-அருஸ் (வேல்ஸ்)-
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மறைவு உலகத் தமிழினத்தை ஓர் அணியில் கொண்டு வந்து விட்டிருக்கிறது. தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலை அமைதி வழிக்கும், அரசியல் தீர்வுக்கும் வீழ்ந்த அடியாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர். அதனை மறுக்கவும் முடியாது. ஏனெனில் தாக்குதலுக்கு உள்ளாகிய இடம் அரசியல் போராளிகளின் செயற்பாடுகள் நடைபெறும் பகுதி.
முழுக்க முழுக்க அரசியல் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயமே மிக்-27 ரக விமானத்தின் குண்டுவீச்சுக்கு அவர் இலக்காகி உள்ளார். போரின் உக்கிரம் உணர்ந்து பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் பூநகரி பகுதிக்கான கட்டளைத்தளபதி பொறுப்பை ஏற்றுக்கொண்ட போதும், தனது அரசியல் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டே வந்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி அனுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதலில் திறமையாக செயற்பட்டவர்களுக்கும், வான்புலிகளின் விமானிகளுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நவம்பர் 1 ஆம் திகதி இரவு பதக்கங்களை வழங்கியிருந்தார்.
அந்த நிகழ்வில் முக்கிய பங்கு வகித்த தமிழ்ச்செல்வன் வைபவம் முடிவுற்றதும் லெப்.கேணல் அன்புமணி (அலெக்ஸ்) உட்பட சிலருடன் கிளிநொச்சியில் உள்ள அரசியல் போராளிகளுக்கான விடுதியை நோக்கி பயணித்துள்ளார்.
அதிகாலை வேளை கிளிநொச்சியை அடைந்த அவர்கள் அரசியல் பணிகளை நிறைவு செய்துவிட்டு ஓய்வு எடுக்கும் பொருட்டு அரசியல் பணிமனைக்கு அண்மையாக உள்ள தமது தங்ககத்திற்கு சென்றுள்ளனர். சுறுசுறுப்பாக இயங்கும் அவர்களுக்கு நீண்ட பகலும், குறுகிய இரவும் தான் அவர்களின் வாழ்க்கை சக்கரம். இது விடுதலைப் புலிகளுக்கே உரித்தான பாணியாகும். அன்றும் அவ்வாறு தான். அதிகாலை வேளை தான் அவர்கள் தூங்க சென்ற நேரம்.
ஆனால் 6.00 மணியளவில் திடீரென தோன்றிய விமானப்படையின் மிக்-27 தாக்குதல் விமானம் ஒன்றும், கிபீர் விமானம் ஒன்றும் வந்த வேகத்தில் அரசியல் பணிமனையின் தங்கு விடுதியின் மீதும், அதற்கு அண்மையாக உள்ள பதுங்கு குழியின் மீதும் தாக்குதலை நடத்தி விட்டு சென்றுவிட்டன. மிக் விமானத்தின் இலக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் பணிமனை விடுதியில் இருந்த பதுங்குகுழியே. வீசப்பட்ட குண்டுகளும் சாதாரண குண்டுகள் அல்ல உயர்ரக இலக்குகளை தாக்குவதற்கு என சிறப்பாக வடிவமைக்கப்பட்ட லேசர் வழிகாட்டலுடைய குண்டுகள். எனவே அதன் இலக்கு பிசகவில்லை. பதுங்கு குழியும் இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்த லேசர் வழிகாட்டலில் இயங்கும் குண்டுகளை இலங்கை அரசு கடந்த வருடம் பாகிஸ்தானில் இருந்து கொள்வனவு செய்திருந்தது. எனினும் லேசர்கள் மூலம் வழிநடத்தப்படும் குறிதவறாத குண்டுகளுக்கான வழிநடத்திகளையும் (டுயளநச னநளபையெவழசள கழச Pபுஆள), பயிற்சிகளையும் மறைமுகமாக இந்தியா, இலங்கை விமானப்படையினருக்கு வழங்கியிருந்தது.
அரசியல் போராளிகளை பொறுத்தவரையிலும் அவர்கள் மக்களுடனும், அனைத்துலக இராஜதந்திரிகளுடனும் நெருங்கி பழகுபவர்கள். எனவே அவர்களை இனங்காண்பது எளிதானது. அதனை போலவே அரசியல் பணிமனையும் அதன் குடியிருப்புக்களும். அவை சாதாரண மக்களுக்கும், அனைத்துலக இராஜதந்திரிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பரிட்சயமான இடம். எனவே அதனையும், அரசியல் போராளிகளையும் இலக்கு வைப்பதோ அல்லது கண்காணிப்பதோ சுலபமானது. அதாவது இலங்கை அரசு தெரிந்தெடுத்த இலகுவான இலக்கையே தாக்கியுள்ளது என்பது வெளிப்படை.
ஆனால் இந்த இலக்குகள் நீண்ட நாட்களாக அவதானிக்கப்பட்டு வந்தனவா? அண்டைய ஆசிய நாடுகளின் செய்மதிகளின் உதவியுடன் அதற்கு அண்மையில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக படம் பிடிக்கப்பட்டனவா? விடுதலைப் புலிகளின் தகவல் பரிமாற்றம் ஒட்டுக்கேட்கப்பட்டதா? அந்நிய தேசம் ஒன்றின் தொழில்நுட்ப உதவிகளும், படைத்துறை உதவிகளும் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதா? போன்ற கேள்விகளுக்குத்தான் தற்போது விடை தேட வேண்டியுள்ளது.
அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதல், அதனையடுத்து மன்னார் வடக்குப் பகுதி நோக்கி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியாக அரசு மிகவும் இலகுவான இலக்கை தெரிந்தெடுத்துள்ளது என்பது தெளிவானது. அதாவது தென்னிலங்கையின் பிரச்சாரத்திற்காகவும், இராணுவ வழியிலான தீர்வுக்கு வழி ஏற்படுத்தும் உத்திகளுடனும் தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலை அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி முகமாலை களத்தில் நடைபெற்ற கடும் சமரில் இராணுவம் கடுமையான இழப்புக்களை சந்தித்திருந்தது. அதன் பின்னர் ஒக்டோபர் 17 ஆம் திகதி இலங்கை விமானப்படை வன்னியில் உள்ள புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியது. இது தோல்வியை மறைக்கும் தாக்குதலாகவே அன்று நோக்கப்பட்டது.
அதாவது அநுராதபுரம் இழப்புக்களை தென்னிலங்கையில் இருந்து புறம் தள்ள அமைதி முயற்சிகளின் முன்னோடியாக முக்கிய பொறுப்பு வகித்து வந்த தமிழ்ச்செல்வன் இலக்கு வைக்கப்பட்டுள்ளார். எனினும் அரசின் இந்த முயற்சி உலகத்தமிழ் மக்கள் மத்தியில் கடும் சினத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், தமிழகத்தையும் பொங்கி எழ வைத்துவிட்டது.
வரவு-செலவுத் திட்டத்திற்கான மிகப்பெரும் பிரச்சாரமாக தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் தென்னிலங்கையில் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்ச்செல்வனின் இழப்பு மூலம் இலங்கை அரசு இரு நோக்கங்களை நிறைவேற்ற முயன்றுள்ளது. ஒன்று படையினரினதும் சிங்கள மக்களினதும் மனவலிமையை அதிகரிப்பது, மற்றது தமிழ் மக்களினதும், விடுதலைப்புலிகளினதும் மனவலிமையை சிதைப்பது.
ஆனால் நடந்தவைகள் மறுதலையானவை, உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் குரல்கள் ஒற்றுமையாக ஓங்கி ஒலித்ததுடன், கடந்த புதன்கிழமை முகமாலையில் ஏற்பட்ட கடும் சமரும் படையினருக்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான பாதுகாப்புகளுடன் புதன்கிழமை காலை 9.45 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மூன்றாவது வரவு-செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதற்கு 4 மணிநேரங்களுக்கு முன்னதாக படையினர் வடபோர்முனையில் உக்கிரமான களம் ஒன்றை திறந்தனர். அதாவது வரவு-செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது வடகளமுனையில் இருந்து ஒரு வெற்றி செய்தியையும் கொடுக்க ஜனாதிபதி ஆசைப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முகமாலை கிளாலி அச்சில் மேற்கொள்ளப்பட்டதை போன்ற முன்னகர்வு உத்திகளே இங்கும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் களம் உக்கிரமடைந்த போது அதிக சேதங்களை தவிர்க்கும் பொருட்டு படையினர் விரைவாக பின்வாங்கி விட்டனர்.
யாழ். குடாநாட்டின் தென்மராட்சியில் நிலைகொண்டுள்ள 55 ஆவது படையணியின் விஜயபாகு றெஜிமென்ட் மற்றும் கஜபா றெஜிமென்ட் படையினரும், 53 ஆவது சிறப்பு படையணியின் வான்நகர்வு பிரிகேட்டை சேர்ந்த பற்றாலியன் படையினரும், 53 ஆவது படையணியின் கவசத்தாக்குதல் பிரிகேட்டை சேந்த கனரக டாங்கிகளும் இந்த வலிந்த முன்னகர்வில் பங்குபற்றியிருந்தன.
இவர்களுக்கு ஆதரவாக எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி ஒன்றும் படையினரின் முன்னணி நிலைகளுக்கு அண்மையாக தாக்குதலில் ஈடுபட்டது. யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியான மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, முகமாலை கிளாலி அச்சில் மெல்ல மெல்ல முன்னகர்ந்து பளையையும், அதற்கு தென்புறம் உள்ள தென்மாங்கேணியையும் கைப்பற்றும் நோக்கத்தை கொண்டது.
விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல் உத்திகள் வேறுபட்டவை. அதாவது தமது முன்னணி அரண்கள் வரையிலும் படையினரை முன்னகர அனுமதித்து அதன் பின்னர் சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். முன்நகர்ந்த படையணிகள் மீது கடுமையான 122 மி.மீ பீரங்கி தாக்குதலும், 120 மி.மீ, 81 மி.மீ மோட்டார் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் எறிகணை தாக்குதல்களுக்கு தற்காப்பு தேட முயன்ற படையினர் மிதி வெடிகளிலும், பொறிவெடிகளிலும் சிக்கி உள்ளனர். அப்போது தான் தாம் ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட பொறிக்குள் சிக்கிவிட்டதை படையினர் உணர்ந்திருப்பர். ஏறத்தாழ இரு மணிநேரம் நடைபெற்ற உக்கிர சமரை தொடர்ந்து களத்தின் நிலைமை மோசமடைவதை உணர்ந்த படையினர் வேகமாக தமது நிலைகளுக்கு பின்நகர்ந்துள்ளனர்.
இந்த மோதல்களில் தமது தரப்பில் 11 பேர் கொல்லப்பட்டதுடன், 41 பேர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் சுயாதீன தகவல்களின்படி இந்த எண்ணிக்கை அதிகம் என்று தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகள் தமது தரப்பில் ஒருவர் பலியானதாகவும், படையினரிடம் இருந்து தாக்குதல் துப்பாக்கிகள் உட்பட கணிசமான அளவு ஆயுத தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கட்டளைத் தளபதி கேணல் தீபனினால் வழிநடத்தப்படும் வடபோர்முனையில் இலங்கை இராணுவத்தின் முன்னணி படைப்பிரிவு 12 மாதங்களில் சந்தித்த இரண்டாவது மிகப்பெரும் தோல்வி இது.
வடபோர்முனை என்பது மிகவும் கடினமானது என்பது பல தடவை உணர்த்தப்பட்ட ஒன்று. அங்கு படையினரை நடவடிக்கையில் ஈடுபடுத்துவது என்பது அவர்களை கொலைக்களத்திற்கு அனுப்புவதற்கு சமனானது என்பது பல படைத்துறை ஆய்வாளர்கள் முன்வைக்கும் கருத்துக்கள்.
விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் ஒவ்வொரு களமுனைக்கும் ஒவ்வொரு உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர். அது களத்தின் தன்மை, பங்குபற்றும் படையினரின் தரம், களத்தின் பூகோள அமைப்பு என்பவற்றை பொறுத்து வேறுபடும். இந்த உத்திகளில் மன்னார் களமுனைக்கும், முகமாலை களமுனைக்கும் இடையில் கூட பல வேறுபாடுகள் உண்டு.
முகமாலையில் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த படை நடவடிக்கை மிகவிரைவாகவும் அதிக சேதத்துடனும் முடிவுக்கு வந்ததுடன், விடுதலைப் புலிகளின் தரப்பில் சேதங்கள் மிக குறைவு என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அவர்கள் கையாண்ட நவீன போரியல் உத்திகள் தான் காரணம்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெற்ற சமரின் போதும் இரண்டரை மணிநேரத்தில் படையினர் கடுமையான இழப்புக்களை சந்தித்திருந்தனர். ஏறத்தாழ 180 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
தற்போதைய படையினரின் உத்திகளானது விடுதலைப்புலிகளை தற்காப்பு சமருக்கு நகர்த்துவதாகும். அதன் மூலம் அவர்களின் வலிந்த தாக்குதல் சமர்களை தவிர்க்க முடியும் என்பது படைத்துறை ஆலோசகர்களின் கருத்து.
ஆனால் 1997 முதல் 1999 வரையிலும் நடைபெற்ற 'வெற்றிஉறுதி" என்றும் படை நடவடிக்கையை எதிர்த்து தற்காப்பு சமரை புரிந்த படி தான் விடுதலைப் புலிகள் கரப்புக்குத்தி, கிளிநொச்சி படைத்தளங்கள் மீது பெரும் வலிந்த தாக்குதல்களை நடத்தியிருந்தனர். பின்னர் ஓயாத அலைகள் என்னும் மிகப்பெரும் வலிந்த தாக்குதலையும் மேற்கொண்டிருந்தனர்.
எனவே விடுதலைப் புலிகளின் மீது மேற்கொள்ளப்படும் படையினரின் வலிந்த தாக்குதல் உத்திகள் அவர்களின் தாக்குதல் சமர் வலிமையை குறைத்துவிடும் என்று படைத்தரப்பு கருதுமாக இருந்தால் அதற்கான விளக்கத்தை தேட 'வெற்றிஉறுதி" படை நடவடிக்கை காலத்திற்கு அவர்கள் செல்ல வேண்டியதில்லை. கடந்த புதன்கிழமை முகமாலை களமுனையில் நடைபெற்ற சமர் அதனை இலகுவாக உணர்த்தியிருக்கும்.
இலங்கை அரசினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு-செலவு திட்டத்தில் கடந்த ஆண்டின் துண்டுவிழும் தொகையான 3000 மில்லியன் அமெரிக்க டொலர்களின் அளவை இந்த ஆண்டும் அது எட்டிவிடும் என்பது பொருளியல் வல்லுநர்களின் கருத்து. இதற்கான காரணம் அதிகரித்த பாதுகாப்பு செலவுகளும், உக்கிரமடைந்து வரும் போரும் தான்.
கடந்த ஆண்டு 30 வீதத்தினால் அதிகரித்த பாதுகாப்பு செலவுகள் இந்த வருடம் மீண்டும் 20 வீதத்தினால் அதிகரித்துள்ளது. அரசினால் மேற்கொள்ளப்படும் முதல் ஐந்து செலவினங்களில் பாதுகாப்பு செலவினமே அதிகம். அதாவது 166.4 பில்லியன் ரூபாக்கள் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
போர் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஓர் இராணுவத்தீர்வை கண்டுவிடலாம் என்பது அரசின் நம்பிக்கை. ஆனால் அநுராதபுரமும், முகமாலையும் அதற்கான பதில்களை வழங்கியிருக்கும். எனினும் இனிவரும் காலங்களும் நெருக்கடியானதாகவே இருக்கும் எனபதைதான் தற்போதைய களமுனைகள் உணர்த்தி நிற்கின்றன.
Sunday, November 11, 2007
முகமாலையில் வைக்கப்பட்ட பொறி
Posted by tamil at 12:55 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment