Thursday, November 8, 2007

புலிகளின் வியூகங்களும் அநுராதபுரம் தாக்குதலும் - இதயச்சந்திரன்

வியாழன் 08-11-2007 14:48 மணி தமிழீழம் [சிறீதரன்]


விடுதலைப் புலிகள் வன்னிக்குள் முடக்கப்பட்டு, படை வலுவில் பலவீனமடைந்ததால், கிழக்கிலிருந்து அகற்றப்பட்டு விட்டார்களென்கிற அரசாங்கத்தின் பரப்புரைக்கு, அநுராதபுரத்தில் பதில் கூறப்பட்டுவிட்டதென பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தின் தந்திரோபõயங்களை விழுங்கி, தமது இலட்சியம் நோக்கிய நிகழ்ச்சி நிரலை புலிகள் வகுப்பதில்லை.

ஏனெனில்,புலிகள் தமது படை வலுவினை நிரூபிக்க வடக்கில் பெரும் தாக்குதலொன்றை நடத்தியிருக்க முடியும். ஆயினும், இராணுவத்தின் போக்கிற்கு இழுபட்டுச் சென்று, தமது மூலோபாய அடிப்படையிலான நிகழ்ச்சி நிரலை குழப்ப விடுதலைப்புலிகள் விரும்ப மாட்டார்கள்.

விடுதலைப் போரென்பது வெறுமனே எதிர்த்தரப்பின் நகர்விற்கு ஏற்றவாறு காய்களை நகர்த்தும் சதுரங்க விளையாட்டல்ல.

வன்னியைச் சூழ இருக்கும் அரச இராணுவ பின்தளங்கள் வலுவற்றுப்போனால், கட்டுப்பாட்டுப் பிரதேச மையம் பலமாக இருக்குமென்பதே சரியான மதிப்பீடாக அமையும்.

அதேவேளை, கிழக்கில் இராணுவ பரம்பலை சிதறடிக்கச் செய்ய வேண்டிய போரியல் உத்திகளும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கக்கூடும்.

அதாவது, கிழக்கில் செறிவான படையினை, நாலா திசைகளிலும், வேறு பிரதேசங்களை நோக்கி, குறிப்பாக தென்னிலங்கைக்கு நகரச் செய்வதே, வலிந்த தாக்குதல் மூலம் முன்னகரும் விடுதலைப் புலிகளின் குறுகியகால தந்திரோபாயமாகும்.

அதற்கிசைவான காய்நகர்த்தல்களே யால, அநுராதபுர வடிவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"எல்லாளன் நடவடிக்கையில்', விமானப்படைப் பிரிவொன்றின் தளத்தையும், அதன் செயற்றிறன் மிக்க கருவிகளையும் அழித்தொழிக்கும் தாக்குதல் வடிவம் பிரயோகிக்கப்பட்டது.

குறுகிய நோக்குப் பார்வையில், வன்னியின் தென்பகுதியூடாக ஒருபக்க முற்றுகைச் சமரினை முன்னெடுக்கும் இராணுவத்தின் வான்வெளி ஆதரவு படை நகர்த்தல் மற்றும் வழங்கல் பாதையை முடக்குவதற்கு இந்த அநுராதபுர அழித்தொழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதெனக் கொள்ளலாம்.

மறுதலையாக, நீண்ட நோக்கும் பார்வையினடிப்படையில், வடபகுதி முழுவதும் புலிகள் வசம் சென்றால், அநுராதபுரமே படையினரின் முதன்மையான வடபகுதிக்கான ஒன்றைப் பின்தளமாக அமையுமென்கிற உண்மையும் புலிகளால் உணரப்பட்டிருக்கலாம்.

ஆகவே, நன்கு திட்டமிடப்பட்ட பின்தள அழிப்பு நடவடிக்கையின் பன்முகப் பரிமாணத்தில் குறுகிய, நீண்ட நோக்கு பார்வைகள் நிச்சயம் உள்ளவாங்கப்பட்டிருக்க வேண்டும்.

யால தாக்குதலானது, அரச படை வலுவினை சிதறச் செய்வதற்கும், அந்நிய செலாவணி வருவாயை முடக்குவதற்கும் பிரயோகிக்கப்பட்ட படை நகர்வு.

யால தொடர் தாக்குதலின் போரியல் வடிவங்கள், கெரில்லா முறையிலமைந்த உத்திகளைக் கொண்டிருந்தாலும், விடுதலைப் புலிகளின் பிரசன்னம் அப்பிரதேசத்தில் இன்னமும் உள்ளதென்பதே முக்கிய செய்தியாகும்.

தென்னிலங்கைச் சிங்கள மக்களின் போர்ஆதரவு மனோநிலையைத் தக்க வைக்கும் அரசாங்க பரப்புரைச் சமரினை தீர்த்துப் போகச் செய்ய, மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களென, சிறு வட்டத்துள் இதனை அடக்கிட முடியாது.

ஆயினும், அம்பாறையில் இன்னமும் விடுதலைப் புலிகள் நிலைகொண்டுள்ளார்களென்பதை வெளிப்படுத்த புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் போன்றதொரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.

அம்பாறைத் தளபதி ராமின் கூற்றினை ஆதாரமாகக் கொண்டு, யாலத் தாக்குதல்களுக்கு கிழக்கு முடிச்சுப்போட அரசாங்கம் அவசரப்படலாம்.

அதன் எதிர்வினைச் செயற்பாடாக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பரவியுள்ள படையினரை ஒன்றிணைத்து 3000 பேருடன் கஞ்சிகுடிச்சாறு நோக்கிய நகர்வொன்றினை மேற்கொள்ளப் போவதாக சிங்கள மக்களுக்கு காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதாவது, கஞ்சிகுடிச்சாறு ஆற்றிலிருந்து விடுதலைப்புலிகள் விரட்டப்பட்டால் அம்பாந்தோட்டை மாவட்டம் பாதுகாப்பான பிரதேசமாக மாறுமென்பதை இந்நடவடிக்கை சொல்லும் செய்தி.

3,000 படையினரை, தமது மூவூடகப் படையணி கொண்டு புலிகள் எதிர்கொள்வார்களா அல்லது தந்திரமாகப் பின்னகர்ந்து கஞ்சிகுடிச்சாற்றினுள் அவர்களை முடக்கி விடுவார்களாவென்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தந்திரோபாயப் பின்னநகர்வானது, பாரிய பிரதேசமொன்றினுள் படையினரின் பெருமளவு ஆளணி வளங்களை குவிக்கின்ற தென பொதுமைப்படுத்தப்பட்ட ஆய்வுகள் சுட்டி நின்றாலும், குவிக்கப்பட்ட படைகள் வடக்கு, கிழக்கிலிருந்து வேறு பிரதேசங்களுக்கு நகர்த்தப்படுமென்கிற தொடர் நிகழ்வுகள் நடைபெறுவதை அவதானித்தல் வேண்டும்.

ஏனெனில், விடுதலைப் புலிகளின் போரியல் முறைமையினை பன்முகப் பரிமாணங்கள், ஓரிரு தாக்குதல் நிகழ்வுகளினூடாக வெளிப்படுத்தப்படுவதில்லை.

ஒலு மடுவில் இடப்பட்ட ஆரம்ப புள்ளி ஜெயசிக்குறுவை முறியடித்து, வன்னி பெருநிலப் பரப்பென்கிற பிரதேசத்தை உருக்கொள்ள வைத்தது.

அநுராதபுர பின்தளச் சிதைப்பின் எதிர்விளைவே, அள்ளித்தெளித்த கலங்கல் சித்திரங்களை வேலணையில் வரையத் தூண்டுகோலாக அமைகிறதெனலாம்.

சமர்களத்தில், காலவிரயங்களும் பாரிய இழப்புகளை ஏற்படுத்திவிடும்.

சிலமணிநேர எல்லாளன் தாக்குதலில் பெரும் எண்ணிக்கையான வானூர்திகள் அழிக்கப்பட்டதை கால விரயமற்ற போரியல் உத்தியின் வெளிப்பாடாகக் கொள்ளலாம்

குடாநாட்டு இராணுவத்தைப் பொறுத்தவரை, தரைப்படையும் கடற்படையுமே பலமிக்க தொன்றாக இருப்பதாகக் கற்பிதம் கொள்ளப்படுகிறது.

முப்புறமும் கடல் சூழ்ந்த யாழ்.குடாவைப் பாதுகாக்க வேண்டுமாயின், மன்னாரிலிருந்து கடற்படையினரை அகற்றி, தீவுப்பகுதிகளில், குவிப்பது இலகுவான விடயமாக இருக்கலாம்.

அண்மையில் இராணுவ ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டது போல, மன்னார், நகரத்திலிருந்து, விடத்தல் தீவினூடாகப் பூநகரிவரை, படை நகர்த்தும் திட்டத்தைக் கைவிட்டு, வேலணைக்கு ஆள் அனுப்பும் புதிய போக்கில் தற்காப்பு நிலையே தென்படுகிறது.

வலிந்த தாக்குதலே தற்காப்பு நிலைக்கு பாலம் சேர்க்குமென்கிற புலிகளின் படைத்துறைப் பேச்சாளரின் புதிய சமன்பாடு, தரவுகளைத் தேடியலைய வேண்டிய இக்கட்டு நிலைக்கு இராணுவத்தை தள்ளிச் சென்றுள்ளது.

தரவுகளும், சமன்பாடுகளும் கொட்டிக் கிடந்தாலும், தீர்வினைக் காணும் ஆளுமை இணையாவிடில், முடிவுகளும் தொலைதூரம் சென்றுவிடும். இது விஞ்ஞான பூர்வமான உண்மை

தற்காப்புத்தளத்தில் புலிகள் நிலைகொண்ட காலத்தில், தரவுகளையும் சமன்பாடுகளையும் இணைத்து, புதிய போர் வியூகங்களை வரைய, அரசாங்கத்திற்கு இலகுவாகவிருந்தது.

ஆயினும் புதிய சமன்பாடுகளை விடுதலைப் புலிகள் உருவாக்கும் போது, தரவுகளைத் தேடி தடுமாறுகிறது அரசாங்கம்.

குடாநாட்டிலும், தென்னிலங்கையிலும், தற்காப்பு வலயங்களை உருவாக்கி, வன்னியைச் சூழ முற்றுகை வலயத்தை அமைந்துள்ளதாக இருபரிமாண நிலையமொன்றினை சிங்களத்திற்கு கூறுகிறது.

ஆகவே, மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை மீளாய்விற்குட்படுத்தி, புலிகளின் ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்த நிலையங்களிலிருந்து அநுராதபுர தாக்குதல் வரை நிகழ்ந்த மாற்றங்களை தொகுத்துப்பார்க்க வேண்டும்.

சர்வதேச வலைப்பின்னல்கள் புலிகள் மீது விரிக்கப்படும்பொழுது, படைவலுச் சமநிலையிலிருந்தவாறு புலிகளின் தலைமையால் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

சமாதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினூடாக விடுதலைப் புலிகளை ஒரு கூண்டிற்குள் அடைக்கலாமென்பதே மேற்குலகத்தின் உத்தியாக விருந்தது.

ஆறுசுற்றுப்பேச்சுவார்த்தையோடு தென்னிலங்கையில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. புதிதாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பௌத்த சிங்கள மனோநிலை புரிந்த யதார்த்தவாதியாக மாறினார்.

ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டாவது, மனிதாபிமான யுத்தமொன்றை மாவிலாற்றில் ஆரம்பிக்க வேண்டிய தேவை அவருக்கிருந்தது. சமாதான காலத்தில் வான்வெளித் தாக்குதலோடு போர் நிறுத்த எல்லைக் கோடுகள் அழிக்கப்பட்டன.

சமர்களினூடாக கைமாற்றப்படாத இடங்களிலிருந்து தந்திரோபாயப் பின்னகர்வை மேற்கொண்டார்கள் விடுதலைப் புலிகள்.

இடைச்செருகலாக, போராட்ட சக்திகளிடையே முரண்பாட்டினை உருவாக்கி, முதுகில் குத்தும் சதியில் ஈடுபட்டனர். சமõதானக் காவலர்களின் ரிஷி மூலச் சக்திகள்.

இந்நிலையில் சமாதானச் செயலகம் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் கிளை அலுவலகங்கள் செறிவாகக் காணப்படும் கிளிநொச்சியைத் தவிர்த்து, ஏனைய வன்னி நிலப்பரப்பில், ஒப்பந்தத்தை கிழித்து விட்டேனென மகாவம்ச வாரிசுகளுக்கு படம் காட்ட, மனிதாபிமான குண்டு வீச்சினை ஆரம்பித்தது அரசாங்கம்.

போர்களத்தை சூடேற்றிய அரசாங்கம் கிழக்கை கைப்பற்றி புலிகளை அழிக்கப்போவதாக சூளுரைத்தது.அனுசரணையாளர்களும், கண்காணிப்புக் குழுவினரும், போரைக் கண்காணிக்கும் சர்வதேசப் பிரதிநிதிகளாக உருமாற்றமடைந்தனர்.

இக்கட்டத்தில், விடுதலைப் புலிகளின் தேசிய விடுதலைக்கான அரசியல் இராணுவ மூலோபாயம் வெளிப்படத் தொடங்கியது. தற்காப்பு நிலையிலிருந்து முறியடிப்புச் சமரினை புலிகள் முன்னெடுத்தனர் .

மௌன கீதம் பாடிய சர்வதேச நாடுகள், ஐ.நா. மனிதாபிமானக் காவலர்களை வரிசையாக அனுப்பி தமது இருப்பினை நிலைநிறுத்த படாதபாடுபட்டனர். புலிகள் மீது விரிக்கப்பட்ட சர்வதேச வலைப்பின்னல், சிக்கலுக்குள்ளாகியது.

பயங்கரவாதிகளென்ற முத்திரைகளும், அரசாங்கத்தின் தாக்குதல்களும், விடுதலைப் புலிகளை சமதரப்பு நிலையற்று பேச்சுவார்த்தை மேடைக்கு இழுத்து வருமென கற்பிதம் கொண்டார்கள். எதுவுமே நடைபெறவில்லை.

கிழக்கின் பெரும்பான்மையான கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து பின்னகர்ந்த விடுதலைப் புலிகள், தமது மூலோபாயத்தில் இறுதி அத்தியாயத்தினை அங்கிருந்தே ஆரம்பித்தார்கள்.

இதனைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள், புலிகளை அழிக்க வன்னிக்குச் சென்றுள்ளார்கள். கிழக்கில் அகலக்கால் பரப்பிய அரச படைவலுவின் பெரும்பகுதி, வன்னியை நோக்கி நகரும் போது, மீதமுள்ளவர்களை தெற்கு நோக்கி இழுக்கிறது யால தாக்குதல்கள்.

போர் நிறுத்த நாளிலிருந்து இன்று வரையான விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவ உத்திகளிலோ, அல்லது தந்திரோபாயங்களிலோ எதுவிதமான இறங்கு முகப் போக்கும் தென்படுவதாகத் தெரியவில்லை.

தற்போதைய ஆட்சியாளர்களினூடாகவே சர்வதேச வலைகளைக் கிழத்தெறிந்து பேரினவாத சுயரூபத்தை அம்பலமாக்கி, உள் வெளித் தடைகளை அகற்றி, இறுதி நிகழ்விற்கான தளத்தினை வந்தடைந்துள்ளார்கள் விடுதலைப்புலிகள்.

இராணுவத்தினரின் போரியல் திட்டமிடல் உத்திகளில் சிதைவினை ஏற்படுத்திய அநுராதபுர வான்படை தளத் தாக்குதல், வேலணையிலும் மணலாற்றிலும் அம்பாறையிலும் படைகளை குவிவடையச் செய்கிறது.

வலிந்து தாக்குதலொன்கிற வடிவத்தை ஏற்றிருக்கும் விடுதலைப் புலிகளின் களமுனைத் தெரிவு, அரசால் பலமாக இருப்பதாகக் கருதப்படும் பலவீனமான பகுதியாகவே இருக்கும். பின்தளச் சிதைப்புகளே, ஊடறுக்கும் முன்னரங்க நிலைகளை தீர்மானிக்கும். வியட்னாம் கற்றுத்தந்த பாடமிது.

-நன்றி வீரகேசரி-

0 Comments: