Saturday, December 1, 2007

இந்திய வம்சாவளி மக்கள் மலேசியாவில் நடத்தும் போராட்டம்

இனரீதியாகத் தாங்கள் ஒதுக்கப்படுகின்றார்கள் எனத் தெரி வித்து, சம உரிமையும், கௌரவ வாழ்வும் கோரி, மலேசியா வில் போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இப்போது தங்களின் ஆதர்ஸ வழிகாட்டியாக அஹிம்ஸை நெறி போதித்த மஹாத்மா காந்தியை மனதில் நிறுத்தியிருக்கின்றார்கள். ஆனால் அவர்களின் நியாய மான ஆதங்கங்களைப் புரிந்து கொண்டு அவற்றை நிவர்த்தி செய்ய மலேசிய ஆட்சியாளர்கள் மறுத்து, தொடர்ந்தும் அடக்கு முறையையே கையாளுவார்களானால் அவர்கள் தங்களு டைய ஆன்ம வழிகாட்டியாக மஹாத்மா காந்திக்குப் பதிலாக வேலுப் பிள்ளை பிரபாகரனை மனம் கொள்ளவேண்டி நேரும் என எச்சரிக்கப்பட்டிருக்கின்றது.

மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளியினரின் குறிப் பாக அங்குள்ள தமிழர்களின் பிரச்சினை இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளோடு ஒப்பிட்டு நோக்கத்தக்கவை.
இலங்கையின் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த ஈழத் தமிழர்களு டன் மட்டுமல்லாமல், மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களோடும் ஒப்பிடத்தக்க நிலைமையில் மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரச்சினைகள் சமாந்தர மாக அமைந்துள்ளன.
இலங்கையின் மத்திய மலையகப் பகுதிகளுக்கு இந்திய வம்சாவளித் தமிழர்களை சுமார் இரண்டு நூற்றாண்டு களுக்கு முன்னர் கூலித் தொழிலாளர்களாகக் கூட்டி வந்து குடியேற்றியவர்கள் இந்த இலங்கைத் தீவை தமது ஆதிக் கத்தில் அச்சமயம் வைத்திருந்த பிரிட்டிஷாரே.
அதேபோல சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் மலேசியாவையும் தமது ஆக்கிரமிப்பு ஆதிக்கத்துக் குள் வைத்திருந்த பிரிட்டிஷாரே அங்கேயும் இந்திய வம்சா வளி மக்களைக் கூலித் தொழிலாளர்களாகக் கூட்டிச் சென்று குடியேற்றினர்.

இரண்டு நாடுகளிலும் தாம் குடியேற்றிய மக்களுக்கு நியா யமான வாழ்வுரிமைகளும், கௌரவமான வாழ்வும் ஏற்படுத் திக் கொடுப்பதை உறுதிப்படுத்தாமல், அவர்களை வெறும் அடி மைக் கூலித் தொழிலாளர்களாக அந்தந்த நாடுகளின் பெரும் பான்மை இன ஆட்சியாளர்களிடம் இலங்கையில் சிங்கள அதிகார வர்க்கத்திடமும் மலேசியாவில் மலேசிய ஆட்சியாளர் களிடமும் ஒப்படைத்து அந்தப் பிரச்சினைகளை அங்கங் கேயே கைகழுவிவிட்டு கப்பலேறியவர்கள் பிரிட்டிஷாரே.

அதேபோன்றுதான் இலங்கையின் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் பிரச்சினையையும் பிரிட்டிஷார் கையாண்டு, பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டுச் சென்றிருக்கின்றார்கள்.
தாங்கள் இலங்கைத் தீவில் வந்திறங்கி, இந்தத் தீவை ஆக்கிரமிக்க முற்பட்டபோது இங்கு தமிழர் தேசமும், சிங்கள வர் தேசமும் தனித்தனி மொழி, வாழ்க்கைமுறை, வாழிடப் பிரதேசம், பண்பாடு ஆகியவற்றுடன் வெவ்வேறாக இருந்த தையே ஆங்கிலேயர்கள் கண்டார்கள். ஆனால் பின்னர் இரண்டு தேசத்தையுமே கைப்பற்றி தமது ஆளுகைக்குள் கொண்டு வந்த பிரிட்டிஷார், பின்னர் தமது ஆட்சி நிர்வாக வசதிக்காக 1833 இல் தமிழர் தேசத்தையும் சிங்களவர் தேசத்தையும் நிர் வாக ரீதியாக ஒன்றிணைத்தனர். ஆனால் 1948 இல் இந்த நாட் டை விட்டுத் தாம் வெளியேறியபோது தீவின் பெரும்பான்மை யினரான சிங்களவர்களிடம் அதுவரை தாம் அடிமைப்படுத்தி வைத்திருந்த தமிழர் தேசத்தின் இறைமையையும் சேர்த்து ஒப்படைத்து, ஈழத் தமிழர்களை சிங்கள தேசத்தின் நிரந்தர அடிமைகளாக்கிச் சென்றனர்.
இவ்வாறு வெள்ளைக்கார தேசம் பொறுப்பின்றிச் செயற்பட்டதன் விளைவை இன்று இனப்போராக இலங்கை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
அதேநிலைமை மலேசியாவுக்கும் ஏற்படும் ஆபத்துச் சூழ்ந்துவருகின்றது.

தங்களுடைய இறைமையை, கௌரவ வாழ்வை, சுதந்திர உரிமையை, சுயநிர்ணயத்தை சிங்கள தேசம் ஆக்கிரமித்து, அடிமைப்படுத்தியபோது அவற்றை மீளப் பெறுவதற்காக ஈழத் தமிழர்களும் ஆரம்பத்தில் சுமார் மூன்றரை தசாப்த காலம் அறவழிப்பட்ட, அஹிம்சைப்பாதையில் நெறிக் கப்பட்ட, சாத்வீக முறையிலான போராட்டங்களையே முன்னெ டுத்தனர். அந்தப்போராட்டங்கள் அடக்குமுறையையே ஒரே எண்ணமாகக் கொண்ட ஆட்சியாளர்களால் இராணுவப்பலம் கொண்டு நசுக்கி ஒடுக்கப்பட்டபோதே, ஈழத் தமிழ ரின் உரிமைக் கான போராட்டம் புரட்சிகர வன்முறை வடிவத்தை எடுத்தது.

இப்போது மலேசியாவில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் முன்னெடுக்கும் வாழ்வியல் உரிமை மற்றும் நீதிக்கான போராட் டமும், அதன் பின்புலத்தில் புதைந்து கிடக்கும் நியாயங் களும் உரிய முறையில் செவிமடுக்கப்படாமல் ஆட்சியாளர்களின் படைப் பலாத்காரத்தால் அடக்கப்படுமானால் அப்போராட்டமும் கூட வன்முறைப் புரட்சி வடிவம் எடுக்கும் ஆபத்து நிலையே உண்டு.

ஆனாலும் இலங்கையில் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களினதும், மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளி மக்களினதும் போராட்டங்களும் ஈழத் தமிழர் களின் போராட்டமும் அடிப்படையில் வித்தியாசமானவை.

ஈழத் தமிழர்களின் போராட்டம் தனித்தாயகம், தேசியம், தன் னாட்சி உரிமை அல்லது சுயநிர்ணய உரிமை ஆகிய மூலா தாரக் கோட்பாடுகளின் அடிப்படையிலானது. தங்கள் தேசத் தில், தங்களின் தேசிய உரிமையை அவர்கள் கோருகிறார்கள்.

ஆனால், மலேசியாவிலும் இலங்கையிலும் வாழும் இந்திய வம்சாவளி மக்களினது போராட்டங்கள் நியாயமான வாழ்வுரிமைக் கானவை. தாங்கள் குடியேறிய நாட்டில் சமவுரிமை வாழ்வு வேண்டி அவர்கள் போராடுகிறார்கள். மற்றைய இனத்துக்கு நியாயம் செய்ய வேண்டும் என்ற நீதியான மனவியல்பு மனமாற்றம் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்திருக்கும் பெரும்பான்மை இனத்தவருக்கு ஏற்படுமானால் இந்த இரு நாட்டு மக்களினதும் பிரச்சினைகள் சுலபமாகத் தீர்த்துக் கொள்ளக் கூடியவை.

ஆனால் இலங்கையில் பேரினவாத சகதியில் சிக்கிக்கிடக் கும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு பௌத்த, சிங்களப் பேரின வாதிகளுக்கு அந்த மனமாற்றம் ஏற்படும் என்று நம்பு வதற்கான ஏதுநிலையைக் காணமுடியவில்லை.

எனினும், 1950 களின் கடைசியில் சிங்கப்பூர் தனிநாடா கப் பிரிந்து போவதற்கு அதிகாரப் பிடியைத் தளர்த்தி, தாராள மாக உடன்பட்டு, விட்டுக்கொடுத்த மலேசியர்களால் இப் போது அங்கு வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு நியாயம் செய்யமுடியாமல் இருப்பதைத்தான் புரிந்து கொள்ள இயலாமல் இருக்கிறது.
uthayan.com
1.12.2007

0 Comments: