Thursday, November 29, 2007

விபரீத விளைவுகளுக்கு சர்வதேசமும் பொறுப்பு

Posted on : 2007-11-29

மாவீரர் தினத்தை ஒட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய உரையும்

அந்த மாவீரர் தினத்தில் வன்னி மீது இலங்கைப் படைகள் பல்வேறு முனைகளில் நடத்திய தாக்குதல்களில் 22க்கும் அதிகமான அப்பாவிகள் உயிரிழக்க, டசினிற்கும் அதிகமானோர் காயமடைந்தமையும்

புலிகளின் தலைவர் பிரபாகரனை விரைவில் கொன்றொழிப்போம் என இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையில் அதி சக்தி வாய்ந்தவரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சூளுரைத்திருக்கின்றமை பற்றிய செய்தி வெளியாகியமையும்
ஏறத்தாழ ஒரே சமயத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இலங்கைத்தீவின் நிலைமை மிக மோசமான விபரீத கட்டத்துக்குள் நுழைந்து கொண்டிருப்பதை உய்த்துணர முடியும்.

இலங்கை விவகாரம் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஆச்சரியத்துடன் கவனிக்கப்பட்ட ஓர் விடயத்தை இப்பத்தியில் அண்மைக் காலங்களில் நாம் மேலோட்டமாகக் கோடிகாட்டி வந்தோம்.
சர்வதேச ரீதியாக மஹிந்த அரசினதும், அதன் படைகளினதும், அவற்றின் கீழ் இயங்கும் துணைப் படைகளினதும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் கண்டனங்களும் சர்வதேச அமைப்புகள் ரீதியாகத் தீவிரமடைந்து வலுப்பெற்று வர, இவ்விடயத்தில் புலிகள் பெயர் சற்று மேம்பட்டு வருவதையே நாம் சாடைமாடையாக இப்பத்தியில் தொட்டுக்காட்டியிருந்தோம். சர்வதேச சமூகமும் இதை ஆச்சரியத்துடன் பார்த்து நிற்கின்றது என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

அது உண்மைதான். நீதியாக நியாயமாக நடப்பதன் மூலம் சர்வதேச சமூகத்தின் தார்மீக ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நம்பிக்கையோடு எதிர்பார்த்துத் தங்கள் செயற்பாடுகளை அண்மைக் காலத்தில் ஒழுங்குபடுத்தி, நேர்சீராக்குவதில் புலிகள் அதிக சிரத்தையும் கவனமும் கரிசனையும் காட்டி வந்தனர்.

ஆனால் இதற்கு ஆக்கபூர்வமான பிரதிபலிப்பைக் காட்டி, புலிகளை மேலும் ஊக்கப்படுத்துவதில் சர்வதேச சமூகம் தவறிவிட்டது என்றே தோன்றுகின்றது.

கிழக்குத் திமோர், மொன்ரி நிக்ரோ, கொசோவோ போன்றவற்றின் விடயங்களில் தர்மத்துடன் செயற்பட்ட சர்வதேச நாடுகள் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையில் திருப்தியாக நடந்துகொள்ளவில்லை என்றும், இதனால் எம் மக்கள் இந்த சர்வதேச நாடுகள் மீது வைத்திருந்த நம்பிக்கை தகர்ந்து போய்விட்டது என்றும், இந்த நாடுகளின் நடுநிலைச் செயற்பாட்டில் கேள்விக்குறி எழுந்திருக்கின்றது என்றும் தலைவர் பிரபாகரன் விசனத்தோடு விவரிப்பதும்
அந்த ஆதங்கமே இந்த வருட மாவீரர் தின உரையின் மையப்பொருளாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதும் இந்த நிலைமையையே எடுத்துக்காட்டுகின்றன.

சர்வதேசத்துக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டு விரல் தமிழர் தரப்பில் இருந்து எச்சமயத்தில் நீளுகின்றது என்பதும் கவனிக்கத்தக்கது.

தமிழ்ச்செல்வன் உயிரிழக்கக் காரணமான விமானக்குண்டு வீச்சால் ருசி கண்டுவிட்ட கொழும்பு, அதையே தன்னுடைய பிரதான தாக்குதல் தந்திரோபாயமாகப் பயன்படுத்தப் போகின்றது என்பது அதன் அண்மைக்கால செயற்பாட்டில் இருந்தும், பாதுகாப்புச் செயலாளரின் செருக்குமிக்க பேட்டியிலிருந்தும் தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.
நேற்று முன்தினம் மாவீரர் தினத்தன்று மட்டும் இத்தகைய விமானக்குண்டுவீச்சு மற்றும் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர்த் தாக்குதல்களில் இருபதுக்கும் அதிகமான சிவிலியன்கள் பலியாகியிருக்கின்றார்கள்.

ஒருபுறம் தமிழரின் தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் சர்வதேசம் நீதியாக நடுநிலையாக செயற்படவில்லை என்ற விசனமும், ஆதங்கமும் வன்னியிலிருந்து சூடாகவே வெளிப்படுகின்றன.
மறுபுறம், தமிழர் தேசம் மீதான கண்மூடித்தனமான விமானக்குண்டுவீச்சு மற்றும் கிளைமோர்த் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுகின்றனர்; காவு கொள்ளப்படுகின்றனர்.

விடுதலைப் புலிகளை ஏற்கனவே பயங்கரவாத இயக்கமாகப் பட்டியலிட்டுச் சித்திரித்த சர்வதேசம், இப்போக்கைப் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கின்றது.
இவை எத்தகைய விபரீதத்துக்கு வழிப்படுத்தும்?

இலங்கை இனப்போரின் போக்கை ஆழமாக அவதானித்து வருகின்றவர்களுக்கு இப்போக்கின் விளைவு பேரவலம் தரும் மோசத்தை உருவாக்கும் என்ற அச்ச உணர்வையே ஏற்படுத்துகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் நால்வர் கொல்லப்பட்டமையும், அடுத்தநாள் அநுராதபுர எல்லைப் புறப் பிரதேசமான மாவிலாச்சியவில் நான்கு அப்பாவி சிங்கள விவசாயிகள் கொல்லப்பட்டமையும் இனி நிகழ்ப்போகும் அந்த விபரீதங்களுக்கான கட்டியம் கூறலோ என்னவோ.............?
இவ்வாறான பழிக்குப்பழி வாங்கும் தாக்குதல் போக்குக்கு அப்பாவிகள் இலக்காகும் இரையாகும் கொடூரம் இலங்கைத் தீவில் தீவிரம் பெறுமானால், இவ்விடயத்தில் பொறுப்புடனும், நீதியுடனும், நடுநிலையுடனும் செயற்படத் தவறித் தவறிழைத்த சர்வதேசமும் அக்குற்றத்துக்குப் பெரும் பொறுப்பேற்கவேண்டி நேருவது தவிர்க்க முடியாததாகும்.

uthayan.com

0 Comments: