Tuesday, November 20, 2007

தென்னிலங்கை குதூகலித்துக் கொண்டாடக் கூடிய கொலையா இது?

20 - November - 2007

எவர் எதைச் சொன்னாலும், இலங்கையில் நிலவுகின்ற இந்த நீண்ட கால யுத்தமும், அதன் அடிப்படைக் காரணமான இனப்பாகுபாட்டு அரசியல் ஆட்சி முறை பிரச்சினையும் சமாதான வழிமுறைகளினூடாகவே இறுதியில் தீர்த்து வைக்கப்பட வேண்டியிருக்கும் என்பதே உண்மையாகும். இந்நிலையில், சமாதான வழிமுறைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு செயல் முறையும் இந்த நாட்டினதும் அதன் மக்களினதும் எதிர்கால நலன்களுக்கு தீங்கு செய்யும் நடவடிக்கையாவே கருதப்படவேண்டும். அண்மையில் கிளிநொச்சியின் திருவையாற்றுப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட அதிகாலை `மிக்' விமானத் தாக்குதலினால் ஏற்பட்ட அநர்த்தம் காரணமாக எல்.ரீ.ரீ.ஈ. இனரின் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனும் பலியொடுக்கப்பட்ட அந்த சம்பவம் நிஜமாகவே இலங்கை மக்களை குதூகலமடைய வைக்கக் கூடிய ஒன்றா இல்லையா?

இதற்கு நாம் சொல்ல நினைக்கின்ற பதில் நாம் எவ்வகையான உளப்பாங்கு உள்ளவர்கள் என்பதையும், எமது அரசியல் பண்பாடுகளையும் மாற்றவர்கள் கணக்குப்போட்டுப் பார்த்துக் கொள்ளஉதவக் கூடும். இலங்கைத் தீவு இந்த யுத்த சகதியிலிருந்து வெளிவர இயலாமல் மேலும் மேலும் கீழே புதைந்து போய் கொண்டிருப்பதன் அடிப்படை காரணமே பண்பட்ட அரசியல் சிந்தனைகள் வரவர அருகிபோனதுதான். இன்று அது சமாதானத்தை பற்றிப்பேசுபவனே தேசத்துரோகி என்ற சித்தாந்தத்தில் வந்து நிற்கிறது.

போரிடும் குழுவாக விளங்கும் புலிகள் தரப்பு சமாதானத்திற்கெனவும் ஒரு கதவைத் திறந்தே வைத்திருந்தனர் என்பது உலகறிந்த விடயமாகும். அவர்கள் முன்னெடுத்துச் செல்லும் போராட்டம் பயங்கரவாதமா இல்லையா என்பது வேறொரு விடயம். ஆனால், உலகிலுள்ள மிகக் கொடிய பயங்கரவாத இயக்கமென்று அழைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம், உலகெங்கிலுமுள்ள இவ்வகையான இயக்கங்களில் காணப்படாத விதமாக மிகுந்த கட்டுக்கோப்பான, செயற்திட்ட ரீதியாகவும் , நிர்வாக ரீதியாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சமாதான செயலகத்தை அமைத்து வைத்திருந்தது. தமிழ்ச்செல்வன் அங்கே பல்வேறு சர்வதேச அரசியல் பிரமுகர்கள்,தூதுவர்கள் ,சமயப் பெரியார்கள் என்போரைச் சந்திப்பதையும் சமாதான செயல் முறைகள் பற்றி அவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதையும் விரும்பியோ விருபாமலோ இலங்கை மக்கள் கண்டு வந்துள்ளனர்.

இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு சமாதான முயற்சிகள், பேச்சுவார்த்தைகள் என்பவற்றில் பங்கெடுத்து வந்ததன் மூலம் தமிழ்ச்செல்வனின் முகம், அவருடைய தனித்துவ முத்திரையான சிரிப்புடன சேர்ந்து சர்வதேச ஊடகங்களிலும், நாட்டு மக்களின் நினைவுகளிலும் தவிர்க்க முடியாத படி பதிவாகியுள்ளது. சமாதான நடவடிக்கைகளை சர்வதேச மட்டங்களுக்குக் கொண்டு சென்று மிக இலாவகமாகவும், தேர்ந்தெடுத்த வார்த்தைகளினூடாக அதனை அவர் நடத்திச் சென்ற விதம் எல்.ரீ.ரீ.ஈ. இனருக்கு இன்னொரு முகமும் உண்டென்பதை வெளிஉலகத்திற்குக் காண்பித்து வந்திருந்தது. சர்வதேசம் தானும் சேர்ந்து குத்திவிட்டிருந்த அந்தப் `பயங்கரவாதிகள்' என்ற முத்திரையானது புலிகள் தரப்பினருக்கும் பொருத்தமானதுதானா என்ற மீள் சிந்தனையைகூட சர்வதேச மட்டங்களில் விதைத்திருந்தது. அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் என்ற அந்த இருவரில் ஒருவர் இயற்கையின் வழியில் இழப்பாகிவிட்டாலும், இரண்டாமாவர் இல்லாமல் ஆக்கப்பட்ட விதமானது சர்வதேச மட்டங்களிலும் ஒரு வித அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

இலங்கை அரசியலில் இந்த இழப்புகள் குதூகலித்து கொண்டாடக்கூடிய ஒரு விடயமா? யுத்தம் ஒன்றே இங்கு காணப்படுகின்ற விலையேற்றம் போன்ற பல்வேறு பிரசினைகளுக்கும் மூல காரணம் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றொரு புறத்தில் யுத்த வெற்றிகளை பிரசாரப்படுத்திக் கொண்டாடப்படுகின்றது. மற்றொரு புறத்தில் சமாதானத்திற்கான கதவுகள் திறந்தே இருப்பதாகவும் கூறவேண்டியிருக்கிறது. சமாதானத்தின் மீது உண்மையாகவே இன்னமும் அரசு நியாயமானளவு நம்பிக்கை வைத்துள்ளதென்று எடுத்துக் கொண்டால், ஒரு சமாதான ஒளிக்கீற்றை அணைத்து விடுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

மற்றொரு முக்கிய கேள்வியும் இன்றைய அரசியல் அரங்கில் எழுந்திருக்கிறது. தமிழ்ச்செல்வனின் கொலையில் அரசின் பங்கு என்ன? இது அரசின் அங்கீகாரத்துடனே செயற்பட்ட தென்றால் அரசுக்கு உள்நாட்டில் சமாதானத்தின் மீதுள்ள பற்றுறுதி எவ்வளவில் உள்ளது? அல்லது பாதுகாப்புப் படைகள் தமது திட்டப்படி இச் செய்கையைச் செய்ததென்றல் அரசின் சமாதானத் திட்டங்களுக்கு குந்தகமான செய்கைகளில் தம் இஷ்டப்படி இடையூறுகளை ஏற்படுத்தி எதேச்சாதிகாரமாக நடந்துகொள்ள முப்படைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா?

அரசியற் பண்பாடுள்ள ஆட்சி நடைபெறும் நாடுகளில் அங்குள்ள அரசுகள் கடைப்பிடிப்பதாகக் கூறிவரும் கொள்கைகளுக்கு முரண்பாடான விதத்தில் செயல்படுவதற்குப் படைகள் அனுமதிக்கப்படுவதில்லை.

தமிழ்ச்செல்வன் மீதான வலிந்த தாக்குதல் மற்றொரு விடயத்தையும் புலப்படுத்தியுள்ளது. அதாவது, இலங்கை அரசியலில் சமாதானத்தின் மீதான பற்றுறுதி என்பது செயல்முறையில் காண்பிக்கப்படும் ஒரு விடயமல்ல என்கின்ற உண்மையை இது மீண்டும் புலப்படுத்தியுள்ளது. மிக முக்கிய விடயங்களில் கூட சொல்லுக்கும் செயலுக்குமிடையில் பாரிய இடைவெளி இருப்பதை இத்தாக்குதல் எடுத்துக்காட்டுவதாயுள்ளது. அண்மையில் தான் ஜனாதிபதியவர்கள் ஐ.நா. சபையிலும், டெல்லியிலும் சமாதானத்தின் மீது இலங்கையர்களுக்குள்ள பற்றினை வலியுறுத்தியிருந்தார். அது மட்டுமன்றி பேராசிரியர் திஸ்ஸ விதாரண தனது சர்வகட்சி மகாநாட்டின் மூலம் நாட்டுப் பிரச்சினைக்கு அறிஞர்களின் ஆலோசனைகளைப்பெற்று ஒரு இணக்கப்பாடான முடிவை எடுக்க முயன்று வந்திருந்தார். அது நல்ல விடயமே ஆனால், `மிக்' விமானத் தாக்குதல் அதையெல்லாம் அர்த்தமில்லாத வெட்டிப் பேச்சாக ஆக்கிவிட்டது.

எல்.ரீ.ரீ.ஈ. இன் தளபதிகள் மீது கிளிநொச்சியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தென்னிலங்கையில் ஒரு மனநிறைவை தோற்றுவித்திருந்தாலும் கூடவே மற்றெரு விளைவையும் ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் பின் விளைவுகள் எந்த ரூபத்தில் எங்கே எதிரொலிக்குமோ என்ற ஒரு பயப்பிராந்திய மன அங்ககலாய்ப்பு நிலை தவிர்க்கமுடியாமல் ஏற்பட்டுள்ளது. பயப்பிராந்திய மன நிலையில் வெளிப்பாடுகள் ஏற்கெனவே பாதுகாப்புக் கெடுபிடிகளின் வடிவில் தென்னிலங்கையில் தென்படத் தொடங்கிவிட்டன.

தமிழ்ச்செல்வனின் அரசியல் பங்களிப்பு இன்று அவருக்காக பல்வேறு சர்வதேச மட்டங்களிலும் அநுதாபம் தெரிவிக்க வைத்துள்ளது. தமிழ்த் தலைவர்கள், நோர்வே,ஐரோப்பிய பாராளுமன்றம் என்பனவும் ராய்ட்டர், பி.பி.சி. போன்ற செய்தி ஸ்தாபனங்களும் இவரின் மறைவு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். தமிழ்ச்செல்வனின் மறைவு கிளிநொச்சியிலிருந்து வெளியிடப்பட்டபோது அது அந்த வெள்ளிக்கிழமை நாளின் முக்கிய செய்தியாக உலகெங்குமே அடிபட்டிருக்கிறது. அழிவை ஏற்படுத்திய அந்த வெள்ளி விடியாமலே இருந்திருக்கலாம் என்றும் அதுவெறும் பயங்கரவாதமே என்று பாரதிராஜா மனம் வருந்தினார். தமிழ்த் தேசியப் போராட்டம் அர்த்தமற்றது என்று அது வெறும் பயங்கர வாதமே என்றும் உலகம் நம்புமாயின் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறப்பு பற்றி செய்தி இவ்வளவு சர்வதேச முக்கியத்துவம் பெற்றிருக்க முடியாது. இந்த யதார்த்ததை இலங்கை அரசியல் ஜீரணித்துத்தான் ஆகவேண்டும்.

வி.சுப்பிரமணியம்
http://www.thinakkural.com/

0 Comments: