Saturday, November 17, 2007

ஜே.வி.பியைத் "தாஜா' செய்ய புலிகள் மீது தடை விதிப்பு?

Posted on : 2007-11-17
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு நாடாளுமன்றத்தில் முக்கிய பலப் பரீட்சையை நாளை மறுதினம் சந்திக்கவிருக்கின்றது.
"மஹிந்த ராஜபக்ஷ சகோதரர்கள் அன்ட் கம்பனி'யின் கெடுபிடிகளாலும், போக்குகளாலும், குடும்ப ஆதிக்கத்தாலும் அரசுக்குள் அதிருப்தியுற்ற மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள் பலர் அரசிலிருந்து வெளியேறி எதிரணிப் பக்கம் தாவலாம் என்ற சூழ்நிலையில் நாளை மறுதினம், அரசின் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முக்கிய வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்றது.
அரசுக்கு எதிராக எதிரணி எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் சூழலில், அரசுக்குள்ளும் அரசுத் தலைமைக்கு எதிரான புகைச்சல் உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதால், இவை எல்லாம் சேர்ந்து வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் அரசின் காலை முற்றாக வாரி விட்டாலும் விடலாம் என்ற எதிர்பார்ப்பு கொழும்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றது.
ஆனால், இலங்கை நாடாளுமன்றத்தில் கட்சிகளின் ஆதரவு நிலை தொடர்பான அட்சரகணிதக் கணக்குகளை ஆராய்வோர் ஒரு விடயத்தைத் தெளிவாகக் கூறுகின்றனர். இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசைக் கவிழ விடுவதில்லை என்ற ஒரு தீர்மானத்தை ஜே.வி.பி. எடுக்குமானால், அதை செயலில் உறுதிப்படுத்தக்கூடிய வலிமை இன்று அக்கட்சிக்கு உள்ளது என்பதுதான் அது. இந்த யதார்த்தம் அரசுத் தலைமைக்கும் நன்கு புரியும்; தெரியும்.
ஆகவே, ஜே.வி.பியை "தாஜா' செய்து சமாளிப்பதன் மூலம் வரவு செலவுத்திட்டம் மீதான முதலாவது கண்டத்தை நாளை மறுதினம் இலகுவாகத் தாண்டி விடலாம் என்பது அரசுத் தலைமையின் கணிப்பீடு.
ஆனால், வரவு செலவுத்திட்டத்தின்போது அரசைக் காப்பாற்றுவதற்கு ஜே.வி.பி. நான்கு முன் நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அரசு புலிகள் இடையேயான யுத்த நிறுத்த உடன்பாட்டை ரத்துச் செய்ய வேண்டும் என்பது அதில் முக்கியமான ஒரு கோரிக்கை.
வரவு செலவுத் திட்டத்தில் தப்பிப் பிழைப்பதற்காக ஜே.வி.பியின் ஆதரவை எப்படியும் வளைத்துப்போடும் நோக்கில் அதன் காலில் விழுவது போல இந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதாக அறிவிப்பது அரசுத் தலைமைக்கு அவமானமானது. அத்தோடு, அமைதிப் பேச்சுமூலம் சமரசத் தீர்வு காணும்படி சர்வதேசமும் இலங்கை அரசு உட்பட சம்பந்தப்பட்ட தரப்புகளை ஒரே குரலில் வற்புறுத்தி நிற்க, அந்த முயற்சிகளுக்கு நிரந்தர வேட்டு வைப்பதுபோல யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை அரசுத் தரப்பே முன்னின்று முறிப்பது சர்வதேச ரீதியில் அரசுக்கு நெருக்கடிகளையும் நெருக்குதல்களையும் தரக்கூடியதும் கூட.
ஆகவேதான் இதற்கு மாற்று வழி ஒன்றை அரசுத் தலைமை நாடியிருப்பதாகக் கூறப்படுகின்றது. அந்த உத்தியை அரசுத் தலைமை செயற்படுத்துவதற்கான வாய்ப்பான சூழலை அமெரிக்காவே இலங்கை அரசுக்கு இச்சமயத்தில் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
அமெரிக்க அரசு, தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கணக்குகளை முடக்கி வைக்கத் தீர்மானித்திருப்பது தெரிந்ததே. அந்த அமைப்பு ஊடாகப் புலிகளுக்கு நிதி செல்வதாகக் குற்றம் சுமத்தியே அமெரிக்கா இந்த நடவடிக்கையை இந்தச் சமயத்தில் மேற்கொண்டிருக்கின்றது.
இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள ஜே.வி.பி., புலிகள் இயக்கத்தை அமெரிக்கா தடை செய்தமைபோல இலங்கை அரசும் தடைசெய்யவேண்டும் எனத் திரும்பவும் நாடாளுமன்றத்தில் நேற்றுக் கோரியிருக்கின்றது.
இதையே இப்போது தனக்கு வசமான ஆயுதமாக உத்தியாக பயன்படுத்துவது குறித்து அரசுத் தலைமை தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் தெரிகின்றது.
வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் நடைபெற முன்னர், புலிகள் இயக்கம் மீதான தடையைத் திடீரென அறிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தி, ஜே.வி.பியை நாடாளுமன்றத்தில் தனக்கு எதிராகச் செயற்படாமல் தற்காலிகமாகவேனும் தடுக்கமுடியும் என்ற தந்திரோபாயத்தையே அரசுத் தலைமை சிந்திக்கின்றது.
2002 இல் புலிகள் இயக்கம் மீதான தடையை அப்போதைய ரணிலின் அரசு நீக்கும்வரை அந்த அரசுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்ய முடியாது எனப் புலிகள் அடம்பிடித்து நின்றார்கள் என்பது தெரிந்ததே. அதேபோல இப்போது புலிகள் இயக்கம் மீது அரசு மீண்டும் தடையை விதிக்குமானால், அதைக் காரணம் காட்டி புலிகளே தம்பாட்டில் இந்த யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறும் முடிவைப் பிரகடனப்படுத்துவர், அந்த ஒப்பந்தத்தை நிரந்தரமாக முறிக்கும் வேலையை அரசுத் தரப்புச் செய்யவேண்டியதில்லை என அரசுத் தலைமை கருதுகின்றதாம்.
ஆக, புலிகள் இயக்கம் மீது மீளத் தடையை விதித்து, அதன் மூலம் நாடாளுமன்றில் ஜே.வி.பியின் ஆதரவைத் தொடர்ந்து அரசுக்குத் தக்க வைத்தல் மற்றும் புலிகள் தாங்களாகவே யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகின்றனர் என அவர்களைக் கொண்டே அறிவிக்கச் செய்தல் என ஒரே கல்லில் பல மாங்காய்களுக்கு இந்தத் தந்திரம் மூலம் திட்டமிடுகிறது அரசுத் தலைமை.
தமிழர் புனர்வாழ்வுக் கழக நிதி புலிகளுக்குப் போகின்றது என்ற காரணத்தைக் காட்டி அந்த அமைப்பின் நிதி மற்றும் சொத்துக்களை தான் முடக்கியிருப்பதாக அமெரிக்கா விடுத்திருக்கும் அறிவிப்பு, அதையொட்டியே புலிகள் இயக்கத்தை இலங்கையில் இலங்கை அரசு தடை செய்கின்றது என்ற பொருத்தமான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.


uthayan.com

0 Comments: