Saturday, November 10, 2007

போர்த் தீவிரத்துக்கும் உதவிக் கொண்டு பேச்சுக்கும் வற்புறுத்தும் இரட்டை வேடம்

10.11.2007
சர்வதேச அரசியலில் வல்லாதிக்க சக்தியான அமெரிக்காவின் நடவடிக்கைகள், செயற்பாடுகள் என்பன எப்போதுமே சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கப்படுகின்றன.
பிற நாடுகள் எல்லாவற்றிலும் வெளியில் பார்வைக்கு தட்டிக்கொடுப்பது போல நடந்துகொண்டு மறைவில் குழிபறிப்பதுதான் வாஷிங்டனின் பொதுவான இராஜதந்திரம் என்பது அம்பலமான அப்பட்டமான உண்மை.
இப்போதும் கூட அந்தப் போக்கில் மாற்றமில்லை என்பதையே இலங்கை விடயத்திலும் அமெரிக்கா நிலைநிறுத்தி வருகின்றதோ என்ற சந்தேகம் தமிழர்களுக்கு எழுந்திருக்கின்றது.
இலங்கை விடயத்தில் அமெரிக்காவின் செயற்பாடு பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்ற போக்கு மாதிரியே தோன்றுகின்றது.
இலங்கையில் அமைதி முயற்சிகளுக்கான வாய்ப்புகள் அடியோடு கருகிவிட்டன. தற்போதைய அரசுத் தலைமை யுத்த சந்நதம் கொண்டு, போர் உருவேறி, புதிது புதிதாகச் சமர்க்களங்களைத் திறக்க வெறி கொண்டு நிற்கின்றது.
சமாதான எத்தனங்களுக்குப் பெரும்பாலும் சாவு மணி அடித்தாகி விட்டது என்பதை அரசுத் தலைவர்களின் வெட்டவெளிச்சமான அப்பட்டமான பேச்சுகள் எடுத்தியம்பி வருகின்றன.
கடந்த புதனன்று இலங்கையின் அரசுத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் நிதி அமைச்சர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் தாம் சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டஉரையிலேயே இவ்விவகாரத்தில் தமது நிலைப்பாடு என்னவென்பதைத் தெளிவாகவும் ஐயந்திரிபறவும் கோடிகாட்டி விட்டார். ""புலிகளின் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பதைத் தவிர எமக்கு வேறு மாற்றுவழி இல்லை'' என்று அங்கு பிரகடனப்படுத்தியதன் மூலம் போர் வழித்தீர்வே இராணுவப் போக்கே தமது ஒரே உத்தி என்பதை அவர் வெளிப்படையாகவே கோடிகாட்டிவிட்டார். மேலும் அவரது வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதியை ஒதுக்கியதன் மூலம், ஒரு "யுத்த பட்ஜெட்' டைச் சமர்ப்பித்து, தமது அரசின் வழித்தடத்தை அவர் சர்வதேச சமூகத்துக்கு மிகக் குறிப்பாக உணர்த்தி விட்டார்.
ஜனாதிபதிக்கு அடுத்து நாட்டில் இராணுவ, பாதுகாப்பு விவகாரங்களில் அதிக செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசின் நகர்வு உத்தி எப்படியிருக்கும் என்பதைத் தொடர்ந்து தாம் முன்வைக்கும் தமது கருத்துகள் மூலம் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றார்.
ஆக, இப்போது யுத்தத் தீர்வையே கடுஞ்சமர் நடவடிக்கையையே தனது ஒரே இலக்காகவும், பாதையாகவும் இலங்கை அரசுத் தலைமை வகித்துக்கொண்டுவிட்டது என்பதும்
அந்தப் போர் வெறித் தீவிரப் போக்கிலிருந்து சரியான பாடம் படித்துத் தெளியும் வரை பட்டறிவு பட்டுத் திருந்தும் வரை அரசுத் தலைமை மாறப்போவதில்லை என்பதும்
இலங்கை விவகாரங்களை அவதானித்துவரும் அனைத்துத் தரப்பினருக்குமே நன்கு தெரிந்த அம்சம்தான். இது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கும் கூட தெரிந்து தான் இருக்கும். இல்லை என்று கூற முடியாது.
போர் வெறிப் போக்கில் இலங்கை அரசுத் தலைமை அதி தீவிரமாக இருப்பதன் காரணமாகவும், மோசமான மனித உரிமை மீறல்களுக்கு இடமளித்து, அவற்றில் ஈடுபடத் தனது படைகளைத் தூண்டி, அனுமதித்து வருகின்றது அரசுத் தரப்பு என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதனாலுமே, இலங்கைக்கான ஆயுதத் தளபாட உதவிகளை அமெரிக்கா அடியோடு நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வற்புறுத்தலும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் மத்தியில் இப்போது வலுத்து வருகின்றன என்பதும் கண்கூடு.
இப்படி நிலைமை இருக்க இது தெரியாதவர்போல ஒருபுறம் இலங்கைக் கடற்படையின் கரையோர ரோந்து மற்றும் காவல் நடவடிக்கைகளுக்கு மேலதிக வலுச்சேர்க்கும் நோக்கில் ராடர் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கருவிகளையும், ஒரு தொகுதி நவீன படகுகளையும் அமெரிக்கா சார்பில் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்து இலங்கைப் படைகளின் போர்த் தீவிரப் போக்குக்கு உதவிக் கொண்டு, மறுபுறம் அதே நிகழ்வில் ""இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுகள் மூலமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுங்கள்!'' என்று இலங்கை அரசைப் பார்த்து வலியுறுத்தியிருக்கின்றார் கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்.
போர்வெறிப் போக்கில் மூழ்கிக் கிடக்கும் இலங்கையை அந்தத் தடத்திலிருந்து அமைதி முயற்சி வழிக்குத் திருப்பவேண்டுமானால் அதற்கேற்ப உறைப்பாக அதற்கு (இலங்கை அரசுக்கு) சமாதானப் போக்குக் குறித்து உரைக்க வேண்டும். இலங்கை அரசு உறைப்பாக அவ்விடயத்தை உணரவேண்டுமானால், இராணுவ ரீதியிலான தடைகளை இக்கட்டை முட்டுக்கட்டையை அதற்குப் போட்டாக வேண்டும். அதன் மூலம் இவ்விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அக்கறையை இலங்கை அரசுத் தலைமைக்கு உறைப்பாகவும் சூடாகவும் உணர்த்த முடியும்.
அதை விடுத்து, மேலும் இராணுவத் தீவிரப் போக்குக்குத் தூண்டி, ஊக்கமளிக்கும் விதத்தில் ஆயுதத் தளபாட உதவிகளை இலங்கைக்கு வழங்கிக்கொண்டு, மறுபுறம் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, அமைதி வழித்தீர்வுக்கு முயலுமாறு பேச்சுக்குச் செல்லுமாறு வற்புறுத்துவது சுத்த முட்டாள்தனம். அத்தகைய போக்கை "பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் செயலாக, கருதுவதில் என்ன தப்பிருக்க முடியும்.

www.sudaroli.com

0 Comments: