Thursday, November 29, 2007

சர்வதேச சமூகத்தின் அணுகுமுறை குறித்து....

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை வன்னியில் இருந்து நிகழ்த்திய இவ்வருடத்தைய மாவீரர் தின உரையின் பிரதான செய்தி சர்வதேச சமூகத்தைக் குறிவைத்ததாகவே அமைந்திருந்தது.
இலங்கை அரசாங்கத்துடன் அரசியல் இணக்கத் தீர்வைக் காண முடியுமென்ற நம்பிக்கை தனக்கில்லை என்றும் தென்னிலங்கையின் எந்தவொரு அரசியல் கட்சியிடமிருந்தும் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்ப்பது அரசியல் அசட்டுத்தனமாகும் என்றும் குறிப்பிட்ட பிரபாகரன் இலங்கை அரசாங்கத்தின் சாதுரியமான, சாணக்கியமான பிரசாரங்களுக்கு பலியாகி அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேச சமூகமும் இழைத்து நிற்கிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். சமாதான முயற்சிகளுக்குப் பாதுகாவலர்களாக நின்ற நாடுகள் நடுநிலை தவறி ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதன் காரணமாக சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் பிரபாகரன், இந்த நாடுகள் வழங்கிவரும் தாராள பொருளாதார இராணுவ உதவிகளும் இரகசியமான இராஜதந்திர முண்டுகொடுப்புகளும் இலங்கை அரசாங்கத்தை மேலும் மேலும் இராணுவப் பாதையில் தள்ளிவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை இனநெருக்கடியில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் தமிழ் மக்களுக்குத் திருப்தி தருவனவாக இல்லை என்பதை வெளிப்படையாகவே கூறியிருக்கும் பிரபாகரன், தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பில் சர்வதேச சமூகத்திடமிருந்து புதிய அணுகுமுறையை எதிர்பார்க்கிறார். மீண்டும் முற்று முழுதான போர் மூளுவதற்கு இலங்கை நெருக்கடி தொடர்பில் சர்வதேச சமூகம் கடைப்பிடித்த அணுகுமுறையே காரணம் என்பதே விடுதலை புலிகளின் தலைவரின் முக்கிய குற்றச்சாட்டாகும். இதற்கு சர்வதேச சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கும் வல்லாதிக்க நாடுகள் எத்தகைய பிரதிபலிப்பை வெளிக்காட்டப் போகின்றனவோ தெரியவில்லை. ஆனால், பொதுவில் தமிழ்மக்கள் மத்தியில் சர்வதேச சமூகத்தின் தற்போதைய போக்கு தொடர்பில் காணப்படக் கூடியதாக இருக்கின்ற அபிப்பிராயத்தின் பின்னணியிலேயே பிரபாகரனின் செய்தியை நோக்க வேண்டியிருக்கிறது.

நோர்வே அனுசரணையுடனான சமாதான முயற்சிகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்ததன் காரணத்தினால் மாத்திரம் தமிழ் மக்கள் அந்த முயற்சிகள் மீது நம்பிக்கை வைத்தார்கள். இலங்கை நெருக்கடியிலான சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு மீண்டும் முழுஅளவிலான போர் மூளுவதைத்தடுக்கும் என்றும் அந்த மக்கள் எதிர்பார்த்தார்கள். சமாதான முயற்சிகளில் ஏற்பட்ட முட்டுக்கட்டை நிலையை அகற்றுவதற்கோ, மீண்டும் போர் மூளுவதைத் தடுப்பதற்கோ சர்வதேச சமூகத்தினால் எதையுமே செய்யக் கூடியதாக இருக்கவில்லை. இலங்கையின் அண்மைக்கால நிகழ்வுப் போக்குகள் குறித்து சர்வதேச சமூகம் அவ்வப் போது விசனத்தைத் தெரிவித்து வந்ததைத் தவிர, அதனால் வேறு எதையுமே செய்யக் கூடியதாக இருக்கவில்லை. அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தற்போதைய மோதல்களும் அரசாங்கப் படைகள் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் பாரிய தாக்குதல்களும் கொண்டுவரக் கூடிய விளைவுகள் எத்தகையவையாக இருக்கும் என்பதைப் பொறுத்தே அடுத்த நகர்வைச் செய்வதற்கு சர்வதேச சமூகம் காத்திருக்கிறது போலும்.

இலங்கை அரசாங்கத்தின் தீவிர இராணுவ முனைப்பை அதைரியப்படுத்தக்கூடிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை உணராமல், மறுபுறத்தில் இராணுவ முனைப்புக்கு தூபம் போடக்கூடிய நகர்வுகளையே சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் இன்று செய்துகொண்டிருக்கின்றன. இத்தகையதொரு நிலைமையே இலங்கையில் இன்று படுமோசமான அரசியல் - இராணுவ நிகழ்வுப் போக்குகளுக்கு வழிவகுத்திருக்கிறது. சர்வதேச சமூகத்தின் அணுகுமுறையில் ஆரோக்கியமான மாற்றம் ஏற்படாதபட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையவே செய்யும்.

thinakkural.com

1 Comment:

Victor Suresh said...

“எங்கள் அண்டை வீட்டுக்காரன் ஒருத்தனும் நல்லவனில்லை” என்று ஒருவர் கூறினால் பிரச்சினை அண்டை வீட்டுக்காரர்கள் மீதா, இல்லை புகார் கூறுபவர் மீதா என்பதை சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது.