Monday, December 10, 2007

இன்னமும் நீடிப்பது எவ்வாறு?

முக்கிய பிரமுகர்களின் பயணத்தின் போது வீதித்தடைகள் ஏற்படுத்துவது சட்டவிரோதமானது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலென சிறிலங்கா உயர் நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை பிரதம நீதியரசர் சரத் என். சில்வா நிராகரித்தமை சற்று ஆச்சரியம் தருவதாகவே உள்ளது.

ஏனெனில் சட்டம், ஒழுங்கு என்பன முற்றிலும் சீரழிந்து போயுள்ள நிலையிலும்- மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையிலும் ராஜபக்ச ஆட்சியில் முதன்மை வகிக்கும் ஒருவரின் கோரிக்கையை பிரதம நீதியரசர் நிராகரித்துள்ளமையே தீர்ப்புக் குறித்து ஆச்சரியப்படக் காரணமாகும். ஆயினும் இம் மறுப்பானது, நீதியைக் காப்பாற்றுவதற்கான முயற்சி என்பதைவிட மகிந்த குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாகத் தீர்ப்பை அவர் அமுல்படுத்துவதில் உறுதியாகவுள்ளார் என்ற ரீதியிலேயே கொள்ளத்தக்கதாகும்.

அத்தோடு பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தீர்ப்பை மாற்றி எழுத முடியாதென மறுத்துள்ளமையானது தனிப்பட்ட ரீதியில் அவர் நீதியின்பால் கொண்டிருந்த உறுதிப்பாடு என்பதைவிட வீதித்தடைகளும் சோதனைகளும் பிரதம நீதியரசருக்கு ஏற்படுத்தியிருந்த இடர்பாடுகளும் தடைகளும் கூடக் காரணமாக இருக்கலாம்.

அதாவது மகிந்தவும் அவரது குடும்பத்தினரும் வீதிகளில் பயணிக்கும் போது ஏற்படுத்தப்படும் தடைகள் பிரதம நீதியரசர் உட்பட பலரையும் பாதிப்பிற்குள்ளாக்குவதாயிருந்தன. மகிந்த ராஜபக்ச வீதிகளில் பயணிக்கும்போது தடைகள் ஏற்படின் பிரதம நீதியரசர் போன்ற உயர்நிலைப் பதவி வகிப்போர் ஏற்றுக்கொண்டிருக்கலாம் ஆனால் மகிந்த குடும்பமும் அதன் பரிவாரங்களும் பயணிக்கும் போது காத்திருப்பதை பிரதம நீதியரசரோ அன்றி உயர் நீதிமன்ற நீதிபதிகளோ அன்றி அவர்களை ஒத்த பெரும் பதவிகளில் உள்ளோரோ ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்க வாய்ப்பில்லை.

பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவரின் கடந்தகால தீர்ப்புக்கள் குறித்தும் பல விமர்சனங்கள் உண்டு. அவற்றில் குறிப்பாக சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் இரண்டாவது பதவிப் பிரமாண விடயத்தில் இருந்து, வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரிப்பு, சுனாமிப் பொதுக்கட்டமைப்பிற்கு எதிரான தீர்ப்பு போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

இவை குறித்த நடவடிக்கைகளிலும் அதாவது சந்திரிகா குமாரதுங்காவின் இரண்டாவது சத்தியப்பிரமாண விடயத்தில் அவர் பின்னுக்கு முன் முரணாக நடந்து கொண்டமை, வடக்கு- கிழக்குப் பிரிவினை மற்றும் பொதுக்கட்டமைப்பு விடயத்தில் தேசத்தின் நலன் என்பதற்கும் மாறாக இனவாத சக்திகளின் வாதத்திற்கு முன்னுரிமை அளித்தமை போன்றமை பிரதம நீதியரசர் குறித்த பலமான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன.

ஆனால் அண்மையில் அவரது ஒரு சில தீர்ப்புக்கள் நீதியின் பாற்பட்டவையாகவும் மக்களினதும் தேசத்தினதும் நலன் கருதியதாகவும் அமைந்திருந்ததெனலாம்.

இந்நிலையில் தற்பொழுது எழும் கேள்வியானது பிரதம நீதியரசரின் தீர்ப்புக்கள் நீதியின் பாற்பட்டதா? அன்றி கோத்தபாய ராஜபக்ச போன்ற மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரின் நடவடிக்கைக்கு எதிரானதா? என்பதேயாகும்.

ஆனால் காரணம் எதுவாகிலும் இது மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரின் சர்வாதிகாரத்திற்கு சிறிதளவேனும் விடுக்கப்பட்ட சவாலாகவே கொள்ளத்தக்கதாகும்.

இந்நிலையில் மகிந்தராஜபக்ச குடும்பத்தினர் பிரதம நீதியருக்கு எதிரான நடவடிக்கையை இதுவரையில் எடுக்காதிருப்பது ஆச்சரியத்திற்குரியதொன்றே. அதாவது பாகிஸ்தான் அதிபர் முஷாரப் தமது அரசிற்கு எதிரான உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சௌத்திரியை நிறுத்தியது போல் சரத் என்.சில்வாவை நீக்காது இருப்பது ஆச்சரியத்திற்குரியதே.

நிச்சயமாக நீக்குவது குறித்து மகிந்தவின் பரிவாரங்கள் பாசீலிக்காமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் சிறிலங்காவில் அரசியல் யாப்பு என்பது இன்னமும் ஓரளவேனும் அமுலில் இருப்பதினாலும், அதனை இலகுவில் ஆட்சியாளர்களினால் தகர்த்துவிட முடியாதிருப்பதினாலும் பிரதமர் நீதியரசர் இன்னமும் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளக் காரணமாக இருக்கலாம்.

நன்றி: ஈழநாதம்

0 Comments: