தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையே கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எல்லைகளுக்கான யுத்தம் முனைப்புடன் நடந்து வருகின்றது.
அத்தோடு வீதிக்கான சண்டையொன்றும் கடந்த பதினேழு வருடங்களாக இடம்பெற்று வருகின்றது. அதில் பிரதானமாக குறிப்பிடப்படும்படியானது (ஏ-09) யாழ்ப்பாணம் - கண்டி சாலையே ஆகும்.
விடுதலைப் புலிகளின் வன்னி மீதான ஆதிக்க வலுவை நலிவுறச் செய்யும் நோக்கிலும் வன்னியின் மையப்பகுதியான மாங்குளத்தின் முக்கியத்துவத்தையும் இச்சாலையின் தேவையும் கருதி அதனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளச் சிறிலங்கா இராணுவம் நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது.
இந்த ஏ-09 வீதியை ஆக்கிரமிக்கும் நோக்கில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையிலும் இப்பகுதிக்கும் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதற்கென பெருமளவான இராணுவத்தினரை பலியிட்டும் வந்துள்ளனர்.
இவ்வாறு நரபலி கொடுத்து பெரும் இழப்புக்களுடன் 'ஒப்பரேசன் ஓட்டம்" என்று வர்ணிக்கும் அளவிற்குச் சிறிலங்கா இராணுவம் விட்டு ஓடிய இடமே மாங்குளமாகும்.
1971 ஆம் ஆண்டில் தமிழர் தாயகப்பகுதியில் ஆயுதப் போராட்டம் வளர்ச்சியடைந்திருக்காத காலம் அது. ஆனாலும் சிறிலங்கா அரசு தமிழர் மீதான வன்முறைகளை அவ்வப்போது முடுக்கிவிட்ட காலம். ஒருபுறம் தமிழர், மறுபுறம் ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்கள் என்று சிறிலங்கா ஆட்சிப்பீடம் தலையைப்பிய்த்துக் கொண்டிருந்தது.
அக்காலப்பகுதியில் கிளர்ச்சி செய்த ஜே.வி.பியினரான சிங்கள இளைஞர்களைக் கைது செய்த சிறிலங்காப்படை, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அக்கராயன் மகாவித்தியாலயத்தில் சிறை வைத்திருந்தது. இவர்களுக்குப் பாதுகாப்பாக சிறிய அளவிலான இராணுவ அணியும் இங்கு தங்கியிருந்தது.
இப்பாடசாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளுக்கும் இராணுவ அணிக்கும் பாதுகாப்பு வழங்க வன்னியின் மையப்பகுதியான மாங்குளத்தில் சிறிலங்கா அரசால் சிறிய முகாம் ஒன்று நிறுவப்பட்டது. இது பின்னர் அகற்றப்பட்டது. இதேவேளை, சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் உத்தியாக குடியேற்றத்திட்டங்களை ஏற்படுத்தி வந்தனர். அதில் பெரும் பான்மை சிங்கள மக்களுக்கே இந்த வாய்ப்பு அரசால் வழங்கப்பட்டது.
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா முன்பு விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் சிங்களவர்களை வலுப்படுத்தவும் தமிழர்களைப் பலவீனப்படுத்தவும் மேற்கொண்ட முதலாவது நடவடிக்கை நிலப்பறிப்பாகும். பின்னாளில் மண் பறிக்கும் கபட முயற்சிகள் கொண்ட சிங்களவர்களிடம் இருந்து மண்ணைக் காக்கும் சிந்தனை தமிழ் மக்களிடையே உருப்பெற்றது.
இவ்வாறு கபடநோக்கம் கொண்ட சிறிலங்கா அரசு 1978 ஆம் ஆண்டு மாங்குளத்திற்கு மேற்கே சுமார் 10 கிலோமீற்றரில் அமைந்துள்ள வவுனிக்குளம் என்னும் குளத்தில் நன்னீர் மீன்பிடித்தொழில் செய்வதற்கு நீர்கொழும்பில் இருந்த சிங்கள மீனவர்களை அழைத்து வந்தது.
ஜே.வி.பி கிளர்ச்சியாளர் தோற்கடிக்கப்பட்ட பின் மாங்குளம் இராணுவ முகாம் வவுனிக்குளத்தில் உள்ள சிங்கள மீனவர்களின் பாதுகாப்புக்கென மீண்டும் அமைக் கப்பட்டது. அத்தோடு பொலிஸ் நிலையமும் நிறுவப்பட்டது.
பின்பு தென்னிலங்கையில் ஏற்பட்ட கலவரங்களின் எதிரொலியாக வவுனிக்குளத்தில் இருந்த தமிழர்களால் சிங்கள மீனவர்கள் அடித்து விரட்டப்பட்டனர்.
ஆயினும் சிறிய இராணுவ முகாமாக இருந்த மாங்குளம் படிப்படியாக விரிவாக்கம் பெற்று தமிழ் மக்களின் போக்குவரத்திற்கு பெரும் இடையூறுகளை விளைவிக்கும் ஒன்றாகியது.
வீதியில் எப்பக்கம் பயணம் செய்தாலும் ஒரு கிலோமீற்றர் தூரத்தை மக்கள் நடந்தே கடக்க வேண்டிய அளவுக்கு இம் முகாம் விஸ்தரிக்கப்பட்டிருந்தது.
இம்முகாமில் இருந்த இராணுவத்தினருக்கான விநியோகங்கள் யாவும் தரை வழியாகவே இடம்பெற்று வந்தன. ஏ-09 வீதியில் ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி, கொக்காவில், மாங்குளம், வவுனியா போன்ற முக்கிய இடங்களில் இராணுவம் படைநிலைகள், முகாம்களை அமைத்துக்கொண்டன. இந்த முகாம்களில் இருந்த படையினர் அயலில் உள்ள கிராமங்களில் புகுந்து மக்களுக்கு இன்னல்களை விளைவித்தனர்.
ஏ-09 பாதையினை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து வன்னியில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதே இவர்களின் நோக்கமாக இருந்தது.
ஆனால் இற்றை வரை அவர்களின் நோக்கம் நிறைவேறாது இருப்பது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
வன்னியின் முதுகெலும்பாகக் காணப்படும் ஏ-9 வீதிக்காக 1997 இல் சிறிலங்காப் படையினர் ஆரம்பித்த 'ஜெயசிக்குறு" படை நடவடிக்கை மாங்குளம் வரைக்கும் வந்து பல இராணுவத்தினரின் உயிர் களைப் பலிகொண்டு 'மரணத்தின் நெடுஞ்சாலை" என்று வர்ணிக்கும் அளவிற்கு பெயர் பெற்று தோல்வி கண்டது.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த மாங்குளத்தில் 2 ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த போது இந்த இராணுவ முகாமை அகற்ற வேண்டிய தேவை விடுதலைப் புலிகளுக்கு இருந்தது. ஏனெனில் இப் படைமுகாம் இராணுவத்தினரின் ஆனையிறவிற்கும் வவுனியாவிற்கும் இடையில் தொடர்புகளை உறுதிப்படுத்தும் அதேவேளை வன்னியின் கிழக்கையும் மேற்கையும் இணைத்த முல்லைத்தீவு-துணுக்காய் வீதியை துண்டிப்பதாகவும் அது அமைந்திருந்தது.
1990 ஆம் ஆண்டு 2 ஆம் கட்ட ஈழப்போர் மட்டக்களப்பில் ஆரம்பித்து. பின்னர் தமிழர் தாயகம் எங்கும் பரவியது. வன்னியில் இருந்த இராணுவ முகாம்கள் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகின. இந்நிலையில் வன்னியில் இருந்த முகாம்களில் ஒன்றான கொக்காவில் முகாமும் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது.
இந்நிலையில் 1990 ஆம் யூன் 13 ஆம் திகதி மாங்குளம் முகாம் புலிகளின் தாக்குதலுக்குள்ளானது சில இடங்களைப் புலிகள் கைப்பற்றியும் இருந்தனர். ஆயினும், உலங்கு வானூர்திகள் மூலம் படையினரை மேலதிகமாகத் தரையிறக்கி இம்முகாமை தக்கவைத்துக் கொண்டனர்.
இச்சண்டையின் பின்பு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொலிஸ் நிலைய கட்டடம், கன்னியாஸ்திரி மடம், கிறிஸ்தவ தேவாலயம், வங்கி, தபாற்கந்தோர் உட்பட பல கட்டடங்களை இராணுவம் முகாம் விஸ்தரிப்பதற்காக ஆக்கிரமித்துக்கொண்டது.
மாங்குளம் இராணுவ முகாமின் அமைவிடம் இராணுவ படை நிலைகளுக்கு சாதகமாக அமைந்திருந்தது. இதனால் புலிகளால் முதலில் வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும் இம் முகாமை வீழ்த்துவதற்கு துடித்த புலிகள் அதற்குரிய கால அவகாசத்தை எடுத்துக்கொண்டனர்.
1990 நவம்பர் தமிழர் தாயகப்பகுதியெங்கும் மாவீரர் வாரம் வெகுசிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்ட வேளை, மாங்குளம் இராணுவ முகாமைத் துடைத்தழிக்கப் புலிகளின் அணிகள் தயார் நிலையில் காத்து நின்றன.
இம் முகாமானது வன்னியின் மேற்கில் துணுக்காய் சாலையும் கிழக்கில் முல்லை சாலையும் மற்றும் யாழ்.-வவுனியா வீதியையும் இணைக்கும் பிரதான போக்குவரவு மையத்தில் நிறுவப்பட்டிருந்தது.
இங்கு 'ஹெலிப்பாட்" எனப்படும் உலங்குவானூர்தி இறங்குதளமே இம்முகாமின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நின்றது. விநியோக நடவடிக்கைகள் யாவும் இவற்றின் மூலமே இடம்பெற்று வந்துள்ளன.
சுமார் 1500 மீற்றர் நீளத்தையும் 1000 மீற்றருக்கும் மேற்பட்ட அகலத்தையும் கொண்ட ஏறத்தாழ 200 ஏக்கர் நிலப்பரப்பைக்கொண்ட இம்முகாம் புலிகளின் அதிரடிப் போர்முறைக்கு உள்ளாகியது.
மாங்குளம் முகாமின் வடபகுதியில் இருந்த கன்னியாஸ்திரி மடமும் வடகிழக்கில் இருந்த தேவாலயமும் தான் மிக முக்கியமானதாக இருந்தது. இவை இரண்டையும் கைப்பற்றினால் விநியோக வழியான உலங்குவானூர்தி இறங்குதளத்தைக் கைப்பற்ற முடியும் என்ற திட்ட வரைபுகளோடு அப்போது வன்னிப் பிராந்திய கட்டளைத்தளபதியாக இருந்த கேணல் பால்ராஜ் அவர்களின் தலைமையில் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இச்சண்டை ஆரம்பிக்கப்பட்டது.
அன்று மாலை 7.00 மணியளவில் புலிகளின் அணிகள் தடைகளைத் தகர்த்து எதிரியின் குகைக்குள் உள்நுழைந்தன. அக்காலப்பகுதியில் தற்போது புலிகளிடம் உள்ள பீரங்கி வகைகளோ, கனரக ஆயுதங்களோ இருக்கவில்லை. அப்போது புலிகளின் தயாரிப்பு வகையான பசீலன் என அழைக்கப்படும் பீரங்கி வகையே இம் முகாம் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது.
விடுதலைப் புலிகள் திட்டமிட்டபடியே நள்ளிரவு தாண்டிய நிலையில் இலக்குகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். முகாமின் இன்னொரு பக்கத்தையும் கைபபற்றிய புலிகள் தொடர்ந்து தாக்குதலைத் தொடுத்தனர்.
ஒரு புறம் விமானங்களின் தாக்குதல் மறுபுறம் படையினரும் தாக்கிய போதும் தீரத்துடன் தாக்குதலை நடத்திய புலிகள் முன்னேறிச் சென்று பிரதான இறங்கு தளமான 'ஹெலிப்பாட்" டையும் கைப்பற்றினார்கள்.
மறுநாள் 'நான் செல்கிறேன் இத்துடன் இம் முகாமின் சரித்திரம் முடியும் நாம் தமிழீழத்தை விரைவில் அடைவோம்" என்று கூறி கரும்புலி லெப். கேணல் போர்க் வெடிமருந்தேற்றிய லொறியுடன் படை முகாமிற்குள் புகுந்து வெடிக்கச் செய்தார்.
மாவீரர் வாரத்தைக் குழப்புவோம் என்று சூளுரைத்த அப்போதைய பாதுகாப்பமைச்சர் ரஞ்சன் விஜேரட்ணாவையும் சிறிலங்கா அரச படையையும் கிறங்கடிக்க வைத்து மாங்குளம் முகாம் வெற்றிக்கு வித்திட்டார் கரும்புலி லெப்.கேணல் போர்க்.
இத்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அடுத்த நாள் பிற்பகல் இராணுவத்தினர் காடுகளுக்குள் ஓடத்தொடங்கினர். அவ் இராணுவத்தினரை தேடி அழிக்கும் நடவடிக்கையில் புலிகளோடு மக்களும் சேர்ந்து கொண்டனர். இவற்றில் தப்பியோடிய சிப்பாய் திக்குத்திசை தெரியாமல் ஓமந்தை பாலமோட்டை என்னும் கிராமக்காட்டுப்பகுதியில் அருணாசலம் எனும் கிராமவாசி ஒருவரைச் சந்தித்து வவுனியா செல்வதற்குப் பாதை கேட்ட பொழுது அவர் தந்திரோபாயமாக ஊர்மனைக்குள் அழைத்து வந்தார் உசாரடைந்த சிப்பாய் அவருக்குத் துப்பாக்கியை நீட்ட உடனடியாக அவர் அந்த இராணுவச்சிப்பாயைக் கட்டிப்பிடித்த பொழுது சிப்பாயிடம் இருந்த கிரனேட் வெடித்ததில் சிப்பாய் கொல்லப்பட. அருணாசலம் காய மடைந்தார். இத்தோடு மன்னகுளம் பகுதியிலும் துப்பாக்கியைக்காட்டி மூதாட்டி ஒருவரை மிரட்டிய சிப்பாய் ஒருவரை வீட்டினுள் வைத்துப் ப+ட்டிய பின் புலிகளுக்குத் தகவல் தெரிவித் ததையடுத்து சரணடைய மறுத்த சிப்பாய் அங்கு வந்த புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவ்வாறாக பொதுமக்களின் மகத்தான அர்ப்பணிப்புகளினாலும் பெற்ற இம்முகாமின் வெற்றியானது வன்னியில் இருந்த ஏனைய படை முகாம்களுக்கு பேரிடியாக இருந்ததுடன் விடுதலைப் போராட்;டத்தின் புதிய அத்தியாயத்தை தொடக்கி வைத்த சமர் எனக் கூறலாம்.
இவ்வாறான இராணுவ வெற்றிகளைப் பெற்ற புலிகளுக்கு மாவீரர் நாள் காலப்பகுதியில் புதிய உத்வேகத்தை கொடுக்கும் காலமென சிறிலங்கா இராணுவத்தினர் உளவியல் ரீதியாக அச்சமடைந்தனர் என்பதைக் கடந்த கால நவம்பர் மாதத் தாக்குதல்கள் சான்று கூறி நிற்கின்றன.
நன்றி: வெள்ளிநாதம் (24.11.07)
Sunday, November 25, 2007
தமிழர் போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த மாங்குளம் படைமுகாம் வீழ்ச்சி
Posted by tamil at 12:52 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment