Wednesday, November 28, 2007

தில்லுமுல்லுக்களும் திருகுதாளங்களும் நிரம்பிவழியும் இலங்கை அரசியல்

சென்ற வாரம் உகண்டா தலைநகர் கம்பாலாவில் இடம் பெற்ற பொதுநலவாய நாடுகள் ஸ்தாபனத்தின் மாநாட்டில் பாகிஸ்தானின் அங்கத்துவம் இடைநிறுத்தப்படவேண்டுமென்ற பிரேரணைக்கு வெளிநாட்டமைச்சர் ரோகித்த போகொல்லாகம ஆதரவளித்திருந்தார். பின்பு ஜனாதிபதி ராஜபக்ஷ அப்பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆயினும், இலங்கை அரசாங்கம் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் பாரிய தவறு இழைத்து விட்டதாகவும் அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமெனவும் ஜே.வி.பி.யின் அரசியற்குழு விடுத்த அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பேர்வெஸ் முஷாரப் ஜனவரி 8 இல் பொதுத்தேர்தல் நடத்துவதற்கு ஆவன செய்துள்ளதோடு, ஆயிரக்கணக்கான சிறைக்கைதிகளை விடுதலை செய்து அஞ்ஞாதவாசம் செய்திருந்த தலைவர்களை நாடுதிரும்ப அனுமதித்து நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளாரெனவும் ஜே.வி.பி.தனது பாராட்டினைத் தெரிவித்துள்ளது.

உண்மையில், முஷாரப் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பெரிதும் விசுவாசமானவர் என்பதும், 1999 இல் இராணுவ சதி மூலம், அன்றைய பிரதமர் நவாஷ் சரீப்பை பதவி நீக்கியவர் என்பதும் உலகறிந்த விடயம். ஜனாதிபதி பதவியோடு இராணுவத்தளபதி பதவியையும் தன்வசம் வைத்திருந்தவர். முன்னாள் பிரதம நீதியரசர் சௌத்திரியை ஏதேச்சாதிகாரமாக பதவி நீக்கம் செய்தவர். தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையடுத்து, பிரதம நீதியரசர் பதவியை மீண்டும் தனதாக்கிக் கொண்டவராகிய சௌத்ரி அடங்கலாக உச்ச நீதிமன்றம் முழுவதையும் கலைத்து விட்டு, பதிலாக, தனது கையாட்களை நியமித்தவர். இதன்பொருட்டு, அவசர கால நிலையைப் பயன்படுத்தி அரசியல் யாப்பை இடைநிறுத்தி விட்டவர். அவ்வாறாக, தான் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டது சம்பந்தமாக எழுந்ததாகக் கூறப்பட்ட சீர்கேடுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கையும் தவிடுபொடியாக்கியவர். பாகிஸ்தானில் இன்று குறிப்பாக, ரறூக் அலி போன்ற பிரபல இடதுசாரிகள் தலைமறைவாக வேண்டியுள்ள அளவிற்கு பயங்கர அடக்குமுறை நிலவுகிறது. இவற்றையெல்லாம் ஜே.வி.பி.கண்டுகொள்ளாமலிருப்பது வேடிக்கையாயிருக்கிறது.

ஐ.தே.க.வின் அங்கலாய்ப்பு

மறுபுறத்தில் ஐக்கிய தேசியக்கட்சியினர் மேலும் வெளிப்படையாகவே தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். அதாவது, பொதுநலவாய நாடுகள் ஸ்தாபனம், பாகிஸ்தானை இடைநிறுத்தம் செய்வதற்கு வெளிநாட்டமைச்சர் ஆதரவு வழங்கியது உண்மையில் நாட்டுத்துரோகமென ஐ.தே.க.தனது கடுமையான விசனத்தைத் தெரிவித்துள்ளது. ஏனென்றால், குறிப்பாக 2000 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பெருவாரியான பல்குழல் றொக்கட் லோஞ்சர்களை தந்து உதவியபடியால் தான் விடுதலைப்புலிகளின் கொட்டத்தை அடக்கி பலாலி இராணுவ முகாம் காப்பாற்றப்பட்டதென்ற நன்றிக்கடனை மறந்து விடக்கூடாதென லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகிய ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் காரசாரமாக எடுத்தியம்பியிருந்தனர். எனவே, மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மட்டுமல்லாமல், ஐ.தே.க.வும் இராணுவத்தீர்வில் பெரிதும் நாட்டம் கொண்டிருப்பது கண்கூடு.

ஐ.நா.வுக்கு விடுதலைப்புலிகள் அனுப்பியிருந்த மகஜர்

கடந்த செப்டெம்பர் பிற்பகுதியில் 62 ஆவது ஐ.நா.பொதுச்சபைக்கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரையாற்றுவதற்கு சற்று முன்னதாக, விடுதலைப்புலிகள் ஐ.நா.செயலாளர் நாயகத்துக்கு அனுப்பிவைத்த மகஜரில், தமிழரின் இறைமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாயிருக்க வேண்டுமென கோரியுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

"இலங்கை அரசாங்கம் தனது ஏமாற்று வித்தைகளை நிறுத்த வேண்டும். இராணுவத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும். தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு (அககீஇ) போன்று காலங்காலமாக வட்டமேசை நாடகங்கள் மாறி மாறி ஆட்சி செய்துவந்த எல்லா அரசாங்கங்களாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த பச்சை ஏமாற்று வித்தையாகும். அரசாங்கம் இராணுவத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டு வருகின்ற போதும் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து வருவதோடு, பேச்சுவார்த்தைக்கான எமது கதவுகள்தான் அகலத்திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்தின் இராணுவத் தாக்குதல்களில் அதிக எண்ணிக்கையான சாதாரண பொது மக்களே பலியாகி வருவதால், இலங்கை அரச படைகள் தமிழ் மக்கள் மீது இனக்கொலை யுத்தமொன்றினை நடத்திவருவது வெள்ளிடை மலை. சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள அடக்கு முறைச்சட்டங்கள் இக்கொடுமைகளை ஏற்று நிற்கின்றன. அச்சட்டங்கள் கண்மூடித்தனமான முறையில் கைதுகள் செய்தல், சித்திரவதை செய்தல், கொலை செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்கின்றன. ஆக, கிழக்கு திமோர் மற்றும் கொசொவோவில் காணப்படுவது போன்று, தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கு வேண்டிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்" இவ்வாறுதான் விடுதலைப்புலிகளின் மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசாங்கத்தை தக்கவைப்பதற்கு யுத்தம்

மறுபுறத்தில் மகிந்தராஜபக்ஷ அரசாங்கமோ, விடுதலைப்புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட வேண்டும். அதுவே அரசியல்தீர்வுக்கு இன்றியமையாததாகும் என வரிந்து கட்டிநிற்பதை ஏலவே குறிப்பிட்டுள்ளோம். ஏனென்றால், அரசியல்தீர்வுக்கான உருப்படியான வரைபடமெதுவும் அரசாங்கத்திடம் இல்லாத நிலையில், வாழ்க்கைச் செலவுப் பிரச்சினை தென்னிலங்கையில் விஸ்வரூபமெடுக்கும் நிலையில், அதனை ஒருவாறு சமாளிக்கும் நோக்கில் அரசாங்கம் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கு யுத்தம் புரிந்து கொண்டிருப்பதையும் வெற்றிகள் ஈட்டுகிறோம் என்று சித்திரிப்பதையும் தவிர, வேறு வழியின்றி நிற்கிறது. அத்தோடு, சர்வதேச சமூகத்தின் சில பிரிவினர் அரசாங்கத்திற்கு சேறு பூச முற்பட்டுள்ளனர் என்றொரு அங்கலாய்ப்பையும் ஜனாதிபதி அண்மையில் வெளிப்படுத்தியுள்ளார்.

பொருளாதார பாதிப்புகள் பற்றி கவலை காணப்படவில்லை

இவ்வாறான நிலைமைகள் காரணமாக, பொருளாதாரரீதியில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை அரசாங்கம் கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை. உதாரணமாக, முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் அதிருப்தியைக் குறிப்பிடலாம். "எமது சகபாடிகள் பெற்ற பிரதிகூலமான அனுபவங்கள் காரணமாக இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை விலக்கியுள்ளனர்". இவ்வாறு அண்மையில் தேசிய ஏற்றுமதியாளர் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கொன்றில் இந்திய உயர்ஸ்தானிகராலய வர்த்தக அலுவலர் சந்தொஸ் ஜா குறிப்பிட்டிருந்தார். அப்பலோ மருத்துவமனை, லங்கா ( ஐ?இ) போன்ற நிறுவனங்கள் மூலம் பெற்ற கசப்பான அனுபவங்கள் காரணமாக இந்திய முதலீட்டாளர்கள் ஆர்வமிழந்து போகும் நிலை ஏற்படக்கூடும் என்பதால், இந்திய முதலீட்டாளர்களைக் கவரவல்ல வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா, இலங்கையில் பெரியளவில் முதலீடு செய்து வந்துள்ளது. கடந்த 1- 1/2 வருட காலத்தில் இந்தியாவின் வெளிநாட்டு முதலீடு 30 பில்லியன் அமெரிக்க டொலர் தொகை ஆகும். இலங்கையில் முதலீடு செய்வது மிகவும் இலகுவான காரியமாகும். அதற்கான வாய்ப்புகள் எழுச்சியானவையாக அமைய வேண்டும். இவ்வாறு ஜா தனது உரையில் கூறிவைத்தார்.

அடுத்ததாக மூளைசாலிகள் வெளியேற்றம் அபாயகரமாயுள்ளதென இலங்கை பட்டயக் கணக்காளர் சங்கத் தரப்பினர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். கணக்காளர்கள் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்குப் பறந்து கொண்டிருக்கின்றனர். அரசாங்கமோ இப்பாரிய பிரச்சினையை கம்பளத்தின் கீழ் தள்ளிவிட்டு கைகட்டி நிற்கிறது. இது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளுக்கு பெரிதும் குந்தகம் விளைவிக்கும் என்பது ஆட்சியாளர்களால் உணரப்படாதது மிகுந்த கவலைக்குரியதாகும். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையோ, நல்லாட்சியோ இல்லாமையே மூளைசாலிகள் வெளியேற்றத்துக்கு பிரதான காரணமென ஆய்வாளர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.

வரவு- செலவுத்திட்டம்

நிற்க, வரவு- செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு தொடர்பாக சுவாரஸ்யமான இரண்டொரு விடயங்களைப் பார்ப்போம். இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் பங்குபற்றுவதற்கு அமைச்சர் அனுர பண்டாரநாயக்க சபையை நோக்கிச் சென்று கொண்டிருந்தவேளை, ஜனாதிபதியின் சகோதரர், பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ அனுரவிடம் குசலம் விசாரிக்க முற்பட்டார். "ஜனாதிபதி ராஜபக்ஷ நாட்டையும் அழித்துக் கொண்டு பண்டாரநாயக்க குடும்பத்தையும் அழிப்பதற்கு முனைந்து வருகின்றார். அவரின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன" என்பது தான் அனுர அளித்த பதிலாகும். மேலும், ஜனாதிபதியும் அவரின் செயலாளரும் ஏன் அடிக்கடி தொலைபேசியில் நினைவூட்டிச் சினமூட்டி வருகின்றனர். உங்களுக்கு பெரும்பான்மை உண்டென்றால் ஏன் என்னையும் இழுப்பதற்குத் தவிக்கின்றீர்கள் என்றும் அனுர சீண்டியிருந்தார். பின்பு வாக்கெடுப்பு முடிந்ததும் தனது தாய், தந்தையருக்காகவே ஆதரித்து வாக்களித்ததாக அனுர கூறியதையும் இங்கு குறிப்பிடலாம்.

மற்றும் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் வன்னியைக் கைப்பற்றுவது தடைப்பட்டுவிடும் . இது விடயமாக அலி- கொட்டி (யானை- புலி) சதித்திட்டமும் உண்டென்றபடியால் எதிராக அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் விடுதலைப் புலிகளுக்கு சாதகமான வாக்கு ஆகும் என்றெல்லாம் பகீரதப்பிரயத்தனங்கள் செய்துதான் 2 ஆவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.

14.12.2007 இல் 3 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் வேளை அரசாங்கமே தோல்வியைத் தழுவக்கூடும் என சில வட்டாரங்களில் எதிர்வு கூறப்படுகிறது. ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இ.தொ.கா. இரு கட்சிகளும் அன்றைய தினம் எதிர்த்து வாக்களிக்கக் கூடும் என்றும் சமிக்ஞைகள் சற்றுத்தென்படுகின்றன. அத்தகைய சூழ்நிலை தோன்றினால் யுத்தம் முன்னெடுக்கப்பட வேண்டியது தமது முதலாவது தெரிவாகையால் ஜே.வி.பி. யினர் தமது முன்னைய முடிவை மீள்பரிசீலனை செய்து 14.12.2007 இல் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும். அதாவது, 2 ஆவது வாசிப்பின் போது தாமும் ஐ.தே.க.வும் தமிழர் தேசியக் கூட்டமைப்பும் எதிர்த்து வாக்களித்தது முற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காகவென ஜே.வி.பி. தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் எனலாம். தில்லுமுல்லுகளும் திருகுதாளங்களும் நிரம்பிவளியும் இலங்கை அரசியலில் இவையெல்லாம் ஆச்சரியப்படுவதற்குரியவை அல்ல.
வ.திருநாவுக்கரசு
thinakkural.com

0 Comments: