Saturday, November 17, 2007

திருந்தாத மகிந்த அரசும் வருந்தாத அனைத்துலகும் -சேனாதி-

-சேனாதி-


கடந்த ஒக்ரோபர் மாதம் 15 ஆம் நாள் அம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் தாக்குதலை அடுத்த ஒருமாத காலத்துள் நடந்த குறிப்பிடத்தக்க மோதல்கள் அனைத்தும், சிறிலங்காப் படையினருக்கு ஒப்பீட்டளவில் அதிக சேதம் விளைத்தவையாகவே அமைந்திருந்தன.

ஒக்ரோபர் 22 ஆம் நாள் அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மேல் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்,

நவம்பர் 1 ஆம் நாள் மன்னார் பாலைக்குழி மற்றும் கட்டுக்கரைக்குளத்தில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு,
'பாதீட்டு நடவடிக்கை" என்ற கேலிப்பெயரைச் சம்பாதித்துக்கொண்ட நவம். 7 ஆம் நாளைய கிளாலி-முகமாலை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு என்பவற்றில் அரச படைகள் நிச்சயமாக அடிவாங்கியிருந்தன.

இதெற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல, புலிகளைத் துடைத்தழித்து விட்டோம் என்று அரசாங்கம் மார்தட்டிக் கொண்டாடிய கிழக்கில், அதாவது அம்பாறையின் றூபஸ் பகுதியில் அமைந்திருக்கும் சிறப்பு அதிரடிப்படை முகாமின் மீது, விடுதலைப் புலிகள் நவம்பர ;9 ஆம் நாள் 81 மி.மீ. மோட்டாரால் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

ஒன்பதாம் நாள் காலை விடிந்து வரும் பொழுதில் றூபஸ் அதிரடிப்படை முகாம் மீது குறிச்சூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பக்கவாட்டில் இருந்து இலகு இயந்திரத் துப்பாக்கி மற்றும் தாக்குதல் ரைபிள்களால் செறிவான சூடுகள் நிகழ்ந்த அதே நேரத்தில், அருகிலிருந்த காட்டுப் பகுதியில் இருந்து வந்த பன்னிரெண்டு 81 மி.மீ. கணைகள் முகாமில் உள்ளும் அருகாமையிலும் விழுந்து வெடித்தன என்று அரசாங்கப் பாதுகாப்புத் தரப்பு வட்டாரங்களில் பேசப்பட்டது.

ஆறு கணைகள் முகாமின் உள்ளும் ஏனையவை முகாமின் வெளியே அதன் அண்டை அயலிலும் விழுந்திருக்கின்றன. தேசிய பாதுகாப்பிற்கான ஊடகத் தகவல் மையம் இதுபற்றி மூச்சு விடவில்லை.

அந்தத் தாக்குதலில் படைத்தரப்பினருக்கு இழப்புகள் அதிகம் இல்லையாயினும், அந்தத் தகவலை வெளியிடுவதில் பலவித கொள்கைக் சிக்கல்கள் இருந்தாக தெரிகிறது.

'கிழக்கின் உதயம்" என்ற சுத்துமாத்துத் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வரும் இந்த நிலையில் அங்கே புலிகள் 81 மி.மீ. மோட்டார்களை இப்போதும் வைத்திருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொண்டால், படைத்துறை மொழியில் அதன் கருத்து, கிழக்கு முழுவதுமாக படையினர் வசம் இல்லை என்பதாகவே அமைந்துவிடும்.

ஏனென்றால் 81 மி.மீ. என்பது சராசரி 6 கி.மீ. தூரவீச்சுக்கொண்ட கனரக ஆயுதம். அதை இயங்குநிலையில் வைத்திருப்பதற்கான ஆளணி எத்தகையதாக இருக்கும் என்பதை ஊகிப்பதற்கு மேற்குலக ஆய்வாளர்களுக்கு அதிகநேரம் பிடிக்காது.

இது கிழக்கு பற்றிய அரசின் அத்தனை பரப்புரைகளையும் தரையில் கடாசி அடிப்பதற்கு ஒப்பாகும். இதன் எதிரொலி பாதீட்டு விவாதம், பன்னாட்டு முதலீடு என்று நீளும். இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான தனது திட்டம் நடைமுறைச் சாத்தியம் கொண்டது என்பதற்கான நிரூபணமாக கிழக்கைக் காட்டி வரும் இராஜபக்ச நிறுவனம், அங்கேயும் தான் முழுமையான வலிமை நிலையில் இல்லை என்று ஒத்துக்கொண்டால், அவர்களின் ஒட்டுமொத்த மூலோபாயமே தகர்ந்துவிடும்.

ஆகவே அந்த விடயம் அமுக்கப்பட்டு விட்டது.

மேற்சொன்ன அனைத்துச் சம்பவங்களிலும் தனக்கேற்பட்ட தாக்கத்தை சிறிலங்காப் படைத்தரப்பு பூசிமெழுக நினைத்த போதிலும், இடையில் நிகழ்ந்துவிட்ட பிரிகேடியர் தமிழ்ச்செல்வனது படுகொலையின் மேல் பெருமளவு அவதானம் திருப்பப்பட்ட போதிலும், அந்தச் சம்பவங்களால் ஏற்பட்ட தாக்க விளைவுகள் ஏதோ ஒரு வகையில் வெளிப்படவே செய்தன.

அம்பாந்தோட்டைத் தாக்குதல்களின் எதிரொலியாக அப்பகுதியின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக பிரகேடியர் தர நடவடிக்கைப் பொறுப்பதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார்.

கணிசமான படைகள் அங்கே அனுப்பப்பட்டன. ஊர்காவற்படை அணியொன்றும் வேகமாகத் திரட்டப்பட்டு வருகிறது.

500 மீற்றர்களுக்கு ஒன்று என்று காவல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

இது, குடும்பிமலையில் இருந்து தப்பி வந்த சில 'கட்டாக்காலிப் பயங்கரவாதிகள்" (ளவசயல வநசசழசளைவள) தான் அம்பாத்தோட்டை படைமுகாமைத் தாக்கினார்கள் என்று அந்தச் சம்பவத்தைக் குறைத்துக்காட்டிய அரசாங்கப் படைகளின் ஆரம்ப நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணான நிலைப்பாடாகும்.

அந்தத் தாக்குதல் படைத்துறைவகையில் மரியாதைக்குரியது என்பதற்கு அரசாங்கப் படைகளின் பதில் நகர்வுகள் சான்று பகர்ந்துள்ளன.

அனுராதபுரம் தாக்குதல் சராசரி அளவீடுகளைத் தாண்டி சாதனை வரைகளை எட்டியது. அதன் பின்பு எத்தனை சம்பவங்கள் நிகழ்ந்தபோதும் அனுராதபுரம் தாக்குதல் அதிர்ச்சியிலும் பின்னடைவிலும் இருந்து அரசாங்கமோ அதன் படைகளோ இன்னமும் வெளியில் வரவில்லை என்பதே உண்மை. இப்போதைக்கு வெளியே வரும் சாத்திமும் இல்லை.

மன்னர் மோதலின் சேத விபரங்களை கொழும்புப் படைத்துறை ஆய்வாளர்களே புட்டுவைத்து விட்டார்கள். அதில் காயமடைந்த சிப்பாய்களுக்கு மருத்துவம் செய்வதற்காக அனுராதபுரம் மருத்துவமனையில் இருந்த பொது நோயாளிகள் தங்கள் படுக்கைகளில் இருந்து அவசர அவசரமாக விரட்டப்பட்டார்கள். அதாவது, அதில் ஏற்பட்ட இழப்புத் தொகையை எதிர்கொள்ள அரச படைத்தரப்பு தயாராக இருக்கவில்லை.

அவ்வாறு தகுந்த ஆயத்தமற்ற நிலையில் ஒரு படை நடவடிக்கையை அவசரமாகச் செய்யவேண்டிய தந்திரோபாய அவசியம் ஒன்று இருந்ததாக எந்த ஆய்வும் சொல்லவில்லை. அது ஒர் அரசியல் அவசரம் என்பது இப்போது விளங்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

கிளாலி-முகமாலைச் சம்பவமோ திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாகி விட்டது என்றே தென்னிலங்கை ஆய்வாளர் சொல்கின்றனர். முதலில் அது ஒரு பதில் தாக்குதல் என்றும், பின்பு, இது ஒரு முற்தடுப்புத் தாக்குதல் என்றும் அதன்பின் அது புலிகளின் பலத்தை அறியச் செய்யப்பட்ட சோதனைத் தாக்குதல் என்றும் கடைசியில் புலிகளின் அகழிகளை அழிப்பதற்கான தாக்குதல் என்றும் அரச படைத்தரப்பு வாய்தடுக்கி இடறியது.

(தடிப்பு எழுத்தில் விடவும்) முகமாலைத் தாக்குதல் எந்த விளக்கத்திற்குப் பொருந்தாவிட்டாலும் 'புறக்கம்மாரிசி" என்று சொல்லப்படும் வலிந்து வாங்கிக்கட்டிய வரைவிலக்கணத்திற்குள் நிச்சயம் பொருந்தும்.

காயமடைந்த சிப்பாய்களைப் பார்க்க வந்திருந்த உறவினர்கள் தள்ளுமுள்ளுப் பட்டதில் அனுராதபுரம் படைய மருத்துவமனையின் முன்னாலுள்ள முதன்மைச் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டு நின்றது.

கடும்போக்கு இனவாதக் கட்சிகள் பாதீட்டை எதிர்த்து வாக்களிக்கத் துணியாத அளவுக்குக் கருத்துநிலை இறுக்கமொன்றைத் தென்னிலங்கையில் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சிதான் அது என்பதில் எள்ளளவும் ஐயப்படவேண்டியதில்லை.

யுத்தத்தினால் ஏற்பட்ட செலவை நியாயப்படுத்த மென்மேலும் யுத்தம் செய்வதே வழி என்ற அரசாங்கத்தின் போக்கிற்கும், நான் குடிப்பதற்குக் காரணமே குடிகாரன் ஆகிவிட்டேனே என்ற கவலைதான் என்னும் குடிகாரன் பேச்சிற்கும் வித்தியாசமே கிடையாது.

எத்தனை முறை அடிவாங்கினாலும் இனவாதச் சிதத்தாந்த அடிப்படையில்தான் இனப்பிரச்சனையை அணுகுவேன் என்று ராஜபக்ச நிறுவனம் கங்கணங்கட்டிக்கொண்டு ஒருபுறம் நிற்க பன்னாட்டுச் சமூகத்தின் செயற்பாடுகளும் அதற்கு அங்கீகாரம் அளிப்பதாகவே அமைந்திருக்கின்றன.

இலங்கை இனப்பிரச்சனையைத் தீர்ப்பதில் கடும் கரிசனையை வெளியிடும் இந்தியாவும் அமெரி;க்காவும் சிறிலங்காவிற்குப் படைத்துறை உதவிகளை வழங்குவதும், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மீதான படுகொலை பற்றிய பன்னாட்டுச் சமூகத்தின் போக்கும், அவர்களது உள்ளோடும் நிகழ்ச்சி நிரலின் தவிர்க்க முடியாத வெளிப்பாடுகள் என்றே நோக்கத்தக்கவை.

அந்த வெளிப்பாட்டு வியர்வையின் முன்னால் அவர்களின் மனிதாபிமான அரிதாரம் அழிபட்டுப் போகிறது.

கொழும்பின் அரசியல் அடிபாட்டில் நிகழும் சில்லறைச் சம்பவங்களுக்கெல்லாம் கவலையும் கண்டனமும் தெரிவித்துவந்த மேற்குலகச் சட்டாம்பிள்ளைகள், அமைதிப் பேச்சுக்களுக்கான ஒரு தரப்பின் நிரந்தரத் தலைமையாளரான தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டதோடு, அந்தப் படுகொலைக்கு அரசாங்கம் வெட்கமின்றி உரிமையும் கோரியது பற்றி எதுவும் சொல்லக்கூட முடியவில்லை என்றால், அவர்களால் வேறு என்னதான் முடியும் என்ற கேள்வி இப்போது நாகரீக வரம்புகளுக்கு மேலாக எழுந்து நிற்கிறது.

போர்நிறுத்த உடன்படிக்கையையோ, அது சார்ந்த பொதுப் பண்புகளையோ கடைப்பிடிக்க முடியாதென்று அப்பட்டமாக மறுத்து வரும் அரச படையின் தளபதி, போரென்றால் சிவிலியன்கள் காணமற்போதலும் கொல்லப்படுவதும் நடக்கவே செய்யும் என்று இவ்வாரம் லண்டன் புலனாய்வு நிருபர்களிடம் தெனாவெட்டாகப் பேசியிருக்கிறார். அவரின் வலிந்த போர்ச் செயற்பாடுகளுக்கு அங்கீகாரமும் ஆதரவும் வழங்கும் நிலைப்பாட்டை பன்னாட்டுச் சமூகத்தின் முக்கிய பிரதிநிதி நாடுகள் எடுத்திருப்பது, தமிழர் தரப்பின் விசயமறிந்த வட்டாரங்களால் எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. என்றாலும், போராட்டத்தின் இன்றைய கட்டத்தில் நிராகரிக்க முடியாத ஒரு உண்மையொன்றை பன்னாட்டுச் சமூகத்தின் இந்தப் போக்கு முற்படுத்தியுள்ளது.

அரசாங்கம் முன்னெடுத்து வரும் யுத்தத்தை இப்போது தன் செயல்களாலும் செயலின்மைகளாலும் ஆதரித்து வரும் அதே பன்னாட்டுச் சமூகம்தான், 2001 இல் புலிகள் அரசாங்கத்தின் உணர்வு நரம்பில் ஓங்கிக் குத்தியபோது, அமைதிக் கோசமிட்டபடி உள்ளே வந்தார்கள். மீண்டும் அவ்வாறான ஒரு நிலைவரும் போது அதே கோசம் மேலெழும் என்பதில் ஐயமில்லை என்பதை அவ்வப்போது தமது கருத்துத் துணுக்குகளால் பன்னாட்டுச் சட்டாம்பிள்ளைகள் நிரூபித்தும் வருகிறார்கள்.

புலிகளின் மேலான சிறுவர் ஆட்சேர்ப்புக் குற்றத்திற்கான முகாந்திரங்கள் குறைந்து, அரசாங்கத்தின் மீது ஏகப்பட்ட மனிதாபிமான முறைப்பாடுகள் எழும் இன்றைய நிலையில், உதவி புரிவதற்கான மனிதாபிமான நிபந்தனைகள் என்ற அங்கியை பன்னாட்டுச் சமூகம் மெதுவாக நழுவவிட்டு அரசைத் தாங்கிப்பிடிப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

தவிர, ஈழத் தமிழருக்கான தீர்வுகள் பற்றி மேதாவிலாசம் பேசும் உதிரிக் கூச்சாலாளர்கள் கூட புலிகள் பலயீனமாகத் தோன்றும்போது பஞ்சாயத்து என்றும், புலிகள் பலம் வெளிப்படும்போது தமிழரின் அபிலாசையைப் பூர்த்திசெய்யும் சுயநிருணய உரிமையென்றும் சுருதிமாறுவதைக் காண்கிறோம்.

இவையெல்லாம் உணர்த்தும் உண்மை ஒன்றுதான். தமிழருக்குக் கிடைக்கவிருப்பது வைரமோ கூழாங்கல்லோ, அது எதுவாயினும், அதைத் தீர்மானிக்கப்போவது இங்கு நடக்கும் போரின் விளைவுப் பெறுமானங்களே. போரிலும் பெரிய உபாயத்திற்கான வெளி ஈழவிடுதலைப் போராட்டத்தில் இப்போதைக்கு இல்லை.

கடந்த ஒரு மாதமாக வெற்றிமுகிழ்ப்போடு தோற்றமளிக்கும் போர்க்களமும் அதற்கான வலுவூட்டலையே தருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: வெள்ளிநாதம் (16.11.07)

0 Comments: