Monday, November 19, 2007

கட்டற்ற பெரும் போருக்கான வாசலை சிறீலங்கா திறந்துவிட்டிருக்கிறது" - மனோகரன்

திங்கள் 19-11-2007 03:44 மணி தமிழீழம் [பதிவு நிருபர்]


அமைதி, சமாதானம் என்பதெல்லாம் தொலைதுாரத்துக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. போர் தீவிரமாகக் கூடிய நிலைமைகள் அதியுச்சத்துக்குப் போய்விட்டன. அதாவது இனிப் போர்தான் என்ற நிலைமை, கட்டாயமாகிய நிலைமை உருவாகிவிட்டது. ஆனால் யதார்த்தத்தில் போரைத் தாங்கக்கூடிய நிலையில் நாடும் இல்லை, சனங்களும் இல்லை.

அதனால்தான் புலிகளும் சரி அரசாங்கமும் சரி போர் நிறுத்தத்தை மீறுகிறோம் என்று பகிரங்கமாக சொல்லவில்லை. செல்லாக் காசாகி விட்டபோதும் போர் நிறுத்தத்தையும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவையும் இரண்டு தரப்பும் நிராகரிக்கவில்லை.
ஆனால், இது ஒரு தவிர்க்க முடியாத நிலைமை என்றால், மறு பக்கத்தில் போர் என்பது தவிர்க்க முடியாதபடிக்கு தொடரப்போகிறது என்பது இன்னொரு யதார்த்தமாகிவிட்டது. இது ஒரு முரண். வேடிக்கையாக உங்களுக்குத் தோன்றலாம்.

ஆனால், இது உண்மையான நிலைவரம் என்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும். வெளியுலகம் போரை நிராகரித்து அமைதி முயற்சிக்கு திரும்புமாறும் அமைதிக்கும் சமாதானத்துக்கும் முன்னுரிமை அளிக்கும் படியும் வலியுறுத்துகிறது. சிறீலங்கா அரசாங்கமோ அதைப் பொருட்டுத்தாமல் போருக்கே முதன்மை அளிக்கிறது. இராணுவ வழி முறை மூலம் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டு விடலாம் என்ற நம்பிக்கையோடும் முனைப்போடும் அது செயற்படுகிறது. அரசாங்கம் போருக்கு முதன்மை அளிக்கும்போது அல்லது போரைச் செய்யும் போது, விடுதலைப் புலிகள் சும்மாயிருப்பார்களா? புலிகளை அரசாங்கம் தொடர்ந்து சீண்டிக் கொண்டேயிருக்கிறது.

பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலேயே இந்தச் சீண்டுதலை அரசாங்கம் தொடங்கிவிட்டது. அப்போதே இது பற்றி புலிகள் பகிரங்கமாகவும் தெளிவாகவும் வெளியுலகிடம் சொல்லியிருந்தார்கள். பேச்சுவார்த்தையைத் தொடர முடியாத ஒரு நிலைமையை அரசாங்கம் உருவாக்குகிறது என்று, விடுதலைப் புலிகளின் அரசியற்
துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வன் பல தடவை சொல்லியிருக்கிறார்.

எச்சரித்திருக்கிறார். அபாய அறிவிப்பைச் செய்திருக்கிறார். தமிழ் மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள மேலாதிக்க சக்திகளைப் பற்றியும் சிங்கள அரசியற் தலைமைத்துவத்தைப் பற்றியும் நன்றாகவே தெரியும் என்பதால் அந்த அனுபவத்தின்படி அவர்கள் முன்கூட்டியே இதனைத் தெரிவித்திருந்தனர்.
தமிழ்ச்செல்வன் சொன்னதைப் போலவே அரசாங்கம் தொடர்ந்து போரை நோக்கிச் செயற்பட்டிருக்கிறது.

இப்போதும் அது அப்படியே செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் வெளியுலகம் தமிழ்ச்செல்வன் கூறியதை சீரியசாக எடுக்கவில்லை. ஒரு பெரும் அபாய நிலை அரசாங்கத்தினால் உருவாக்கப்படுகிறது என்பதை சர்வதேச சமூகம் பொருட்படுத்தவில்லை. அல்லது அவர் சொன்னதை ஏற்க விரும்பவில்லை. அதுவுமல்லாது விட்டால் தமிழ்ச்செல்வன் சொன்னதை அவர்கள் கவனத்திற்கு எடுப்பதில் அவர்களுடைய அணுகு முறைக்கும் நலனுக்கும் பிரச்சினையிருந்திருக்கிறது.
அதனால் சர்வதேச சமூகம் வெட்டியோடியது. அல்லது யதார்த்தம் புரியாது கற்பனையில் அமைதியைப் பற்றியும் சமாதானத்தைப் பற்றியும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தது.

அப்படியே அது யதார்த்த நிலைமையை கவனத்திற் கொள்ளாமல் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கிறது. அல்லது வெட்டியோடிக் கொண்டிருக்கிறது.
எப்படியோ, அரசாங்கத்தின் போர் முனைப்பை வெளியுலகம் கண்டுகொள்ளத் தவறியது. அது கண்டிக்கவும் கட்டுப்படுத்தவும் தவறியது. அதன் விளைவுகள்தான் இப்போது முடிவேயில்லாத ஒரு பெரும் போர்ப் பொறியில் இலங்கை வந்து நிற்கக் காரணமாகியது. படுகொலைகளையும் தடைகளையும் ஆட்கடத்தல்களையும் எதிர்கொண்டு, ஒரு சமூகம் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்தி பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிர்களையும் உடமைகளையும் இழந்தபிறகும் இதையெல்லாம் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அரசாங்கம் விமானக் குண்டு வீச்சிலும் படுகொலைகளிலும் ஆட்கடத்தல்களிலும் படையெடுப்புகளிலும் ஈடுபடும் பொழுது புலிகளும் அதற்குப் பதிலளிக்கும் நடவடிக்கைக்கு துாண்டப்பட்டார்கள். அமைதி முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நோர்வே மிகவேகமாகவே போரின்மூலம் துாக்கியெறியப்பட்டது. போர் நிறுத்தக்கண்காணிப்புக்குழு போரைக் கண்காணிக்கும் குழுவாகச் சுருங்கியது. அதிலும் அரசாங்கத்தின் போருக்குள் அதன் தாக்குதல்களுக்குள் போர் நிறுத்தக்கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகளே சிக்கியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலைமை விரைவாக வளர்ச்சியடைந்து இப்போது பெரும் விபரீதமாகிவிட்டது. அதாவது போர் தன்னெழுச்சியாக வளரத்தொடங்கிவிட்டது.
இப்பொழுது கிழமைக்கு கிழமை யாராலும் மதிப்பிட முடியாத அளவுக்கு நிலைமைகள் கிடுகிடுவென மாறிக் கொண்டிருக்கின்றன. கடந்தவாரத்தின் முற்பகுதியில் அநுராதபுரம் தாக்குதல் நடந்தது. அதனால் இலங்கைத்தீவு ஒரு தடவை அதிர்ந்தது. அந்தத்தாக்குதல் நடந்த மறு வாரத்தில் இப்பொழுது விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் விமானத் தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டிருக்கிறார்.

இனி இதற்குப் பதிலாக அடுத்த வாரம் புதிய அதிரடி
கள் நடக்கலாம். அல்லது இதை எழுதிக்கொண்டிருக்கும்போதோ அல்லது இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போதோ ஏதாவது தாக்குதல்கள் நடந்திருக்கலாம். அதிரடிகளும் பதிலடிகளுமாகவே போரின் முகம் இருக்கப்போகிறது. இதன் விளைவுகள் வரவரப் பயங்கரமாகவே இருக்கப் போகின்றது.
தமிழ்ச்செல்வன் கூறியதைப்போலவே நிலைமை விபரீதமாகிவிட்டது.

அது முன்னர் கண்காணிப்புக்குழுவினரை தாக்க முயன்றதைப்போல, இப்போது தமிழ்ச்செல்வனைத் தாக்கிக் கொன்றிருக்கிறது. அவர் தன்னுடைய பணிக்காலத்தில் எச்சரிக்கையோடு திரும்பத்திரும்ப சொல்லி வந்ததைப்போல போர், அவரையே பலி கொண்டு விட்டது. அதாவது சமாதானத்துக்கான வாய்ப்புகளை போர் தின்று விடும் என்று தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியதையும் எச்சரித்ததையும் இங்கே நாம் நினைவு கொள்ள வேண்டும்.

தமிழ்ச்செல்வனின் படுகொலை சமாதான வாய்ப்புகளை வெகு தொலைவுக்கு தள்ளியிருப்பதாக பல தரப்பினரும் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் சொல்வது சரியாகவே இருக்கிறது. சிறீலங்கா அரசாங்கம் சமாதானத்துக்கான பாதையை முற்றாவே மூடிவிடும் நோக்கோடுதான் இந்தப்படுகொலைத் தாக்குதலைச் செய்திருக்கிறது.
போரின் விளைவுகள் மிக கொடூரமானவை என்று தெரிந்தபோதும் அதையே தொடரும்படி சிறீலங்கா அரசாங்கமும் சிங்களத்தரப்பும் வலியுறுத்துகின்றன. தமிழ்ச்செல்வனின் படுகொலை தொடர்பாக சிங்களத்தரப்பிலிருந்து கணிப்பிடக்கூடிய கண்டனங்களோ வருத்தமோ தெரிவிக்கப்படவில்லை.

இது எதனைக் காட்டுகிறது? போரை முழுமையாக அவர்கள் ஆதரிக்கிறார்கள். தொடரவிரும்புகிறார்கள் என்பதைத்தானே! ஆனால், சிங்களத்தரப்போ பிறரோ எதிர்பார்ப்பதைப்போல இனி நடக்கும் போர் என்பது மென் போராகவோ பாதிப்புகளும் அழிவுகளும் குறைந்த போராகவோ இருக்கப்போவதில்லை. அது கட்டறுத்த பெரும்போராகவே இருக்கும். அதற்கான வாசலை பெரியதாக திறந்து விட்டிருக்கிறது சிங்களத்தரப்பு. அதற்கான ஒரு குறியீடுதான் தமிழ்ச்செல்வனின் படுகொலையாகும். தமிழ்ச்செல்வனைப் பறிகொடுத்த புலிகள் அமைதியாக இருக்கப்போவதில்லை. அவர்களால் அப்படி அமைதியாக இருக்கவும் முடியாது.

அப்படி அமைதியாக இருந்தால் இன்னும் இழப்புகளையும் சேதங்களையும் அவர்கள் சந்திக்க வேண்டிவரும். எனவே புலிகள் கட்டாயமாக பதில்நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை அரசாங்கம் புலிகளை போரை நோக்கி சீண்டிக்கொண்டிருப்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் சீண்டல்கள் போரை தீவிரப்படுத்தி அதன் மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தலாம் என்று அது மதிப்பிட்டிருக்கிறது.

அதாவது தொடர்ந்து போரில் புலிகளை ஈடுபடுத்து
வதன் மூலம் அவர்களைக் களைப்படையச் செய்யலாம், அவர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தலாம் என்று சிங்களத்தரப்பு கணக்கிட்டிருக்கிறது. அதன்படியே அது போர்ச் சன்னதமாடுகிறது. இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், சர்வதேச சமூகம் எனப்படும் மேற்குலகம் அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்தும்போது, சம்மந்தப்பட்ட இரண்டு தரப்பும் போரில் ஈடுபடவேண்டிய யதார்த்தம் உருவாகியிருப்பதுதான். இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தோடு இப்போது மூன்று தரப்புகள் தொடர்பு பட்டிருக்கின்றன.

சிங்களத்தரப்பு - தமிழர் தரப்பு அதாவது விடுதலைப் புலிகள். மற்றது சர்வதேச சமூகம். இதில் சர்வதேச சமூகம் சமாதானத்தை விரும்புகிறது. அரசாங்கம் போரை செய்கிறது. ஆதனால் புலிகளும் போரை எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டத்திலுள்ளனர்.
இதேவேளை, தமிழ்ச்செல்வனின் கொலைக்கு மேற்
குலகமும் பொறுப்பெடுக்கவே வேண்டும். அவர்களின் வழுவழுத்த போக்கில் இருந்த பலவீனத்தை சிங்களத்தரப்பு வலுவாகப்பயன்படுத்தி வருகிறது என்று மேற்கிற்கு அழுத்தமாக சுட்டிக்காட்ட வேண்டும்
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக பொதுவாக இரண்டு சிந்தனைப் போக்குகள்முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒன்று மேற்கின் அமைதி சமாதானம் என்ற வகையிலான பேச்சுக்கும், சனநாயகத்துக்கும் முன்னுரிமை அளிக்கும் சிந்தனை. மற்றது போர்மூலம் தீர்வைக் காணும் சிந்தனை. அரசாங்கம் போரைப்பற்றிச் சிந்திக்கும் போதும் அதையே தொடரும் போதும் தவிர்க்க முடியாமல் புலிகளும் தமிழ் மக்களும் போர் வழிமுறைக்கே போய்ச் சேர வேண்டியிருக்கிறது.
இதோ இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போதே முகமாலைப் பகுதியில் படையினர் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

படையினருக்கெதிரான தடுப்பு நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் படையணி போரிட்டுக் கொண்டிருக்கிறது. அமைதிக்கான வார்த்தைகளை விடவும் போர்ச் சத்தம் அதிகமாகவே இருக்கிறது. அதுமட்டுமல்ல அமைதிக்கான சந்தர்ப்பத்தையும் போர்ப் பீரங்கிகள் துளையிட்டுக் கொண்டிருக்கின்றன.

0 Comments: