Saturday, December 29, 2007

வெற்றி மமதைப் போக்கை கைவிடக் கோரும் மகஜர்

இயேசு பாலன் பிறப்பு தினத்துக்கும் புதுவருடத்துக்கும் இடைப்பட்ட பண்டிகைக்காலம் இது.
இலங்கைத் தீவில் அல்லலுற்று, அவலப்பட்டு, அடக்கு முறைக்கும், நெருக்குவாரங்களுக்கும் உள்ளாகி, அனர்த்தங்களை எதிர்நோக்கி வரும் ஈழத் தமிழ் மக்களுக்கு இது பண்டிகைக்கும் கொண்டாட்டங்களுக்கும் உரிய காலம் அல்ல. கடந்து போகும் பண்டிகை நாட்களை அவற்றுக்குரிய மாண்புகளோடு அனுஷ்டிப்பதையே இப்போதைய கால கட்டத்தில் அவர்களால் பின்பற்ற முடியும். இதற்கு அப்பால், மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் திளைப்பதற்கான சூழல் அவர்களுக்கு இல்லை.

ஈழத் தமிழர்களுக்கு என்றில்லை, இலங்கைத் தீவில் நீதி கோரும் நியாயம் வேண்டும் அனைத்து மக்களினதும் நிலைமை இதுதான்.
ஆட்கடத்தல்கள், வேண்டுமென்றே கடத்திக் காணாமற் போகச் செய்தல், சட்டவிரோதப் படுகொலைகள், கப்பம் அறவிடுதல், முறையற்ற கைதுகள், தடுத்து வைப்புகள் என இலங்கையில் மனித உரிமை மீறல்கள் வகைதொகையின்றி அதிகரித்து வந்துள்ளன. இக் கொடூரங்களால் பெரும் பாதிப்புக்கும், இழப்புக்கும், வஞ்சனைக்கும் பெரும்பாலும் உள்ளாகியிருப்பவர்கள் தமிழர்களே என்பது கண்கூடு.

இவ்வாறு பெருகிவரும் மனித உரிமை மீறல்களைத் தடுத்துக் கட்டுப்படுத்துவதாயின் அத்தகைய வன்முறைகள் குறித்து இலங்கையில் நேரடியாகப் பிரசன்னமாகியிருந்து, கண்காணித்து, விசாரித்து அறிக்கையிடும் அதிகாரத்தோடு ஐ.நா.மனித உரிமைகள் அலுவலகம் ஒன்று இலங்கையில் நிறுவப்பட வேண்டும் என்ற வற்புறுத்தல் சர்வதேச மட்டத்திலிருந்து கிளம்பியிருக்கின்றது. அந்த நிலைப்பாடு சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் தற்போது தீவிரமடையவும் தொடங்கிவிட்டது.
ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்புவதன் மூலம், இப்போது இங்கு மோசமடைந்து வரும் சூழ்நிலையை சீர்செய்வதற்குத் தன்னால் உதவ முடியும் என்பதை, உலக நாடுகளில் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நாவுக்கு அறிக்கையிடும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் தூதுவர் லூயிஸ் ஆபர் அம்மையார் கடந்த பத்தாம் திகதி மனித உரிமைகள் தினத்தன்று வெளியிட்டார்.

ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை இலங்கையில் அனுமதித்து, தனது அரச நிர்வாகத்தின் கொடூரப் போக்கு வெட்டவெளிச்சமாவதை விரும்பாத இலங்கையின் தற்போதைய அரசு, ஆபர் அம்மையாரின் நல்யோசனையை நிராகரித்துப் புறம் தள்ளி நிற்கிறது.
இந்நிலையில் மேற்படி திட்டத்தை ஏற்று, அங்கீகரித்து, செயற்படுத்தி, அதன் மூலம் இலங்கைத் தீவின் மக்களுக்கு நியாயம் கிடைக்கவும், மோசமான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமானவர்களின் முகமூடிகளைக் கிழித்து அவர்களை அம்பலப்படுத்தவும் வழிசெய்யுமாறு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழுத்தம் தரும் விதத்தில் மகஜர் ஒன்றைத் தயாரித்து, அவருக்கு அனுப்பும் பணியில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றது.

ஆசியப் பிராந்தியத்தில் மனித உரிமை விவகாரங்களைக் கண்காணித்து அதற்காகக் குரல் எழுப்பி வரும் இந்த அமைப்பு கடந்த 23 ஆண்டுகளாகக் ஹொங்கொங்கிலிருந்து செயற்பட்டு வருகின்றது.

இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்புக்குழுவை நிறுத்த அனுமதிக்கும்படி கோரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் திட்டத்துக்கு இணங்குமாறு இலங்கை ஜனாதிபதியை வற்புறுத்தும் மகஜரைத் தயாரித்து, இணையத்தள வலைப்பின்னல் மூலம் சர்வதேசப் பிரமுகர்கள் மற்றும் சாதாரண மக்களின் ஒப்புதலை அந்த வலைப்பின்னல் மூலமே இந்த அமைப்பு பெற்று வருகின்றது.

""இந்தக் கோரிக்கை மனுவில் உங்கள் ஒப்புதலையும் பதிவதன் மூலம், இலங்கையில் அவலமுறும் மக்களின் வாழ்வைப் பிரகாசப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட அந்நாட்டு அதிபரைத் தூண்டுங்கள்! அந்த ஒப்புதலைப் பதிவதன் மூலம் இலங்கை மக்களுக்கு நத்தார் கொண்டாட்டத்தை ஒட்டிய உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்!'' என்கிறது ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு.

""நல்லிணக்கம், சமாதானம் ஆகியவற்றின் ஊடாகப் புதிய நம்பிக்கை பிறப்பதையே கிறிஸ்தோதயம் குறியீடாக வெளிப்படுத்துகின்றது.
""வரலாற்றுக் கால ஓட்டத்திலே அனைத்துச் சமூகங்களுமே தத்தமது சமூகங்கள் இடையே பெரும் குழப்பங்களையும் சமூக ஒழுங்குச் சீர்குலைவுகளையும் ஏற்படுத்திய வன்முறைகளை எதிர்கொண்டுதான் வந்துள்ளன. ஆனால் இத்தகைய சமூகங்கள் எல்லாம் அக்கால கட்டத்தில் ஏதோ ஒரு வகையில் சமாதானத்தை நிலைநாட்டின என்பதும் அது நல்லிணக்கம் மூலமே சாத்தியமாயிற்று என்பதும் சரித்திரம்.
""வெற்றி மமதையில் அமைந்த முரண்பாடுகளின் பேறாகவே யுத்தமும், பிணக்கும் பிறப்பெடுக்கின்றன.
""ஆனால் எல்லா வெற்றிகளையும் விடவும் மேலானது மனித உயிர்கள் என்ற உண்மை யதார்த்தம் உணரப்படும்போது சமாதானம் உருவாகின்றது.
""இலங்கையில் பிணக்குடன் தொடர்புபட்ட சகல தரப்புகளும் பரஸ்பரம் மறுதரப்பின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளைத் தேடுவதை விடுத்து இன்று இராணுவ வெற்றிகளே மேலானவை என்று நம்புகின்றன. இது மனிதப் பேரவலத்துக்கே வழி செய்துள்ளது.

""பொதுவான பிரச்சினைகளை ஏற்று அங்கீகரிக்க மறுக்கும் அடிப்படைப் பண்பியல்பே இந்த வெற்றி மமதைப் போக்கின் ஊற்றுக்கண்.
""இந்த இராணுவ வெற்றி மமதைப் போக்கில் சிக்கியிருக்கும் தரப்புகள் இடையே அத்தரப்புகளின் பிரச்சினைகளைப் புரிந்து அதன் அடிப்படையில் நல்லிணக்க சமரச உடன்பாட்டை ஏற்படுத்துவதாயின் இடையில் நடுநிலைத்தரப்பு அவசியமாகும்'' இப்படிச் சுட்டிக்காட்டுகின்றது ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு.
சமரசத் தீர்வுக்கு அடிப்படையான இதுபோன்ற பல்வேறு ஆழமான அம்சங்களோடு இந்த மனுவை, இந்தப் பண்டிகைக்காலச் செய்தியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்க இருக்கின்றது இந்த ஆணைக்குழு.
இராணுவ வெற்றி மமதையில் அமைந்த போர்த் தீவிரத்தில் துடியாய்த் துடிக்கிறது இலங்கை அரசு.

மறுபுறத்தில், போரின் பேரனர்த்தத்தால் தவியாய்த் தவிக்கும் மக்களின் அவலக்குரலாக சர்வதேசத் தரப்புகளின் ஒப்புதலோடு கூடிய இந்த வேண்டுகோள் வருகிறது.
இந்த மக்களினதும், சர்வதேச ரீதியாக இம்மனுவில் ஒப்பமிடுவோரினதும் இந்தக் கருத்தியல் நியாயம் அரசினதும், அரசுத் தலைமையினதும் காதில் விழுமா? காலம்தான் பதில் தரவேண்டும்.

2007-12-29
Uthayan.com

0 Comments: