Thursday, November 8, 2007

வேனில் எழுதிய - ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் "அடுத்த கட்டம்"

மகிந்த அரசாங்கம் போரை தனது நிகழ்ச்சி நிரலுக்கமைய நகர்த்திச்செல்ல முடியாது என்பதையும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பது தொடர்பான மகிந்த சகோதரர்களின் திட்டம் நிறைவேறாது என்பதையும் விடுதலைப் புலிகளின் அநுராதபுரம் வான்படைத்தளம் மீதான தாக்குதல் தெளிவாக்கியுள்ள போதிலும், மகிந்த சகோதரர்கள் போர்முனைப்பைத் தளர்த்துவதாக இல்லை எனத்தெரிகிறது.

வடக்கில் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொண்டு தெற்கில் நம்பிக்கை இழந்து போயுள்ள சிங்கள மக்களின் உளவுரணை சற்று நிமிர்த்தலாம் என்பது அவர்களது தற்போதைய நோக்கம். சிங்கள மக்களின் உளவுரணை நிமிர்த்துவதற்கு அப்பால் அந்த மக்கள் மகிந்த அரசாங்கத்தை நிராகரிக்கும் நிலை வந்து விடக்கூடாதென்பது மகிந்த குழுவினரின் இன்றைய கவலையாகவும் உள்ளது.

எப்போதுமில்லாதவாறு மகிந்த அரசு பதவிக்கு வந்ததன் பின்னரே நாட்டில் விலைவாசி இந்தளவிற்கு கடகடவென உயர்ந்தது. எரிபொருள், கோதுமை மாவு, பால்மா போன்றவற்றின் அதியுச்ச விலை உயர்வுகள் பொதுமக்களை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. அத்துடன் அரச நிர்வாகங்களில் நிலவும் நிர்வாகச்சீர்கேடு, ஊழல் மோசடி என்பனவும் மக்
களை பலவிதங்களிலும் பாதித்து வருகின்றன. எல்லாப் பிரச்சினைகளையும் ‘பயங்கரவாதத்திற்கெதிரான வெற்றிகரப்போர்’ என்கிற மயக்க மருந்தினைக் கொடுத்து சிங்கள மக்களை சமாளித்து வந்த அரசு, தற்போது செய்வறியாது குழம்பிப்போயுள்ளது. எனவே, எப்படியாவது மீண்டுமொரு பாரிய படை நடவடிக்கையினு£டாக பிரச்சினைகளைச் சரிக்கட்டலாம் என்பதே மகிந்தவின் தற்போதைய சிந்தனை.

பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்கிற சிறீலங்காவின் கோசம் அனைத்துலக சமூகத்தின் காதுகளுக்கு தற்போது புளித்துப்போன ஒன்றாக மாறிவிட்டது. அது இனி பெரிய அளவில் எடுபடாத விடயமாகவும் போய்விடும். அவ்வாறெனில் எதிர்காலத்தில் சிறீலங்கா அரசாங்கத்தின் படைநடவடிக்கைகளுக்கான உதவிகளை அனைத்துலக சமூகத்திடமிருந்து பெற்றுக்கொள்வதும் சிக்கலான காரியமாகப் போகிறது. எனவே சிறீலங்கா அரசாங்கம் உதவிகளைப் பெற வேறு மார்க்கங்களை - வேறு அணிகளை நோக்கி நகர்கின்ற நிலைமையினையும் அவதானிக்க முடிகிறது.
இவ்வாறு நிலமைகள் தொடர, சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கருத்துக்களும் தொடாந்தும் ஒலித்துக்கொண்டேயுள்ளன.

பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கை என்ற போர்வையில் பொதுமக்கள் மீதான கொடுமைகள் நாடு முழுவதும் அதிகரித்தச் செல்வதாக மீண்டும் ஐ.நா. பிரதிநிதி தெரவித்திருக்கிறார். ஐ.நாவின் மனித உரிமைகள் தொடர்பான சிறப்புப்பிரதிநிதி மன்பிறட் நொவாக் அண்மையில் சிறீலங்காவிற்கு வருகை தந்து நிலமைகளை நேரடியாகப் பார்வையிட்டார். அவர் திரும்பிச்செல்லும் போது இம்மனித உரிமை மீறல்கள் தொடர்பாக காட்டமான கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.

பின் அண்மையில் ஐ.நாவின் சமூக, மனிதாபிமான மற்றும், கலாசாரத்திற்கான மூன்றாம் நிலைக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் மீண்டும் அதனை வலியுறுத்தியுள்ளார். பயங்கர வாதத்திற்கெதிரான போர் என்ற போர்வையிலேயே சிறீலங்காவில் பாரிய மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றமையை இப்போது ஐ.நா. உட்பட அனைத்துலக சமூகமும் அமைப்புகளும் நன்கு உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது.
என்னதான் அனைத்துலக கருத்துக்கள் வெளிவந்தாலும் அதனை சற்றும் கணக்கிலெடுப்பதாக மகிந்த அரசு இல்லை.

மாறாக அக்கருத்துக்களை மறுதலிக்கும் விதமான கருத்துக்களை உடனடியாக முன்வைப்பதே வழமையாகவுள்ளது. மன்பிறட் நொவாக்கின் சமீபத்திய கருத்தினையும் சிறீலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க உடனடியாகவே மறுத்துள்ளார். ஏற்கனவே சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டை நீதியான விசாரணைகளுக்குட்படுத்தாது இழுத்தடித்து வரும் சிறீலங்கா அரசாங்கம், மேலும் தொடரும் மனித உரிமை மீறல் செயற்பாடுகளை கட்டுப்படுத்தாதுள்ளது என்பதை அனைத்துலகம் புரிந்து கொண்டுள்ளது. இதற்கு இப்போதுள்ள ஒரேயரு வழிமுறை சிறீலங்காவில் ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை அமைப்பதே என்பது தான் அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாடு. இதற்கு சிறீலங்கா அரசாங்கம் எவ்விதத்திலும் இடமளிப்பதாக இல்லை.

இவ்வாறு இடமளிப்பததென்பது சிறீலங்காவின் இறைமையைப்பாதிக்கும் செயல் என்பதே சிறீலங்கா அரசின் வாதம். இந்த வாதமானது சிங்கள இனவாதிகளைக் கவரும் என்பதும் மகிந்த அரசின் எண்ணம். மகிந்த அரசு எந்தவொரு வெளிநாட்டிற்கும் தமது நாட்டின் இறைமையை விட்டுக்கொடுக்காது என்கிற நன்மதிப்பை சாதாரண சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதும், எல்லா வாழ்வியல் சிக்கல்களையும் எதிர்கொண்டு இத் ‘தேசப்பற்றின்’ பின்னால் சிங்கள மக்கள் இழுபடுவார்கள் என்பதும் மகிந்தவின் எதிர்பார்ப்பு.

இன்று பொருளாதார ரீதியாக பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் சிறீலங்கா அரசாங்கம் நிதியுதவிகளுக்கு வெளிநாடுகளையே கையேந்தி நிற்கிறது. வெளிநாடுகளிடம், வெளிநாட்டு நிதிநிறுவனங்
களிடமும் நிதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சிறீலங்காவின் வளங்களை தாரைவார்க்கவும் அது தயாராகவிருக்கின்றது. வெளிநாட்டு முதலீடுகளை சிறீலங்காவில் அனுமதிப்பதென்பது சொந்த நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு தாரைவார்ப்பதே. ஏனெனில் நிதிவழங்கும் நாடுகளும், நிறுவனங்களும் தமது நலன்களுக்கு அப்பாற்பட்டு சிறீலங்கா கேட்கும் பணத்தை வாரி வழங்காது. பேரம் பேசுதலூடாகவே இந்நிதிகள் வழங்கப்படும்.

இதுவே சிறீலங்காவின் இறைமையை விட்டுக்கொடுக்கின்ற செயற்பாடாகும். இதனை தென்னிலங்கை சிங்கள மக்கள் விளங்கிக் கொள்வார்களேயானால். மகிந்த அரசாங்கத்தின் போலித் தேசப்பற்றை புரிந்து கொள்வார்கள்.
வெளிநாடுகள் எவ்விதமான அழுத்தங்களை, கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்தாலும், நாட்டு மக்கள் என்ன அவலங்ளை னுபவித்துக்கொண்டிருந்தாலும், மகிந்தவினதும் அவரது சகோதரர்களினதும் செயற்பாடுகள் எண்ணங்கள், கனவுகளை தகர்க்கப்போவது விடுதலைப் புலிகளின் எதிர்கால நடவடிக்கைகளே.

இனையே அனைத்துலக சமூகமும் மௌனமாக எதிர்ப்பார்ப்பதாகத் தெரிகிறது. மகிந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க ‘மக்கள் அலை’ தொடர் போராட்டங்களை சிறீலங்கா முழுவதும் மேற்கொண்டு வரும் ஐக்கிய தேசியக்கட்சியும், மங்கள - சிறீபதி தரப்பும் விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கையினையே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றன. தமிழ் மக்களும் அதனையே எதிர்பார்த்திருக்கின்றனர்.

சிறீலங்காவின் சமகால அரசியல் இதுவாகத்தானிருக்கிறது.

0 Comments: