Saturday, November 24, 2007

புதுடில்லியின் தலையில் மிளகாய் அரைக்கும் கொழும்பு!

Posted on : 2007-11-24

"குட்டக் குட்டக் குனிபவனும் மடையன்; குனியக் குனி யக் குட்டுபவனும் மடையன்' என்றோர் அனுபவமொழி நம் மத்தியில் உண்டு.
ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்த உண்மையைப் புரிந்து கொண்டுதான் தமிழினம் இனி மேலும் குனிவதில்லை என்ற உறுதியோடு நிமிர்ந்து நிற்கத் தலைப்பட்டது. அதனால் இதுவரை குட்டியவர் அதற்கான பலனை அனுபவிக்கும் நிலைமை உருவாகத் தொடங்கியது.

ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் இவ் வாறு நடந்து கொள்ளும் தென்னிலங்கை அரசியல் நிர் வாகம், அந்தத் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி சர்வதேச சமூகத்துக்குப் போடும் ஆடும் நாடகத்திலும் அதே பாணியைத்தான் பின்பற்றுகின்றது.
தாம் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டின் தேசிய இனப்பிரச் சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் நல்லிணக்க யோச னையை மூன்று மாதங்களுக்குள் உருவாக்கி, தீர்வு முயற் சியை முழு வீச்சில் முன்னெடுப்பார் என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எழுத்தில் கறுப்பு வெள்ளையில் உறு தியளித்தே ஆட்சிக்கு வந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இப்போது இரண்டு வருடங்கள் இருபத்தினான்கு மாதங் கள் கடந்து விட்டன. இன்னும் தென்னிலங்கையில் இணக் கப்பாடு எட்டப்படவேயில்லை.

இதோ வருகிறது, அதோ வருகிறது தென்னிலங்கை யின் இணக்கப்பாட்டுத் திட்டம் என்று இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கு காதில் பூச்சுற்றிக்கொண்டு, தனது இரா ணுவ நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கான கால அவகாசத் தைப் பெறும் தந்திரோபாயத்தை மெல்ல சாதித்துக் கொண் டிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்று தடவைகள் வரை இந்தி யாவுக்கு விஜயம் செய்துவிட்டார் இலங்கை ஜனாதிபதி. தவிர வும் இந்தியாவின் சிரேஷ்ட தலைவர்கள் அவரை மூன்று, நான்கு தடவைகளுக்கு மேல் கொழும்பிலும் பிற இடங் களிலும் நேரடியாகச் சந்தித்துப் பேசிவிட்டனர்.
ஒவ்வொரு சந்திப்பின் போதும் இலங்கை இனப்பிரச் சினைத் தீர்வுக்கான மிகவுயர்ந்த அதிகாரப் பகிர்வுடன் கூடிய யோசனைத் திட்டத்தை முன்வைத்து, நடைமுறைப்படுத் துங்கள் என்று இந்திய உயர்மட்டம் வற்புறுத்துவதும், இதோ யோசனைத்திட்டம் அடுத்த ஓரிரு மாதங்களில் வெளியிடப் படப் போகின்றது என இலங்கையின் அரசுத் தலைமை உறு தியளிப்பதுமாக இந்தச் சந்திப்புகளும், அவற்றின் பின்ன ரான மேற்படி உறுதியளிப்புகள் அடங்கிய அறிவிப்புகளும் தொடர்ந்துகொண்டிருக்க, காலம் இழுத்தடிக்கப்படுகின்றது.

கடந்த வருட இறுதிக்குள் இத்தகைய யோசனைத் திட்டம் வெளியாகிவிடும் என கடந்த வருட நடுப்பகுதியிலேயே இலங்கை ஜனாதிபதியே இந்தியத் தலைவர்களுக்கு நேரில் உறுதியளித்தார் என்பதை, தேவையானால் புதுடில்லி, தொடர்பான தனது உத்தியோகபூர்வ ஆவணத்தில் உறுதி செய்து கொள்ளலாம்.

இதோ ஜனவரியில், இதோ மார்ச்சில், இதோ ஏப்ரலில், இதோ ஓகஸ்ட்டில் என்று கொழும்பு ஏய்க்காட்ட இப்போது இந்த வருடம் முடிவடைவதற்கு இன்னும் ஐந்து வாரங்கள் தான் எச்சமுள்ளன.

இப்போதும்கூட இதோ வருகிறது தீர்வுக்கான தென்னிலங் கையின் இணக்க யோசனை என்ற அறிவிப்போடு இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கம்பாலா வில் காதில் பூச்சுற்றிவிட்டு வெற்றிகரமாக அந்தச் சந்திப்பை முடித்திருக்கின்றார் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விட யத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தின் அணுகுமுறையும், உள்ளார்ந்த திட்டமும், கபடநோக்கமும் எவை என்பவை வெளிப்படை.

போரியல் ரீதியாகத் தமிழர் தேசத்தின் மீது பெரும் படையெடுப்பை மேற்கொண்டு, தமிழரின் வலுவான பிரதிநிதித் துவ சக்தியாக இருக்கும் விடுதலைப் புலிகளின் இராணு வப் பலத்தை சிதறடித்து, அதன்மூலம் இனப்பிரச்சினை விவ காரத்தில் தமிழர்களின் பேரம்பேசும் வலிமையைச் சின்னா பின்னமாக்கி, தனது உரிமைகளுக்காகக் கிளர்ந்து நிற்கும் தமிழர்களை தென்னிலங்கைச் சிங்களத்தின் காலில் விழ வைத்து, தான் விரும்பும் உருப்படியற்ற ஒரு திட்டத்தை, தீர்வு யோசனையாகத் தமிழர்கள் மீது திணிப்பதுதான் அந் தக் கபட நோக்கம்.
இந்தக் கொடூரத்தை நிறைவேற்றுவதில் கொழும்பு குறி யாய் இருக்கும் உண்மை, அதன் போரியல் முகம் மூலம் அம் பலமாக, மறுபுறம் அதை மறைத்துக்கொண்டு சர்வதேச சமூ கத்துக்கு "நல்ல பிள்ளை' நாடகம் நடிக்கிறது கொழும்பு. அமைதி வழித் தீர்வில் ஆர்வம் இருப்பதாகக்காட்டிக் கொண்டு, தனது போரியல் திட்டத்துக்குத் தேவையான கால அவகாசத்தைத் தேடு கிறது மஹிந்த அரசு.

இது தெளிவாகப் புரிந்தும், ஏதும் செய்ய முடியாமல், ஒவ் வொரு சந்திப்பின்போதும், தீர்வு யோசனைத்திட்டத்தை வெளி யிடுங்கள், வெளியிடுங்கள் என புதுடில்லி, கொழும்பைப் பார்த்துக் கெஞ்சுவதும் கோருவதும்
இதோ வெளியிடுகிறோம், அதோ வெளியிடுகிறோம் என்று கொழும்பு தெரிவித்தபடி புதுடில்லிக்கு தலையில் மிள காய் அரைப்பதும்
துன்பியல் நாடகமாகத் தொடர்வதைப் பார்த்து அழு வதா, சிரிப்பதா என்று தெரியாமல் விசனிக்கின்றார்கள் ஈழத் தமிழர்கள்.

தாம் எடுக்கும் தீர்மானத்தை உறுதியாகச் செயற்படுத்தக்கூடிய அரசியல் வலிமையும், தலைமைத்துவ உறுதியும், அடக்கப்பட்ட இனங்களுக்காக வாஞ்சையுடன் குரல் எழுப் பும் மேன்மையான பண்பும் கொண்ட இந்திராகாந்தி போன் றோரிடம் புதுடில்லி அரசியல் தலைமை போகும்வரை, இவ் வாறு தென்கோடி முனையில் உள்ள சிறிய நாடான இலங்கை போன்றவை நடத்தும் ஏமாளி நாடகங்களுக்கு "பெருமாள் கோயில் மாடு போல' தலையசைப்பதைத் தவிர புதுடில்லிக்கு வேறு மார்க்கம் இருக்காது என்பது உண்மைதான்.
uthayan.com

0 Comments: