Sunday, November 18, 2007

'பட்ஜெட்" அரசியல் சூறாவளியும் மறைமுக இராணுவ உதவிகளும்

-அருஸ் (வேல்ஸ்)-


தென்னிலங்கையில் அரசியல் தளம்பல் நிலை தோன்றியுள்ளது. ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் மூன்றாவது வரவு-செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு தொடர்பாகவே இந்த நிலை தோன்றியுள்ளது. நாடு கடும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள வேளை சமர்ப்பிக்கப்படும் இந்த வரவு-செலவுத்திட்டம் பாதகமான பல விளைவுகளை உண்டு பண்ணலாம் என்பது பலவேறு தரப்பினருக்கும் அரசுக்கும் தெரிந்த ஒன்றே.

எனவேதான் வழமைபோல இராணுவ வெற்றிச்செய்தி ஒன்றின் மீது அரசு நம்பிக்கையை கொண்டிருந்தது. வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது வடபோர்முனையில் இருந்து கிடைக்கும் இராணுவ வெற்றிச்செய்தி ஒன்று வரவு-செலவுத்திட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்துவிடும் என அரசு நம்பியியது. ஆனால் அது எதிர்விளைவாகி போனதே தற்போது அரசுக்கு தர்மசங்கட நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 4,000 இராணுவத்தினரைக் கொண்ட ஏழு பற்றாலியன் துருப்புக்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம் படையினரால் தமது முன்னணி நிலைகளில் கூட மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதுடன் அதிக சேதங்களையும் அவர்கள் சந்தித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ வெற்றிச்செய்தி காலை வாரிவிட்ட நிலையில் அரசை காப்பாற்றிக்கொள்ள ஆளுந்தரப்பும், அதனை கவிழ்க்க எதிர்த்தரப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. நாடாளுமன்றத்தில் 22 ஆசனங்களை கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போருக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்ட வரவு-செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே இந்த சமயத்தில் 37 ஆசனங்களை உடைய ஜே.வி.பியின் ஆதரவையும் அரச கூட்டணியில் அல்லது அரச தரப்பில் இருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுகளை பெறுவதன் மூலம் வரவு-செலவு திட்டத்தை தோற்கடிக்க முடியும் என ஐ.தே.க நம்புகின்றது. வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அது அரசை தோற்கடித்ததற்கு சமனாகிவிடும். எனவே அதற்கான முயற்சியில் ஐ.தே.க. முழு மூச்சாக இறங்கியுள்ளது.

ஆனால் இங்கு ஒன்று மட்டும் நோக்கத்தக்கது. அதாவது வரவு-செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதன் மூலம் அரசைக் கவிழ்ப்பது சில சமயங்களில் சாத்தியமானாலும் கூட எதிர்க்கட்சி, ஆட்சி அமைப்பது என்பது சாத்தியமற்றது. ஏனெனில் எந்த அரசிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்கப்போவதில்லை. மேலும் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் எல்லாம் சிதறலடைந்தே உள்ளன.

எனினும் இந்த சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு கிடைத்த இறுதி சந்தர்ப்பமாகவே கருதுகின்றார். ஏனெனில் பல தடவைகள் தோல்விகளை சந்தித்த ரணிலின் தலைமையின் மீது கட்சிக்குள் அதிருப்திகள் தோன்றி வருகின்றன. இந்த ஆண்டின் முற்பகுதியில் ஐ.தே.க.வின் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய உட்பட 17 உறுப்பினர்கள் அரசுப்பக்கம் தாவியிருந்தனர். அதற்கு முன்னரும் ஒருசிலர் கட்சி தாவியிருந்ததுடன் மேலும் தாவல்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரணிலின் தலைமை மீது ஏற்பட்டு வரும் நம்பிக்கையீனமே அதற்கான காரணம் என கருதப்படுகின்றது.

ஆனால் அரச தரப்பில் ஏற்பட்டுவரும் பதவிப் போட்டிகள், நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் பாரிய வீழ்ச்சி, அதன் தொடர்ச்சியாக மக்களின் வாழ்க்கைச்செலவில் ஏற்பட்டுவரும் அதிகரிப்புக்கள், ஆளும் தரப்பினரின் நிர்வாகத்தில் ஏற்பட்டு வரும் ஊழல் குற்றச்சாட்டுகள் என்பன அரச தரப்பினரின் செல்வாக்கை வெகுவாக சரித்துள்ளது.

இதில் முக்கிய பங்கு வகிப்பது போரே. போரின் முலம் ஏற்பட்டு வரும் பொருளாதார இழப்புக்கள், போரை எதிர்கொள்ள செலவிடப்படும் வளங்கள், நவீனத்துவம் பெற்றுவரும் போரியல் உத்திகளை எதிர்கொள்ள அரசுக்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீடுகள் என்பன சாதாரண மக்களின் வாழ்க்கையில் பாரிய சுமையாக வீழ்ந்துள்ளது. இந்த நேரடியான காரணிகளை தவிர போரினால் ஏற்பட்டு வரும் நேரடியற்ற காரணிகளின் தாக்கமும் பொருளாதாரத்தில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. உதாரணமாக வீழ்ச்சியடையும் உல்லாசப்பயணத்துறையினால் ஏற்பட்டு வரும் வேலைவாய்ப்பு இழப்புக்கள், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள பின்னடிக்கும் முதலீட்டாளர்கள் என இதன் தாக்கம் மிகவும் நீளமானது.

ஆனால் தற்போது வரவு-செலவுத்திட்டத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சி முயன்று வருவதும், சிறிய கட்சிகள் அரசை மிரட்டி வருவதும் நாட்டின் நன்மைக்காகவோ அல்லது போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடனோ அல்ல என்பது தெளிவானது. தமது சுய இலாபங்களை கருதியே பலர் இந்த களத்தில் இறங்கியுள்ளனர். ஜே.வி.பி.யை பொறுத்தவரையில் அது ஒரு பேரினவாத கட்சி. இந்த கருத்தையே அது தற்போதும் நிரூபித்துள்ளது. அரசு மேற்கொண்டு வரும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை எதிர்த்தோ அல்லது அரச நிர்வாகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை எதிர்த்தோ நடவடிக்கையில் இறங்காத ஜே.வி.பி. வரவு-செலவுத்திட்டம் என்னும் துரும்புச் சீட்டை காட்டி தனது அரசியல் அபிலாஷைகளை பெற்று விட முயன்று வருகின்றது.

ஆனால் அதற்கான காரணிகளாக ஜே.வி.பி முன்வைத்துள்ள நிபந்தனைகள் வேடிக்கை யானவை. அவை ஒன்றும் வரவு-செலவுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் அல்ல. முழுக்க முழுக்க தமிழ் மக்களின் மீதான இனப்போரை மையப்படுத்தியவை. அதாவது போர்நிறுத்த உடன்பாட்டை இரத்து செய்தல் வேண்டும், அனைத்துக்கட்சி குழுவை கலைக்க வேண்டும், அனைத்துலக அமைப்புக்களின் மற்றும் பிரதிநிதிகளின் அழுத்தங்களையும் மற்றும் பயணங்களையும் தடுக்க வேண்டும், இலங்கையின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும். என்பவை தான் வரவு-செலவுத்திட்டத்தை எதிர்ப்பதற்கு ஜே.வி.பி. முன்வைத்துள்ள நிபந்தனைகள்.

இவற்றில் பெரும்பாலானவை தற்போது நடைமுறையில் இல்லை என்பது வேறு விடயம். மேலும் இந்த நிபந்தனைகளுக்கும் வரவு-செலவுத்திட்டத்தின் மூலம் அப்பாவி மக்களின் மீது சுமத்தப்படும் சுமைகளுக்கும் எந்தத் தொடர்புகளும் இல்லை. ஆனால் ஜே.வி.பி. க்கு ஜனாதிபதி மஹிந்த வைத்தபொறி ஆபத்தானது. அதாவது நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அவர் கூறிய மிரட்டலால் ஜே.வி.பி ஆட்டம் கண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அதாவது மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் நடைபெறுமாக இருந்தால் ஜே.வி.பி தற்போதுள்ள ஆசனங்களை மீண்டும் பெறுமா என்பது பெரும் சந்தேகம். அதற்கு ஜனாதிபதி மஹிந்த பதவியேற்ற பின்னர் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்கள் சான்று பகரும்.

ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இதேநிலைமைதான். போரை மட்டும் தூக்கி பிடிப்பதை விட மீண்டும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு இந்த கட்சிக்கும் அரசியல் பலம் கிடையாது. எனினும் ஆளும் கூட்டணியில் இருந்து அதன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சஸ எதிர்த்தரப்புக்கு சென்றதுடன், சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் அங்கம் வகித்த பிரதி அமைச்சர் டிலான் பெரேராவும் அந்த குழுவில் இருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ரட்ணதிலக அரசின் பக்கம் தாவியுள்ளார்.

இதனிடையே அரச தரப்பில் உள்ள அர்ஜூன ரணதுங்க எதிர்த்தரப்புக்கும், எதிர்த்தரப்பில் இருந்து சிலர் ஆளும் தரப்பிற்கும் செல்லலாம் எனவும் ஊகங்கள் கிழம்பியுள்ளன. இந்த மாற்றங்கள் சில சலசலப்புக்களை தென்னிலங்கையில் ஏற்படுத்தி வருகின்றன.

ஆனால் ஜே.வி.பி.யை பொறுத்தவரையில் தமது நிபந்தனைகள் கோரிக்கை அல்ல என தெரிவித்துள்ளதுடன், நடைமுறையில் அற்ற அல்லது செயற்றிறன் அற்ற ஜே.வி.பி.யின் நிபந்தனைகளை சாதகமாக பரிசீலிப்பதாக அரசும் தெரிவித்துள்ளது. ஜே.வி.பி. அரசை விட்டு விலகப்போவதில்லை எனவும், அரசும் அதனை அனுமதிக்க போவதில்லை எனவும் மறைமுகமாக சுட்டிக்காட்டி வருகின்றன.

எனவே ஜே.வி.பி. அரசை தோற்கடிக்கும் என்பதையோ அல்லது புதிதாக உருவாகும் அரசு தமிழ் மக்களுக்கு அனுகூலமாக அமையும் என்பதையோ தமிழ் மக்கள் கருத்தில் எடுக்கப்போவதில்லை. ஆனால் இந்த உள்ளூர் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் உலக அரசியல் மாற்றம் ஒன்று மெல்ல மெல்ல அம்பலமாகி வருவது தற்போது கவனிக்கதக்கது. அதாவது இலங்கையின் இனப்போருக்கு மறைமுகமாக ஊக்கமளித்து வந்த அமெரிக்க அரசின் நடவடிக்கைகள் தற்போது வெளிப்படையாகி வருவதுடன், அது தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமைதிப் பேச்சுக்களின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணவேண்டும் என வெளிப்படையாக கூறிக்கொண்டு மறைமுகமாக இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியளித்த அமெரிக்கா தற்போது வெளிப்படையாக அதன் தலையீடுகளை ஆரம்பித்து விட்டதாகவே கருதமுடியும். இராணுவச் சமநிலையில் எட்டப்பட்ட பேச்சுக்களை ஒரு தரப்பினரை பலப்படுத்துவதன் மூலம் சீரழிப்பதில் அமெரிக்காவின் பங்கு அதிகமானதாகவே கருதப்பட்டது. இது தவிர போர்நிறுத்த காலத்தில் சாகரா எனப்படும் கண்காணிப்பு கப்பலையும் இலங்கை கடற்படைக்கு அது வழங்கியிருந்தது. இலங்கை அரசிற்கான இராணுவ உதவிகள் போர் நிறுத்தத்தை பாதிக்கும் என விடுதலைப் புலிகள் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

மனித உரிமை மீறல்கள் இலங்கையில் மோசமடைந்து வருவதாகவும், அங்கு போரினால் அல்லல்படும் தமிழ் மக்களுக்கு உதவும் பொருட்டு தொண்டு நிறுவனங்கள் பணியாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம், அரச சார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமைகள் அமைப்புக்கள் என்பன தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில் அமெரிக்கா தற்போது இலங்கைக்கான தனது ஆயுத உதவிகளை வெளிப்படையாக வழங்கியுள்ளது.

மேலும் தமிழ் மக்களின் மீதான அழுத்தங்களையும் அது வெளிப்படையாகவே அதிகரித்து வருகின்றது. விடுதலைப் புலிகள் மீதான தடை என்னும் போர்வையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை புறம்தள்ளிய அமெரிக்கா தற்போது தமிழ் மக்களின் இன்னல்களுக்கு உதவிகளை புரிந்து வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதியையும் முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்களுக்கு இருந்த அற்ப நம்பிக்கையையும் குழிதோண்டி புதைப்பதாகவே உள்ளது.

இந்தமாத இறுதிப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஈரான் பயணத்தை தடுப்பதற்காக அமெரிக்கா, இராஜதந்திர வழிகளில் முயன்று வந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக அரசை குளிர்விற்கும் நோக்குடன் ஆயுதங்களை வழங்கி வருவதாகவும், தமிழ் மக்களின் மீது கடுமையான அழுத்தங்களை சுமத்தி வருவதாகவும் ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசு பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்க முயல்கின்றது என்ற காரணங்களை கூறிக்கொண்டு தான் இந்திய மத்திய அரசும் இலங்கைக்கான தமது ஆயுத உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. அதாவது அமெரிக்காவும், இந்தியாவும் சில சாக்கு போக்கான காரணங்களை கூறிக்கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தி வருகின்றது என்பது வெளிப்படையானது.

2005 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் உக்கிரம் அடைந்த போது 'விடுதலைப் புலிகள் மிகவும் வலிமை மிக்க இலங்கை இராணுவத்தினரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று அமெரிக்கா அன்று தெரிவித்திருந்தது. அந்த கருத்தின் உட்பொருள் தற்போது மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளது.

அதாவது தமிழ் மக்களுக்கு எதிரான போரில் இலங்கை அரசுடன் வெளிப்படையாக கைகோர்க்க அமெரிக்கா தயாராகி விட்டதா என்பது தான் தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வி. அதாவது இந்து மா கடலின் நுழைவுப்பாதைக்கு மியன்மாரில் காலூன்ற முடியாது போன அமெரிக்கா இலங்கையில் தனது காலை பதிக்கத் தயாராகி வருகின்றது என்பதுதான் இதன் பொருளாகலாம்.

ஆனால் நீண்டகால நோக்கில் இந்திய நலனுக்கு மிகவும் ஆபத்தாக மாறப்போகும் இந்த மாற்றத்தை தடுத்து நிறுத்தும் வல்லமை இந்தியாவுக்கு உண்டா என்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குலகத்தை சார்ந்து வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரமும் அதனை தடுக்க முடியாத காரணிகளில் ஒன்று. இதுவே சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான வேறுபாடுகள்.

மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், ஜனநாயகம் சீரழிந்து போயுள்ளதாகவும் மியன்மாரில் முதலைக்கண்ணீர் வடித்த அமெரிக்கா இன்றைய உலக ஒழுங்கில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படும் இலங்கை அரசுடன் கைகோர்ப்பது, அமெரிக்காவின் கபட நாடகங்களை இலகுவாக இனங்காண உதவியுள்ளதுடன், அதன் பூகோள அரசியல் தமிழ் மக்களின் உரிமைப் போரிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை முன்னரே உணரும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒருபக்கம் உறுதியற்ற அரசியல் நிர்வாகம், மறுபுறம் இராணுவத்தீர்வுக்கு ஊக்கமளிக்கும் மேற்குலகம் இவை எல்லாவற்றிற்கும் இடையில் அடிக்கடி பல திருப்பங்களை சந்தித்து வரும் களநிலைமைகள் என்பன இலங்கை அமைதி முயற்சிகளுக்கான சாத்தியங்களை முற்றாகவே இல்லாது செய்துள்ளன.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (18.11.07)

0 Comments: