Thursday, November 1, 2007

'குர்தீஸ்தான் மீதான துருக்கியின் ஆக்கிரமிப்பு"

வட ஈராக் மீது படையெடுப்பை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை அண்மையில் துருக்கிய பாராளுமன்றம் வழங்கியிருக்கின்றது. வட ஈராக் மீது இராணுவ ஆக்கிரமிப்;பை மேற்கொள்வதன் மூலம் குர்தீஸ் போராளிளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என துருக்கி நாட்டு பாராளுமன்ற பிரநிதிகள் ஆலோசித்து வருகின்றனர். பெரும்பான்மையான துருக்கி நாட்டு சுதேசிகளின் ஆதரவைப் பெற ஆட்சியாளர்கள் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதோடு, வட ஈராக் மீது போர் தொடுப்பிற்கு தயார்படுத்தல்கள் முழுமூச்சுடன் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் பிகேகே எனப்படும் குர்தீஸ் போராளிகள் அமைப்புக்கும் துருக்கிநாட்டுக்கும் இடையேயான முரண்பாடுகளின் பின்னணி பற்றியதாக இக்கட்டுரை அமைகின்றது.

துருக்கியப் படைகள், வட ஈராக் பகுதியை ஆக்கிரமிப்புக்கு உட்படுத்துமேயாயின் அது சட்டவிரோதமானது என வட ஈராக்கின் குர்தீசியப் பிராந்திய அரசு எச்சரித்திருப்பதோடு, பிகேகே போராளிகளுக்கு, தம்முடைய பிராந்திய அரசு இராணுவ உதவிகளை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. அதேவேளை ஈராக்கிய நாட்டின் ஆளும் அரசும், நேட்டோ அமைப்பும் துருக்கியின் இராணுவ முன்னெடுப்புக்களை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விட்டிருக்கின்றன. ஆனால் சிரிய அரசோ துருக்கி நாட்டின் வட ஈராக் மீதான இராணுவ ஆக்கிரமிப்புக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கின்றது. அதற்கிடையில் பிகேகே போராளி அமைப்பின் தலைவர்களில் ஒருவரான முராட் கராய்லின் குர்திஸிய பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் ஆயிரக்கணக்கான குர்திஸ் போராளிகள் துருக்கி இராணுவத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகில் 25 மில்லியன் சனத்தொகையை கொண்ட ஒரு பெரிய குர்தீஸ் இனக்குழுமம், துருக்கி, ஈராக், ஈரான், சிரியா நாடுகளுக்கிடையே எல்லைகள் வகுக்கப்பட்டு, நாடுகள் துண்டாடப்பட்டபோது நாடற்றவர்களாக்கப்பட்டவர்கள். மேற்கு நாடுகளால் நீண்ட காலமாக கைவிடப்பட்ட இனமான குர்தீஸ் இனம், தற்போது உலக ஒழுங்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக பலம் பெற்றிருக்கின்றனர் என்றால் மிகையில்லை. குர்தீஸ் இனத்தவரில் அரைப் பங்கினருக்கு அதிகமானோர் துருக்கி நாட்டின் வடபகுதியில் வாழ்ந்து வருகின்றனர். ஈராக் நாட்டில் சதாம் உசைன் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டு, அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு பிற்பாடு குர்தீஸ் இனப் போராட்ட வடிவத்தில் புதியதொரு திருப்பம் ஏற்பட்டது. பிகேகே எனப்படும் குர்தீசிய தொழிலாளர் அமைப்பு, மார்க்சிய மற்றும் குர்தீசிய தேசியக் கொள்கையை கொண்ட ஒரு அமைப்பாகும்.

1978 ஆம் ஆண்டு துருக்கியின் முன்னாள் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டதே குர்தீசிய தொழிலாளர் கட்சியாகும். 15,000 வரையிலான பயிற்;சி பெற்ற படையை கொண்ட குர்தீசிய தொழிலாளர் அமைப்பு, 50,000 வரையிலான மக்கள் படையை கொண்ட அமைப்பாகும். புலம்பெயர்ந்து வாழும் குர்தீசிய மக்களின் ஆதரவும் இவ் அமைப்புக்கு உண்டு. துருக்கியில் இடம்பெற்ற போர் காரணமாக 40,000 வரையிலான குர்தீஸ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, பெறுமளவு குர்தீசிய மக்கள் தமது அண்டை நாடுகளான ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். ஈரான், ஈராக், சிரியா போன்ற நாடுகள் தத்தமது நலன்சார்ந்து பிகேகே எனப்படும் குர்தீசிய தொழிலாளர் கட்சியை காலம் காலமாக பயன்படுத்திக் கொண்டனர் என்பது முக்கியமாக சுட்டிக்காட்டத்தக்க விடயம். 1999 ஆம் ஆண்டு குர்தீசிய தொழிலாளர் கட்சியின் தலைவர் அப்துல்லா ஒக்சலான் அவர்கள் கைது செய்யப்பட்டபோது, துருக்கி நாட்டின் பெருவெற்றியாக ஒக்சலானின் கைது கொண்டாடப்பட்டதோடு, அதுவே பிகேகே கட்சியின் வீழ்ச்சியாகவும் கருதப்பட்டது.

ஆனால் பல தசாப்தங்களாக குர்தீஸ் போராளிகளின் அமைப்பு துருக்கிய குர்தீஸ் மக்களின் ஆதரவைப் பெற்று தொடர்ச்சியாக தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதோடு, 2004 ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தையும் அறிவித்திருந்தது. ஆயினும் மீண்டும் 2006 ஆம் ஆண்டு போர்நிறுத்தம் முறிவடைந்ததோடு, இரு பக்கத்திலும் போரினால் இழப்புக்களும் அதிகரிக்கத் தொடங்கியது. 2003 ஆம் ஆண்டு ஈராக் நாட்டின் மீது, அமெரிக்கா மேற்கொண்ட படையெடுப்பை அடுத்து, வட ஈராக் பகுதியில் குர்தீசிய மக்கள் தம்மைத் தாமே ஆளும் பலத்தை பெருமளவில் பெறுகின்ற வாய்ப்பை வழங்கியிருந்தது.

தொடர்ந்து ஈராக் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், உள் நாட்டு யுத்தம் வெடிக்க ,ஈராக் நாட்டின் ஒட்டுமொத்தமான 26 மில்லியன் சனத்தொகையில், 5 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட குர்தீஸ் மக்கள் அமைதியான செயற்பாட்டை வட ஈராக் பகுதியில் மேற்கொண்டு வருகின்றனர். தவிர 2005 ஆம் ஆண்டு ஈராக் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட புதிய அரசியல் அமைப்பானது, குர்தீஸ் மக்களுக்கு பிராந்திய ஆதிக்கம் செலுத்துவதற்கான பெருமளவு வாய்ப்பை வழங்கியிருக்கின்றது. வட ஈராக் பிரதேசத்தில் குர்தீஸ் மக்களுக்கான தேசியக்கொடி, பாராளுமன்றம், இராணுவம், பிரத்தியேகமான முதலீட்டுக்கான சட்டங்கள் என்பவற்றுடன் புறம்பான ஒரு தனிநாடாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அதுவே குர்தீசிய மக்களின் நீண்ட கால கனவும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

ஆயினும் ஒட்டுமொத்தமான அதாவது ஈராக், ஈரான், சிரியா, துருக்கி வாழ் குர்தீசிய மக்கள் மத்தியில், பிகேகே கட்சிக்கே பெரும் செல்வாக்கு காலம் காலமாக காணப்பட்டது. வட ஈராக்கில் வாழும் குர்தீசிய மக்களின் முன்னோடியான செயற்பாடானது, பிகேகே கட்சிக்கான பின்னடைவாகவும் சில அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. வட ஈராக் பிராந்தியத்தில் இயங்கி வரும் சுதந்திர குர்தீஸ் பிரதேச செயற்பாடானது, அண்டை நாடுகள் அனைத்தையும் சீற்றம் கொள்ள வைத்திருக்கின்றன. ஏனைய நாடுகளில் குறிப்பாக ஈரான் துருக்கி, சிரியா ஆகிய நாடுகளிலும் ஆயுதங்களை வைத்திருக்கும் குர்தீஸ் போராளிகளின் அரசியல் செயற்பாடுகள் அதிகரிக்கலாம் என இந்நாடுகள் தமது அச்சத்தை தெரிவித்து வருகின்றன.

அத்துடன் ஈராக் நாட்டை கூறு போடும் இச்செயற்பாடானது எண்ணெய் வளத்தை அதிகமாக கொண்டிருக்கும் குர்தீஸ் மக்கள் பெறுமளவில் வாழும் வட ஈராக் பிராந்தியம் மீது ஏனைய பிரதேசத்தில் வாழும் அரபு மக்களால் தாக்குதல்கள் நடாத்தப்படலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வட ஈராக் பிராந்தியத்தில் செயற்பட்டு வரும் சிறிய சுதந்திர குர்தீச அரசின் செயற்பாடானது, துருக்கி நாட்டில் வாழும் 20 விழுக்காடு குர்தீசிய மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குர்தீஸ் போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களிலும் பார்க்க, வலிமை வாய்ந்த மற்றும் தந்திரோபாய முறையில் குர்தீஸ் போராளிகளால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என அரசியல் எதிர்வு கூறல்கள் தெரிவி;க்கின்றன. குறிப்பாக துருக்கி நாட்டில் செயற்படும் மேற்கு நாடுகளின் நிறுவனங்களையும், சுற்றுலாத்துறை பிரதேங்களையும் குர்தீஸ் போராளிகள் தாக்குகின்ற அபாயம் பெருகியிருப்பதோடு, துருக்கிய மக்களுக்கும் குர்திசி இன மக்களுக்கும் இடையேயும் கூட இனக்கலவரங்கள் அதிலும் துருக்கியின் மேற்குப் பகுதியில் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எங்கெல்லாம் குர்தீஸ் மக்கள் காலம் காலமாக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனரோ, குறிப்பாக சிரிய நாட்டின் 18 மில்லியன் சனத்தொகையில் 10 விழுக்காட்டினர் குர்தீசிய மக்கள். அங்கும் அரச படைகளுக்கும் குர்தீசிய ஆயுத குழுக்களுக்கும் இடையே புதிய உத்வேகத்துடன் வன்முறைகள் வெடித்துள்ளன. இத்தகைய பின்புலத்தில் நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, துருக்கி நாட்டுக்கு இடையேயான உறவில் கசப்புணர்வு அதிகர்pத்துள்ளது. துருக்கி நாடு நேட்டோ அமைப்பில் உறுப்புரிமை பெற்ற ஒரு நாடாகும். இரண்டாம் உலக யுத்த காலப்பகுதியில் 1.2 மில்லியன் ஆர்மேனிய மக்களைக் துருக்கிய ஆட்சியாளர்கள் படுகொலை செய்தமையானதே 20 ஆம் நூற்றாண்டின் மிகமோசமான படுகொலை என அமெரிக்க வெளியுறவுத்துறை உறுப்பினர்களால் மேற்கொண்ட தீர்மானத்திற்கு பிற்பாடு துருக்கிய அமெரிக்க உறவுக்கு இடையே விரிசல் ஏற்படத் தொடங்கியது. உலக பயங்கரவாதத்திற்கு எதிரான அரசியல் பொருளாதார மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு முதன்மையாக கைகொடுக்கும், துருக்கி நாட்டின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி ஏற்படும் என்பதால், அமெரிக்க அதிபர் புஷ் அவர்கள் அமெரிக்க சட்டவாளர்களிடம் முன்சொன்ன தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

50 வருட கால நட்புறவைக் கொண்டிருக்கும் அமெரிக்க துருக்கி நாடுகளுக்கிடையே, டொக்ரின் ஒப்பந்தம், கொரியா யுத்தம் ஆகியவற்றிற்கு துருக்கி நாடு நேட்டோ அணிக்கு காத்திரமான ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. பாகிஸ்தானில் புலம்பெயர்ந்து வாழும் ஆப்கானிஸ்தான் அகதிகளை மீளவும் ஆப்கானிஸ்தானுக்குள் மீள் குடியேற்றம் செய்ய, துருக்கிய படைகள் பெரிதும் நேட்டோ அணிகளுக்கு ஒத்துழைப்பை வழங்குகின்றன. மத்திய கிழக்கு நாடுகளிடையே மத அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துருக்கி நாட்டையே பாரிய அளவில் மேற்கு அணிகள் நம்பியிருக்கின்றன.

இந்நிலையில் வட ஈராக்கில் இயங்கிவரும் பிகேகே ஆதரவாளர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை நாடி நிற்கின்றது துருக்கிய அரசு. ஈராக் நாட்டிலே தற்போதைக்கு அமைதியான பிராந்தியமாக காணப்படுவது, வட ஈராக் பகுதியே. இந்நிலையில் துருக்கி வட ஈராக் மீது படையெடுப்பை மேற்கொள்ளுமாயின், ஏற்கனவே அமைதியற்றிருக்கும் மத்திய கிழக்கின் நிலைமை வெகுவாக மோசமடையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு சுதந்திர போராட்டத்தை எப்படி பாதிக்கின்றது என்பதற்கு குர்தீஸ் போராட்டம் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. இத்தகைய புறநிலையில் அமெரிக்காவின் துருக்கி நாடு மீதான அழுத்தம் எப்படி அமையப் போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
நன்றி
-ஜெயசிறி விஸ்ணுசிங்கம்-

0 Comments: