Thursday, November 1, 2007

முக்கியமான ஒரு கேள்வி

முக்கியமான ஒரு கேள்வி

[01 - November - 2007] [தினக்குரல்]

ஆட்கள் காணாமல்போகும் சம்பவங்கள் தொடர்பான தகவல்களைக் கையாளுவதற்கு கொழும்பில் பொலிஸ் தகவல் நிலையம் ஒன்று கடந்த திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. முதலில் இத்தகைய நிலையமொன்று இரகசிய பொலிஸ் தலைமையகத்தில் இருந்தபோதிலும், அங்கு சென்று முறைப்பாடுகளைத் தெரிவிப்பதில் எதிர்நோக்கப்பட்ட நெருக்கடிகள் குறித்து பொதுமக்கள் முறையிட்டதையடுத்து புதிய தகவல் நிலையம் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் பணிப்பின் பேரில் பொலிஸ் நலன்புரி நிலைய கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
பொலிஸ் தகவல் நிலையத்தை திறந்துவைக்கும் வைபவத்தில் உரையாற்றிய இரகசிய பொலிஸ் பிரிவுத் தலைவர் பிரதி பொலிஸ் மா அதிபர் டி.டபிள்யூ.பிரதாபசிங்க பெருமளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்ற ஒரு நாடாக இலங்கையைக் காண்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு தருணத்தில் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களைக் கையாளுவதற்கான புதிய நிலையம் செயற்பட ஆரம்பித்திருக்கிறது என்றும், ஆட்கடத்தல்கள் மற்றும் ஆட்கள் காணாமல்போகும் சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகளைச் செய்வதற்கு எவருமே சுதந்திரமாக இந்த நிலையத்துக்கு வரலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அந்த முறைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரதாபசிங்க அன்றைய தினம் தெரிவித்த இன்னொரு தகவலே எமது கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கிறது. இனந்தெரியாத குழுக்களினால் கடத்தப்பட்டவர்கள் அல்லது காணாமல்போனதாகக் கூறப்பட்டவர்களில் அனேகமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறியிருக்கிறார். இவ்வாறு முதற்தடவையாகக் கூறியவர் இவர் அல்ல இதற்கு முன்னரும் பல தடவைகள் அமைச்சர்களும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் ஏன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூட இவ்வாறு கூறியிருக்கிறார்கள். ஆட்கடத்தல்கள் மற்றும் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கத்தரப்பினால் தெரிவிக்கப்படுகின்ற விபரங்கள் உண்மையாகவே அந்த மனித உரிமை மீறல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு பெரும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் தருபவையாகவேயிருக்கின்றன.

வடக்கு, கிழக்கிலும் தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளிலும் கடத்தப்பட்டவர்களில் அல்லது காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லையென்றே சம்பந்தப்பட்ட குடும்பங்கள் சிவில் கண்காணிப்புக் குழுவிடம் தெரிவித்திருக்கின்றன. அரசாங்கத் தரப்பினர் தெரிவிக்கின்ற விபரங்களும் சிவில் கண்காணிப்புக் குழுவிடம் இருக்கின்ற விபரங்களும் முற்றிலும் முரண்பாடுடையவையாகவே இருக்கின்றன. காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்கள் மீண்டு வரமாட்டார்களா என்று அந்தக் குடும்பங்கள் ஏங்கித்தவித்துக்கொண்டிருக்கின்ற வேளையில் காணாமல் போனோர் விவகாரம் இப்போது பெரியதொரு நெருக்கடியல்ல என்ற தோரணையில் அரசாங்கத்தரப்பில் இருந்து அறிவிப்புகள் வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. கடத்தப்பட்டதாகவும் காணாமல் போனதாகவும் பெயர்,விபரம் தெரிவிக்கப்பட்டவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டதாக தகவல் கிடைத்திருக்கின்றது என்று அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களே தெரிவித்திருந்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

ஆட்களைக் கடத்திச் சென்று பெருந்தொகைப் பணம் கப்பமாகக் கோரப்பட்ட சம்பவங்களில், கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்களில் பொலிஸாருக்கும் முப்படைகளைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ்மா அதிபரும் அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தனர். சிலர் கைது செய்யப்பட்டதாகக் கூட அறிவிக்கப்பட்டது. கடத்தப்பட்டவர்களினதும் காணாமல் போனவர்களினதும் அனேகமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகின்ற அரசாங்கத் தரப்பினரிடமும் பாதுகாப்பு உயரதிகாரிகளிடமும் நாம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறோம். இந்த படுமோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களில் எத்தனை பேருக்கு எதிராக இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?

0 Comments: