-ஒரு புலத்து செயற்பாட்டாளனின் அனுபவப் பதிவு-
பேச்சுவார்த்தை குழுவின் தலைவர்!
சர்வதேச உறவாடல்களை நிகழ்த்தும் இராஐதந்திரி!
விடுதலையின் அரசியலை முன்னெடுக்கும் பொறுப்பாளர்!
மனிதநேயமும்- சகோதரத்துவமும் நிறைந்த போராளி!
02 நவம்பரில் பிரகேடியர் தமிழ்ச்செல்வனை வரலாறு தன்னுடன் கூட்டிச்சென்று விட்டது.
பிரிகேடியர் தமிழ்செல்வனை கடந்து நாட்கள் ஓடத்தொடங்கிவிட்டன.
இந்த நாட்கள் வாரங்களாகி- மாதங்களாகி- வருடங்களாகி- தாசப்தங்களாகி- நூற்றாண்டுகளாகி இடையுறாது நகர்ந்துகொண்டே இருக்கப் போகின்றது.
இந்தப் பயணத்தில் எங்கள் தேசம் இழந்த மற்றுமொரு கிட்டண்ணராக தமிழ்ச்செல்வன் எங்கள் மனதுக்குள் வந்து பதிகின்றார். இதனால்தான் தமிழீழத்தின் முதல் கேணலாக கிட்டண்ணரை முன்னிறுத்திய எம் தேசியத்தின் தலைவர் முதல் பிரிகேடியராக சு.ப.தமிழ்ச்செல்வனை முன்னிறுத்தி உள்ளாரோ என்று மனது ஒப்பிட்டுக்கொள்கின்றது.
கிட்டண்ணா போன்று கட்டற்ற உழைப்பு- அந்த உழைப்புக்கு ஈடுகொடுக்கும் மன ஆற்றல்- திறந்த மனது கொண்டதொரு போராளியென வாழ்ந்து வரலாறாகிவிட்டார் தமிழ்ச்செல்வன். அவரை நினைந்தும்- வணங்கியும் பல குறிப்புக்களும், படைப்புக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றாக வீரகாவியமான எங்கள் தமிழ்ச்செல்வன் அவர்களின் பாதங்களில் இந்தக் குறிப்பும் உள்ளடங்கட்டும்.
************************************
பல புகலிடத்து செயற்பாட்டாளர்களுக்கு தமிழ்ச்செல்வன் நீண்டகாலம் போராற்றலாலும், அரசியல் செயற்பாடுகளாலும் அறியப்பட்ட துருவ நட்சத்திரமாகவே இருந்தார். அவரது புன்னகை ஏராளமான புகலிடத்து நண்பர்களுக்கு புலிகள் இயக்கம் வெளிப்படுத்திய நாகரீகத்தின் வெளிப்பாடாக அமைந்தது.
தமிழீழ தேசியத் தலைவரின் பின்னால் அணிவகுத்து- எதுவித சித்தார்ந்த சுமைகளுமற்று- தேசிய விடுதலைக்கான அரசியலை முன்னெடுக்கும் பக்குவத்தினை அவர் வெளிப்படுத்துவதை நாங்கள் அறிந்திருந்தோம். தேசிய விடுதலைப் போரானது அனைத்து பேதங்களை தாண்டியதாகவும், முற்போக்கானதும், நற்போக்கான செல்நெறியூடு பயணிப்பதாகவும் அமைந்திடல் வேண்டும் என்கின்ற தேசியதலைவரின் சிந்தனைக்கு தமிழ்ச்செல்வன் தன் அரசியல் பணிகளில் வடிவம் கொடுக்கின்றார் என்று புரிந்திருந்தது.
நோர்வே மத்தியத்துவத்துடனான பேச்சுக்களே தமிழ்ச்செல்வனின் மற்றுமொரு பரிமாணத்தினை புலத்து தமிழர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கம் அறிமுகப்படுத்தியது. புலிகள் இயக்கத்தின் சர்வதேச தொடர்பாடல்களுக்கான தனது பயணங்களின் போது புலத்துத் தமிழர்களுடன் விடுதலையின் அரசியலை முன்னிறுத்தும் உரையாடல்களை மேற்கொண்டார். அந்த உரையாடல்களில் தமிழீழம் விடுதலை பெறும் என்கின்ற அசைக்கமுடியாத உறுதி வெளிப்படும்.
தேசியத் தலைவரின் பன்முகத்தன்மை பற்றிய விபரங்கள் வெளிப்படும். போராடும் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றிய கவலை வெளிப்படும். களமுனையில் போராடும் போரளிகளின் ஈகம் பற்றிய குறிப்புக்கள் வெளிப்படும். புலத்துத் தமிழர்கள் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் அறிந்திருந்த போராளிகள், மாவீரர்களை நினைவு கூர்ந்து விடுதலைப் பயணத்தில் தொடர்ந்து இருக்குமாறு வலியுறுத்தும் செய்திகள் வெளிப்படும். எல்லோருடனும் எதோ வகையில் தன்னைப் பொருத்திக் கொள்வார். அந்த இணைப்பின் அணைப்பிலிருந்து விடுதலைத் தீயினை பற்றியெழ வைப்பார்.
*****************************************
2003 ஓகஸ்டில் இடைக்கால நிர்வாக சபை வரைவினை செய்வதற்காக பாரிசிற்கு புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு வந்தபோது அவருடன் சற்று நெருக்கமாக பழகும் வாய்ப்பு எட்டியது.
விமான நிலையத்திலிருந்து அப்போதுதான் வந்து தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தின் வரவேற்பறையில் அனைவரும் அமர்ந்திருந்த போது மெதுவாக எழுந்து- தன் கைத்தடியின் உதவியுடன் நடந்து வந்து- நான் இருந்த ஆசனத்திற்கு அருகே அமர்ந்து கொண்டார். ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கத் தொடங்கினார். எனக்கு அது தர்மசங்கடமாகிவிட்டது. தான் இருந்த இடத்திலிருந்து அழைத்திருந்தால் அருகே சென்று விபரிப்பதற்கு தயாராகவிருந்தேன். அவர் களைத்துப் போயிருப்பார் என்பதால் இப்போது பேசலாமா அல்லது அவரது அனுமதியின்றி அருகே நானாகச் சென்று பேசுவதை அவர் எவ்வாறு எடுத்துக்கொள்வார் என்று மனதிற்குள் நான் போராடிக்கொண்டிருந்த போது தானே எழுந்து அருகில் அமர்ந்து தோழமையுடன் விடயங்களை பகிரத் தொடங்கினார். நாங்கள் சாகும்வரை தனது தோழமை எமக்குள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் வகையில் தான் சாகும் வரை இந்த தோழமையை அவர் பேணி வந்தார்.
அன்றைய காலகட்டத்தில், புலிகள் சமர்ப்பித்த மிக முக்கிய வரைவாக இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான வரைவு அமையவுள்ளதால் மிக சிக்கலான சட்ட- அரசியல்- இராஐரீக விடயங்களை கையாள வேண்டிய தேவை அப்போது அவரிற்கு இருந்தது. எனினும், தனது பணிகளுக்கு இடையேயும் வரைவினைச் செய்வதற்காக வந்திருந்த புகலிட தமிழ் கல்வியாளர்களின் நலன்களை கவனித்துக் கொள்வது முதல் தன்னை சந்திக்க வரும் ஏராளமான புலத்துத் தமிழர்களுடன் பேசுவது வரை அனைத்தையும் கையாண்டு வந்தார். தனது செயற்பாடுகள் எங்களது ஏற்பாடுகளுக்கு இயைந்தாக இருக்க வேண்டும் என்பதில் சிரத்தை காட்டினார்.
நீண்டகாலம் எமது பணிகளை விமர்சித்து வந்த ஒரு புலத்துத் தமிழரை சந்திக்க வேண்டிய ~நிர்ப்பந்தம்| ஏற்பட்ட போது அவ்வாறு செய்வது உங்களுக்கு கஸ்டத்தை ஏற்படுத்தாதா என்று எம்மிடம் கேட்டு கருத்தறிந்த பின்னரே அந்தச் சந்திப்பினை செய்தார். தனது பொறுப்பின் ஊடாக பெறப்படும் வலிமையை மற்றவர் மீது திணிக்காமல் தனது ஆளுமையினூடு வெளிப்படும் வலிமையால் தன் பணிகளை நடத்தும் பாங்கு அது என்பதை அப்போதும், பிற்பாடும் பல தடவை புரிந்து கொண்டோம்.
ஒரே நேரத்தில் பல விடயங்களை கவனிக்கும் ஆற்றல் அவரிற்கு இருந்ததை இந்த இடைக்கால நிர்வாக சபை வரைவுகளுக்கான கூட்டங்கள் நடக்கும் போது அறிந்து கொண்டேன்.
இந்தச் சந்திப்புக்கள் முடிந்து தாயகம் திரும்பிய பின்னர் தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்தார். நான் அவரிடமிருந்து பெற்ற முதல் தொலைபேசி அழைப்பு அதுதான். அன்று முதல் தான் சாகும்வரை தொலைபேசியிலும், கணிணியூடாகவும் எங்களை அழைக்கும் பழக்கத்தினை அந்தக் கர்மவீரன் மேற்கொண்டு வந்தார். அவரது தொலைபேசி அழைப்புக்கள் நாங்கள் களைத்துப் போகவே கூடாது என்கின்ற தார்மீக நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தி வந்தது.
************************************
தாயகத்தில் சேரன் குளிர்களியை சுவைத்தவாறு ஏ-9 பெருஞ்சாலை வழியாக நடந்து சென்ற போது எனக்கு முன்னே குறுக்கிட்டு பிரேக் போட்ட வாகனத்திலிருந்து சிரித்துக் கொண்டே இறங்கி சுகம் விசாரித்தார். சமாதானச் செயலகத்திற்கு செல்லும்போது எதிர்ப்பட்டால் அருகிருந்து உற்சாகப்படுத்துவார். தனது சகாக்கள் மத்தியில் இருத்தி உற்சாகப்படுத்தி நான் அப்போது இழந்துவிட்ட தன்னம்பிக்கையை மீட்டுத் தந்தார். அவரது வார்த்தைகளுக்கு இடையே பேசும் மொழியை ஊன்றிக் கவனித்த போது அது விடுதலைக்கு பணிபுரிவது என்பது வெறுமனே எதிரியுடன் பல தளத்திலும் போரடுவது மட்டுமல்ல, எத்தகைய இடர்வந்தாலும் தலைவருடன் நின்றுபிடிக்கும் மனவலுவை வளர்த்துக் கொள்ளுவதும் உள்ளடங்கும் என்பதாகவே எனக்குப் புலப்பட்டது.
**********************************
கால ஓட்டத்தில்; விடுதலைப் பயணத்திற்கான எங்கள் செயற்பாட்டுத் தளமாக அனைத்துலக தமிழர் வளங்களுடன் ஒருங்கிணைந்து சர்வதேசத்துடனான தொடர்பாடல்களாக வரித்துக்கொண்டு பயணிக்கத்தொடங்கிய போது தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழு மற்றும் சமாதானச் செயலகம் என்பனவற்றுடன் நெருக்கமாக பணிசார் உறவுகளை பேணும் வாய்ப்புக்களைப் பெற்றது.
இந்த உறவாடல்களின் போது சர்வதேச இராஐதந்திர வேலைத் திட்டங்களில், தொடர்பாடல்களில் செய்யப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக எதுவித தயக்கமற்ற கருத்துப் பரிமாற்றங்களையும் நாங்கள் மேற்கொள்ளலாம் என்கின்ற காத்திரமான நிலைமை அவரால் பேணப்பட்டது.
நாங்கள் சில விடயங்களை விமர்சிப்போம். சிலவற்றினை இவ்வாறு செய்யலாம் என்று கருத்துக் கூறுவோம். சிலவற்றைப் பாராட்டுவோம். இந்தக் கருத்துக்கள் அனைத்தும் எங்களின் முனைகளில் நாங்கள் திரட்டிய அனுபவங்களின் வெளிப்பாடாகவே அமையும். சிலவேளை எங்களது கருத்துக்கள் தாயகத்தின் களநிலவரத்துடன் பொருந்தாததாக அமையும். இதுவொரு சிக்கலான விடயம்.
எனினும், எங்களது கருத்துக்களை செவிமடுப்பார்;. கருத்துக்களை சொல்லுமாறு ஊக்கப்படுத்துவார். ஏற்றுக்கொள்வார் அல்லது இயக்கத்தின் வியூகத்திற்கு பொருத்தமற்றவற்றை மிகவும் புத்திசாலித்தனமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து மறுப்பார். பிற்காலத்தில் எமது சில அபிப்பிராயங்களை கேட்டுவிட்டு அவர் வெளிப்படுத்தும் சிரிப்பில் அதனை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா அல்லது வேண்டாம் என்று சொல்கின்றாரா என்று நாங்கள் புரிந்து கொள்ளும் பக்குவம் எமக்கு ஏற்பட்டது.
இயக்க வியூகம் இதுதான் என்று வார்த்தைகளால் சொல்லமாட்டார். ஆனால் நாங்கள் புரிந்து கொள்வோம்.
***************************************
இடைக்கால நிர்வாக சபை வரைவு தொடர்பான மீள் அமர்வு nஐனீவாவில் இடம்பெற்ற போதும், nஐனீவாப் பேச்சுக்களின் போதும் நாங்கள் மிகவும் நெருக்கமான செயற்பாட்டு உறவுகளை உருவாக்கிக் கொண்டோம். இக்காலப் பகுதியில் எமது பணிமனையில் அமர்ந்து பணிகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவார். புலத்து தமிழ் அறிவார்த்த வளங்கள் இணைக்கப்படல் வேண்டும் என்று திரும்பத்திரும்பக் கூறுவார். நாங்கள் அழைத்து அறிமுகப்படுத்தும் எவரையும் தயங்காது சந்தித்து பேசுவார். உற்சாகப்படுத்துவார்.
நாங்கள் தேர்ந்தெடுத்த இரண்டாவது தடத்து இராஐதந்திரப் பணிகளில் எங்களால் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் இறங்கிச் செயற்படுவதற்கு இந்த நம்பிக்கையும், உற்சாகப்படுத்தலும் முக்கிய கூறாக அமைந்தது.
அவரது இறுதியான வெளிநாட்டுப் பயணத்தின் போது பேச்சுக்களின் முழுப்பொறுப்பினை அவர் ஏற்றிருந்தார். பால அண்ணர் சுகவீனமுற்று பேச்சுக்களில் பங்கேற்காத சூழல் ஏற்படுத்திய வெற்றிடத்தில் தற்போதைய அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன், சக தளபதி கேணல் nஐயம், சமாதானப் பணிமனை பணிப்பாளர் புலித்தேவன், பேச்சாளர் இளந்திரையன் மற்றும் சட்டவிவகார நிபுணர் ருத்திரா அண்ணர் மற்றும் உதவியாளர்களுடன் இணைந்து சிறிலங்காவின் பயிற்றப்பட்ட அணியினை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும்- நோர்வேயின் ஊடாக நகர்த்தப்படும் சர்வதேச நெருக்குவாரங்களை சந்திக்க வேண்டிய தேவையும் அவருக்கு ஏற்பட்டது. அவர் பல்வேறு தமிழ்ப் புத்திஐPவிகளை அழைத்துப் பேசி தனது அணியினை பல வழிகளிலும் தயார்படுத்திக் கொண்டார். அரசியல் தீர்வு பற்றி பேச புலிகள் தயாராகவில்லை என்ற எண்ணத்துடன் சிறிலங்கா விரித்த வலையை சரியாகக் கணித்து வைத்துக் கொண்டார்.
பேச்சுக்களின் முதல் நாளின் போது அரசியல் தீர்வு பற்றிப் பேசலாம். நீங்கள் தயாரா என்று நிமால் டி சில்வாவினைப் பார்த்து கேள்வி எழுப்பினார். சிறிலங்கா அப்போது அடித்த குத்துக்கரணம் அன்றைய நாளின் மறக்க முடியாத பகிர்வு. தங்களது அனைத்துக் கட்சி கூட்ட முடிவின் பின்னர் பேசுவோம் என்று சிறிலங்கா பின்வாங்கிவிட்டது.
nஐனீவா-02 பேச்சுக்கள் முடிவடைந்த பின்னர் அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு மிகவும் தாக்கமுள்ளதாக அமைந்தது. யாழ். நெடுஞ்சாலை மூடப்பட்டதை 'பேர்லின் சுவர்" என்று ஒப்பீட்டு ரீதியான விபரிப்பு அப்போது புலிகளின் தரப்பால் முன்வைக்கப்பட்டு ஊடகர்களால் கவனிக்கப்பட்டது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பு முடிவடைந்த பின்னர் அவரிடம் வெளிப்பாடு சிறப்பாக இருந்தது என்று நாங்கள் மனந்திறந்து கருத்துத் தெரிவித்த போது, 'இது எனது தனித்த பணியில்லை- அனைவரினதும் கூட்டுப்பணி" என்று அந்த வெற்றியின் பொறுப்பை பகிர்ந்து கொண்டார். பாலா அண்ணர் என்ற வலுவான பேச்சுவார்த்தையாளர்- மதியூகி- இல்லாத எதிர்காலப் பேச்சுக்களை, பொறுப்பாளராக தமிழ்ச்செல்வன் எவ்வாறு கையாளப் போகின்றார் என்பதன் அறிகுறியாகவே எங்களால் பார்க்கப்பட்டது.
கூட்டுப்பணி என்று தமிழ்ச்செல்வன் சொன்னது வெறும் வார்த்தைகளல்ல. அவர் அதை நம்பினார். சிக்கலான சர்வதேச பணிகளை தமிழீழ தேசத்தின் பல்வேறு வளங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டு வேலைகள் மூலமே கையாள முடியும் என்று அவர் நம்பிச் செயற்பட்டதை அவருடன் அந்த முனைகளில் பணியாற்றிய நாங்கள் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளோம்.
எப்போதும் தமிழ்ச்செல்வனுடனான தொலைபேசி தொடர்புகள் முடியும் போது 'நல்லது நல்லது தொடர்ந்து செய்யுங்கோ" என்கின்ற மிகவும் சொற்கள் தானகவே வந்துவிழும். அவை மந்திரிக்கப்பட்ட சொற்களாகவே காதில் ஒலிக்கின்றது. குறித்த கால இடைவெளிக்கு ஒருமுறை தொலைபேசியில் அல்லது கணிணி தொடர்பாடலில் அழைத்துப் பணிகளை ஊக்கப்படுத்தும் அந்த பண்பாளன் சாவடைந்த செய்தி எங்களை எட்டியபோது கணிணியில் அவரது அடையாளத்தினை இயல்பாக தட்டிப்பார்த்துக் கொண்டோம். அவரது உணர்வு எங்களை ஆட்கொள்கின்றது.
**********************************
நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி வருடங்களாகி தசாப்தங்களாக- நூற்றாண்டுகளாக மாறிடினும் காவியநாயகர்கள் அவற்றினூடாகப் பயணித்து வரலாற்றை வென்று வாழ்ந்திருப்பார்கள். எங்கள் தமிழ்ச்செல்வன் அண்ணரும் தன் பணியால், அர்ப்பணிப்பால், பண்பால் காலங்கள் ஊடு பயணித்து வாழ்வார்.
அவர் மீட்டுத்தந்த தன்னம்பிக்கை எங்களுள் எரிதழலை மூட்டுகின்றது
-இளங்கோ (அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு - ஜெனீவா)-
tamilnaatham.com
Thursday, November 15, 2007
தமிழ்ச்செல்வன்: காலங்களை கடந்த பயணி!
Posted by tamil at 11:12 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment