-கலைஞன்-
தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கான காரணங்களை உருவாக்குவதற்கான சதி வேலைகளில் இந்திய உளவுத்துறையான `றோ' முனைப்புடன் ஈடுபட்டுவரும் அதேவேளை, இலங்கையில் விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளை திட்டமிடுவதில் இந்திய அதியுயர் மட்ட பாதுகாப்புக் குழு வெளிப்படையாகவே களமிறக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழகத்தில் இந்திய அரசினால் தடை செய்யப்பட்டுள்ளது. இத் தடை இரு வருடங்களுக்கொருமுறை நீடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளை இந்தியாவில் தடைசெய்வதாக மத்திய அரசு அறிவித்தது. அந்தவகையில் எதிர்வரும் மே மாதத்துடன் விடுதலைப்புலிகள் மீதான தடை இந்தியாவில் நீங்குகிறது.
விடுதலைப்புலிகள் மீதான தடையை 2008 மே மாதம் முதல் மீண்டும் இரு வருடங்கள் நீடிப்பதற்கு தமிழக அரசே மத்திய அரசிற்கு பரிந்துரை செய்ய வேண்டும். தமிழக அரசின் பரிந்துரை இல்லாமல் எந்தவொரு அமைப்பையும் மத்திய அரசால் தமிழகத்தில் தடைசெய்ய முடியாது. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிக்குமாறு தமிழக அரசு எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன் மத்திய அரசிற்குப் பரிந்துரை செய்தால் மட்டுமே விடுதலைப்புலிகளை தமிழகத்தில் தடை செய்யமுடியும்.
ஈழத்தமிழர் சார்பு போக்குக் கொண்ட தமிழக அரசு விடுதலைப்புலிகளை தடைசெய்வதற்கு மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யுமா என்பதே இந்திய உளவுத்துறையான `றோ' வினதும் மத்திய அரசில் உள்ள தமிழர் விரோத உணர்வுகொண்டவர்களினதும் தலையைக் குடையும் விடயமாகியுள்ளது. இதனாலேயே தமிழக அரசுக்கே புரியாத பல விடயங்கள் தமிழகத்தில் அண்மைக்காலமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் விடுதலைப்புலிகளை தடைசெய்வதற்கு தமிழக அரசு விரும்பியோ விரும்பாமலோ பரிந்துரை செய்யவேண்டிய சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு தமிழகத்திலுள்ள சில சுயநல அரசியல் கட்சிகளும் பார்ப்பன ஊடகங்களும் தூபம் போடும் வேலைகளில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் கடந்தவாரம் திடீரென சென்னை வந்த முன்னாள் `றோ' தலைவரும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகருமான எம்.கே. நாராயணன் தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் இல்லையெனக் கூறியதுடன் கருணாநிதியுடன் அவசர சந்திப்பொன்றை நடத்தியிருந்தமை பலரையும் குழப்பமடைய வைத்ததுடன் பல ஊகங்களையும் ஏற்படுத்தியது.
தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் இல்லையென தென்பிராந்திய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் நோபுள் தம்புராஜ் கூறிய கருத்தையே பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் உறுதிப்படுத்தியமை தமிழக அரசு எதிர்கொண்டுவந்த நெருக்கடியை ஓரளவு குறைத்துள்ள போதும் இக் கருத்துக்கு சில பின்னணிகளும் உண்டெனவும் தெரியவருகிறது.
இலங்கையில் பாகிஸ்தானின் செல்வாக்கு அதிகரித்து வருவது இந்திய அரசுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. அதனால் பாகிஸ்தானை விடவும் அதிக உதவிகளை இலங்கையரசுக்கு வழங்குவதன் மூலமே இலங்கையில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முடியுமென்பது மத்திய அரசுக்கு தெரிந்த விடயம். ஆனால், இலங்கையரசுக்கு உதவினால் தமிழ் நாட்டின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டுமென்பதும் மத்திய அரசுக்கு தெரியும்.
தமிழ் நாட்டு அரசை எதிர்த்துக்கொண்டு இலங்கையரசுக்கு உதவுவதை விட தமிழ்நாட்டு அரசை அரவணைத்தவாறே இலங்கையரசுக்கு உதவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனாலேயே விடுதலைப் புலிகளினால் தமிழ்நாட்டு அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்திய மத்திய அரசே இன்று அந்த நெருக்கடிகளிலிருந்து தமிழ் நாட்டு அரசை பாதுகாக்கவும் முனைகிறது.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு தமிழக அரசின் பரிந்துரை அவசியமென்பதாகவும் இலங்கையரசுக்கு தமிழகத்தின் எதிர்ப்பின்றி உதவவேண்டிய தேவையிருப்பதாலும் விடுதலைப்புலிகள் தொடர்பில் தமிழக அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தாமல் தனது கைக்குள் போட்டுக் கொள்ள மத்திய அரசு முயற்சிக்கிறது.
புலிகளுக்கு ஆதரவளிப்போர் தமது முதல் எதிரியென பிரகடனப்படுத்தி தி.மு.க. அரசுடன் மல்லுக்கட்டி வந்த தமிழக காங்கிரஸ் கட்சி திடீரென பல்டி அடித்து கருணாநிதியை துதிபாடத் தொடங்கியது. தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி செலுத்திய விவகாரத்தை பூதாகரமாக்கிய காங்கிரஸ் அதனை வைத்தே கருணாநிதியை கடுமையாக வசை பாடியதுடன் ஆட்சியை கலைப்போம் எனவும் எச்சரித்திருந்தது.
திடீரென கருணாநிதி புலிகளுக்கு ஆதரவானவரல்ல. அவர் தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி செலுத்தி எழுதிய கவிதையில் கூட புலிகளுக்கு ஆதரவான சொற்கள் இருக்கவில்லை என விளக்கமளித்து அறிக்கை விட்டது. அத்துடன் தமிழ்ச்செல்வன் தொடர்பான விடயங்களில் காங்கிரஸுக்கும் தி.மு.க.வுக்குமிடையில் எந்தவித விலகலும் ஏற்படவில்லையெனவும் தெளிவுபடுத்தியது.
பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனின் அவசர சென்னை விஜயத்துக்கு இந்திய பாதுகாப்பு தரப்பின் உயர்மட்டக் குழுவின் இலங்கை விஜயமே பிரதான காரணமெனக் கூறப்படுகின்றது. இந்திய பாதுகாப்பு உயர்மட்டக் குழுவின் இலங்கை விஜயம் குறித்தும் அதற்கான அவசியம் குறித்தும் கருணாநிதிக்கு நாராயணன் தெளிவுபடுத்தியிருந்தார்.
அத்துடன் டில்லி முதலமைச்சர்கள் மாநாட்டிற்கு புலிகளின் தீவிர ஆதரவாளரான கருணாநிதியை மத்திய அரசு அழைத்தது தவறென ஜெயலலிதா விடுத்த கண்டன அறிக்கையையும் மத்திய அரசு தனக்கு சாதகமாக்கிக் கொண்டது. கருணாநிதி குறித்து எவர் என்ன சொன்னாலும் தாம் கருணாநிதி மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாக காட்டிக் கொள்ள மத்திய அரசு இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டது.
நாராயணனின் போதனைக்கும் காங்கிரஸ் கட்சியின் பல்டிக்கும் மத்திய அரசுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. கடந்த வாரம் டில்லியில் பிரதமர் தலைமையில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் கருணாநிதி இலங்கை மற்றும் மலேசிய நாட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் தான் தலையிடப் போவதில்லையெனக் கூறி மத்திய அரசுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
இலங்கையரசுக்கான மத்திய அரசின் பகிரங்க உதவிகளுக்கு தமிழக அரசின் பூரண ஒத்துழைப்பை இந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் மத்திய அரசு கருணாநிதியிடமிருந்து பெற்றுக் கொண்டுவிட்டது. இனி அடுத்ததாக விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கான பரிந்துரை தமிழக அரசிடமிருந்து கிடைக்க வேண்டும். அதில் மத்திய அரசுக்கு பெரிதாக சிக்கல்கள் இருக்கப் போவதில்லை.
இந்திய பாதுகாப்புக் குழுவின் இலங்கை விஜயம்
இதுவரை காலமும் மறைமுகமான உதவிகளை இலங்கையரசுக்கு வழங்கிவந்த மத்திய அரசு தற்போது நேரடியாகவே களத்தில் இறங்கிவிட்டது. அதன் ஒருகட்டமாகவே இந்திய பாதுகாப்பு உயர்மட்டக் குழுவொன்று கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை பாதுகாப்பு அமைச்சரின் செயலர் மற்றும் முப்படைத் தளபதிகளையும் சந்தித்துள்ளது.
இலங்கைக்குச் சென்ற இந்திய உயர்மட்ட இராணுவ பாதுகாப்பு அமைச்சுக் குழுவில் இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிமல் ஜுல்கா,இந்திய வெளிவிவகார அமைச்சின இணைச் செயலாளர் ரி.எஸ்.திமுத்தி, இராணுவ தலைமையக தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் எஸ்.கே. சின்ஹா, இந்திய விமானப்படையின் தென் பிராந்திய கட்டளை தலைமையகத்தைச் சேர்ந்த ஏ.வி.எம். ராஜேந்திரசிங், கடற்படை தலைமையகத்தைச் சேர்ந்த கப்டன் எம்.அகர்வல், கரையோர காவல் படையைச் சேர்ந்த ரி.பி.சதானந்தன் மற்றும் பாதுகாப்பு அமைச்சை சேர்ந்த கப்டன் பிரதீப் சிங் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
முப்படைகளையும் சேர்ந்த இந்திய உயர்மட்டக் குழு இலங்கைக்கு விஜயம் செய்ததன் மூலம் இலங்கைப் பிரச்சினையில் தலையிடாக் கொள்கையை கடைப்பிடித்துவந்த மத்திய அரசு தற்போது தலையிடும் கொள்கைக்கு வந்துள்ளது தெளிவாகிறது.
இலங்கை சென்ற இக்குழு விடுதலைப்புலிகளின் விமானப்படை குறித்தே அதிக கவனம் செலுத்தியதுடன் விடுதலைப்புலிகளின் விமானப்பலம் குறித்து இந்திய அரசு கொண்டுள்ள கவலையையும் இலங்கைத் தரப்புக்கு கூறியுள்ளனர். அத்துடன் புலிகளின் விமானப்படையை அழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் இலங்கைப் பாடைத்தரப்புக்கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வுழங்கியுள்ளனர்.
அத்துடன் இலங்கை விமானப்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடவும் இந்திய குழு இணக்கம் தெரிவித்துள்ளது. இது தவிர இலங்கைப்படைகளுக்கு தேவையான ஆயுத உதவிகள், இராணுவ நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்கள், உளவுத் தகவல்கள் போன்றவற்றை வழங்கவும் இந்திய உயர்மட்டக் குழு உறுதியளித்துள்ளது.
இலங்கையரசு விடுத்த அழைப்பையடுத்தே இந்திய உயர் மட்டக் குழு அங்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் புலிகளின் விமானப்படையில் இலங்கையடைந்திருக்கும் அச்சத்தின் அதேயளவை இந்தியாவும் கொண்டுள்து. அத்துடன் இலங்கை விமானப்படையில் பாகிஸ்தான் கொண்டிருக்கும் ஆதிக்கத்தைத் தடுக்க வேண்டிய நிலை இந்தியாவுக்குள்ளது.
இலங்கை விமானப்படைக்கு தேவையான உபகரணங்கள், பயிற்சிகளை இந்தியா ஏற்கனவே வழங்கியுள்ளது. ஆனாலும் விடுதலைப்புலிகளின் விமானப்படை தொடர்ந்து பலமடைந்து வருவது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 25 இல் கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீது தமது முதலாவது தாக்குதலை நடத்திய புலிகளின் விமானப்படையினர் அதன்பின்னர் ஏப்ரல் 24 இல் பலாலி விமானப்படைத் தளம் மீதும் ஏப்ரல் 28 இல் கொலன்னாவை எண்ணெய்க் குதங்கள் மீதும் அக்டோபர் 22 இல் அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
புலிகளின் இந்த விமானத்தாக்குதல்கள் எவற்றையும் இலங்கை விமானப்படையால் தடுத்து நிறுத்த முடியவில்லை. புலிகளின் தாக்குதலினால் இலங்கை விமானப்படை 20 க்கு மேற்பட்ட தமது விமானங்களையும் இழந்திருந்தது. இதனால் புலிகளின் விமானபடைபலம் பெற்றது. இந்த நிகழ்வே இந்தியாவை அதிகம் கவலைகொள்ள வைத்தது.
இதன் வெளிப்பாடாகவே தமிழகத்தில் அண்மையில் இந்திய படைகள் `ஒபரேஷன் தக்ஷின் பரகார்' என்ற பெயரில் பாரிய போர் ஒன்றை ஒத்திகை நடத்தியிருந்தனர். அரசுகள் அல்லாத சக்திகளின் விமானத் தாக்குதல்களிலிருந்து எண்ணெய்க் குதங்கள், அணுஉலைகள், துறைமுகங்கள், விமானநிலையங்களை பாதுகாப்பது எவ்வாறென்பது தான் இந்த போர் ஒத்திகையின் நோக்கமாகும்.
புலிகளின் விமானப்படை இந்தியாவுக்கு தலையிடியைக் கொடுத்தாலும் இலங்கை விமானப்படையில் பாகிஸ்தான் விமானிகள் இருப்பது தான் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் புலிகளின் விமானங்களை கண்காணிக்கவென அமெரிக்காவால் கொடுக்கப்பட்ட அதி நவீன ராடர்கள் மூலம் தமது நாட்டையும் உளவு பார்க்க முடியுமென இந்தியா கருதுகிறது. இதனாலேயே இலங்கையில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட முயற்சிக்கின்றது.
இலங்கையில் பாகிஸ்தானின் தலையீடு குறித்து இந்தியா அதிக அக்கறை கொண்டுள்ளமையை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கைக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதுவர் முஹமட் வலி தெரிவித்த குற்றச்சாட்டை கருதலாம். தன்மீது கொழும்பில் நடந்த குண்டுத்தாக்குதலுக்கு இந்திய உளவுத் துறையின் `றோ' வே காரணமென அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இலங்கைக்கு பாகிஸ்தான் இராணுவ உதவிகளை வழங்குவதை இந்தியா விரும்பாததாலும் தான் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.ஏ.எஸ்.ஸின் தலைவராக இருந்த காரணத்தாலுமே தன்னை இலங்கையில் வைத்து கொல்வதற்கு `றோ' முயற்சி செய்ததாகவும் முகம்மட் அலி மேலும் தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் இலங்கை தொடர்பில் இந்தியா கொண்டுள்ள இராணுவசார் நலன்களை தெரிந்து கொள்ள முடியும்.
இந்தியா தனது உயர்மட்ட பாதுகாப்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பியமை தொடர்பாக தமிழக அரசு எவ்விதமான பிரதிபலிப்பையும் காட்டவில்லை. மாறாக டில்லி முதல்வர்கள் மாநாட்டில் இலங்கை விடயத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையில் தலையிடப்போவதில்லை என்ற அறிவிப்பை கருணாநிதி வெளியிட்டிருந்ததால் மத்திய அரசு இன்னும் உற்சாகம் அடைந்துள்ளது.
இந்திய உயர்மட்ட பாதுகாப்புக் குழு இலங்கைக்கு சென்றமை தொடர்பில் வைகோ, திருமாவளவன், பழ.நெடுமாறன் போன்றோர் வழக்கம் போலவே தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அதனை வழக்கம்போலவே மத்திய அரசு கருத்திலெடுக்காது தட்டிக் கழித்து விட்டதுடன் இலங்கைக்கென தமது இராணுவ உதவிகளை தொடரவும் முடிவு செய்துள்ளது.
இவ்வாறான நிலையை தமது இராணுவ, பொருளாதார நலன்களுக்காக பயன்படுத்துவதற்கு பல நாடுகளிடையே ஏற்பட்டுள்ள ஆதிக்க போட்டியினால் ஒரு இனத்தின் சுதந்திர விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
23.12.2007
-கலைஞன்-
Sunday, December 23, 2007
புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கான காரணங்களை உருவாக்கும் சதியில் `றோ'
Posted by tamil at 8:05 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment