சமீபத்தில் விடுதலைப் புலிகளின் அசியல்துறைத் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் சிறிலங்கா விமானப் படையின் தாக்குதலொன்றில் தற்செயலாக கொல்லப்பட்டார்.
விடுதலைப் புலிகளின் அதிர்ச்சி வைத்தியமான அனுராதபுரத் தாக்குதலால் நிலை குலைந்து போன சிறிலங்காவின் ஆளும் பிரிவினர், தமிழ்ச்செல்வன் அவர்கள் மீதான தாக்குதலை தமது நீண்டநாள் தாக்குதல் நகர்வுகளுக்கு கிடைத்த வெற்றியென கொண்டாடினர்.
தமது ஆட்சியை தக்க வைப்பதற்கு இராணுவ வெற்றிகளை மட்டுமே நம்பியிருக்கும் மகிந்த அணியினர், தமிழ்ச்செல்வன் அவர்களது மறைவை பெரியளவில் கொண்டாடியதில் நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
தமிழ்ச்செல்வன் அவர்களது இழப்பு தமிழ் மக்கள் மத்தியில் கவலையையும், ஒருவிதமான சோர்வையும் ஏற்படுத்தியதை பரவலாக அவதானிக்க முடிந்தது. மக்களின் கவலையினதும் ஆதங்கத்தினதும் வெளிப்பாடானது, மீட்கப்பட்ட பகுதிக்கும் ஆக்கரமிக்கப்பட்ட பகுதிக்கும் இடையில் பெரியளவில் வேறுபாட்டை கொண்டிருந்தது.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களின் உணர்வு வெளிப்பாட்டில் உள்ள வரையறையை நாம் விளங்கிக்கொண்டாலும் வெறும் அனுதாபங்கள் தேசியத்திற்கு தேவையற்றவை என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது.
அதேவேளை சமீபகால புலிகளின் பொறுமையும், கிழக்கில் இழப்புக்களை தவிர்க்கும் வகையில் புலிகள் மேற்கொண்ட தந்திரோபாய நகர்வுகளும் தமிழ் மக்கள் மத்தியில் சோர்வையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தியது உண்மை.
இராணுவ தந்திரோபாய நகர்வுகள் நமது சாதாரண அறிவுகளுக்கு எட்டக்கூடியவையல்ல.
விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல வகையான இழப்புக்களை சந்திருக்கின்றனர். ஏற்கனவே கேணல் கிட்டு, கேணல் சங்கர், போன்றவர்களின் இழப்புக்களை அவர்கள்; எதிர்கொண்டிருக்கின்றனர். இவ்வாறான இழப்புக்கள் ராணுவ அர்த்தத்தில் மிகவும் கனதியுடையவையாகும்.
அதே வேளை துரோகங்களாலும், காட்டிக் கொடுப்புக்களாலும், வல்லாதிக்க தலையீடுகளாலும் பல இழப்புக்களை நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.
தெற்காசியாவின் பலம் பொருந்திய சக்தியும் உலகின் நான்காவது வல்லரசுமான இந்தியாவை புலிகள் எதிர்கொண்டிருக்கின்றனர்.
சுங்கான் பற்றி முடிவதற்குள் புலிகளை அழித்துவிடுவதான ஆதிக்க குரல்களை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். அவ்வாறான சந்தர்பங்களில் எல்லாம் மன உறுதியாலும், தலைவர் பிரபாகரனின் மதிநுட்ப வழிகாட்டலாலும் இழப்புக்களை உரமாக்கி வென்றிருப்பதே தமிழர் தேசத்தின் ஆயுத வழி போராட்ட வரலாறு.
தமிழர் தேசம் இழப்புக்களை சந்திக்கும் போதெல்லாம் நாம் இந்த உண்மையை மனதில் இருத்த வேண்டும்.
சிங்களம் புரிந்துனர்வு ஒப்பந்தத்தை ஒரு பொறியாக்கி தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க முற்பட்ட போது புலிகள் அதனை முறியடிக்கும் வகையில் சில தந்திரோபாய நகர்வுகளை மேற்கொண்டனர்.
குறிப்பாக ரணிலின் தலைமையிலான ஜக்கிய தேசியக்கட்சி, புலிகளை பேச்சுவார்த்தை என்ற வலைக்குள் நிரந்தரமாக சிக்க வைப்பதற்கான காய்களை நகர்த்தியது.
புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான புரிந்துனர்வு ஒப்பந்தமானது புலிகளின் இராணுவ வலுச்சமநிலையை அங்கீகரித்து உருவாக்கப்பட்ட ஒன்று.
உண்மையில் இந்த ஒப்பந்தத்திற்குள் ரணில் தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி பிரவேசித்ததன் பின்னணியில், இரண்டு திட்வட்டமான காரணங்கள் இருந்தன.
ஒன்று புலிகள் மேலும் இராணுவ ரீதியாக முன்னேறுவதை தடுத்தல் மற்றையது பேச்சுவார்த்தையை ஒரு பொறியாக்கி புலிகளின் இராணுவ ஆற்றலை படிப்படியாக சீர்குலைத்தல்.
பலஸ்தீன மற்றும் கொலம்பிய அனுபவங்கள் இவ்வாறன படிப்பினைகளை வழங்கியிருக்கின்றன. இதற்குப் பின்னால் சில வல்லாதிக்க சக்திகளின் ஆலோசனை நிகழ்சி நிரலும் இருந்திருக்கக்கூடும். இந்த சவாலை உடைக்கும் வகையிலேயே புலிகள் ஆட்சி மாற்றமொன்றை விரும்பினர்.
சதாரணமாகப் பார்த்தால் ரணில் தீர்வுகளை தருபவர் போன்றும், தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை உள்ளவர் போன்றும் தெரியக்கூடும். ஆனால் உண்மை வேறு. ரணிலுக்கும் மகிந்தவிற்கும் இடையில் உள்ள வேறுபாடு மிகவும் தெளிவானது.
ரணில் நல்ல முகம் காட்டி கோரங்கள் புரிவார், மகிந்த தனது கோரத்தை நியாயப்படுத்த இனிய முகங் காட்டுவார். நமக்கான அரசியல் அர்த்தத்தில் இரண்டாவது வகையினர் நன்மை செய்வர் என்ற அடிப்படையிலேயே புலிகளின் ஆட்சி மாற்றமொன்றை விரும்பினர்.
புலிகளின் ஒவ்வொரு முடிவும் நீண்டகால நோக்கில் தமிழர் தேசத்திற்கு நன்மைகளை கொண்டு வரும் ஆற்றல் கொண்டது.
இதிலுள்ள துரதிர்ஸ்டவசமான நிலைமை என்னவென்றால் நமது படித்தவர்கள் என்று சொல்லுபவர்கள் கூட இந்த அடிப்படைகளை விளங்கிக் கொள்ள முயல்வதில்லை. இதனால்தான் அவர்கள் படித்தவர்களாக வலம் வரக் கூடியதாக இருக்கின்றதோ என்னவோ.
ரணிலின் புன்னகை பூத்த முகத்தில் மயங்கி 'இவங்கள் அவசரப்பட்டிட்டாங்கள்" என்று சலித்துக் கொள்வதை கேட்க முடிகிறது.
எப்போதுமே, புலிகளது முடிவில் தடுமாற்றங்களற்ற பார்வை நமக்கு அவசியம்.
அவ்வாறான பார்வையை சாமானிய மக்களுக்கு உணர்த்தும் வகையில் தமிழ்த்; தேசிய சக்திகள் தொழிற்பட வேண்டியிருக்கிறது.
இன்று தமிழர் தேசிய அரசியலானது, நமது விடுதலை அர்த்தத்தில் இறுதி கட்டத்தில் நிற்கிறது. சிங்கள ஒடுக்குமுறை வரலாற்றில் என்றும் இல்லாதவாறான ஒரு இராணுவ மேலாதிக்க அரசியல் இன்று உருவாகியிருக்கிறது.
புலிகளின் பொறுமைக்கு பின்னால் இருந்த நிகழ்சி நிரலும் இதுதான். பிரேமதாச காலத்தில் இவ்வாறானதொரு அரசியல் தெற்கில் நிலவியது. புலிகளை அழித்தொழித்தல் என்னும் பெரும் எடுப்பிலான நகர்வுகளில் சிங்களம் இறங்கியது.
இராணுவ ரீதியில் புலிகளும், விடுதலை அர்த்தத்தில் தமிழர் தேசமும் மிகவும் பலமடைந்ததுடன் எதிரிக்கு மிக மோசமான தோல்விகளின் வரலாறாகவும் அக்காலம் அமைந்தது.
அதிலிருந்து மீள்வதற்கான திட்டங்களுடன் சந்திரிக்கா குமாரதுங்கா வந்தார். சிங்கள பெரும் தேசியவாதத்தின் வரலாற்று ரீதியான போக்கானது, தமிழர்களை தமக்கு கீழ் அடிமைப்படுத்துதல் என்பதையே பிரதான திட்டமாக கொண்டிருக்கும். எந்த ஆட்சி வந்தாலும், எந்த சிங்கள தலைவர் வந்தாலும் இதுதான் தெற்கின் அரசியல் நிலைப்பாடாக இருக்கும்.
சந்திரிகாவும் தனது பங்கிற்கு இராணுவ ரீதியாக புலிகளை பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.
மிக மோசமான தோல்விகளின் காலமாக அவரது அரசியல் வரலாறு முடிவுற்றது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், சிங்கள மேலாதிக்கத்தின் கீழ் தமிழர்களை அடக்கி ஒடுக்குதல் என்பது புலிகள் இருக்கும் வரை ஒருபோதும் நடக்கப்போவதில்லை.
எனவேதான் சிங்களத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் போதெல்லாம், பெரும் எடுப்பில் புலிகளை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்படுகின்றன. இதன் பின்னால் தமிழர்களை அடிமைப்படுத்த வேண்டுமென்பதில் தீவிரமாக இருக்கும் சிங்கள பௌத்த மதபீடமும், சிங்கள ஆளும் வர்க்கமும் கைகோர்த்து நிற்கிறது. எந்த அரசு வந்தாலும் இந்த இரண்டு தரப்பினரும் புலிகளை அழித்தொழிக்க வேண்டுமென்பதில் சமரசமற்ற முறையில் அரசை ஆதரிப்பர்.
இப்பொழுது மகிந்த அவரது பங்கிற்கு அவரது முன்னோர்கள் காட்டிய வழியில் புலிகளை அழித்தொழிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார். சந்திரிகாவின் நப்பாசைக்கு இராணுவ ரீதியில் முண்டு கொடுக்க அவரது மாமனார் அனுருத்த ரத்வத்தைக்கு இருந்தது போன்று, மகிந்தவின் நப்பாசைக்கு முண்டு கொடுக்க அவரது சகோதரர்கள் வந்திருக்கின்றனர்.
மகிந்தவிற்கு பல கனவுகள் உண்டு. சந்திரிகா போன்று தொடர்ந்து தனது ஜனாதிபதி காலத்தை நிறைவு செய்ய வேண்டும், பண்டாரநாயக்கா குடும்பத்தின் அரசியல் ஆதிக்கத்தை இல்லாதொழித்து ராஜபக்ச குடும்ப அரசியலை நிலைநிறுத்த வேண்டும், சிங்கள மக்கள் மத்தியில் வரலாற்று நாகயனாக இடம்பெற வேண்டும் இப்படி பல கனவுகளின் சங்கமம்தான் யுத்தத்தில் புலிகளை தோற்கடிக்க வேண்டுமென்ற மகிந்தவின் ஆசை.
மகிந்தவிற்கு இன்னொரு ஆசையும் இருக்கக் கூடும். தனது ஜனாதிபதி காலத்திற்கு பின்னர் பிரதமர் ஆட்சியை கொண்டு வருவதன் மூலம் தொடர்ந்தும் அதிகாரத்திலிருத்தல். இப்படியொரு ஆசை சந்திரிகாவிற்கும் இருந்தது.
இதிலுள்ள சுவையான விடயம் என்னவெனில், சந்திரிகாவின் காலத்தில் அவரால் அதிகம் இழிவுபடுத்தப்பட்ட மகிந்தவிற்கு சந்திரிகாவிற்கு என்னவெல்லாம் ஆசைகள் இருந்தனவோ அதுவெல்லாம் மகிந்தவிற்கும் இருப்பதுதான்.
ஆனால் இதிலுள்ள வேடிக்கை என்னவெனில் எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்களாக புலிகள் இருப்பதுதான். எவரை சிங்களம் அடிமைப்படுத்த முற்படுகிறதோ, எந்த அரசியலை பலவீனப்படுத்த சதா முயன்று வருகிறதோ அவற்றுக்கு சொந்தக்காரர்களாகிய நாம்தான் சகலரது அரசியல் இருப்பையும் தீர்மானிப்பவர்களாக இருக்கின்றோம்.
இதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய நமது பலம்.
எந்தவொரு தேசம் தனது பலம் குறித்து தெளிவில்லாமல் இருக்கிறதோ அந்த தேசத்தை வீழ்த்த எதிரிகள் வெளியில் இருந்து வரவேண்டியதில்லை. இதுதான் நாம் நமது மக்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி.
-தாரகா (தாயகம்)-
Friday, November 30, 2007
தமிழ்த் தேசியத்திற்கு தேவை அனுதாபங்களல்ல...
Posted by tamil at 3:29 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment