Tuesday, November 13, 2007

இந்தியாவின் கரங்களில் தங்கியிருக்கும் இலங்கையின் சமாதானம்

இந்தியாவின் கரங்களில் தங்கியிருக்கும் இலங்கையின் சமாதானம்

[13 - November - 2007]
நீதி.செங்கோட்டையன்
இலங்கை மண்ணில் 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய மரண ஓலம் இன்னும் அடங்கவில்லை. அங்கு அமைதி தொலைந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. எந்நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்ற அச்ச உணர்வைத்தான் நீண்டகாலமாக இலங்கை மக்களின் கண்களில் காணமுடிகிறது.

இலங்கை மண்ணில் பிறக்கும் குழந்தைகளை சபிக்கப்பட்டவர்கள் என்று சொல்வதை தவிர வேறுவழியில்லை. குண்டு மழையால் உருவாகும் நெஞ்சை பிளக்கும் சத்தம்தான் அவர்களுக்கு தாலாட்டுப்பாடல் என்ற அவல நிலை.

இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளின் துப்பாக்கி முனைகளில் இருந்து புறப்படும் குண்டுகளுக்கு அப்பாவி ஈழத்தமிழர்களும் சிங்கள மக்களும் இரையாகிக் கொண்டிருக்கின்றனர் என்பதை நினைக்கும் போது நெஞ்சு கனக்கிறது.

நரக பூமியாகிப் போன இலங்கையை வெறுத்து இந்தியாவை தாய் வீடாகக் கருதி, தங்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வர முற்பட்டு கடல்தாயின் மடியிலேயே ஜலசமாதி ஆகிப்போகும் நிகழ்வுகளையும் எளிதாக மறக்க முடியவில்லை. அப்படி ஒருவேளை தப்பிப் பிழைத்து இந்தியாவில் அடைக்கலம் அடைபவர்கள் இங்கும் சந்திக்கும் இன்னல்களை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

இலங்கை பிரச்சினைக்கு போர் ஒன்றே தீர்வு என்ற இலக்கோடு இருதரப்பும் செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த முடிவு முற்றிலும் தவறானது.

சர்வதேச வரலாற்றில் இதுவரை எந்த ஒரு பிரச்சினைக்கும் போரினால் தீர்வு காணப்பட்டதில்லை என்பதை கடந்தகாலச் சம்பவங்களே உணர்த்துகின்றன.

இதை அவர்கள்தான் மறந்து செயல்படுகிறார்கள் என்றாலும், சர்வதேச சமுதாயமும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது ஏன்? இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடும் வருத்தம் அளிப்பதாக உள்ளது.

அங்கு தினம் தினம் மரணக்குழிகளுக்குள் விழுந்து மடிந்து கொண்டிருப்பது அப்பாவி மக்கள் என்றபோதிலும் இந்தியா ஊமைபோல் இருப்பதன் காரணம்தான் தெரியவில்லை.

இலங்கை விவகாரம் என்றால் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பிரச்சினை அல்ல. ஈழத்தமிழர்களுக்கும்,சிங்களவர்களுக்கும் இடையேயான யுத்தம் தான் என்பது இந்தியாவுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் மௌனத்தின் காரணம் புரியவில்லை.

இலங்கை என்பது கண்டெடுக்கப்பட்ட தீவு, அந்தத் தீவில் சிங்களவர்களும், தமிழர்களும் அடைக்கலம் அடைந்தவர்கள்தான். எனவே, இரு இனத்துக்குமே அந்தத் தீவின் மீது சம உரிமை உண்டு.

ஆனால், இந்த நியதி அங்கு நிலைநாட்டப்படவில்லை. பெரும்பான்மையான சிங்களவர்கள், சிறுபான்மையான தமிழர்களை வேற்றுமக்களாக கருதுவதோடு, அவர்களை கொன்றுகுவிக்கும் வெறிச்செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையால் விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்பாக இந்தியா அறிவித்துள்ளது.

இருப்பினும், ராஜீவ் காந்தியின் இறப்பை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட மறுத்து வருவது எவ்விதத்திலும் நியாயமாகாது.

நாகசாகி, ஹிரோஷிமாவை அணுகுண்டால் அழித்த அமெரிக்காவின் செயலை இன்னும் ஜப்பான் நினைத்துகொண்டிருந்தால் இன்று அந்த இரு நாடுகளிடையே அமைதி நிலவுமா? இல்லை. இந்திய வளங்களை சுரண்டியதோடு இலட்சக்கணக்கான மக்களையும் கொன்றுகுவித்துச் சென்ற ஆங்கிலேயர்களின் செயல்பாட்டை நாம் மறக்காதிருந்தால் இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையில்தான் இந்தளவிற்கு நட்புறவு ஏற்பட்டிருக்குமா? என்றுமே முந்தையப் பகையை மறக்கும் போதுதான் நட்புறவு வலுப்படும் என்பதற்கு சர்வதேச அரங்கில் எடுத்துக்காட்டாக விளங்குவதே இந்தியாதான். அப்படியிருக்கையில் இலங்கை விவகாரத்தில் மட்டும் இந்தியாவின் நிலைப்பாடு முற்றிலும் மாறுபட்டு இருப்பதன் நோக்கம் தெரியவில்லை.

இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இலங்கை விவகாரத்தில் தலையிட்டால் நீண்டகாலப் பிரச்சினைக்கு கட்டாயம் நிரந்தர தீர்வு கிடைத்துவிடும் என்பது கோடான கோடி இந்தியர்களின் நம்பிக்கை மட்டுமல்ல; சர்வதேச சகோதரர்களின் ஆழ்ந்த நம்பிக்கையும் கூட இதுதான்.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வனைக் கொன்றதன் மூலம் ஏதோ பிரச்சினைக்கே நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டதாக இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ கருதுகிறார். தமிழ்ச்செல்வனைக் கொன்ற படைவீரர்களுக்கு புகழாரமும் சூடியுள்ளார்.

ஆனால், சு.ப.தமிழ்ச்செல்வனின் இழப்பு இலங்கை பிரச்சினையை மேலும் விஸ்வரூபம் எடுக்க வழிவகுக்குமே தவிர, எவ்விதத்திலும் பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்திக் கொடுத்திடாது. இதை ராஜபக்ஷ கருத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையில் இதற்கு மேலும் அப்பாவி மக்கள் மரணக்குழிக்குள் விழாமல் இருக்க வேண்டும். அங்கு அமைதி நிலவவேண்டுமென்றால் அது இந்தியாவின் கையில்தான் உள்ளது. எனவே, தங்களின் பக்கம் இந்தியாவின் கருணைப் பார்வை திரும்புமா? என்பதுதான் இலங்கை மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. தினமணி

0 Comments: