினர் மீளஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த போதும் அதை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.
ஆனால் அதே நீதிமன்று வழங்கிய வடக்கு - கிழக்கு பிரிப்பை அது உடனடியாகவே நடைமுறைப்படுத்தியது. இப்போது யுனிசெவ் அமைப்பை சிறீலங்காவின் குற்றத்தடுப்புப்பிரிவு விசாரணை செய்ததாகவும், அந்த அமைப்பின் கொழும்பு அலுவலகத்தை அவர்கள் சோதனையிட்டதாகவும் தெரிகிறது. ஏற்கனவே தொண்டு அமைப்புகளை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி பேசிவரும் அரசாங்கமும் அதன் பங்காளிகள் கூட்டாளிகளும் இப்போது நேரடியாகவே குற்றங்களைச் சுமத்தத் தொடங்கியிருக்கின்றன.
வன்னியிலிருந்து தொண்டு அமைப்புகள் வெளியேற்றப்பட்டால் அங்கே பொது மக்களுக்கான தொடர்பாடல் மற்றும் அனர்த்தகால உதவிகள் எதுவும் கிடைக்காமற்போகும். அத்துடன் வன்னியில் மக்கள் மீது தொடுக்கப்படும் வான்தாக்குதல் செய்திகள் வெளியுலகத்திற்குத் தெரியாமற் தடுப்பதற்கும் இது வழியாகும். ஒரு மூடுண்ட உலகினுள் வைத்து தமிழ் மக்களை சிறைப்பிடிக்கலாம் அல்லது தோற்கடிக்கலாம் என்றும் அரசாங்கம் கருதுகிறது.
வாகரை மற்றும் படுவான்கரைப் பகுதிகளில் அந்த மக்களுக்கான போக்குவரத்துப் பாதைகளைத் தடைசெய்து வைத்துக் கொண்டு வெளித் தொடர்புகள் பிற உதவிகள் வருவதைத் துண்டித்து படை நடவடிக்கையைத் துரிதப்படுத்தியது. இதிலும் முன்னேறும் படையை பெருமெடுப்பிலான அளவில் தயார்ப்படுத்தி சிறு பிரதேசத்தை நோக்கி நகர்த்தும் உத்திமுறையே பின்பற்றப்பட்டது.
இந்தத்திட்டத்திற்கேற்ப பொதுமக்களை அச்சமூட்டும் விதமாக தாக்குதல் வியூகத்தினுள் சிக்க வைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அப்படியான நிலையில் தமது போர் நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்களால் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே அப்போது அவர்கள் நெருக்கடியைத்ததாங்க முடியாமல் திணறுவார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் மக்களை தமது பிடிக்குள் கொண்டுவரலாம் அல்லது வன்னிக் களத்தைவிட்டு வெளியேற்றலாம் என்றும் அது கணித்திருக்கிறது. ஆனால், இந்த மாதிரியான உபாயங்களை ஏற்கனவே தமிழ் மக்கள் தெளிவாக இனங்கண்டு வைத்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டில் வாகரை ஈச்சிலம்பற்றுப்பகுதிகளை ஆக்கிரமித்த படையினர் பிறகு மீள்குடியேற்றம் என்று பொதுமக்களை அங்கே கொண்டு சென்று குடியேற்றினர். ஆனால், அந்த மக்களின் இப்போதைய நிலை பற்றி கடந்த பதினைந்து நாட்களுக்குள் பி.பி.சி செய்திச் சேவையில் அங்கிருந்து கொடுமைகள் தாங்க முடியாது வெளியேறும் மக்கள் தெரிவித்திருந்தனர்.
தவிர, வன்னி மீது கடந்த 1998 காலப்பகுதியில் ஜெய
சிக்குறு நடவடிக்கையின்போது பொருளாதாரத் தடையினாலும், விமானக்குண்டு வீச்சுகளாலும், படையெடுப்பினாலும் தமிழ் மக்கள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்திருந்தனர். அப்போது சந்தித்த நெருக்கடிகளைக்கண்டு யாரும் கலங்கிப்போய்விடவில்லை. மிகவும் சிரமமான வாழ்க்கை அவலத்திற்குள்ளும் சனங்கள் திடமாகவே இருந்தார்கள். அரசாங்கத்தை அவர்கள் ஒருபோதும் நம்பத்தயாராகவேயில்லை.
அரசாங்கம் தீர்வுத்திட்டத்தை தெளிவாக முன்வைக்காத வரையில் அதை நம்புவதற்கு தமிழர்கள் தயாராகவில்லை. ஆகவே இந்த உபாயங்களை அவர்கள் தோற்கடித்தே தீருவார்கள். மும்முனைகளிலும் தாக்குதல்களை தீவிரமாகத் தொடுப்பதன் மூலம் புலிகளின் போராற்றலைச் சிதைத்துவிடலாம் என்றும் அரசு நம்புகிறது. அதாவது புலிகளையும் மக்களையும் களைப்படையச் செய்து விடலாம் என்பதே இதன் உள்நோக்கமாகும். ஆனால் ஒரே பொறி முறையை மீண்டும் மீண்டும் கையாண்டு வெற்றியைப் பெறலாம் என்று கற்பனை செய்கிறது அரசாங்கம்.
வாகரையில் ஏறக்குறைய இதேபோன்றதொரு உத்தி
யையே சிறீலங்காப் படைத்தரப்பு கையாண்டது. ஆனால், கிழக்கின் புவியியல் கள நிலைமைகள் வேறு. வடக்கில் வன்னியின் கள நிலைமைகள் வேறு. கிழக்கில் கையாண்ட உத்தியை வடக்கில் பிரயோகிக்க முனையும்போது அதனை எதிர்கொள்வதற்கான படிமுறைகளை மக்கள் ஏற்கனவே திட்டமிட்டே வைத்திருப்பார்கள். பணிய வைக்கும் அரசின் உபாயத்தை அவர்கள் முறியடிப்பதைத்தவிர வேறு வழியுமில்லை. எப்போதும் ஒடுக்குமுறை அரசாங்கங்கள் மக்களைக் குறிவைத்தே தாக்குதல்களைத் தொடுக்கின்றன.
மக்களைக் களைப்படைய வைப்பதன் மூலம் போராட்டத்தின் மூல விசையை மாற்றி மழுங்கடித்து விடலாம் என்று அவை சிந்திக்கின்றன. ஆனால், இந்த போர் மனோபாவத்திற்கு அரசாங்கம் கொடுக்கவுள்ள விலை மிக அதிகமாகவே இருக்கப்போகிறது. வன்னியை நெருக்கலாம் என்றால் அது கொழும்பில் வெடிக்கும் என்ற யதார்த்தமாகவே இருக்கப்போகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றிச் சிந்திக்காமல், அதற்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்காமல் போரை மட்டுமே தொடர்ந்து நடத்துவதென்றால் இதன் பொருள் என்ன..?
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் சர்வதேச சமூகம் தன்னுடைய நலன்களுக்கப்பால் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் இந்த விவகாரத்தை எப்படிப்பார்க்கப் போகிறது என்பதும் பெருங் கேள்வியாக மக்களால் எழுப்பப்படுகிறது. குருதியாறு பெருக்கோடுவதை எந்தக்கண்டன அறிக்கைகளும் கட்டுப்படுத்தப்போவதில்லை என்பதை நடைமுறை யதார்த்தம் சொல்லத்தான் போகிறது.
ஏனெனில் சர்வதேச சமூகத்தின் அறிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் வெறுமனே சம்பிரதாய பூர்மான அறிக்கைகளாகவே எடுத்துக்கொண்டு அவற்றுக்கு எந்த மதிப்பையும் கொடுக்காமல் இதுவரையில் வந்துள்ளது. எனவே இனியும் அது அப்படித்தான் நடந்து கொள்ளும். அப்படி அது நடக்கும்போது அதன் விளைவுகள் பாரதுாரமானவையாகவே இருக்கப்போகின்றன. எனவே, வாகரையைப்போல வன்னியை ஆக்க முடியாது என்பதிலிருந்தே புதிய அரசியல் அத்தியாயம் உருவாகப்போகிறது. அந்தநாட்கள் அதிக துாரத்திலில்லை.
எழுதியவர் - மனோகரன்
Saturday, December 15, 2007
"வாகரையைப்போல் வன்னியைக் கையாள முடியுமா?"
Posted by tamil at 7:24 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment