Sunday, November 25, 2007

இலங்கை - இந்தியாவை மிரட்டுகிறதா? இந்தியா இலங்கையை மிரட்டுகிறதா?

[25 - November - 2007]


இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த இந்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் அறிவுரையும் உகண்டா தலைநகர் கம்பாலாவில் வைத்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வழங்கிய போதனையும் செவிடர் காதில் ஊதிய சங்காகவேயுள்ளது.

முன்னாள் இலங்கை வெளியுறவு அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு நிகழ்வில் உரையாற்றுவதற்காக இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றை மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க உட்பட பல உயர்மட்டத்தினருடன் அவசர சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.

சிதம்பரத்தின் சந்திப்புகள் தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்ட போதும் ஜனாதிபதி, பிரதமர் ஜே.வி.பி. தலைவருடனான சந்திப்புகள் குறித்த விபரங்கள் எதுவும் அரச தரப்பினரால் வெளியிடப்படாது மூடி மறைக்கப்பட்டதாக தெரிய வருகிறது. விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் படுகொலை தொடர்பாக சிதம்பரம் சில சூடான கருத்துகளை வெளியிட்டதே இதற்குக் காரணமெனவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி, பிரதமரை சந்தித்த சிதம்பரம் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டதனால் ஏற்படப் போகும் விளைவுகள் தொடர்பாக எச்சரித்ததாகவும் தமிழ்ச்செல்வனை படுகொலை செய்ததன் மூலம் விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளிலிருந்து ஒதுங்குவதற்கு இலங்கையரசு காரணமாகிவிட்டதாக குற்றம் சாட்டியதாகவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன் தமிழ்ச் செல்வன் படுகொலை தொடர்பாக அரச ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் தொடர்பாக தமது விசனத்தை சிதம்பரம் வெளியிட்டாராம்.

இதேவேளை இலங்கை முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு தினத்தில் உரையாற்றிய சிதம்பரம் இலங்கை உள்நாட்டுப் போரில் அரசோ விடுதலைப் புலிகளோ வெற்றிபெற முடியாதென சுட்டிக்காட்டியதுடன் தமிழர்களுக்கு உச்சமட்ட அதிகாரத்துடனான தீர்வை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

சிதம்பரத்தின் இதே போதனையைத் தான் உகண்டா தலைநகர் கம்பாலாவில் வைத்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் வழங்கினார்.

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த போதே பிரணாப் முகர்ஜி ரோஹித போகொல்லாகமவுடன் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக உரையாடியதுடன் சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

தமிழர்களுக்கான உச்சபட்ச அதிகார தீர்வுத்திட்டத்தை இலங்கையரசு உடனடியாக முன்வைக்க வேண்டுமென வலியுறுத்திய பிரணாப் முகர்ஜி இதன் மூலமே தீவிரவாதப் போக்கற்ற மிதவாத தமிழர்களை நாட்டின் பிரதான நீரோட்டத்தில் இலங்கை அரசால் தக்க வைத்துக் கொள்ள முடியுமெனவும் கூறியுள்ளார்.

அத்துடன் விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுகளை இலங்கை அரசு எச்சந்தர்ப்பத்திலும் கைவிட்டுவிக் கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகம இவ்வருட இறுதிக்குள் அதிகார பரவலாக்கல் தீர்வுத் திட்டத்தை தமது அரசாங்கம் முன்வைக்குமெனவும் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகள், ஆதரவுடன் இத்தீர்வுத்திட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடியதாகவிருக்கும் என்றும் குறிப்பிட்ட ரோஹித போகொல்லாகம இவ்வருட இறுதிக்குள் எப்படியும் தீர்வுத் திட்டத்தை முன்வைப்போமென மீண்டும் உறுதியளித்தார்.

பிரதான எதிர்க்கட்சிகளான ஐ.தே.க., ஜே.வி.பி.யின் ஆதரவின்றியே வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்பில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் அரசு வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டிய பிரணாப் முகர்ஜி, அரசாங்கம் பலமாக இருப்பதால் எவ்வித தயக்கமுமின்றி அதிகார பகிர்வு தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியுமெனக் கூறியுள்ளார். இது தொடர்பில் இந்தியாவின் அதீத அக்கறையையும் வெளிப்படுத்தினார்.

என்னதான் இந்திய அரசும் உயர் மட்டத் தலைவர்களும் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இலங்கையை வற்புறுத்தினாலும் எதுவும் நடக்கப் போவதில்லையென்பது இந்தியாவுக்கு நன்கு தெரிந்தவிடயம். ஆனாலும் இலங்கைப் பிரச்சினையில் தனக்கு அக்கறை இருக்கின்றதென்பதைக் காட்டிக் கொள்வதற்காக அதிகாரப் பகிர்வை இடையிடையே வலியுறுத்துவதும் அதற்கு இலங்கையரசும் தலையாட்டுவதும் வாடிக்கையான விடயம்.

இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மகிந்த ராஜபக்‌ஷ 3 தடவைகளுக்கு மேல் டில்லி வந்து சென்றுள்ளார். அதுதவிர இந்திய உயர்மட்டத் தலைவர்கள் பலர் இலங்கைக்குப் பலதடவை சென்றுள்ளனர். இந்த விஜயங்களின் போதெல்லாம் அதிகாரப் பகிர்வு குறித்து இந்திய தலைவர்கள் வலியுறுத்துவதும் இந்த மாதம், அடுத்த மாதம் என இலங்கைத் தலைவர்கள் பூச்சுற்றுவதும் அரசியல் நிகழ்ச்சி நிரலாகிவிட்டது.

இராணுவத் தீர்வில் இலங்கையரசு நம்பிக்கை கொண்டுள்ளதை நன்கு தெரிந்து கொண்டும் இலங்கையரசு போரை நடத்துவதற்கு தேவையான இராணுவ உதவிகளை வழங்கிக் கொண்டும் தமிழருக்கான அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியா வலியுறுத்துவதன் உள் நோக்கத்தைத் தெரிந்து கொண்டதாலேயே இலங்கையரசும் அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வென்ற சொல்லை வைத்துக் கொண்டு இந்தியாவையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி வருகிறது.

இலங்கையரசின் நோக்கம் தெரிந்து கொண்டும் இந்திய அரசு அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டத்தை வலியுறுத்துவது இந்தியாவிலுள்ள ஆறரைக்கோடி தமிழரை ஏமாற்றுவதற்கும் கூட்டணி ஆட்சியின் ஆயுட் காலத்தை பாதுகாக்கவுமே தவிர ஈழத்தமிழர் மீதோ, இலங்கை இனப் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலோ அக்கறையினாலோ அல்ல என்பது இலங்கையரசுக்கு நன்கு தெரியும்.

இலங்கை இனப்பிரச்சினையை தீர்த்து வைக்க இந்தியா உண்மையில் விரும்புமாகவிருந்தால் தான் வழங்கி வரும் சகல இராணுவ உதவிகளையும் நிறுத்திவிட்டு, தமிழருக்கான அதிகாரப் பகிர்வு முடிவுத் திட்டத்தை உடனடியாக முன்வைக்க வேண்டுமென சிறு அழுத்தம் கொடுத்தாலே போதும் இலங்கையரசு அடிபணிந்துவிடும். ஆனால் இந்தியரசு அதனை விரும்பவில்லை.

தற்போதைய அரசியல் கள நிலைவரத்தின்படி பார்த்தால் இலங்கையரசு தான் இந்தியாவை மிரட்டித் தனது காரியத்தைச் சாதித்து வருகிறது. பாகிஸ்தான், சீனாவைக் காட்டி மிரட்டும் இலங்கையரசு கேட்கும் உதவிகளையெல்லாம் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இந்திய அரசு உள்ளது. அழுத்தம் கொடுக்க வேண்டிய இந்திய அரசு கெஞ்சுகிறது. கெஞ்ச வேண்டிய இலங்கையரசு மிரட்டுகிறது.

இவ்வாறான நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டுமென்பதில் இந்திய அரசு உண்மையான அக்கறையுடன் செயற்படுவதாக யாராவது நினைத்தால் அவர்களை விட முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

thinakkural.com

1 Comment:

வெத்து வேட்டு said...

இத்துநூண்டு ஸ்ரீ லங்கா இந்தியாவை மிரட்டுது ...
இந்தியா எல் ரி ரி க்கு பயம் .. எல் ரி ரி இந்தியன் மிலிட்டரி யை ஓட ஓட
விரட்டினவங்க...
இந்தியா எல்லாம் ஒரு நாடா ???????
இலங்கை எப்போ வேணும்நாளும் இந்தியாவை பிடிக்கலாம்.....
ஹி..ஹி,,,ஹி................