Thursday, November 15, 2007

பாராளுமன்றத்தை கலைப்பதை தவிர வேறு வழியில்லை ஜே.வி.பி.யை எச்சரித்து ஜனாதிபதி நேற்று அவசர கடிதம்

[15 - November - 2007] தினக்குரல்

-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-
அரசாங்கத்திலிருந்து வெளியேற மாட்டோமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிடம் உறுதியளித்துள்ளதுடன் அரசாங்கத்தை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கும் வகையிலான நிபந்தனைகளை விதித்து, வரவு - செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிக்காவிட்டால் பாராளுமன்றத்தை கலைப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று எச்சரித்து ஜனாதிபதி ஜே.வி.பி.க்கு கடிதமொன்றை எழுதியிருப்பதாகவும் கூறப்பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று, அரச தரப்பு எம்.பி.யான விஜேதாச ராஜபக்‌ஷ எதிர்த் தரப்புக்கு மாறியதை அடுத்து நேற்று மாலை சுதந்திரக்கட்சி எம்.பி.க்களுடன் ஜனாதிபதி அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

வரவு - செலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகளை நடத்தும் முகமாகவும் இந்த அவசர சந்திப்பு நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை அலரிமாளிகையில் ஆரம்பமான இந்தச் சந்திப்பு இரவு வரை நீண்டநேரம் நடைபெற்றுள்ளது.

இதில் சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன், வெளிநாடு சென்றிருப்பதன் காரணமாக அமைச்சர் அனுர பண்டாரநாயக்க இதில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, விஜேதாச ராஜபக்‌ஷ அரசிலிருந்து எதிரணியின் பக்கம் சென்றது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அவருக்கு ஏதேனும் பிரச்சினையென்றால் தன்னிடம் தெரிவித்திருக்கலாமென்றும் இப்படி அரசிலிருந்து சென்றமை ஏற்புடையதல்ல என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், தனக்கு வழங்கிய அமைச்சுக்கு செயலாளர் கூட நியமிக்கப்படவில்லை என்று விஜேதாச கூறியதை மறுத்திருக்கும் ஜனாதிபதி செயலாளர் ஒருவரை தான் நியமித்திருந்ததாகவும் பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் தலைமைப் பதவியை அவருக்கு வழங்கியதும் தான் தானெனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இதேநேரம், உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தத்தமது அபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளதுடன், தாங்கள் ஒருபோதும் அரசிலிருந்து வெளியேறப்போவதில்லையென்றும் வரவு- செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியுமெனவும் அவர்கள் ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் வகையில் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி ஜே.வி.பி.க்கு கடிதம்

இதேநேரம், ஜனாதிபதி ஜே.வி.பி.க்கு நேற்று அவசர கடிதமொன்றை அனுப்பியிருப்பதாகவும் தெரியவந்தது.

ஜே.வி.பி.யின் எத்தனையோ நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் பல விடயங்களை நிபந்தனைகள் எதுவுமின்றியே செய்து கொடுத்திருப்பதாகவும் ஜனாதிபதிக்கு அக் கடிதத்தில் சுட்டிக் காட்டியிருப்பதாகவும் கூறப்பட்டது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் சாத்தியப்படாத நிபந்தனைகளை முன்வைத்து அரசாங்கத்தை தர்மசங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவதானது ஏற்புடையதல்ல. எனவே, ஜே.வி.பி. இவ்வாறான நிபந்தனை விதித்துக் கொண்டு வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்கா விட்டால் பாராளுமன்றத்தை கலைப்பதை தவிர தனக்கு வேறு வழியில்லை என்றும் அக் கடிதத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டது.

0 Comments: