Friday, November 9, 2007

நோயை விடுத்து நோவுக்கு மருந்து செய்யும் மருத்துவர்கள்

09.11.2007
நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டு மானால் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முற்றாக பூண்டோடு ஒழித்துக்கட்ட வேண்டும் எனச் சூளுரைத்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதைத் தவிர தமது அரசுக்கு வேறு மார்க்கமில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
தமது அரசின் மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற முறையில் நேற்று முன்தினம் நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இப்படிக் கூறியிருக்கின்றார்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கால் நூற்றாண் டாக இந்தப் பயங்கரவாதம் நாட்டைச் சீரழித்து வருகின் றது என்றும் நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி என்ப வற்றில் பலத்த பின்னடைவுகளை அது ஏற்படுத்தி இருக்கின்றது என்றும் அவர் விசனித்திருக்கின்றார்.
இந்தக் கால்நூற்றாண்டு காலமாக இந்தப் பயங்கர வாதப் பிரச்சினைக்கான தீர்வு, அதை அடியோடு ஒழிப் பதுதான் என்றே இலங்கைத் தீவின் முன்னைய அரசுத் தலைவர்களும் கூறிவந்தனர். அதையே இப்போதைய அரசுத் தலைவரும் மீண்டும் சூளுரையாக நாடாளுமன் றில் விடுத்திருக்கின்றார்.
நோய்க்கு மருந்து செய்யச் சொன்னால், நோய்க்கான மூலத்தைக் கண்டறிந்து அதற்கு மருந்து செய்ய வேண்டும். அதை விடுத்து, நோயின் வெளிப்பாடான நோவுக்கு மருந்து செய்வதில் அர்த்தமில்லை. அது சில சமயங்களில் நோயினால் உருவாகும் நோவைத் தற்காலிகமாகக் குறைக்க அல்லது சமாளிக்க உதவக்கூடும். ஆனால் நோவுக்கு மருந்து செய்வது, நோயிலிருந்து மீட்சியைப் பெற்றுத் தராது. இது வைத்தியனுக்குத் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயம்.
அதேபோல, இலங்கையைப் பீடித்திருக்கும் மோசமான நோய் இனப்பிரச்சினை. அந்த நோயின் வெளிப்பாடு தான் நோவுதான் தமிழ் இளைஞர்களின் தீவிரவாதம். அதையே தென்னிலங்கைச் சிங்களம் "பயங்கரவாதம்' என்று அடையாளப்படுத்துகின்றது.
ஆகவே, இந்தத் தீராத பிணியிலிருந்து இலங்கைத் தீவு விடுபட வேண்டுமானால் இனப்பிரச்சினை என்ற நோயை நிரந்தரமாகக் கட்டுப்படுத்துவதற்கு மருந்து செய்ய வேண்டுமே தவிர, அந்த நோயின் வெளிப்பாடான தமிழர் தீவிரவாதம் என்ற பயங்கரவாதத்துக்கு மருந்து செய்ய முற்படுவது பயனற்றது. அது நோய் தீரவோ, அதிலிருந்து நிரந்தர மீட்சி பெறவோ வழிசெய்யாது.
நாட்டின் அரசுத் தலைவர்களாக இதுவரை வந்த வைத்தியர்களுக்கு இந்தச் சிகிச்சை விவகாரத்தின் அடிப்படையே புரியாததால் நோயை விட்டு, நோவுக்கு மருந்து செய்வது குறித்தே அவர்கள் அதிகம் பிரபலா பித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையை ஆட்டிப் படைத்துவரும் இனப்பிரச் சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதன் மூலமே இச்சிக் கலுக்கு முடிவு கட்டலாமே தவிர, தமிழர் தரப்பின் தீவிரவாதத்தை ஒடுக்க முயலுவதன் மூலம் அல்ல.
தமிழர் அடக்கப்பட்டதால் நீதியற்ற முறையில் ஒடுக்கப்பட்டதால் நியாயமற்ற முறையில் அடிமைப் படுத்தப்பட்டதால் அவர்களது இருப்பு மற்றும் கௌரவ வாழ்வுக்கான சுதந்திரங்கள் பறிக்கப்பட்டதால் அதன் பெறுபேறாகவே, அடக்குமுறை நோயின் வெளிப் பாடாகவே, தமிழரின் விடுதலைப் போராட்ட எழுச்சி வீறுகொண்டு ஈழத் தமிழரின்ஆயுதம் தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டமாக அது பரிணமித்தது என்பது கண்கூடு. அதுவே சரித்திரமும் ஆகியுள்ளது.
ஆகவே, தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவுசெய்து, அதன்மூலம் இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு நீதியான தீர்வுகாண தென்னி லங்கைச் சிங்கள அரசு முன்வருமானால், அதுவே இவ் விவகாரத்தைச் சுமுகமாகத் தீர்த்து வைக்கும் ஒரே வழி யாக மார்க்கமாக மருந்தாக இருக்கும்.
அதைவிடுத்து, கடந்த இரண்டரை தசாப்த காலமா கத் தென்னிலங்கை ஆட்சித் தலைவர்கள் தொடர்ந்து முழங்கி வந்தமை போலவே, இப்போதைய அரசுத் தலை வரும் "பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்போம்!' என்று சூளுரைத்து, மார்தட்டுவதில் அர்த்தமில்லை; பயனில்லை. அது இலங்கைத் தீவின் தேசிய இனங்களை மென் மேலும் பிளவுபடுத்தி, முரண்பாடுகளைத் தீவிரமாக்கி, நிலைமையை மேலும் மோசமடையவே வழி செய்யும்.
எனவே, நீதியாக இனப்பிரச்சினையை அமைதி முறையில் சமாதான வழியில் தீர்ப்பதற்குத் தென்னி லங்கைத் தலைமை விரும்பினால் அது முதலில் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய பூமியில், அந்நிய சக்தி களின் ஆதிக்கம், தலையீடு, அடக்குமுறையின்றி, சுதந் திரமாக, கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடை யாளத் தைப் பாதுகாத்து வாழ விரும்புகின்றார்கள். தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமை யோடு அவர்கள் வாழ விரும்புகின்றனர். இதுவே தமிழர்களின் அரசியல் அபிலாஷை.
இதனைப் புரிந்துகொண்டு, இதற்கேற்ப தீர்வை முன் வைப்பதை விடுத்து "பயங்கரவாதத்தை ஒழிப்போம்!' என்று மார்தட்டுவதால் விவகாரம் மேலும் சிக்கலாகுமே தவிர, தீர்வு கிட்டாது. அதுவே யதார்த்தம். இதைத் தென்னிலங்கை புரிவது எப்போது...........?

உதயன்

0 Comments: