Thursday, December 20, 2007

மகிந்தவின் யுத்தம் இலங்கை பூராவிற்குமானதே!

'எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் விடுதலைப் புலிகளை இல்லாது ஒழிப்பேன்" என சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் உயர்மட்டக் கூட்டத்தில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமையானது, அரசு பெரும் போர் ஒன்றிற்குத் தயாராகிவிட்டதன் பிரகடனமாகவே கொள்ளத்தக்கதாகும்.

சிறிலங்கா அரசு பெரும் போருக்கெனத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் வகை யில் அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியில் பூரண ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது என்பது அண்மைய அதன் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தும் ஒன்றாகும்.

இதன் ஓர் அங்கமாக ஆயுதப்படைக்கென வரவு-செலவுத் திட்டத்தில் ஏனைய துறைகள் அனைத்தையும் விட அதிகளவிலான நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. இது சிறிலங்காவின் அடுத்த ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தில் 18 வீதத்திற்கு மேற்பட்டதாகும்.

சிறிலங்கா அரசு 'ஓர் இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசு" என சர்வதேச ரீதியிலான மதிப்பீடு ஏற்படுத்தப்படும் அளவில் சிறிலங்காவில் இராணுவ மயமாக்கல் இடம்பெற்றுள்ளது. உலகில் இன்று குடித்தொகைக்கும், ஆயுதப்படையினருக்கும் இடையிலான விகிதாசாரம் உயர் நிலையில் உள்ள நாடுகளில் சிறிலங்காவும் ஒன்றாகும். தென்னாசியாவில் இது முதன்மை இடமாகும். அத்தோடு, கல்வி, சுகாதாரம், அபிவிருத்திப் பணிகள் என்பன வற்றைவிட ஆயுதப் படையினருக்கென அதிகளவு நிதி ஒதுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, சிறிலங்கா ஆயுதப் படையினரின் பெருக்கமானது முப்படைகளுக்கும் ஆளணிகளைச் சேர்த்தல், ஊர்காவற்படைக்கென ஆட்களைத் திரட்டுதல் என்ற அடிப் படையில் படைப்பலம் பெருக்கப்பட்டு வருகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக, யுத்த நிறுத்த உடன்பாட்டின் பின்னர் மூன்று டிவிசன் படையினரைச் சிறிலங்கா இராணுவம் உருவாக்கியுள்ளதைச் சுட்டிக்காட்ட முடியும்.

இதில் 57 ஆவது டிவிசன் மன்னாரிலும் 58 ஆவது டிவிசன் மணலாற்றிலும் 59 ஆவது டிவிசன் அநுராதபுரத்திலும் தள மையத்தைக் கொண்டவையாகச் செயற்பட்டு வருகின்றன. இதில், 59 ஆவது டிவிசன் அண்மைய வாரங்களில் உருவாக்கப்பட்டதொன்றாகும்.

இதேவேளை, வரவு-செலவுத்திட்ட நிறைவேற்றத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டு விடலாம் என எண்ணிய அரசாங்கம் தமது எதிர்கால இராணுவ நடவடிக்கைகளை இனவாதக் கட்சிகளிடம் - குறிப்பாக ஜே.வி.பி.யிடம் உறுதி செய்து வரவு-செலவுத் திட்டத்தை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றிக் கொண்டுள்ளது.

கொழும்பில் இருந்து கசியும் தகவல்களின்படி வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவைப் பெற்றுக்கொண்டதற்காக அடுத்த ஆண்டை ஒரு யுத்த ஆண்டாகக் கொள்ளவும், யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறி, முழு அளவில் யுத்தத்தைப் பிரகடனம் செய்ய அரசு தயாராக உள்ளதாகவும் இதனைப் பேரினவாதக் கட்சிகளிடம் அரசு உறுதி செய்திருப்பதாகவும் ஊர்ஜிதம் செய்யப்படுகிறது.

அதாவது, யுத்தத்திற்கென அரசு இராணுவ, பொருளாதார, அரசியல் ரீதியில் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளது. இதன் வெளிப்பாடாகவே இராணுவத் தளபதிகள், அமைச்சர்கள், ஆட்சித் தலைவர் உட்பட அனைவருமே யுத்தத்தைப் பற்றியும் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பது பற்றியும் பேசுகின்றனர். குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் வரையறுத்துக் கூறுவதானால், ஆறு மாத காலப் பகுதிக்குள் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்துவிடப் போவதாகவும், அதாவது புலிகளை அழித்து விடப் போவதாகவும் கூறுகின்றனர்.

ஆனால், இன்றைய களநிலவரம் எவ்வாறு உள்ளது? அரசாங்கத்தரப்போ, இராணுவத் தரப்போ கூறிக்கொள்வது போன்றதானதொரு நிலையில் அது உள்ளதா? அரசாங்கமோ இராணுவமோ கூறிக்கொள்வது போன்று யுத்தமானது வன்னிக்குள் - குறிப்பாக, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மட்டும் - மட்டுப்படுத்தப்பட்டு விட்டதா? என்பது போன்ற கேள்விக்குப் பதில் தேடும்போதும், இன்றைய கள யதார்த்தம் குறித்து எவருக்குமே பல கேள்விகள் எழக்கூடும்.

கிழக்கு மாகாணத்தில் - குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பிமலைப் பிரதேசத்தை இராணுவம் சென்றடைந்ததாகக் கூறிக் கொண்டதோடு, விடுதலைப் புலிகளை கிழக்கில் இருந்து முற்றாக வெளியேற்றி விட்டதாகப் பிரகடனம் செய்தது. இதற்கென அரச தரப்பில் பெரும் வெற்றி விழாவும் ஏற்பாடு செய்யவும்பட்டது.

ஆனால், தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கூட ஒன்றிற்கு மேற்பட்ட பிரிகேட் துருப்புக்களையும் பல நூற்றுக்கணக்கில் ஊர்காவற் படையினரையும் நிறுத்த வேண்டியதாகியுள்ளது. அவ்வாறு இருந்தும் தாக்குதல்கள் இடம்பெறவே செய்கின்றன.

குறிப்பாக, யால காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் அங்கு தேடுதல் நடத்துவதற்கு மேலதிக துருப்புக்கள் தேவையென்ற நிலையும் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. சிலர் விடுதலைப் புலிகளின் வான் படையின் ஓடுதளம் இருக்கக்கூடும் எனவும் எச்சரிக்கின்றனர். ஆனால், இது கிழக்கின் தென்கோடியில் மட்டும் உள்ள நிலை என்றில்லை. கிழக்கின் ஏனைய பகுதிகளிலும், அதாவது மட்டு.-திருமலைக்கும் இது பொருத்தப்பாடானதே ஆகும்.

இது ஒருபுறம் இருக்க, மேற்கில் மன்னார் மாவட்டத்தின் தெற்குக் கரையோரப் பகுதி நோக்கி இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு அதனை ஆக்கிரமித்துக் கொண்ட சிறிலங்காப் படைத்தரப்பு மன்னாரின் வட பகுதியிலும் தாக்குதல்களைத் தொடங்கியது.

மட்டுப்படுத்தப்பட்டவையாகவும் பாரிய அளவிலானதாகவும் மன்னாரின் வடக்கே குறிப்பாக மடுத் தேவாலயத்தைச் சூழவுள்ள பகுதிகளிலும் தம்பனை, அடம்பன் பகுதிகளிலும் சிறிலங்காப் படைத்தரப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், படை நடவடிக்கைகள் யாவும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. அத்தோடு, சேதங்களும் ஏற்படுத்தப்பட்டன.

அதிலும் குறிப்பாக, கால எல்லைகளுடன் கூடியதாக மடுத்தேவாலய வளாகத்தைக் கைப்பற்றும் நோக்கில் மேற்கொண்ட பல படை நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதோடு, இராணுவத் தரப்பிற்குப் பாரிய இழப்புக்களும் ஏற்படுத்தப்பட்டன.

அத்தோடு, இவ்வருடம் மாவீரர் நாளுக்கு அடுத்த நாட்களில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற மோதல்கள் சிறிலங்கா இராணுவத்தரப்பிற்கு சேதத்தை மட்டுமல்ல, அவர்களின் யுத்தத் தந்திரோபாயம் பற்றியதுமான கேள்விகளையும் எழுப்புபவையாக மாறியிருந்தன.

அது மட்டுமன்றி, அநுராதபுர மாவட்டத்தின் எல்லையோரமாக நடந்த கிளைமோர்த் தாக்குதல்களும், கெப்பிற்றிக்கொலாவவில் நடந்த தாக்குதலும் யுத்தமானது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மட்டுமல்ல, அதற்கும் அப்பாலும் அதாவது, கிழக்கில் யுத்தம் தரைவழியாக அம்பாந்தோட்டை வரையிலும் வியாபித்தது போன்று வடக்கில் தரைவழியாக அநுராதபுரம் வரையில் வியாபிக்கத்தக்கது என்பதை இத்தாக்குதல்கள் உறுதி செய்தன.

அதிலும் குறிப்பாக, ஒக்ரோபர் மாதத்தில் நடந்த அநுராதபுரம் வான் படைத்தளம் மீதான தாக்குதலானது வடக்கு-கிழக்கின் எல்லையோர மாவட்டங்கள் பாரிய தாக்குதல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்பதை ஊர்ஜிதம் செய்தன என்றே கூறலாம்.

இதேசமயம், மன்னார் மாவட்டத்தின் வடக்கு நோக்கி இதுவரை தாக்குதலை முனைப்புப்படுத்திய படைத்தரப்பு, இம்மாத ஆரம்பத்தில் மன்னார் மாவட்டத்தில் முன்னணி நிலைகளில் நடந்த மோதல்களை அடுத்து மன்னாரின் பாதுகாப்பு எனக்கூறி இரவு நேரப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளது. அதாவது, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரவு நேர ஊரடங்கு போன்றதொரு நிலையைத் தோற்றுவித்துள்ளது.

வவுனியா மாவட்டத்திலும் இதனையொத்ததொரு சூழ்நிலையே காணப்படுவதாகவுள்ளது. குறிப்பாக, ஏ-9 பாதை மதவாச்சிப் பகுதியில் இரவு நேரப் போக்குவரத்திற்கு மூடப்படுவதனால் வவுனியா நகரமும் மாலையாவதற்கு முன்பதாகவே அடங்கிப்போய்விடுகின்றது.

அது மாத்திரமன்றிச் சிறிலங்கா அரசாங்கம் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் அநுராதபுர மாவட்டத்தின் வடபகுதியையும் உள்ளடக்கியதான பெரும் பாதுகாப்புத் திட்டம் ஒன்றை உருவாக்க முற்பட்டுள்ளது என்பதே அண்மைய அதன் நடவடிக்கைகளின் வெளிப்பாடாகும்.

இவ்வாறு உருவாக்கப்படும் ஒரு வலயத்தின் பாதுகாப்பே தற்பொழுது உருவாக் கப்பட்டதும் அநுராதபுரத்தைத் தலைமையாகக் கொண்டியங்கும் 59 ஆவது பிரிகேட்டின் முக்கிய பணியாகக் கொள்ளப்படுகின்றது.

அதாவது, தென் தமிழீழத்தின் கோடியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவென ஒரு பிரிக்கேட் படையணியினரும் பல நூற்றுக்கணக்கான ஊர்காவற் படையினரும் சேவைக்கு அமர்த்தப்படுகையில் வட தமிழீழத்தின் தென் எல்லையில் களமுனைக்குப் பின்புலமாக நான்கு டிவிசன் (55, 57, 58, 59) துருப்புக்களும் பல ஆயிரம் ஊர்காவற்படையினரும் பணிக்கென நிறுத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.

இவை ஒருபுறம் இருக்க, கொழும்பில் கடந்த மாத இறுதியில் இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புக்களை அடுத்து அங்கு பாதுகாப்பிற்கெனவும் தேடுதல் நடவடிக்கைக்கெனவும் பல்லாயிரம் துருப்புக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆயினும், கொழும்பின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா? என்பது கேள்வியே.

இந்த வகையில், கடந்த ஓரிரு மாதங்களில் யுத்தத்தின் போக்கானது மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது போன்று வெற்றிப்பிரகடனங்கள் செய்யத்தக்கதாக அமையவில்லை என்பதே நிதர்சனமானதாகும். அவ்வாறானதொரு நிலை இருந்திருக்குமானால், மகிந்த ராஜபக்ச, வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகப் பேரங்கள் பேச வேண்டியதாகவோ, உறுதி மொழிகள் அளிக்க வேண்டியதாகவோ இருந்திருக்கமாட்டாது. வெற்றிப் பிரகடனம் ஒன்றுடன் வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேறச் செய்திருப்பார். மாறாக, யுத்தத்தின் போக்கில் ஏற்பட்ட திருப்பங்களும், பின்னடைவுகளுமே மகிந்த ராஜபக்ச அரசியல் பேரங்களை நடத்த வேண்டிய நிலையை உருவாக்கியிருந்தது.

அதிலும் குறிப்பாக, அநுராதபுரம் வான் படைத் தளம் மீதான தாக்குதல், அநுராதரபும் மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், மன்னார் களமுனையில் இராணுவம் சாதிக்க முடியாது போனமை மற்றும் ஏற்பட்ட இழப்புக்கள் என்பன யுத்தத்தின் எதிர்காலப் போக்கிற்குக் கட்டியங்கள் கூறத்தக்கவையே ஆகும்.

ஆனால், சிறிலங்கா அரசாங்கமோ, இராணுவமோ அதனைப் பொருட்படுத்தாது பெரும் போரை ஆரம்பிக்கும் என்பதையே தற்போதைய அரசின் பிரகடனங்கள் வெளிப்படுத்துவதாய் உள்ளன. ஆனால், சிறிலங்கா அரசு இத்தகையதொரு பாரிய யுத்தம் ஒன்றை நடத்துமானால் அதன் எதிர்த்தாக்கங்கள், விளைவுகள் என்பன பற்றி எதிர்வு கூறுதல் கடினமானதாக இருக்கமாட்டாது.

இதில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது யுத்தமானது, வன்னிக்கு மட்டுமோ அன்றி வடக்கு-கிழக்கிற்கோ மட்டுமானதாகவோ இருக்கப்போவதில்லை. அது இலங்கை பூராவிற்குமானதாக இருக்கும் என்றே உறுதியாக எதிர்பார்க்கலாம்.

இதேவேளை, பெரும் யுத்தம் ஒன்று மூளுமானால், அது எத்தகையதாக அமையலாம் என்பது சர்வதேச சமூகத்தினாலும் ஓரளவு புரிந்துகொள்ளத்தக்கதாக இருக்கும் என்றே நம்பலாம். ஆகையினால், இத்தகையதொரு யுத்தம் ஒன்று தொடங்கப்பட்டதன் பின் அது குறித்து அபிப்பிராயங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பதினால் பயன் ஏதும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

-ஜெயராஜ்-
நன்றி: ஈழநாதம் (19.12.07)

0 Comments: