Thursday, November 15, 2007

ஜே.வி.பி. முன்னின்று இயக்கும் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகம்

Posted on : 2007-11-15

நிதிச் சட்டமூலமான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும்போது, அரசைக் கவிழ்க்கும் வாய்ப்பு இரண்டு தடைவைகளில் கிட்டும். ஒன்று அந்தத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின்போது. மற்றது இறுதியாக மூன்றாம் வாசிப் பின் மீதான வாக்கெடுப்புச் சமயத்தில்.
தற்போது நாடாளுமன்றப் பெரும்பான்மைக்காக அல் லாடிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் அரசு, இந்தக் கண்டங்களை எதிர்வரும் திங்கட்கிழ மையும் (19 ஆம் திகதியும்) அடுத்த மாதம் 14 ஆம் திகதி யும் எதிர்கொள்ளவிருக்கின்றது.
இந்த வரவு செலவுத்திட்டத்தை முற்றும் முழுதாக "யுத்த பட்ஜெட்' என்று விமர்சித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதனை முழு அளவில் எதிர்ப்பதற்குத் தீர் மானித்திருக்கின்றது. எனினும், அதன் முழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் 22 பேரும் இந்த அரசு முதலாவது கண்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றில் சந்திக்கும்போது சபையில் இருந்து அரசை எதிர்ப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வெளிநாடு சென்றி ருக்கும் ஓரிரு எம்.பிக்கள் இன்னும் நாடு திரும்பவில்லை. ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை இந்த வரவு செலவுத்திட்டத்தை முற்றாக எதிர்ப்பது என அது கொள்கையளவில் தீர்மானித்து அதில் உறுதியாக இருந்தாலும், நடைமுறையில் அது டிசம்பர் 14 ஆம் திகதி மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போதுதான் சாத்தியமாகும் என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.
ஆனால் அடுத்த பிரதான எதிர்க்கட்சியான ஜே.வி.பி. பலரும் எதிர்பார்க்காத விதத்தில் அரசுக்கு ஆறே ஆறு நாள் கள் காலக்கெடு கொடுத்து, அரசுத் தலைமைக்கு பேதி மாத் திரை வழங்கியிருக்கின்றது.
நேற்றுமுன்தினம் இரவு, அக்கட்சியின் ஸ்தாபகர் அமரர் றோஹண விஜேவீரவின் 18 ஆவது சிரார்த்த தினத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தற்போதைய தலைவர் சோம வன்ஸ அமரசிங்க, நான்கு விடயங்களை அரசு நிறைவு செய்வதற்கு ஆறு நாள்கள் காலக்கெடு விதித்திருக்கிறார். எதிர்வரும் திங்கட்கிழமையன்று நாடாளுமன்றம் கூடும் போது வரவு செலவுத்திட்டத்தை ஒட்டிய முதலாவது கண்டத்தை அரசு சந்திக்கும் சூழலில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
* விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முற்றாக அரசு முறித்து விட வேண்டும்.
* இனப்பிரச்சினைக்குத் தென்னிலங்கையின் தீர்வு யோசனையை சமர்ப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவைக் கலைத்து விடவேண்டும்.
* ஐ.நா. பிரதிநிதிகளின் இலங்கை விஜயங்களுக்கு அனுமதிக்கக்கூடாது.
* நாட்டின் தேசியப் பாதுகாப்பையும் இறைமையையும் உறுதி செய்யக் காத்திரமான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும்.
இவற்றைச் செய்யவே ஆறுநாள் காலக்கெடு மஹிந்த அரசுக்கு ஜே.வி.பியினால் விதிக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை, வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நாட்டு மக்களின் வயிற்றில் அரசு அடித்துவிட்டது எனக் குற்றம் சுமத்தியுள்ள அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பி னர் லால்காந்த, அரச ஊழியர்களுக்கு மூவாயிரம் ரூபா சம் பள உயர்வு கோரிப் பெரும் வேலை நிறுத்தப் போராட் டத்துக்கு முஸ்தீபுகள் செய்யப்படுகின்றன என்றும் எச்சரித் திருக்கிறார்.
ஆக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் கச் சையை வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கப் போவ தாக ஜே.வி.பி. கோடி காட்டி வருகின்றது.
ஆனால், தற்போதைய அரசைக் கவிழ்த்து, புதிய பொதுத் தேர்தலைச் சந்திக்கவோ அல்லது ஐ.தே.கட்சியின் பங்கு பற்றுதலுடனான மாற்று அரசு ஒன்றை அமைக்க இடமளிக் கவோ அக்கட்சி தயாரா, அதற்கு அக்கட்சிக்குத் துணிச்சல் உண்டா என்பவை இன்றைய கேள்விகளாகும்.
இன்றைய நிலையில் பொதுத் தேர்தல் ஒன்றைத் தனித் துச் சந்தித்தால் இப்போது இருப்பது போன்ற நாடாளுமன் றப் பலமோ அல்லது ஆட்சியில் இருக்கும் அரசை ஆட்டு விக்கும் வலுவோ தனது கட்சிக்குக் கிடைக்கவே கிடைக் காது என்பது ஜே.வி.பிக்கு நன்கு தெரியும்.
அதேசமயம், இந்த அரசைக் கவிழ்க்கப்போவது போல உருக்கொண்டு ஆடுவதன் மூலம் சிலவற்றைச் சாதிக்க லாம் நன்மைகளைப் பெறலாம் என்று கருதி, அந்த வழியில் நாடகம் ஆடுகின்றதோ அக்கட்சி என்றே எண் ணத் தோன்றுகின்றது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பு அச்சுறுத் தல் நாடகம் மூலம் அதிகாரத்தில் உள்ளவர்களைத் தங்க ளுக்கு சாதகமாகச் செயற்படுவதற்கு படியவைக்கலாம். அதேவேளை தமது ஆட்சிக்கவிழ்ப்புத் தந்திரத்தை நம்பி இந்த அரசு கவிழப் போகின்றது என எண்ணி ஏற்கனவே அரசுக்குள் "மதில்மேல் பூனையாக' இருந்தவர்கள் அரசுக்கு எதிராகப் பாய்ந்தால், அரசுத் தலைமை தனது ஆட்சியைத் தக்கவைக்க மேலும் மேலும் ஜே.வி.பியில் தங்கியிருக்கும் வாய்ப்பான நிலை வரும் என்றெல்லாம் ஜே.வி.பி. கருது கின்றதுபோலும். அதுபோலவே, ஏற்கனவே ஐ.தே.கட்சியி லிருந்து ஆளும் தரப்புப் பக்கம் பாய்ந்த ஐ.தே.க. அதிருப்தி யாளர்கள் குறித்து ஜே.வி.பி. காழ்ப்புணர்வும் எரிச்சலும் கொண்டிருக்கிறது. அவர்களை அரசில் சேர்த்தமைக்காக அரசுத் தலைமையை அது சாடியும் வருகிறது. தமது ஆட் சிக் கவிழ்ப்பு எச்சரிக்கை நாடகத்தை உண்மை என நம்பி, இந்த ஐ.தே.க. அதிருப்திக்குழு எம்.பிக்கள் மீண்டும் ஐ.தே. க. பக்கம் பாயும் வாய்ப்பும் உள்ளது. அப்படி நடந்தால் தமது விருப்பை அதுவும் நிறைவு செய்யும் செயலாகவும் ஆகிவிடும்.
இப்படி "ஒரு கல்லில் பல மாங்காய்கள்' என்ற திட்டத் துடன்தான் ஆட்சிக் கவிழ்ப்பு எச்சரிக்கை நாடகத்தை ஜே.வி.பி. அரங்கேற்றுகின்றது போலத் தோற்றுகின்றது.
எது, எப்படியென்றாலும் அடுத்த ஐந்து நாள்களுக்குள் முடிவு இதுதான் என்று தெரிந்துவிடும்தானே. அதுவரை பொறுத்திருப்போமே.....!
uthayan.com

0 Comments: